Main Pages Kathiravan.com

Sonntag, 17. April 2011

பாதுகாப்பு நிலவரம்: போர்க்காலத்தில் இருந்ததை விடவும் இப்போது அதிகமான தகவல்களைத் திரட்டி வரும் படைத்தரப்பு..............?


படைக்குறைப்புக்கான முயற்சிகளில் இறங்கும் சிறிலங்கா! முன்னர் புலிகள் சார்ந்த, போர் சார்ந்த விபரங்களைத் தேடுவதிலேயே படைத்தரப்பு ஈடுட்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல், சமூகம்,குற்றங்கள், பொருளாதாரம் என்று பல்வேறு வகைப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சியை தடுக்க வேண்டுமாயின் அதற்கு வெறுமனே படை சார்ந்த புலனாய்வுகள் உதவாது என்று உணரப்பட்ட நிலையில் தான் இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகள் பரவலாக்கம் பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கில் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளின் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது. வடக்கில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டது தொடக்கம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி வேட்பாளர்களின் பட்டியல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் வரை வெளிப்படையானவை. ஆனால் இரகசியமாக திரட்டப்படும் தகவல்கள் பலரும் அறிந்து கொள்ளாதவை. ஆனால் அவை தான் மிகவும் முக்கிமானவை. பிரதேச ரீதியாக இராணுவத்தினர் திரட்டும் புலனாய்வுத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலையமைப்பின் மூலம் வழிசெய்து கொடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் சந்தேகப்படும் படியான ஒவ்வொரு செயல்களும் பல்வேறு கண்களால் உற்று நோக்கப்படும் துருவி ஆராயப்படும். அது இன்னொரு ஆயுத மோதலைத் தடுக்க உதவும் என்று கருதுகிறது அரசாங்கம். எனவே தான், அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டுள்ள மற்றொரு கருத்து, படைக்குறைப்புக்கான சாத்தியங்கள் குறித்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.


இனி,


போரின் இரண்டாவது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ள நிலையில் படைக்குறைப்பு என்பது, படைத்தரப்புக்கு இது ஒரு கசப்பான செய்தியாகவே இருக்கும். எனென்றால் படைக்குறைப்போ அல்லது படைகளுக்காக செலவினக் குறைப்போத அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வாரம் வடக்கிலுள்ள படைத் தலைமையகங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

முதலில் கிளிநொச்சி படைத் தலைமையகம், பின்னர் முல்லைத்தீவு, வன்னி, யாழ்ப்பாணம் என்று வடக்கிலுள்ள நான்கு படைத் தலைமையகங்களுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணங்களின் நோக்கம் படையினருக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகும்.

பொதுவாக இராணுவத் தளபதிகள் புத்தாண்டுக்கு முன்னர் இத்தகைய பயணங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்தமுறை இராணுவத் தளபதியின் பயணத்துக்கு வேறு நோக்கங்களும் இருந்தன. இதை அவர் படையினர் மத்தியில் நிகழ்த்திய உரைகளில் தொட்டுக் காட்டியிருந்தார். அதுபற்றி ஊடகங்களில் பெரிதாக எதுவும் வெளிவராது போனாலும், படையினர் மத்தியில் சில விடயங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தை நவீன மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்காக அனைத்துப் படைமுகாம்களையும் வலைப்பின்னல் ஊடாக இணைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இது முக்கியமானதொரு திட்டமாகும்.

போருக்குப் பிந்திய இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இதைக் கருதலாம்.

போர்க்காலத்தில் இருந்ததை விடவும் இப்போது அதிகமான தகவல்களைத் திரட்டி வருகின்றது படைத்தரப்பு.

முன்னர் புலிகள் சார்ந்த, போர் சார்ந்த விபரங்களைத் தேடுவதிலேயே படைத்தரப்பு ஈடுட்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல், சமூகம்,குற்றங்கள், பொருளாதாரம் என்று பல்வேறு வகைப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சியை தடுக்க வேண்டுமாயின் அதற்கு வெறுமனே படை சார்ந்த புலனாய்வுகள் உதவாது என்று உணரப்பட்ட நிலையில் தான் இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகள் பரவலாக்கம் பெற்றுள்ளன.

குறிப்பாக வடக்கில் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளின் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

வடக்கில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டது தொடக்கம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி வேட்பாளர்களின் பட்டியல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் வரை வெளிப்படையானவை.

ஆனால் இரகசியமாக திரட்டப்படும் தகவல்கள் பலரும் அறிந்து கொள்ளாதவை.

ஆனால் அவை தான் மிகவும் முக்கிமானவை.

பிரதேச ரீதியாக இராணுவத்தினர் திரட்டும் புலனாய்வுத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலையமைப்பின் மூலம் வழிசெய்து கொடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் சந்தேகப்படும் படியான ஒவ்வொரு செயல்களும் பல்வேறு கண்களால் உற்று நோக்கப்படும் துருவி ஆராயப்படும்.

அது இன்னொரு ஆயுத மோதலைத் தடுக்க உதவும் என்று கருதுகிறது அரசாங்கம்.

எனவே தான், அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டுள்ள மற்றொரு கருத்து, படைக்குறைப்புக்கான சாத்தியங்கள் குறித்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.

இலங்கை இராணுவம் இப்போது 2 இலட்சத்துக்கும் அதிகமான படையினரைக் கொண்டுள்ளது. இலங்கை போன்றதொரு சிறிய அதுவும் எல்லைப் புறமோதல்களுக்கு சாத்தியமேயில்லாத ஒரு நாட்டுக்கு இது அளவுக்கும் மீறிய படைபலமாகும்.

போர் நடைபெற்ற காலங்களில் படைபல அதிகரிப்புக் குறித்து கேள்வி எழுப்ப முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்றன.

இந்தநிலையில் தொடர்ந்தும் பெரியதொரு படைக் கட்டமைப்பைப் பேணுவது சுலபமான காரியமல்ல.

அரசாங்கம் முன்னர் படைக்குறைப்புச் சாத்தியமில்லை என்றே கூறி வந்தாலும், இப்போது அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு காலத்தில் உலகின் பல நாடுகளையும் தமது படைபலத்தினால் கட்டியாண்ட பிரிட்டனே படைக்குறைப்பில் இறங்கியுள்ள போது, இலங்கையின் நிலை ஒன்றும் விதிவிலக்காக இருக்க முடியாது.

பொருளாதார நெருக்கடிகளால் தான் பிரிட்டன் அண்மையில் 5000 படையினரை இராணுவத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் 17 ஆயிரம் பேர் நீக்கப்படவுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கையின் நிலை எம்மாத்திரம்.

இப்போது பிரிட்டனின் இராணுவ ஆட்பலத்தை விடவும் இலங்கையில் படையினரின் எண்ணிக்கை அதிகம் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும்.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வன்னிப் படைத் தலைமையகத்தில் படையினர் மத்தியில் உரையாற்றும் போது, இதுபற்றி மேலோட்டமாகப் பேசியுள்ளார்.

