Main Pages Kathiravan.com

Freitag, 15. April 2011

போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்: இலங்கை அமெரிக்கா இடையிலான உறவுகளில் அதிகரிக்கும் விரிசல்கள்..................?


சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை தடுமாறவே செய்கிறது. போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்,போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசின் கையை மீறி செல்லப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. இது இலங்கை அரசுக்கும் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலை உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் இலங்கைக்கு இருந்து வந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் இப்போதைக்குக் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.


இனி,

அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருந்து வரும் ஒருவித முறுகல் நிலை இப்போதைக்குத் தீர்வதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

ஏனென்றால், இந்த முறுகல்நிலை தீவிரமாகும் அறிகுறிகளே இப்போது அதிகமாகத் தென்படுகின்றன. இதன் அடிப்படைக் காரணம், இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரமே என்பதில் சந்தேகம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமாக மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், அதுபற்றி விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் அமெரிக்கா, மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் இந்த விவகாரத்தில் கொஞ்சமும் விட்டுக் கொடுப்பின்றி வலியுறுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தவர். எனவே இலங்கையைப் பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக அறிந்து வைத்திருப்பவர். இலங்கை விவகாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவராகக் கருதப்படும் றொபேட் ஓ பிளேக் பொறுப்புக்கூறுதல் பற்றி அடிக்கடி வலியுறுத்தி வருவதால் அரசாங்கத்திடம் அவருக்கு ஏகப்பட்ட கடுப்பு இருப்பது உண்மை.

பலமுறை இராஜதந்திர வழிகளிலும், பகிரங்கமாகவும் இவர் மீது அரசாங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. ஆனாலும் றொபேட் ஓ பிளேக் இலங்கை விவகாரத்தில் கடும் போக்குடனேயே இருந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவிடம் பேசியபோதும், அவர் பொறுப்புக்கூறதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மனிதஉரிமைகள் நிலையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே இலங்கையுடனான அமெரிக்காவின் உறவுகள் அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

அங்குள்ள மனிதஉரிமை நிலைமைகள் கவலையளிப்பதாகவும், அதனால் இலங்கையுடன் இறுக்கமான உறவைப் பேண முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ள கருத்து அமெரிக்கா, சிறிலங்கா இடையிலான உறவில் உள்ள விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணைகளை அரசாங்கம் நடத்தத் தவறினால் அனைத்துலக விசாரணைகளுக்கு இழுத்து வரும் நிலை ஏற்படும் என்று அவர் சில வாரங்களுக்கு முன்னர் விடுத்த எச்சரிக்கையை இலங்கை அரசினால் அவ்வளவு இலகுவாக மறந்து போக முடியாது. இதைப் பாரதூரமானதொன்றாக கருதினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்தது இலங்கை அரசு. இந்தநிலையில் இலங்கைக்கு வரவிருந்த றொபேட் ஓ பிளேக்கை அரசாங்கம் தந்திரமான முறையில் தற்காலிகமாகத் தடுத்துள்ளது.

றொபேட் ஓ பிளேக்கின் கொழும்பு வருகை மிகவும் முகத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்பட்டது. மனிதஉரிமை நிலைமைகள் குறித்த அமெரிக்க அரசின் இறுக்கமான செய்தி ஒன்றை அவர் எடுத்து வரவிருந்தார்.

இந்தத் தகவல் கடந்தவாரம் ஊடகங்களுக்கு கசிய முன்னரே அரசாங்கத்துக்குத் தெரிந்திருந்தது. பிளேக் வரவிருக்கும் செய்தியையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொண்ட அரசாங்கம் அவரை எப்படியாவது வரவிடாமல் செய்வதற்குப் புதியதொரு வழிமுறையைப் பின்பற்றியது. பொதுவாக வெளிவிவகார அமைச்சர்கள் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதுஇ அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம்.  அது கிடைக்காமல் போனால் பெரும்பாலும் பயணம் மேற்கொள்ளப்படுவதில்லை. வெளிவிவகார அமைச்சர் பிரீஸ் இப்போது பிரித்தானியாவில் இருப்பதால்இ அதைக் காரணம் காட்டி அவர் வந்த பின்னர் வருமாறு பிளேக்கிடம் கூறியுள்ளது அரசாங்கம்.

இதனால் வேறு வழியின்றி கொழும்பு வருகையைப் பிற்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிளேக்.

இது அவராக விரும்பி எடுத்த முடிவு இல்லை. வேறு வழியின்றி எடுக்க வைக்கப்பட்ட முடிவு.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் செக் குடியரசுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பிரித்தானியா சென்றிருந்தார்.

