
ரசாங்கம் இப்போதாவது தனது கையில் எந்தத் தீர்வுத் திட்டமும் கிடையாது என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. அதேவேளை தீர்வுத் திட்டத்தைக் கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அது கூறுவதும் கூட ஒரு இழுத்தடிப்பு நாடகமே என்பதில் சந்தேகமும் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழு கூட அரசியல்தீர்வை இழுத்தடிப்தற்கான ஒரு நாடகம் தான் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவும் கூறியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கம் அரசியல் தீர்வை இழுத்தடிப்பதற்கு புதிய பல வியூகங்களை வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது என்றே உணர முடிகிறது. அரசதரப்பின் இந்த வியூகங்களை உடைத்துத் தான் அதிகாரப்பகிர்வு ஒன்றை பெற வேண்டிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளது.
இனி,
அரசதரப்பின் இழுத்தடிப்பு வியூகங்களை உடைக்குமா தமிழ் தேசிய கூட்டமைப்பு?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் ஆசிரியர்கள், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கடந்தவாரம் தனித்தனியாக இந்தச் சந்திப்புகள் அலரி மாளிகையில் நடைபெற்றன. நெருக்கடிகள் அதிகமாகின்ற போது. ஊடகங்களின் ஆதரவைத் தன் பக்கம் திருப்புவதற்கான ஒரு தந்திரோபாயமாக இந்தச் சந்திப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பயன்படுத்தி வருகிறார்.
முதலில் உள்நாட்டு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பின்னர், கொழும்பைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களையும் அவர் சந்தித்துள்ளார்.
முதலாவது சந்திப்பில் அவரது நோக்கம் உள்ளூர் விவகாரங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு, அதிகாரப்பகிர்வு பற்றிய கலந்துரையாடல்கள் அதில் அதிகமாக இருந்துள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களுடனான சந்திப்பில், அனைத்துலக விவகாரங்களை குறிப்பாக இலங்கை மீதான அந்நியத் தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாமாட்டாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இரண்டு சந்திப்புகளின் போதும் ஐ.நா நிபுணர்கள் குழு பற்றிய விவகாரம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கையில் விசாரணைகளை நடத்த முடியாது வேண்டுமானால் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்கலாம் என்று மீண்டும்இ மீண்டும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பற்றித் தாம் கவலை கொள்ளவில்லை என்றும் அதை பகிரங்கப்படுத்தினாலும் சரி விட்டாலும் சரி அதுபற்றித் தாம் அலட்டிக் கொள்ளவில்லை என்றும் உள்நாட்டு ஊடகங்களிடம் அவர் கூறியிருந்தார். ஆனால் வெளிநாட்டு ஊடகங்களிடம் அப்படிக் கூறியதாக தகவல் இல்லை.
ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதியில்லை என்று கூறியிருந்தாலும், அதன் அறிக்கையைத் தாம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது போன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்துக் கொண்டுள்ளார்.
இது இருவேறுபட்ட ஊடகப் பரப்புகளை வேறு வேறு கோணங்களில் அணுகும் போக்கில் ஜனாதிபதி மகிநத ராஜபக்ஸ இருப்பதை வெளிப்படுத்துகிறது.
அடுத்து உள்நாட்டு ஊடகங்களுடனான சந்திப்பின் போது கொழும்பில் அதிகளவில் வாழ்ந்து வந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பின் சனத்தொகை மாற்றம் குறித்து எதற்காகத் திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறார் என்பது கேள்விக்குரியதொன்றாகவே உள்ளது.
இது குறித்து எவரும் பிரச்சினை எழுப்பவில்லை என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதியே இதைப் பிரச்சினையாக்கி வருகிறார்.
இந்தக் கருத்தை மகிந்த ராஜபக்ஸவைத் தவிர வேறெவரும் தூக்கிப் பிடிக்கவில்லை.
மகிந்த ராஜபக்ஸ மட்டுமே இதை எதற்காகத் தூக்கிப் பிடித்து அடிக்கடி கூறி வருகிறார் என்பது தெரியவில்லை.
அதேவேளை, உள்ளூர் ஊடகங்களுடனான சந்திப்பின் போது மீண்டும் அவர் ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
புலிகள் கேட்டதை பிரபாகரன் கோரியதை எவருக்கும் கொடுக்க முடியாது என்பதே அது.
இது அவர் அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒரு விடயம் தான்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப்பகிர்வு யோசனைக்காகத் தாம் காத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்று வரும் பேச்சுக்களின் போது முன்வைக்கப்படும் தீர்வு யோசனை குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆராய்ந்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றே நிறைவேற்ற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாவது சுற்றுப்பேச்சின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கூறியிருந்தது.
வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் வகையிலான யோசனையே இது என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக காணி, பொலிஸ்,வனங்களைப் பராமரிக்கும் அதிகாரங்களைக் கூட்டமைப்புப் கோரவுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்று கூறியிருந்தார்.
ஆனாலும் மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அதுபற்றிக் கூட்டமைப்புக்கும் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இந்தநிலையில் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.
13வது திருத்தத்தை மக்கள் நிராகரித்து விட்டதாகக் கூறும் கூட்டமைப்பு, இப்போது தான் இந்தப் பிடியை இறுக்குவதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசுடனான பேச்சுக்களின் போது 13வது திருத்தத்துக்கும் அப்பாற்பட்ட தீர்வு பற்றி அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவே ஆலோசனை அவரகளுக்கு கூறியுள்ளதாம். இந்தத் தகவலை வெளியிட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கடந்தமுறை பேச்சுக்கள் முடிந்த பின்னர் கூட, 13வது திருத்தம் பற்றிப் பேசவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
கூட்டமைப்பு என்ன தான் யோசனையை முன்வைத்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம் தான்.
அவர் அதை நேரடியாக எதிர்க்காமல் மறைமுறைமாக தோற்கடிப்பதற்குப் பல்வேறு காய்களைத் தயார் நிலையில் வைத்துள்ளார்.
அதற்காகவே அவர் எந்தவொரு அதிகாரப்பகிர்வு –அரசியல்தீர்வு யோசனையையும் அனைத்துக் கட்சிகளும் ஏற்கவேண்டும் என்று எப்போதும் கூறி வருகிறார்.
இதுவரை தாமே தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதாக கூறிவந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் இப்போது கூட்டமைப்பின் தீர்வுத் திட்டத்தை எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்க விடயம்.
அரசாங்கம் இப்போதாவது தனது கையில் எந்தத் தீர்வுத் திட்டமும் கிடையாது என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.
அதேவேளை தீர்வுத் திட்டத்தைக் கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அது கூறுவதும் கூட ஒரு இழுத்தடிப்பு நாடகமே என்பதில் சந்தேகமும் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு கூட அரசியல்தீர்வை இழுத்தடிப்தற்கான ஒரு நாடகம் தான் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவும் கூறியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கம் அரசியல் தீர்வை இழுத்தடிப்பதற்கு புதிய பல வியூகங்களை வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது என்றே உணர முடிகிறது.
அரசதரப்பின் இந்த வியூகங்களை உடைத்துத் தான் அதிகாரப்பகிர்வு ஒன்றை பெற வேண்டிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளது.
கட்டுரையாளர் கபில்
Keine Kommentare:
Kommentar veröffentlichen