
புலம்பெயர் சமூகம் வலுவானது -அதன் பணியும் காத்திரமானது.
அதே போல் தொடர்ந்து வன்னியில் துன்பப்படும் உறவுகளுக்காகக் குரல் கொடுப்பதுடன் நின்று விடாமல் அவர்களைக் கை தூக்கி விடுவதற்கும் உதவ வேண்டும்.
அதன் மூலம் புலம்பெயர் சமூகம் தனியே போருக்கே உதவியது- அவர்கள் போரையும் அழிவுகளையுமே விரும்புகிறார்கள் என்று சிங்கள அரசு மேற்கொள்ளும் பொய்யான பிரசாரங்களையும் உடைத்தெறிய முடியும். அதைச் செய்வதற்கு புலம்பெயர் சமூகம் எல்லா வழிகளிலும் துணை நிற்க வேண்டியது இன்றைய தலையாய கடமை. இந்த வரலாற்றுக் கடமையில் இருந்து புலம் பெயர் சமூகம் விலகி விடாது என்ற நம்பிக்கை வன்னிப்பகுதி மக்களிடம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
(* கனடா நாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்கு எழுதப்பட்ட ஆக்கம் இது. 2010 டிசம்பர் 18 ந் த்கதி நடைபெற்ற மலர் வெளியீட்டின் பின் இவ் ஆக்கம் இன்போ தமிழில் மீள் பதிப்பு செய்யப்படுகின்றது.)
சிங்களப் பேரினவாதமும் அதன் விளைவாகத் தோன்றிய தமிழீழ விடுதலைப் போராட்டமும் தான் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை தோற்றுவித்திருந்தன.
புலம்பெயர் தமிழ்ச்சமூகம் உலகளவில் இன்று வலுவானதொன்றாக மாறியுள்ளது என்றால் அது மிகையான கருத்தல்ல. கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, இத்தாலி, அவுஸ்ரேலியா என்று அமெரிக்க, ஐரோப்பிய அவுஸ்ரேலியக் கண்டங்களில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் வலுப்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் மரபுவழிப் போராக மாற்றம் பெற்றபோது அதன் ஆணிவேராக மாறியது புலம்பெயர் தமிழ்ச் சமூகமே.
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் நிதி ஆதாரமில்லாமல் நிச்சயமாக விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டத்தை இந்தளவு வீரியத்துடன் நடத்தியிருக்க முடியாது. இந்த மாற்றமானது 1990களின் நடுப்பகுதியில் தோன்றியது.
முள்ளிவாய்க்கால இறுதிப்போர் வரைக்கும்- புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் நிதி ஆதாரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆச்சரியம் மிக்க சாதனைகளையும் அபரிமிதமான ஆற்றலையும் உலகிற்கு நிரூபித்தது.
வன்னியில் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது போரை நிறுத்தும் நோக்கில் புலம்பெயர் சமூகம் வலுவாகக் கிளர்நது நின்று அமைதி வழியில் போராடியது. ஆனால் தமிழரின் துரதிஸ்டம்- முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் பேரழிவுடன் முடிந்து போனது. ஆனாலும் புலம்பெயர் சமூகத்தின் வலு இன்னமும் குன்றிவிடவில்லை என்பதை அண்மையில் பிரித்தானியாவில் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள அரசின் தலைவரையே உரை நிகழ்த்த விடாமல் திருப்பி அனுப்பியது பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் ஒன்றியம். இதற்குக் காரணம் புலம்பெயர் தமிழர்களின் பலம் தான்.
இதே வலுவுடன் புலம்பெயர் சமூகம் ஒன்றுபட்டிருந்தால் வன்னியில் போரின்போது பாதிக்கப்பட்ட மக்களை துயரில் இருந்து மீட்க முடியும் என்பது உறுதி.
வன்னியில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அவலங்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீளக்குடியேறியுள்ள போதும் அவர்களின் வாழ்விடங்கள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை. தொழில் வாய்ப்புகள் இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.
மிதிவெடி அபாயம், இராணுவ அடக்குமுறை என்று பல்வேறு காரணங்களால்- மீளக்குடியேறிய மக்களால் தமது இயல்பான காரியங்களை செய்ய முடியாதுள்ளது. இதைவிட போதிய உதவிகள் இல்லாமல் தமது தொழில்களை மீள ஆரம்பிக்க முடியாத அவலத்தில் ஏராளமானோர் உள்ளனர்.