இராணுவத்தில் இருக்கும் வரை அதற்குரிய தொழில்தேர்ச்சியுடன் இருப்பதற்கு வசதிகள் செய்து தரப்படும் என்றும், ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் மாற்று வேலையை செய்யும் திறனைப் படையினர் இப்போதே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

22 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெறும்போது ஓய்வூதியத்தைப் பெறுவர். அவர்கள் பின்னர் வேறு வேலைகளில் இணைந்து கொள்ளலாம் இணைந்து கொள்ளாமல் ஓய்வூதியத்தைப் பெற்றும் காலத்தை கழிக்கலாம். ஆனால் இராணுவத் தளபதி கூறியுள்ள கருத்தின் உட்பொருள் அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை.

படைக்குறைப்புக்கான சாத்தியத்தை சூசகமான முறையில் வெளிப்படுத்துகிறாரா என்று ஐயப்பட வேண்டியுள்ளது.

படைக்குறைப்பு ஒன்று நிகழ்ந்தால் விலக்கப்படும் படையினருக்கு ஒய்வூதியம் முழுமையாக வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான்.

ஒரு குறிப்பிட்டளவு நட்டஈட்டுத் தொகையுடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

இதற்காகவே இராணுவத் தளபதி ஓய்வுக்கு பின்னர் மாற்றுவேலை தேடுவது குறித்தும், அதற்கான தொழிற்திறன் குறித்தும் கருத்து கூறியிருக்கலாம்.

படைக்குறைப்பு என்று வரும்போது இராணுவத்துக்குள் பல பிரச்சினைகளை அது உருவாக்கும்.

படைக்குறைப்பை மேற்கொள்ளும்போது அதை மேற்கொள்ளும் முறை,படையினரின் நலன்கள் என பல விடயங்களில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.

ஆனால் அதையெல்லாம் சமாளித்தேயாக வேண்டும். அப்போது தான் அது சாத்தியமாகும்.

இப்போது வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதும், அது வருங்காலத்தில் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இப்போது ஆயுததளபாடத் தேவைகள் இல்லை என்பதால் அந்த நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
அதைப் படையினரின் நலன்களுக்குச் செலவிட முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் போர்க்காலத்தில் ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட்டளவு நிதியை படையினரின் நலன்களுக்காக தொடர்ந்து ஒதுக்க, சர்வதேச நிதி நிறுவனங்கள் இடம் கொடுக்குமா என்பது சந்தேகம்.

சர்வதேச நிதி நிறுவனங்கள் தான் அரசுக்கு கடன்களை வழங்கி தூக்கி நிறுத்தி வைத்திருக்கின்றன. அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது நிபந்தனைகளை இறுக்கினாலோ படைக்குறைப்பையும், படையினருக்கான செலவுக் குறைப்பையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டி வரலாம்.

போர் இல்லாத சூழலில் படைபலப் பேணலுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்வதை அரசினால் நியாயப்படுத்த முடியாது. இந்தநிலையில் தான் இராணுவத் தளபதியின் வடபகுதிப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

போரின் இரண்டாவது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ள நிலையில் படைக்குறைப்பு என்பது, படைத்தரப்புக்கு இது ஒரு கசப்பான செய்தியாகவே இருக்கும். எனென்றால் படைக்குறைப்போ அல்லது படைகளுக்காக செலவினக் குறைப்போத அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர் சுபத்ரா

Samstag, 16. April 2011

ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் முக்கிய விபரங்கள் - சிறிலங்கா மீது 5 குற்றச்சாட்டுகள், புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்



சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையை மார்ச் 31ம் நாள் தயாரித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரதி ஒன்று சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் புத்தாண்டுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் முயற்சிகளை நிராகரித்துள்ள இந்த அறிக்கையில், இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசு நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை பணயக் கைதிகள் போன்று தடுத்து வைத்திருந்ததாகவும், தப்பிச் செல்ல முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் கொழும்பு ஊடகம் ஒன்றின் ஊடாக கசிந்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன. முழுமையான விபரங்களை விரைவில் தரப்படும். “ சிறிலங்கா அரசாங்கம் மனிதாபிமானப் போரை நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினாலும்,  அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் பாரதூரமான சம்பவங்களில் சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கருதப்படத்தக்கவை.

போரின் இறுதிக்கட்டத்தில், 2008 செப்ரெம்பர் தொடக்கம் 2009 மே 19 வரையான காலப்பகுதியில், சிறிலங்காப் படையினர் வன்னியில் முன்னேறிச் சென்ற போது மேற்கொண்ட பரவலான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளமாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளை வாகனங்களில் ஆட்கள் கடத்தப்பபட்டது, காணாமற்போனது போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

வன்னியில் மூன்று தாக்குதல் தவிர்ப்பு வலயங்களின் மீது சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களின் மூலம் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான இழப்புகளுக்கு சிறிலங்கா அரசின் பீரங்கித் தாக்குதல்களே காரணம்.  மருத்துவமனைகளின் மீதும் சிறிலங்கா அரசு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகளும் மோட்டார் மற்றும் ஆட்டிலறி போன்ற பீரங்கிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகள் திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டுள்ளன.

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலத்தில் பல பத்தாயிரம் உயிர்கள் பலியாகின. இதில் போரின் இறுதி நாட்களில் அடையாளம் காணப்படாமல் பெருமளவானோர் இறந்தனர்.

போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் போராளிகள் தனியாக பிடித்துச் செல்லப்படனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட்டிருக்கக் கூடும். ஏனையோர் காணாமற் போயுள்ளனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மூடப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் மீறப்பட்டன. அநாவசியமாக பலர் உயிரிழக்க நேரிட்டது. பலர் சித்திரவதை செய்யப்பட்டனர்.

புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு வசதிகள் மறுக்கப்பட்டன. அவர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டனர்.

முன்னேறி வந்த சிறிலங்கா படையினரைத் தடுக்க பொதுமக்களை புலிகள் மனித கவசங்களாகப் பயன்படுத்தினர். கட்டாய ஆட்சேர்ப்பை நடைமுறைபடுத்தினர். இளவயது சிறார்களையும் படையில் சேர்த்தனர்.

2009 பெப்ரவரியில் தமது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதிகளவு பொதுமக்கள் தங்கியிருந்த- அவர்களுக்கான விநியோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர். போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர்.

சிறிலங்கா அரசு மீது ஐந்து விதமான குற்றச்சாட்டுகளை இந்த நிபுணர்கள் குழு சுமத்துகிறது.

1. பரந்தளவிலான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைப் படுகொலை செய்தமை.

2. மனிதாபிமான இலக்குகள், மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.

3. பொதுமக்களுக்கு மனிதமாபிமான உதவிகள் கிடைப்பதை தடுத்தது.

4. போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் மனிதஉரிமைகளை மீறியது.

5. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளியே மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டது.

அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளையும் நிபுணர்கள் குழு முன்வைக்கிறது.
1. பொதுமக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியது.

2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது.

3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது.

4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது.

5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது.

6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது.

சிறிலங்காவில் அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதற்கு பொறுப்புக் கூறுவது உள்நாட்டு அனைத்துலக சட்டங்களின் படியான கடமையாகும்.

இந்த வலுவான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சிறிலங்கா இராணுவத் தளபதிகள், மூத்த அரச அதிகாரிகள், குறிப்பாக இராணுவ, குடியியல், மற்றும் புலிகளின் தலைவர்கள் மீது அனைத்துலக குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னிறுத்தப்பட வேண்டும்.

சிறிலங்கா அரசு நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல. அதில் ஆழமான குறைபாடுகள் உள்ளன.

சிறிலங்கா அதிபரும் ஐ.நா பொதுச்செயலரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு ஏற்ப அது திருப்திகரமானதாக இல்லை.

போரின் இறுதிநாட்களில் ஐ.நாவின் அரசியல் அங்கங்களோ அல்லது அமைப்புகளோ வன்னியில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளன.

பரிந்துரை: 1
அ. ஆயுதப்போரின் போது இருதரப்பினாலும் மீறப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆ. சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் உடனடியாக சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிந்துரை: 2
கீழ் குறிப்பிடும் விடயங்கள் குறித்து சிறிலங்கா அரசு குறுகிய காலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பரிந்துரை: 3
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலான நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பரிந்துரை: 4
சிறிலங்கா தொடர்பாக 2009 ல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அழைப்பது குறித்து ஐ.நா மீளாய்வு செய்ய வேண்டும்.“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளில் ஐ.நாவும் சிறிலங்காவும் செய்ய வேண்டியவை தொடர்பாக விரிவான விளக்கக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

கார்வண்ணன்

Freitag, 15. April 2011

போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்: இலங்கை அமெரிக்கா இடையிலான உறவுகளில் அதிகரிக்கும் விரிசல்கள்..................?


சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை தடுமாறவே செய்கிறது. போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்,போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசின் கையை மீறி செல்லப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. இது இலங்கை அரசுக்கும் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலை உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் இலங்கைக்கு இருந்து வந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் இப்போதைக்குக் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.


இனி,

அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருந்து வரும் ஒருவித முறுகல் நிலை இப்போதைக்குத் தீர்வதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

ஏனென்றால், இந்த முறுகல்நிலை தீவிரமாகும் அறிகுறிகளே இப்போது அதிகமாகத் தென்படுகின்றன. இதன் அடிப்படைக் காரணம், இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரமே என்பதில் சந்தேகம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமாக மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், அதுபற்றி விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் அமெரிக்கா, மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் இந்த விவகாரத்தில் கொஞ்சமும் விட்டுக் கொடுப்பின்றி வலியுறுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தவர். எனவே இலங்கையைப் பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக அறிந்து வைத்திருப்பவர். இலங்கை விவகாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவராகக் கருதப்படும் றொபேட் ஓ பிளேக் பொறுப்புக்கூறுதல் பற்றி அடிக்கடி வலியுறுத்தி வருவதால் அரசாங்கத்திடம் அவருக்கு ஏகப்பட்ட கடுப்பு இருப்பது உண்மை.

பலமுறை இராஜதந்திர வழிகளிலும், பகிரங்கமாகவும் இவர் மீது அரசாங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. ஆனாலும் றொபேட் ஓ பிளேக் இலங்கை விவகாரத்தில் கடும் போக்குடனேயே இருந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவிடம் பேசியபோதும், அவர் பொறுப்புக்கூறதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மனிதஉரிமைகள் நிலையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே இலங்கையுடனான அமெரிக்காவின் உறவுகள் அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

அங்குள்ள மனிதஉரிமை நிலைமைகள் கவலையளிப்பதாகவும், அதனால் இலங்கையுடன் இறுக்கமான உறவைப் பேண முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ள கருத்து அமெரிக்கா, சிறிலங்கா இடையிலான உறவில் உள்ள விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணைகளை அரசாங்கம் நடத்தத் தவறினால் அனைத்துலக விசாரணைகளுக்கு இழுத்து வரும் நிலை ஏற்படும் என்று அவர் சில வாரங்களுக்கு முன்னர் விடுத்த எச்சரிக்கையை இலங்கை அரசினால் அவ்வளவு இலகுவாக மறந்து போக முடியாது. இதைப் பாரதூரமானதொன்றாக கருதினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்தது இலங்கை அரசு. இந்தநிலையில் இலங்கைக்கு வரவிருந்த றொபேட் ஓ பிளேக்கை அரசாங்கம் தந்திரமான முறையில் தற்காலிகமாகத் தடுத்துள்ளது.

றொபேட் ஓ பிளேக்கின் கொழும்பு வருகை மிகவும் முகத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்பட்டது. மனிதஉரிமை நிலைமைகள் குறித்த அமெரிக்க அரசின் இறுக்கமான செய்தி ஒன்றை அவர் எடுத்து வரவிருந்தார்.

இந்தத் தகவல் கடந்தவாரம் ஊடகங்களுக்கு கசிய முன்னரே அரசாங்கத்துக்குத் தெரிந்திருந்தது. பிளேக் வரவிருக்கும் செய்தியையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொண்ட அரசாங்கம் அவரை எப்படியாவது வரவிடாமல் செய்வதற்குப் புதியதொரு வழிமுறையைப் பின்பற்றியது. பொதுவாக வெளிவிவகார அமைச்சர்கள் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதுஇ அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம்.  அது கிடைக்காமல் போனால் பெரும்பாலும் பயணம் மேற்கொள்ளப்படுவதில்லை. வெளிவிவகார அமைச்சர் பிரீஸ் இப்போது பிரித்தானியாவில் இருப்பதால்இ அதைக் காரணம் காட்டி அவர் வந்த பின்னர் வருமாறு பிளேக்கிடம் கூறியுள்ளது அரசாங்கம்.

இதனால் வேறு வழியின்றி கொழும்பு வருகையைப் பிற்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிளேக்.

இது அவராக விரும்பி எடுத்த முடிவு இல்லை. வேறு வழியின்றி எடுக்க வைக்கப்பட்ட முடிவு.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் செக் குடியரசுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பிரித்தானியா சென்றிருந்தார்.

அவர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க வாய்ப்புக் கேட்டபோதும், அது நிராகரிக்கப்பட்டது. அவரது ஒப்புதலைப் பெறாமலேயே பிரித்தானியா சென்ற அமைச்சர் பீரிஸ், பிரித்தானிய வெளிவிவகார துணை அமைச்சர் அலிஸ்ரெயர் பேட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் போன்றோருடன் மட்டும் பேசியிருந்தார்.

அத்துடன் அவரது பிரித்தானிய அதிகாரபூர்வ பயணம் முடிந்தாலும்இ அங்கேயே ஒரு வாரத்துக்குத் தங்கவுள்ளதாக அறிவித்தார்.

அது தனிப்பட்ட பயணமாக அறிவிக்கப்பட்டது.

பீரிஸ் நாடு திரும்பினால் கொழும்பு வரும் பிளேக்கை தடுக்க முடியாது. எனவே தான் அவர் பிரித்தானியாவில் தனது பயணத்தை நீட்டிக் கொண்டார்.

எப்படியோ பிளேக்கின் வருகை பிற்போடப்பட்டுள்ளது.

அவர் இலங்கைக்கு வராதது தற்காலிக நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஆனால் இந்தப் பயணத்தை அவர் கைவிட்டு விடவில்லை. எனவே அமைச்சர் பீரிஸ் கொழும்பில் இருக்கும் பிறிதொரு தினத்தில் அவர் கொழும்பு வருவார் என்கிறது அமெரிக்க அரசு.

பிளேக்கின் கொழும்பு வருகை இலங்கை அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுப்பதற்கு என்றே தெரிகிறது.

குறிப்பாக கடந்தமாத இறுதியில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் ஒன்றேகால் மணிநேரமாக பிளேக்குடன் பேசியுள்ளனர். இது இலங்கை அரசுக்கு கடும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. உலகத் தமிழர் பேரவையைப் புலிகளின் ஒரு எச்சமாகவே பார்க்கிறது அரசாங்கம். ஒரு பக்கத்தில் சர்வதேச அளவில் புலிகளை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளால் இலங்கை அரசு மனம் ஒடிந்து போகிறது. இந்தச் சந்திப்பின் போது போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை ஒப்புக் கொள்ள வைப்பதற்கான தந்திரோபாயங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம் என்று அரசாங்கம் கருதுவதாக தெரிகிறது.

இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது போனாலும், இந்தச் சந்திப்பை சாதாரணமானதொன்றாக அரசு எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் ஐ.நா நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையும் வெளியாகவுள்ள நிலையில் பிளேக் வருவதை அரசாங்கம் முற்றாகவே விரும்பவில்லை. அதன் காரணமாகவே அவரது பயணத்தைப் பிற்போடும் முடிவை எடுக்க வைத்தது.

இதுபோன்ற தந்திரோபாயங்களை அரசாங்கம் நீண்டகாலத்துக்கோ அல்லது இன்னொரு முறையோ பிரயோகிக்க முடியாது. அப்படிச் செய்தால் தங்களை இலங்கை அரசு ஏமாற்றுவதாக அமெரிக்கா உணர்ந்து கொள்ளும். இப்போது கூட அமெரிக்காவுக்கு அது தெரிந்திருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை.

ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படிச் செய்தால் அது இருதரப்பு உறவுகளுக்கிடையில் மேலும் விரிசலை உருவாக்கும். அனைத்துலக நாடுகளுடனான உறவுகளை தந்திரமாகக் கையாள்வதில் இலங்கை அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை தடுமாறவே செய்கிறது.

இந்தியாவுடனான உறவுகளில் கூட சில வேளைகளில் சிறியளவிலான சிராய்ப்புகள் ஏற்படவே செய்கின்றன.

இது பலவீனமான இராஜதந்திரம் ஒன்றின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் விவகாரம், இப்போது இலங்கையின் கையை மீறிச் செல்வது போலவே உணரப்படுகிறது. இலங்கை அரசு பக்கச்சார்பற்றதொரு விசாரணையை மேற்கொண்டிருந்தால் அல்லது மேற்கொள்ள அனுமதித்திருந்தால் பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம்.

போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்,போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசின் கையை மீறி செல்லப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

இது இலங்கை அரசுக்கும் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலை உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.

கட்டுரையாளர் கபில்

Samstag, 9. April 2011

எவ்வளவு விலை கொடுத்தும்:புலிகள் கேட்டதை "பிரபாகரன் கோரியதை" எவருக்கும் கொடுக்க முடியாது: சொல்பவர் யார்........?



ரசாங்கம் இப்போதாவது தனது கையில் எந்தத் தீர்வுத் திட்டமும் கிடையாது என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. அதேவேளை தீர்வுத் திட்டத்தைக் கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அது கூறுவதும் கூட ஒரு இழுத்தடிப்பு நாடகமே என்பதில் சந்தேகமும் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழு கூட அரசியல்தீர்வை இழுத்தடிப்தற்கான ஒரு நாடகம் தான் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவும் கூறியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கம் அரசியல் தீர்வை இழுத்தடிப்பதற்கு புதிய பல வியூகங்களை வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது என்றே உணர முடிகிறது. அரசதரப்பின் இந்த வியூகங்களை உடைத்துத் தான் அதிகாரப்பகிர்வு ஒன்றை பெற வேண்டிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளது.



இனி,

அரசதரப்பின் இழுத்தடிப்பு வியூகங்களை உடைக்குமா தமிழ் தேசிய கூட்டமைப்பு?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் ஆசிரியர்கள், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கடந்தவாரம் தனித்தனியாக இந்தச் சந்திப்புகள் அலரி மாளிகையில் நடைபெற்றன. நெருக்கடிகள் அதிகமாகின்ற போது. ஊடகங்களின் ஆதரவைத் தன் பக்கம் திருப்புவதற்கான ஒரு தந்திரோபாயமாக இந்தச் சந்திப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பயன்படுத்தி வருகிறார்.

முதலில் உள்நாட்டு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பின்னர், கொழும்பைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களையும் அவர் சந்தித்துள்ளார்.

முதலாவது சந்திப்பில் அவரது நோக்கம் உள்ளூர் விவகாரங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு, அதிகாரப்பகிர்வு பற்றிய கலந்துரையாடல்கள் அதில் அதிகமாக இருந்துள்ளன.

வெளிநாட்டு ஊடகங்களுடனான சந்திப்பில், அனைத்துலக விவகாரங்களை குறிப்பாக இலங்கை மீதான அந்நியத் தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாமாட்டாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இரண்டு சந்திப்புகளின் போதும் ஐ.நா நிபுணர்கள் குழு பற்றிய விவகாரம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கையில் விசாரணைகளை நடத்த முடியாது வேண்டுமானால் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்கலாம் என்று மீண்டும்இ மீண்டும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பற்றித் தாம் கவலை கொள்ளவில்லை என்றும் அதை பகிரங்கப்படுத்தினாலும் சரி விட்டாலும் சரி அதுபற்றித் தாம் அலட்டிக் கொள்ளவில்லை என்றும் உள்நாட்டு ஊடகங்களிடம் அவர் கூறியிருந்தார். ஆனால் வெளிநாட்டு ஊடகங்களிடம் அப்படிக் கூறியதாக தகவல் இல்லை.

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதியில்லை என்று கூறியிருந்தாலும், அதன் அறிக்கையைத் தாம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது போன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

இது இருவேறுபட்ட ஊடகப் பரப்புகளை வேறு வேறு கோணங்களில் அணுகும் போக்கில் ஜனாதிபதி மகிநத ராஜபக்ஸ இருப்பதை வெளிப்படுத்துகிறது.

அடுத்து உள்நாட்டு ஊடகங்களுடனான சந்திப்பின் போது கொழும்பில் அதிகளவில் வாழ்ந்து வந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பின் சனத்தொகை மாற்றம் குறித்து எதற்காகத் திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறார் என்பது கேள்விக்குரியதொன்றாகவே உள்ளது.

இது குறித்து எவரும் பிரச்சினை எழுப்பவில்லை என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதியே இதைப் பிரச்சினையாக்கி வருகிறார்.

இந்தக் கருத்தை மகிந்த ராஜபக்ஸவைத் தவிர வேறெவரும் தூக்கிப் பிடிக்கவில்லை.

மகிந்த ராஜபக்ஸ மட்டுமே இதை எதற்காகத் தூக்கிப் பிடித்து அடிக்கடி கூறி வருகிறார் என்பது தெரியவில்லை.

அதேவேளை, உள்ளூர் ஊடகங்களுடனான சந்திப்பின் போது மீண்டும் அவர் ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

புலிகள் கேட்டதை பிரபாகரன் கோரியதை எவருக்கும் கொடுக்க முடியாது என்பதே அது.

இது அவர் அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒரு விடயம் தான்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப்பகிர்வு யோசனைக்காகத் தாம் காத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்று வரும் பேச்சுக்களின் போது முன்வைக்கப்படும் தீர்வு யோசனை குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆராய்ந்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றே நிறைவேற்ற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாவது சுற்றுப்பேச்சின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கூறியிருந்தது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் வகையிலான யோசனையே இது என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக காணி, பொலிஸ்,வனங்களைப் பராமரிக்கும் அதிகாரங்களைக் கூட்டமைப்புப் கோரவுள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்று கூறியிருந்தார்.

ஆனாலும் மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அதுபற்றிக் கூட்டமைப்புக்கும் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இந்தநிலையில் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

13வது திருத்தத்தை மக்கள் நிராகரித்து விட்டதாகக் கூறும் கூட்டமைப்பு, இப்போது தான் இந்தப் பிடியை இறுக்குவதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசுடனான பேச்சுக்களின் போது 13வது திருத்தத்துக்கும் அப்பாற்பட்ட தீர்வு பற்றி அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவே ஆலோசனை அவரகளுக்கு கூறியுள்ளதாம். இந்தத் தகவலை வெளியிட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கடந்தமுறை பேச்சுக்கள் முடிந்த பின்னர் கூட, 13வது திருத்தம் பற்றிப் பேசவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

கூட்டமைப்பு என்ன தான் யோசனையை முன்வைத்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம் தான்.

அவர் அதை நேரடியாக எதிர்க்காமல் மறைமுறைமாக தோற்கடிப்பதற்குப் பல்வேறு காய்களைத் தயார் நிலையில் வைத்துள்ளார்.

அதற்காகவே அவர் எந்தவொரு அதிகாரப்பகிர்வு –அரசியல்தீர்வு யோசனையையும் அனைத்துக் கட்சிகளும் ஏற்கவேண்டும் என்று எப்போதும் கூறி வருகிறார்.

இதுவரை தாமே தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதாக கூறிவந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் இப்போது கூட்டமைப்பின் தீர்வுத் திட்டத்தை எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்க விடயம்.

அரசாங்கம் இப்போதாவது தனது கையில் எந்தத் தீர்வுத் திட்டமும் கிடையாது என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.

அதேவேளை தீர்வுத் திட்டத்தைக் கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அது கூறுவதும் கூட ஒரு இழுத்தடிப்பு நாடகமே என்பதில் சந்தேகமும் இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழு கூட அரசியல்தீர்வை இழுத்தடிப்தற்கான ஒரு நாடகம் தான் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவும் கூறியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கம் அரசியல் தீர்வை இழுத்தடிப்பதற்கு புதிய பல வியூகங்களை வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது என்றே உணர முடிகிறது.
அரசதரப்பின் இந்த வியூகங்களை உடைத்துத் தான் அதிகாரப்பகிர்வு ஒன்றை பெற வேண்டிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளது.

கட்டுரையாளர் கபில்

Samstag, 26. März 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல்: சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர் பாசம்


நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற சிங்கள அரச இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான படுமோசமான மனிதப்பேரவலத்திற்கு முக்கிய காரணம் இந்திய நடுவன் அரசு. இவ்வரசை ஆழும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியே ஈழத்தமிழரின் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். சிங்கள அரசிற்கு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் என பல இராணுவ உதவிகளை நேரடியாகவே கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவி இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இது ஒன்றும் ஈழத்தமிழர்களின் மீது கொண்ட பாசமல்ல.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகிறது என்பதனால் தமிழர்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு எப்படியேனும் கிடைக்க வேண்டும் என்கிற காரணம்தான் சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர்ப் பாசம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சிறிலங்காவில் சிங்கள அரசை தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டுப் பெரும் இன அழிப்பை நடாத்தியது சோனியா தலைமை தாங்கும் காங்கிரஸ் அரசுதான். இதனைப் பல தரப்பட்டவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். விடுதலைப்புலிகள் மீது அதீத விரோதம் கொண்டவர்தான் சோனியா. தனது கணவரை கொன்ற புலிகளை எப்படியேனும் அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் மந்திரியாக இருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்தவர் இக்கட்டுரையாளருக்கு கூறிய ஒரு வார்த்தை இன்றும் மனதில் உள்ளது. அவரின் கூற்றின்படி ராஜீவைக் கொன்ற புலிகளை அழிக்க நாக பாம்பு எப்படி பழி வாங்குமோ அதைப் போன்றேதான் இந்தியா செய்யும் என்று கூறினார். வாஜ்பாய் தலைமயிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்திலேயேதான் இக்காங்கிரஸ் பிரமுகர் இப்படியாகக் கூறியிருந்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி பிரமுகரின் கருத்தே பல காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களிடம் இருக்கின்றது. இவர்களுக்கே இப்படியான கருத்திருக்குமென்றால், கணவரை பலிகொடுத்த சோனியாவுக்கு எப்படியாக இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்தால் புரிந்துகொள்ள முடியும். குற்றம் செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிற மனப்பாண்பு பலரிடத்தில் இல்லை. தலைவர்கள் என்றால் கடவுள்கள் என்று துதிபாடும் மக்களே இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள்.

1987-இல் ராஜீவ் அனுப்பிய இந்தியப் படைகள் ஏறத்தாள 10,000 ஈழத்தமிழரை கொன்றனர். பல்லாயிரம் பெண்களை மானபங்கப்படுத்தி கொடுமைப்படுத்தியது இந்தியப் படைகள். பல்லாயிரம் இளைஞர்களை கொடுமைப்படுத்தியது அமைதிகாக்கப் போவதாக சென்ற இந்தியப் படைகள். ஈழத்தமிழர்களின் உயிர்கள் மற்றும் அவர்களிற்கு நிகழ்ந்த அவலங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு துரும்பாகத் தெரிந்துள்ளது போலும். அதனால்தான் என்னவோ சோனியாவினால் சிங்கள கொலைவெறி ஆட்சியாளர்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்து 40,000 ஈழத்தமிழரை அழித்தும் லட்சக்கணக்கானவர்களை சிங்கள ஆட்சியாளர்களிடம் சரணடையும் நிலைக்கு உருவாக்கியது.