அவர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க வாய்ப்புக் கேட்டபோதும், அது நிராகரிக்கப்பட்டது. அவரது ஒப்புதலைப் பெறாமலேயே பிரித்தானியா சென்ற அமைச்சர் பீரிஸ், பிரித்தானிய வெளிவிவகார துணை அமைச்சர் அலிஸ்ரெயர் பேட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் போன்றோருடன் மட்டும் பேசியிருந்தார்.

அத்துடன் அவரது பிரித்தானிய அதிகாரபூர்வ பயணம் முடிந்தாலும்இ அங்கேயே ஒரு வாரத்துக்குத் தங்கவுள்ளதாக அறிவித்தார்.

அது தனிப்பட்ட பயணமாக அறிவிக்கப்பட்டது.

பீரிஸ் நாடு திரும்பினால் கொழும்பு வரும் பிளேக்கை தடுக்க முடியாது. எனவே தான் அவர் பிரித்தானியாவில் தனது பயணத்தை நீட்டிக் கொண்டார்.

எப்படியோ பிளேக்கின் வருகை பிற்போடப்பட்டுள்ளது.

அவர் இலங்கைக்கு வராதது தற்காலிக நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஆனால் இந்தப் பயணத்தை அவர் கைவிட்டு விடவில்லை. எனவே அமைச்சர் பீரிஸ் கொழும்பில் இருக்கும் பிறிதொரு தினத்தில் அவர் கொழும்பு வருவார் என்கிறது அமெரிக்க அரசு.

பிளேக்கின் கொழும்பு வருகை இலங்கை அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுப்பதற்கு என்றே தெரிகிறது.

குறிப்பாக கடந்தமாத இறுதியில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் ஒன்றேகால் மணிநேரமாக பிளேக்குடன் பேசியுள்ளனர். இது இலங்கை அரசுக்கு கடும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. உலகத் தமிழர் பேரவையைப் புலிகளின் ஒரு எச்சமாகவே பார்க்கிறது அரசாங்கம். ஒரு பக்கத்தில் சர்வதேச அளவில் புலிகளை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளால் இலங்கை அரசு மனம் ஒடிந்து போகிறது. இந்தச் சந்திப்பின் போது போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை ஒப்புக் கொள்ள வைப்பதற்கான தந்திரோபாயங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம் என்று அரசாங்கம் கருதுவதாக தெரிகிறது.

இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது போனாலும், இந்தச் சந்திப்பை சாதாரணமானதொன்றாக அரசு எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் ஐ.நா நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையும் வெளியாகவுள்ள நிலையில் பிளேக் வருவதை அரசாங்கம் முற்றாகவே விரும்பவில்லை. அதன் காரணமாகவே அவரது பயணத்தைப் பிற்போடும் முடிவை எடுக்க வைத்தது.

இதுபோன்ற தந்திரோபாயங்களை அரசாங்கம் நீண்டகாலத்துக்கோ அல்லது இன்னொரு முறையோ பிரயோகிக்க முடியாது. அப்படிச் செய்தால் தங்களை இலங்கை அரசு ஏமாற்றுவதாக அமெரிக்கா உணர்ந்து கொள்ளும். இப்போது கூட அமெரிக்காவுக்கு அது தெரிந்திருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை.

ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படிச் செய்தால் அது இருதரப்பு உறவுகளுக்கிடையில் மேலும் விரிசலை உருவாக்கும். அனைத்துலக நாடுகளுடனான உறவுகளை தந்திரமாகக் கையாள்வதில் இலங்கை அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை தடுமாறவே செய்கிறது.

இந்தியாவுடனான உறவுகளில் கூட சில வேளைகளில் சிறியளவிலான சிராய்ப்புகள் ஏற்படவே செய்கின்றன.

இது பலவீனமான இராஜதந்திரம் ஒன்றின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் விவகாரம், இப்போது இலங்கையின் கையை மீறிச் செல்வது போலவே உணரப்படுகிறது. இலங்கை அரசு பக்கச்சார்பற்றதொரு விசாரணையை மேற்கொண்டிருந்தால் அல்லது மேற்கொள்ள அனுமதித்திருந்தால் பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம்.

போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்,போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசின் கையை மீறி செல்லப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

இது இலங்கை அரசுக்கும் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலை உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.

கட்டுரையாளர் கபில்

Keine Kommentare:

Kommentar veröffentlichen