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பலரும் அடுத்த வேளை உணவுக்கு வழியற்ற நிலையில் திண்டாடுகின்றனர்.
போரின் முடிவு தமிழர்களுக்கு தந்துள்ள சாபக்கேடு இது.
இதிலிருந்து எமது சமூகம் எப்படி மீளப் போகிறது?
அண்மையில் சில தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்தனர். அப்போது பொருளாதார ரீதியாக நெருடிக்கடியில் சிக்கியுள்ள வன்னிப்பகுதி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு சிங்களப் பேரினவாதியான மகிந்த ராஜபக்ஸ வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் வங்கி வைப்புக் கணக்குகளைக் காட்டி இவர்களுக்கா உதவி தேவை எள்ளி நகையாடியுள்ளார்.
இதிலிருந்து ஒன்றறை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
வன்னியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலவாழ்வுக்காக- புனர்வாழ்வுக்காக சிங்கள அரசாங்கம் ஒன்றையுமே செய்யப் போவதில்லை. ஏதோ வெளிநாடுகளும், உதவி நிறுவனங்களும் கொடுக்கும் உதவிகளைக் கொண்டு போய்த் தமது கையால் கொடுத்து விட்டு அதைப் பிரசாரப்படுத்தி அரசியல் இலாபம் தேடுகின்ற முயற்சியில் தான் சிங்கள தேசம் இருந்து கொண்டிருக்கிறது.
போரில் பங்கெடுத்த சிங்களப் படையினரின் குடும்பங்களுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபாவை ஒதுக்கிய சிங்கள அரசாங்கம்- அதே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக ஒரு மில்லியன் ரூபாவையாவது ஒதுக்கவில்லை.அதுமட்டுமன்றி தமிழர்களுக்கு உதவிகளை வழங்கும் அனைத்துலக தொண்டர் நிறுவனங்களையும் வன்னி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் இருந்து, வெளியேற்றும் முயற்சியிலும் சிங்கள அரசு இறங்கியுள்ளது.
இதன் விளைவுவாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் அநாதரவான நிலையில் விடப்படவுள்ளனர்.
சிங்கள அரசு தானும் செய்யாமல் ஏனைய தொண்டர் நிறுவனங்களையும் செய்ய விடாமல்- வைக்கோல் பட்டடை நாய் போல நிற்கிறது. இது தமிழரை நடுத்தெருவுக்குக் கொண்டு வர சிங்களப் பேரினவாதம் போடும் சதித்திட்டம்.
இந்த நிலையில் வன்னியிலும் ஏனைய பகுதிகளிலும் போரினால் சீரழிந்து போயுள்ள தமிழர்களின் வாழ்வைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு- முற்றுமுழுதாக புலம்பெயர் சமூகத்தின் மீது விழுந்துள்ளது.
புலம்பெயர் சமூகம் வன்னிப் பகுதி மக்களை வாழ வைப்பதற்கு பல்வேறு முறைகளில் உதவ முடியும். அதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படுவதும் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படுவதும் முக்கியமானது.
புலம்பெயர் சமூகத்தில் ஏராளமான பொருளாதார விற்பன்னர்கள் உள்ளனர். பொறியியல் வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், திட்டமிடலாளர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் எப்படி எப்படி தமிழரின் மீட்சிக்கு உதவ முடியும் என்று ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
வன்னி மீன்பிடியையும் விவசாயத்தையும் அதிகம் நம்பியுள்ள பிரதேசம்.
அங்கு புதிதாக ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்கப் போவதாக சிங்கள அரசு கூறிக் கொண்டிருக்கிறது.
அங்கு குறைந்த சம்பளத்தில்- கொத்தடிமைகள் போன்று தமிழ் இளைஞர், யுவதிகள் நடத்தப்படும் ஆபத்து இருக்கிறது.
ஆனால் சிறிலங்காவின் ஆடைத் தயாரிப்புத் தொழில் இப்போது அவ்வளவு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கவில்லை.
இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் ஆடை தயாரிப்புத்துறையை நோக்கி தவறாக வழிகாட்டப்படுகின்றனர்.
அங்கு வேறெந்த மாற்று ஏற்பாடுகளும் இல்லாதால்- அதுவே அவர்களுக்கு சிறந்த வழியாக இப்போது தெரிகிறது.