சராசரி இந்திய அரசியல்வாதியாகிவிட்ட சோனியா
இத்தாலியில் பிறந்து பெற்றோர்களினால் அன்ரோனியோ மைனோ என்கிற பெயர் சூட்டப்பட்ட சாதாரண பெண்மணி, ராஜீவை திருமணம் செய்து கொண்டதும் மாமியார் இந்திரா காந்தி சூட்டிய பெயரே சோனியா காந்தி. வெள்ளையினத்தினரிடத்தில் பரவலாக இருக்கும் பரந்த மனப்பாங்கு கடுகளவேனும் சோனியாவிடம் இல்லை. இந்திய மக்களிடம் புரையோடிப்போயிருக்கும் பழிக்குப் பழி வாங்கும் குணாதிசயங்கள் சோனியாவையும் அதிகமாக உட்கொண்டுவிட்டது.

அரசியல் காரணங்களுக்கு எதனையும் விட்டுக்கொடுத்து எப்படியேனும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடினால் போதும் என்கிற இந்திய அரசியல்வாதிகளிடத்தில் இருக்கும் அதே குணம் சோனியாவிடத்திலும் வந்துவிட்டது போலும். மார்ச் 17-இல் இடம்பெற்ற 14-ஆவது காமன்வெல்த்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற சோனியா லண்டன் சென்றார். அவரின் சிறப்புரைக்கு முன்னதாக அவரிடம் சில கேள்விகளை உலகத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் கேட்கப்பட்டது. சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா? எனக் கேட்டபோது அது குறித்து கருத்து வெளியிட முடியாது என மறுத்தார். எந்த ஒரு இடத்திலும் தான் தமிழர்கள் பக்கம்தான் இருப்பேன் என்று கூறவில்லை என்கின்றனர் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட சில தமிழ் அன்பர்கள். இருப்பினும், உலகத் தமிழர் பேரவையோ சோனியா அப்படிக் கூறியதாக அடித்துக் கூறுகிறது.

ஈழத்தில் சிங்களப் படையினர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் குறித்து சோனியாவிடம் வினாவப்பட்டபோது சிறிலங்காவில் அவ்வாறானதொரு நிலை நடந்திருப்பின் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என குறிப்பிட்டார். வார்த்தைப் பிரயோகங்களைச் மிகவும் துல்லியமாகப் பாவித்த சோனியா காந்தி எல்லா இடங்களிலும், அப்படி நடந்தால், இப்படி நடந்தால் அதனைத் தான் கண்டிக்கிறேன் என்று கூறித் தப்பித்தார். அவ்வளவுதான். மற்றும்படி அவர் வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழர்கள் பக்கம் தான் இருப்பேன் என்று தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர் சிலர்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை தாம் சந்தித்தது மிகவும் எதிர்பாராத ஒரு விடயம், ஆனால் தாம் தமிழ் மக்களின் நிலையை அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “இந்த சந்திப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. பார்வையாளர்களாகச் சென்ற நாம், கேள்வி நேரத்தில் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நிலை, அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அவருக்கு விளக்கியிருந்தோம். போர்க்குற்ற காணொளியை தான் நேரிடையாக பார்த்ததாக தெரிவித்துள்ள சோனியா காந்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்க இந்தியா உதவும் எனவும், அவர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா உதவும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா தமிழ் மக்களுடன்தான் நிற்கும் என அவர் பல தடவைகள் தெரிவித்தார்."

சோனியா காந்தி சராசரி இந்திய அரசியல்வாதியைப்போலவேதான் செயற்படுகிறார் என்பது இதனூடாகத் தெரிகிறது. ஒன்றைக் கூறுவது பின்னர் பிறர் மூலமாக அதனை மறுதளிப்பது சர்வ சாதாரணமாக இந்தியாவில் இடம்பெறுவதே. யார் சொல்வது உண்மை என்பது காலப்போக்கில் நிச்சயம் தெரியவரும். அப்போது பொய் சொல்லுபவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும். ஆனால், ஓன்று மட்டும் நிச்சயம் என்னவெனில் தமிழகத்தில் தேர்தல் இடம்பெற இன்னும் மூன்று கிழமைகளுக்கும் குறைவாக இருப்பதனால் சோனியா தமிழர்களின் வாக்கைப் பெற்று காங்கிரஸ் கட்சியின் அணியினர் வென்றுவிட வேண்டுமென்கிற போக்கில் எதையேனும் சொல்லியிருப்பார் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

காங்கிரஸ் கட்சியின் தொடர்பை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்
நீலிக்கண்ணீர் வடிக்கும் சோனியா எதனைச் சொன்னாலும் பொய் உண்மையாகாது. சிறிலங்கா அரசு வெறும் கருவியே. அதனை ஏவிவிட்டு ஈழத்தமிழரின் அழிவுக்கு காரணமாக இருந்தது இந்தியாவே என்று அத்தாட்சிகளுடன் உறுதிப்படுத்துகிறது விக்கி லீக்ஸ். ஈழத்தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஊடாக பலர் முயற்சித்தபோது அதற்கு தடை போட்ட இந்திய காங்கிரசினதும் சோனியாவினதும் கூட்டாளி நாராயணன்தான் என்பது தெரியவந்துள்ளது. நாராயணனை ஆட்டிவித்ததே சோனியாதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவருக்கு காங்கிரஸ் கட்சியினால் பல தரப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளதுடன், பல முக்கிய பொறுப்புக்களை இவருக்கு காங்கிரஸ் தலைமயிலான அரசே கொடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர விடுதலைப்புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கி லீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையிலிருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸ{லேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தில் இந்திய சமாதானப் படை நிலைகொண்டிருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன் ஆவார்.
ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பைக் கையாண்டவர்கள் தமிழகத்திற்கு அருகில் இருக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்த நாராயணன் மற்றும் தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்தக் காலப்பகுதியில் இருவருக்கும் மேலதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்திய புலனாய்வுத்துறையில் 40 வருடங்களுக்கு மேலாக கடமை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போர் நின்றுவிடாத வகையில், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா அரசை இந்தியாதான் காப்பாற்றியது என வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விக்கி லீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது என 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கு பல தடவை குரல் கொடுத்த இந்திய அரசு, அதுகுறித்து தனது கவலையையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தது. அதேவேளையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்கவே இல்லை என அமெரிக்க தூதரக கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடியும் தருவாயில், ஈழத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச நாடுகளுடனும், அமைப்புகளுடனும் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டாலும், சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை மழுங்கடிக்கும் முயற்சியில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, காங்கிரஸ் தலைமயிலான இந்திய நடுவன் அரசின் பொய் முகத்திரையை விக்கி லீக்ஸ் கிழித்தெறிந்துள்ளது. இதனை மறைத்து தமிழ்நாட்டு மக்களை மென்மேலும் முட்டாள்களாக்கி தி.மு.க. தலைமயிலான கூட்டணியை எப்படியேனும் பதவிக்கு கொண்டுவருவதனூடாக, அடுத்துவர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தலைமயிலான ஆட்சியே நியூ டெல்லியிலும் இடம்பெற வேண்டும் என்கிற நட்பாசையுடன் களம் இறங்கியிருக்கிறார் சோனியா. இவைகளே சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர்ப் பாசத்திற்கு காரணம். தமிழர்கள் விழிப்பாக இருந்தால் யாராலும் அவர்களை ஏமாற்ற முடியாது.

--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்--

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய

மின்னஞ்சல்:nithiskumaaran@yahoo.com

Sonntag, 20. März 2011

"பொறியில் சிங்களம்": "புலிகள் பற்றிய மதிப்பீடும்" : "அவர்களின் சர்வதேச வலைப்பின்னலும்"


போர்க் கருத்தரங்கு ஏற்பாட்டால் பொறியில் சிக்குமா அரசாங்கம்?
போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பெயரில் அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழைப்புகளை முறியடிக்க மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது.

போர்க்குற்றங்கள் எதையும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தரங்குகள் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார்.

அதேவேளை போர்க்குற்ற விசாரணையை நிராகரிப்பதற்கு எதிராகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்கா இத்தகையதொரு முடிவை எடுத்து நின்றால் அதற்குப் பின்னால் பல நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம்.


இனி

தீவிரவாதத்தைத் தோற்கடித்த ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்ற தலைப்பில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு சர்ச்சைக்குள்ளாகத் தொடங்கியுள்ளது. இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று கடந்த பல மாதங்களாகவே இலங்கை இராணுவம் கூறி வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

மே 31 ம் திகதி தொடக்கம் ஹோட்டல் கலதாரியில் இந்தக் கருத்தரங்கு நடைபெறும். ஜுலை 2ஆம் திகதி வரையிலான மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு 54 நாடுகளுக்குப் பாதுகாப்புச் செயலர் அழைப்புகளை அனுப்பியுள்ளார். மே 31ம் திகதி காலை 9.10 மணியளவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்வில், அடுத்ததாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றுவார்.

அதையடுத்து அன்றைய தினம் மூன்று கருத்தமர்வுகள் நடைபெறவுள்ளன.
தீவிரவாத முறியடிப்பின் சவால்களும் எதிர்பார்ப்புகளும்“ என்ற தலைப்பிலானது முதலாவது கருத்தமர்வு.

இதற்குத் தலைமையேற்கப் போகின்றவர் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

அதேவேளை இதில் பங்கேற்கவுள்ள இரண்டு பேச்சாளர்களில் ஒருவர் இந்தியப் பேச்சாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சாளர்கள் இருவரும் யார் என்பது உறுதியாகவில்லை.


இரண்டாவது கருத்தமர்வு “புலிகள் பற்றிய மதிப்பீடும், அவர்களின் சர்வதேச வலைப்பின்னலும்“ என்ற தலைப்பில் அமையவுள்ளது.

இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் லெப்.கோ்ணல் சாலி ஆகியோர் இந்த அமர்வின் பேச்சாளர்களாக இருப்பர்.
ஆனால் தலைமையேற்கவுள்ளவர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.


இலங்கையின் தீவிரவாத முறியடிப்பு ஒரு பார்வை“ என்ற தலைப்பில் மூன்றாவது கருத்தமர்வு நடைபெறும்.

பேராசிரியர் றொகான் குணரட்ணவும் வேறொரு வெளிநாட்டு பேச்சாளரும் இதில் பங்கேற்கவுள்ளனர். ஆனால் தலைமையேற்பவர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.
முதலாம் நாள் இரவு விருந்தில் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் உரை இடம்பெறும்.
இரண்டாவது நாளின் முதலாவது கருத்தமர்வு “மனிதாபிமான நடவடிக்கைகள்“ என்ற தலைப்பில் இடம்பெறும். மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த இதற்குத் தலைமை தாங்குவார்.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும், வடக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் பிரிகேடியர் ரவிப்பிரிய ஆகியோரும் பேச்சாளர்களாக பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளனர்.

இரண்டாவது கருத்தமர்வு “தீவிரவாத முறியடிப்பில் படைப்பெருக்கம்“ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இந்தக் கருத்தமர்வுக்குப் பேராசிரியர் ஜோன் ஹில் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தக் கருத்தமர்வில் புலிகளின் முன்னரங்குகளுக்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, விசேட படைப்பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் தர்மரட்ணவும், கவசப்படைப்பிரிவின் பங்களிப்புத் தொடர்பாக பிரிகேடியர் ரணசிங்கவும், ஆட்டிலறிப் படைப்பிரிவின் பங்கு தொடர்பாக பிரிகேடியர் நாபாகொடவும், பொறியியல் படைப்பிவின் சார்பில் பிரிகேடியர் விக்கிரமசூரியவும், சமிக்ஞைப் படைப்பிரிவின் சார்பில் பிரிகேடியர் றொவெல்லும் உரையாற்றவுள்ளனர்.

கடற்படை மற்றும் விமானப்படை சார்பிலும் இரு பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர். ஆனால் அவர்கள் யார் என்று இன்னம் தீர்மானிக்கப்படவில்லை.

இரண்டாம் நாளின் மூன்றாவது கருத்தமர்வு, முறியடிப்புத் தந்திரோபாயம், பயிற்சி மதிப்பீடும் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.

பிரிகேடியர் உடவத்த தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தமர்வில், விநியோக உதவிகள் தொடர்பாக பிரிகேடியர் காரியவசம், மற்றும் பிரிகேடியர் ஜெயசூரிய ஆகியோரும், மருத்துவ உதவிகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் முனசிங்கவும் உரையாற்றவுள்ளனர்.

பயிற்சி மதிப்பீடுகள் தொடர்பாக பிரிகேடியர் ரால்ப் நுகேரா உரையாற்றுவார். மூன்றாவது நாளின் முதலாவது கருத்தமர்வு “இடம்பெயர்ந்தோர், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, கண்ணிவெடிகள் அகற்றுதல்“ ஆகியன தொடர்பாக இடம்பெறும். இதற்குத் தலைமை தாங்குபவர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, கலாநிதி மல்காந்தி ஹெட்டியாராச்சி, பிரிகேடியர் விஜேரத்ன ஆகியோர் இந்தக் கருத்தமர்வில் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இரண்டாவது கருத்தமர்வில் தேச நிர்மாணம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும், ஆசியாவின் அதிசயம் என்ற தலைப்பில் லலித் வீரசிங்கவும் உரையாற்றவுள்ளனர் .

இந்தக் கருத்தரங்கில் வெளிநாட்டு பேச்சாளர்களை பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைத் தளபதியை அழைத்து பேச வைக்கப் போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய முன்னர் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தமர்வில் பங்கேற்குமாறு ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிறேஸில், புரூணை, கம்போடியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், ஜோர்தான், லாவோஸ், மலேசியா, மாலைதீவு, தாய்வான், லக்சம்பேர்க், நியுசிலாந்து, நோர்வே, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பெரு, போர்த்துக்கல், ருமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், செக்கோஸ்லேவேக்கியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, ஸ்பெயின், சூடான், சுவீடன், சுவிற்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உக்ரேன், அமெரிக்கா, வியட்நாம், நேபாளம், ஆகிய நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த அழைப்பை எத்தனை நாடுகள் ஏற்கவுள்ளன என்பதே. உலகில் கிட்டத்தட்ட 200 நாடுகள் உள்ளன. அவற்றில் தெவு செய்யப்பட்ட 54 நாடுகளுக்கே அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவை அத்தனையும் இலங்கையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவை. ஒன்றில் போருக்காக நிதியுதவி, ஆயுத உதவி செய்தவை. அல்லது அமைதிக்காக, அபிவிருத்திக்காக உதவி செய்தவை. இவற்றில் எத்தனை நாடுகள் இலங்கை அரசின் அழைப்பை ஏற்கவுள்ளன என்பது குறித்து சந்தேகங்கள் தோன்றி விட்டன. இதற்கு ஒரு காரணம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்ட இந்தப் போர் நடவடிக்கையின் பெருமைகளைக் கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கை நிராகரிக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதேவேளை அமெரிக்காவும், ஜப்பானும் இந்தக் கருத்தரங்கை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அதிகாரபூர்வ அறிவிப்புக்களாக இல்லை.

ஜப்பானிய அரசியலமைப்பு இதுபோன்ற கருத்தரங்குகளுக்குப் படை அதிகாரிகள் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளது.

அதேவேளை அமெக்காவோ போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை மறுத்ததைக் கண்டிக்கும் வகையில் இதைப் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றங்கள் எதையும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தரங்குகள் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார்.

அதேவேளை போர்க்குற்ற விசாரணையை நிராகரிப்பதற்கு எதிராகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்கா இத்தகையதொரு முடிவை எடுத்து நின்றால் அதற்குப் பின்னால் பல நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம்.

அது இந்தப் போர்க் கருத்தரங்கின் அடிப்படை நோக்கத்தைப் பாதிக்கும். அதுமட்டுமன்றி இலங்கைக்கு எதிரான ஒரு அணியை வெளிக்காட்டி அணி திரள வைத்து விட்டதாகவும் அமைந்து விடக்கூடும். குறிப்பாக இலங்கை இராணுவம் இந்தக் கருத்தரங்கிற்கு ஒழுங்குகளைச் செய்துள்ள போதும் வெளிநாட்டு பேச்சாளர்களை அழைப்பதில், அவர்களின் வரவை உறுதி செய்வதில் இன்னமும் வெற்றி பெறவில்லை.

இதை இந்தக் கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல் உறுதி செய்கிறது. போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பெயரில் அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழைப்புகளை முறியடிக்க மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்தக் கருத்தரங்கை ஐந்து, பத்து நாடுகள் புறக்கணித்தால் கூட அது பெரியதொரு விவகாரமாக மாறும். இலங்கைக்கு எதிரான நாடுகளின் அணி ஒன்று உருவாகியிருப்பதான தோற்றப்பாட்டையே அது உருவாக்கும். ஜெனிவாவில் தனக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதைச் சாதுரியமாகத் தடுத்த இலங்கை அரசாங்கம், இந்த விடயத்தில் தானாகவே சென்று பொறியில் சிக்கிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

கட்டுரையாளர் சுபத்ரா

Freitag, 18. März 2011

நாடுகளைக் கடந்து செல்லும் “நாடுகடந்த தமிழீழ அரசிற்கு” எமது வாழ்த்துக்கள்



நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை ஒப்புக்கொண்ட திரு உருத்திரகுமார் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான், நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும்.

நமது தாய் மண்ணில் ஒரு தமிழீழ அரசை நிறுவுவதன் மூலம்தான் ஈழத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிம்மதியோடும் பூரணமான சுதந்திரத்தோடும் வாழ முடியும் என்பதை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நமது ஈழ விடுதலைப் போராட்டம், உலக நாடுகள் செய்த சதியால் நசுக்கப்பட்டு, நமது சுதந்திரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியாத, எழுத முடியாத பாவிகளாக, அடக்கப்பட்டவர்களாக நமது மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் புலம் பெயரந்து வாழுகின்ற நமது உறவுகளின் ஆழ்ந்த தேசியப்பற்று காரணமாகவும் தீவிரமான ஈடுபாடு காரணமாகவும் கற்பனையில்லாத ஒரு அமைப்பாக உருவாகியுள்ளதே அந்த நாடு கடந்த தமிழீழ அரசு ஆகும்.

நமது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள திரு விசுவநாதன் உருத்திரகுமார் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து இந்த அமைப்பை மேலும் வளர்த்தெடுக்க அயராது உழைத்து வருகி;ன்றார் என்பதை உலகத் தமிழர்கள் நன்கு கவனித்து வருகி;ன்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசானது தற்போது மேற்குலக நாடுகளுக்குள் முடங்கிங்கிடக்காமல் நாடுகளைக் கடந்த செல்லும் புதிய வேகத்தைப் பற்றி குறிப்பிடுவதும் அதற்கான நமது வாழ்த்துக்களை தெரிவிப்பதும்தான் இவ்வார கதிரோட்டத்தின் நோக்கம் என்று நாம் கூறுகி;ன்றோம்.

அண்மையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கூட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கொள்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பல அரசியல் நெருக்கடிகள் மற்றும் காவல்துறையின் எச்சரிக்கை போன்றவற்றையும் சமாளித்து பல ஆர்வலர்கள் கலந்து கொண்டு அந்த நிகழ்வை ஒரு வெற்றிவிழாவாக ஆக்கியுள்ளார்கள். இதுவும் பாராட்டுக்குரியது.

மேலும், மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் திரு உருத்திரகுமார் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக கோலாலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

கோலாலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கனடாவிருந்து சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை ஒப்புக்கொண்ட திரு உருத்திரகுமார் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான், நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும். அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த விடயமானது உலக மக்களைக் கவருகின்ற ஒரு அம்சமாகும்.

அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் தமது சொந்தச் செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் அரசின் உறுதியான எதிர்காலத்திற்கு தேவையான அத்திவாரத்தை அமைக்கும் பணியையும் உதயன் பாராட்டுகின்றது.. வாழத்துகின்றது.

நாடுகளைக் கடந்து செல்லும் நமது தமிழீழ அரசானது மிகவும் அவதானமாக செய்ற்பட வேண்டும் என்ற அக்கறையாக வேண்டுகோளையும் நாம் விடுக்கின்றோம். பிரதமர் தீரு உருத்திரகுமார் கனடாவிலிருந்து தெரிவான அதன் சபாநாயகர் திரு பொன். பால்ராஜன் போன்றவர்களும் வௌ;வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அங்கத்தவர்களும் பலமான குழுவாக செயற்பட்டு “உள்ளேயும்” “வெளியேயும்” இருந்து வரும் ஆரோக்கியமற்ற எதிர்ப்புக்களைக் களைந்து வெற்றி நடை போடவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

கனடா உதயன் கதிரோட்டம்