
இலங்கை என்ற ஆடுகளத்தில் இலங்கையும், ஐ.நாவும் இரண்டு முக்கியமான அணிகளைக் களமிறக்க முடிவு செய்து விட்டன. ஆனால் என்ன ஆடுகளம் எங்கு என்பது ஒரு பிரச்சினை. இந்த அணிகள் இரண்டும் மோதலுக்குத் தயாரா என்பது அடுத்த பிரச்சினை. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் தான் இந்த ஆட்டம் நடக்கும். ஆட்டத்தில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதல்ல முக்கியம். இதன் காரணமாகப் பர்வையாளர்களாக உள்ள மக்களுக்குச் சொல்லப்படப் போகும் செய்தி தான் முக்கியமானது. அது தமிழர்களுக்கு ஆறுதலாக அமையுமா அல்லது அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையுமா என்பதெல்லாம் இந்த அணிகள் ஆட்டத்துக்குச் சம்மதிக்கும் நிலையில் இருந்தே முடிவு செய்யப்படும்.ஆக, இப்போது சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்பதே முதன்மையான பிரச்சினை. அதன் பின்னர் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும்.
இனி,
நல்லிணக்க ஆணைக்குழுவை ஐ.நா நிபுணர்குழு சந்திக்குமா?
இலங்கை என்ற ஆடுகளத்தில் இரண்டு முக்கிய அணிகளைக் களமிறக்க ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.
இதில் ஆடப் போகின்ற ஒரு அணி உள்ளூர் அணி.
அதற்குப் பெரியளவிலான அனைத்துலக அங்கீகாரமோ, ஆதரவோ இல்லாது போனாலும் இலங்கை அரசின் ஆதரவும் பின்புலமும் அதிகம்.
அதனுடன் ஆடுவதற்குக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ள மற்றொரு அணி அனைத்துலக அங்கீகாரம் பெற்றது.
அதற்கு நன்மதிப்பும் அதிகம்.
இங்கு கூறப்படுவது ஒன்றும் கால்பந்தாட்ட அணியோ, கிரிக்கெட் அணியோ அல்ல.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆணைக்குழுக்கள்.
முதலாவது இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு.
இரண்டாவது ஐ.நா பொதுச்செயலர் நியமித்துள்ள நிபுணர்கள் குழு.
2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது தொடக்கம் போர் முடிவுக்கு வந்த காலம்வரையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டது தான் நல்லிணக்க ஆணைக்குழு.
அது விசாரணைகள் நடத்தி வருகிறது.
எதிர்வரும் மே மாதம் அதன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்குக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா நிபுணர்குழுவும் சாட்சியங்களைப் பெற்று விசாரணைகளை நடத்தி வருகிறது. அதன் அறிக்கை இந்த மாத இறுதியில் கையளிக்கப்பட வேண்டும். ஐ.நா நிபுணர்குழு அமைக்கப்பட்ட போதே அதை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. நிபுணர்குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தகவல் வெளியிட்டதை அடுத்து, அவசர அவசரமாக ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது அரசாங்கம். இதன் நோக்கம் ஐ.நா நிபுணர் குழுவை வெட்டி விடுவது தான். ஆனால் இலங்கை அரசின் எதிர்ப்புகளை மீறி ஐ.நா நிபுணர்குழு அமைக்கப்பட்டது.
அதற்கு எதிராக விமல் வீரவன்சவைக் கொண்டு அரசாங்கம் எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை.
நிபுணர்குழு இலங்கையில் காலடி எடுத்துவைக்கப் போவதில்லை என்று அனைவருமே உறுதியாக நம்பியிருந்த நிலையில் தான் ஐ.நா பொதுச்செயலர் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவை அது சந்திக்கப் போவதாக அறிவித்தார்.
ஐ.நா நிபுணர்குழு இலங்கை செல்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இணங்கியுள்ளதாக வெளியான அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது.
ஆனால் அதற்குப் பிந்திய நிகழ்வுகள் இந்த நிபுணர்குழுவின் சந்திப்பு எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.
நிபுணர்குழு இலங்கை வருவதற்கு அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இது ஒரு முக்கியமானதொரு பிரச்சினை.