கைத்தொழில்துறைகளில் வன்னியில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கலாம் என்பது பற்றிய புதிய சிந்தனைகள் புலம்பெயர் சமூகத்தில் இருந்தே உருவாக முடியும்.
வன்னியில் உள்ள மட்டுப்படுத்தப்பட்டளவு வளங்களும் அங்குள்ள சூழலும் இதுபற்றிய சிந்தனையை செய்வதற்கோ ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காது.
புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி என்ற வகையில் மட்டுமன்றி தமிழரின் தாயகத்தை எப்படி மீளக்கட்டியெழுப்பலாம் என்று திட்டமிடுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் புலம்பெயர் தமிழர்களால் தான் பெரிதும் உதவ முடியும்.
பொருளாதார ரீதியாக தமிழர்கள் தலையெடுப்பதன் மூலமே உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும்.
ஏனென்றால் பொருளாதார ரீதியாக நலிந்து போய்க் கிடக்கும் சமூகத்திடம் இருந்து நிச்சயமாக உரிமைக் கோசம் எழும்பப் போவதில்லை. ஏனென்றால் போரினால் அந்தளவுக்கு அவர்கள் அடிபட்டுப் போயுள்ளனர். அவர்கள் எங்கே நிவாரணம் கொடுக்கப்படுகிறது, எங்கே அரிசி கொடுக்கப்படுகிறது என்று அலையும் நிலை தான் இப்போது உள்ளது.
இந்தநிலையை மாற்ற வேண்டும்.
இலவசத்துக்காக அலையும் நிலையில் இருந்து வன்னி மக்களை மாற்றினால் தான் அவர்களை உரிமை கொண்ட மனிதர்களாக மாற்ற முடியும். அதைவிட பொருளாதார ரீதியாகப் பலமாக இல்லாத எந்தவொரு இனத்தையும் உலகம் கண்டுகொள்ளவும் போவதில்லை.
அதற்கு பொருளாதார ரீதியான புரட்சி ஒன்று ஏற்பட வேண்டும்.
இது ஓரிரண்டு நாட்களிலோ மாதங்களிலோ ஏற்படக் கூடியதல்ல.
ஏற்கனவே போரினாலும் பல்வேறு துயரங்களினாலும் துவண்டு போயுள்ள மக்களைக் கை தூக்கி விடுவதற்கு சில வருடங்கள் பிடிக்கலாம்.
வன்னியில் பெருந்தொகையான குடும்பங்கள் பிரதான உழைப்பாளரை அல்லது குடும்பத் தலைவரை இழந்த நிலையில் வாழ்கின்றன.
அத்தகைய குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு அல்லது வருமான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இல்லையேல் இதுவே சமூகத்தின் மிகப் பெரிய அவலமாக உருவெடுத்து விடும்.
குடும்பத் தலைவர்களைப் போரில் இழந்த அல்லது தொலைத்து விட்ட அல்லது சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் நிலையில் அந்தக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடாதபடி காப்பாற்ற வேண்டியது முக்கியமான கடமை.
இந்தக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு விடப்பட்டால் அதன் சாபம் அனைத்துத் தமிழர்களையும் பற்றிக் கொள்ளும்.
ஏனென்றால் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோர் இன்று நிம்மதியாக வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்வதற்கு இவர்களின் உயிர்க்கொடையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
புலம்பெயர் சமூகம் வலுவானது -அதன் பணியும் காத்திரமானது.
அதே போல் தொடர்ந்து வன்னியில் துன்பப்படும் உறவுகளுக்காகக் குரல் கொடுப்பதுடன் நின்று விடாமல் அவர்களைக் கை தூக்கி விடுவதற்கும் உதவ வேண்டும்.
அதன் மூலம் புலம்பெயர் சமூகம் தனியே போருக்கே உதவியது- அவர்கள் போரையும் அழிவுகளையுமே விரும்புகிறார்கள் என்று சிங்கள அரசு மேற்கொள்ளும் பொய்யான பிரசாரங்களையும் உடைத்தெறிய முடியும்.
அதைச் செய்வதற்கு புலம்பெயர் சமூகம் எல்லா வழிகளிலும் துணை நிற்க வேண்டியது இன்றைய தலையாய கடமை.
இந்த வரலாற்றுக் கடமையில் இருந்து புலம் பெயர் சமூகம் விலகி விடாது என்ற நம்பிக்கை வன்னிப்பகுதி மக்களிடம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
கட்டுரையாளர் தொல்காப்பியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen