
போர்க் கருத்தரங்கு ஏற்பாட்டால் பொறியில் சிக்குமா அரசாங்கம்?
போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பெயரில் அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழைப்புகளை முறியடிக்க மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது.
போர்க்குற்றங்கள் எதையும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தரங்குகள் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார்.
அதேவேளை போர்க்குற்ற விசாரணையை நிராகரிப்பதற்கு எதிராகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்கா இத்தகையதொரு முடிவை எடுத்து நின்றால் அதற்குப் பின்னால் பல நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம்.
இனி
தீவிரவாதத்தைத் தோற்கடித்த ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்ற தலைப்பில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு சர்ச்சைக்குள்ளாகத் தொடங்கியுள்ளது. இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று கடந்த பல மாதங்களாகவே இலங்கை இராணுவம் கூறி வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது.
மே 31 ம் திகதி தொடக்கம் ஹோட்டல் கலதாரியில் இந்தக் கருத்தரங்கு நடைபெறும். ஜுலை 2ஆம் திகதி வரையிலான மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு 54 நாடுகளுக்குப் பாதுகாப்புச் செயலர் அழைப்புகளை அனுப்பியுள்ளார். மே 31ம் திகதி காலை 9.10 மணியளவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்வில், அடுத்ததாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றுவார்.
அதையடுத்து அன்றைய தினம் மூன்று கருத்தமர்வுகள் நடைபெறவுள்ளன.
தீவிரவாத முறியடிப்பின் சவால்களும் எதிர்பார்ப்புகளும்“ என்ற தலைப்பிலானது முதலாவது கருத்தமர்வு.
இதற்குத் தலைமையேற்கப் போகின்றவர் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
அதேவேளை இதில் பங்கேற்கவுள்ள இரண்டு பேச்சாளர்களில் ஒருவர் இந்தியப் பேச்சாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சாளர்கள் இருவரும் யார் என்பது உறுதியாகவில்லை.
இரண்டாவது கருத்தமர்வு “புலிகள் பற்றிய மதிப்பீடும், அவர்களின் சர்வதேச வலைப்பின்னலும்“ என்ற தலைப்பில் அமையவுள்ளது.
இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் லெப்.கோ்ணல் சாலி ஆகியோர் இந்த அமர்வின் பேச்சாளர்களாக இருப்பர்.
ஆனால் தலைமையேற்கவுள்ளவர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.
இலங்கையின் தீவிரவாத முறியடிப்பு ஒரு பார்வை“ என்ற தலைப்பில் மூன்றாவது கருத்தமர்வு நடைபெறும்.
பேராசிரியர் றொகான் குணரட்ணவும் வேறொரு வெளிநாட்டு பேச்சாளரும் இதில் பங்கேற்கவுள்ளனர். ஆனால் தலைமையேற்பவர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.
முதலாம் நாள் இரவு விருந்தில் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் உரை இடம்பெறும்.
இரண்டாவது நாளின் முதலாவது கருத்தமர்வு “மனிதாபிமான நடவடிக்கைகள்“ என்ற தலைப்பில் இடம்பெறும். மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த இதற்குத் தலைமை தாங்குவார்.
கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும், வடக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் பிரிகேடியர் ரவிப்பிரிய ஆகியோரும் பேச்சாளர்களாக பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளனர்.
இரண்டாவது கருத்தமர்வு “தீவிரவாத முறியடிப்பில் படைப்பெருக்கம்“ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இந்தக் கருத்தமர்வுக்குப் பேராசிரியர் ஜோன் ஹில் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தக் கருத்தமர்வில் புலிகளின் முன்னரங்குகளுக்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, விசேட படைப்பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் தர்மரட்ணவும், கவசப்படைப்பிரிவின் பங்களிப்புத் தொடர்பாக பிரிகேடியர் ரணசிங்கவும், ஆட்டிலறிப் படைப்பிரிவின் பங்கு தொடர்பாக பிரிகேடியர் நாபாகொடவும், பொறியியல் படைப்பிவின் சார்பில் பிரிகேடியர் விக்கிரமசூரியவும், சமிக்ஞைப் படைப்பிரிவின் சார்பில் பிரிகேடியர் றொவெல்லும் உரையாற்றவுள்ளனர்.
கடற்படை மற்றும் விமானப்படை சார்பிலும் இரு பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர். ஆனால் அவர்கள் யார் என்று இன்னம் தீர்மானிக்கப்படவில்லை.
இரண்டாம் நாளின் மூன்றாவது கருத்தமர்வு, முறியடிப்புத் தந்திரோபாயம், பயிற்சி மதிப்பீடும் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.
பிரிகேடியர் உடவத்த தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தமர்வில், விநியோக உதவிகள் தொடர்பாக பிரிகேடியர் காரியவசம், மற்றும் பிரிகேடியர் ஜெயசூரிய ஆகியோரும், மருத்துவ உதவிகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் முனசிங்கவும் உரையாற்றவுள்ளனர்.
பயிற்சி மதிப்பீடுகள் தொடர்பாக பிரிகேடியர் ரால்ப் நுகேரா உரையாற்றுவார். மூன்றாவது நாளின் முதலாவது கருத்தமர்வு “இடம்பெயர்ந்தோர், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, கண்ணிவெடிகள் அகற்றுதல்“ ஆகியன தொடர்பாக இடம்பெறும். இதற்குத் தலைமை தாங்குபவர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, கலாநிதி மல்காந்தி ஹெட்டியாராச்சி, பிரிகேடியர் விஜேரத்ன ஆகியோர் இந்தக் கருத்தமர்வில் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இரண்டாவது கருத்தமர்வில் தேச நிர்மாணம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும், ஆசியாவின் அதிசயம் என்ற தலைப்பில் லலித் வீரசிங்கவும் உரையாற்றவுள்ளனர் .
இந்தக் கருத்தரங்கில் வெளிநாட்டு பேச்சாளர்களை பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைத் தளபதியை அழைத்து பேச வைக்கப் போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய முன்னர் கூறியிருந்தார்.
இந்தக் கருத்தமர்வில் பங்கேற்குமாறு ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிறேஸில், புரூணை, கம்போடியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், ஜோர்தான், லாவோஸ், மலேசியா, மாலைதீவு, தாய்வான், லக்சம்பேர்க், நியுசிலாந்து, நோர்வே, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பெரு, போர்த்துக்கல், ருமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், செக்கோஸ்லேவேக்கியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, ஸ்பெயின், சூடான், சுவீடன், சுவிற்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உக்ரேன், அமெரிக்கா, வியட்நாம், நேபாளம், ஆகிய நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த அழைப்பை எத்தனை நாடுகள் ஏற்கவுள்ளன என்பதே. உலகில் கிட்டத்தட்ட 200 நாடுகள் உள்ளன. அவற்றில் தெவு செய்யப்பட்ட 54 நாடுகளுக்கே அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவை அத்தனையும் இலங்கையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவை. ஒன்றில் போருக்காக நிதியுதவி, ஆயுத உதவி செய்தவை. அல்லது அமைதிக்காக, அபிவிருத்திக்காக உதவி செய்தவை. இவற்றில் எத்தனை நாடுகள் இலங்கை அரசின் அழைப்பை ஏற்கவுள்ளன என்பது குறித்து சந்தேகங்கள் தோன்றி விட்டன. இதற்கு ஒரு காரணம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்ட இந்தப் போர் நடவடிக்கையின் பெருமைகளைக் கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கை நிராகரிக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதேவேளை அமெரிக்காவும், ஜப்பானும் இந்தக் கருத்தரங்கை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அதிகாரபூர்வ அறிவிப்புக்களாக இல்லை.
ஜப்பானிய அரசியலமைப்பு இதுபோன்ற கருத்தரங்குகளுக்குப் படை அதிகாரிகள் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளது.
அதேவேளை அமெக்காவோ போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை மறுத்ததைக் கண்டிக்கும் வகையில் இதைப் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்க்குற்றங்கள் எதையும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தரங்குகள் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார்.
அதேவேளை போர்க்குற்ற விசாரணையை நிராகரிப்பதற்கு எதிராகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்கா இத்தகையதொரு முடிவை எடுத்து நின்றால் அதற்குப் பின்னால் பல நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம்.
அது இந்தப் போர்க் கருத்தரங்கின் அடிப்படை நோக்கத்தைப் பாதிக்கும். அதுமட்டுமன்றி இலங்கைக்கு எதிரான ஒரு அணியை வெளிக்காட்டி அணி திரள வைத்து விட்டதாகவும் அமைந்து விடக்கூடும். குறிப்பாக இலங்கை இராணுவம் இந்தக் கருத்தரங்கிற்கு ஒழுங்குகளைச் செய்துள்ள போதும் வெளிநாட்டு பேச்சாளர்களை அழைப்பதில், அவர்களின் வரவை உறுதி செய்வதில் இன்னமும் வெற்றி பெறவில்லை.
இதை இந்தக் கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல் உறுதி செய்கிறது. போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பெயரில் அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழைப்புகளை முறியடிக்க மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்தக் கருத்தரங்கை ஐந்து, பத்து நாடுகள் புறக்கணித்தால் கூட அது பெரியதொரு விவகாரமாக மாறும். இலங்கைக்கு எதிரான நாடுகளின் அணி ஒன்று உருவாகியிருப்பதான தோற்றப்பாட்டையே அது உருவாக்கும். ஜெனிவாவில் தனக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதைச் சாதுரியமாகத் தடுத்த இலங்கை அரசாங்கம், இந்த விடயத்தில் தானாகவே சென்று பொறியில் சிக்கிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
கட்டுரையாளர் சுபத்ரா
Keine Kommentare:
Kommentar veröffentlichen