அடுத்து,
அந்தக் குழு இலங்கை வந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திக்குமே தவிர அதற்கு அப்பால் எதையும் செய்ய முடியாது என்பது இலங்கை அரசின் நிலைப்பாடு. நிபுணர்குழு இலங்கை வருவதற்கு எதிர்ப்புகள் இருப்பதால் வெளிநாடு ஒன்றில் சந்திக்க வைப்பது பற்றியும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். வீசா பற்றிய பிரச்சினையில்லாமல் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்காக சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கலாம் என்றொரு கதை பரவியது. எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவோ அதை நிராகரித்து விட்டது. வெளிநாடுகளுக்குச் சென்று சந்திப்புகளை மேற்கொள்வதற்கு தமது ஆணைக்குழுவுக்கு எந்த அனுமதியும் கிடையாது என்கிறது அது. அதைவிட நல்லிணக்க ஆணைக்குழு இன்னொரு விடயத்தையும் இறுக்கமாகக் கூறிவருவது கவனிக்கத்தக்கது.
ஐ.நா நிபுணர்குழு வேண்டுமானால் எம் முன்தோன்றி சாட்சியமளிக்கலாம். ஆனால் அவர்கள் எம்மிடம் கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்த முடியாது என்பதே அந்த இறுக்கமான நிலைப்பாடு. இங்கே நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒரு விதமான யார் பெரியவர் என்ற ஈகோ தோன்றியுள்ளதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேவேளை ஐ.நா நிபுணர்குழுவோ, தாம் இலங்கை செல்வது தனியே நல்லிணக்க ஆணைக்குழுவை மட்டும் சந்திப்பதற்கானதாக இருக்காது என்றும், தமது நோக்கம் பரந்தளவினதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதிலிருந்து அவர்கள் இலங்கையில் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணைகள் நடத்த விரும்புவது தெளிவாகிறது. ஆயினும் இதுவரையில் இந்த நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இலங்கை அரசாங்கம் ஐ.நா நிபுணர்களுக்கு விசா வழங்க முன்வந்துள்ள போதும் அவர்களை விசாரணைகள் ஏதும் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது.
இந்தநிலையில் ஐ.நா நிபுணர்குழு இலங்கை வருவதால் பெரியளவில் பலனேதும் கிடைக்கப் போவதில்லை.
எனவே அவர்கள் இங்கு வர விரும்புவார்களா என்பது சந்தேகம் தான்.
இதன் காரணமாக ஐ.நா நிபுணர்குழுவும், நல்லிணக்க ஆணைக்குழுவும் சந்திக்குமா, சந்திக்காதா என்பது தெளிவாகவில்லை.
சந்திப்பு உள்நாட்டில் நடக்குமா, வெளிநாட்டில் நடக்குமா என்பதும் முடிவாகவில்லை.
ஆனால் இருதரப்பில் இருந்தும் அவ்வப்போது செய்திகள் தான் வெளியாகி மோதிக் கொண்டுள்ளன.
இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு தரும் வகையில் நாடாளுமன்றம் கூடும் போது பிரதமர் அல்லது வெளிவிவகார அமைச்சர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மங்கள சமரவீர. இக் கோரிக்கை சாத்தியப்படுமா என்பது நாடாளுமன்றம் கூடும் போதே தெரியவரும்.
நல்லிணக்க ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் அதன் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னமும் ஐந்து மாதங்கள் உள்ளன.
ஆனால் ஐ.நா நிபுணர்குழுவைப் பொறுத்தவரையில் நிலைமை அவ்வாறில்லை.
அதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் குறுகியது.
அதாவது இந்த மாத இறுதிக்குள் அறிக்கையைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
அதற்குள்ளாக இந்தச் சந்திப்புக்கான ஓழங்குகளைச் செய்வது சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்தச் சந்திப்பை மட்டுமன்றி, ஐ.நா நிபுணர்குழுவையே விரும்பவில்லை என்பது வெளிப்படை.
ஆனாலும் சில நிர்ப்பந்தங்களுக்காகவே இணக்கத்தை வெளியிட்டது.
எனவே இப்படி இழுபட்டு சந்திப்பு நடக்காது போனாலும் கூட அதையிட்டு இலங்கை அரசாங்கம் கவலை கொள்ளாது.
அதேவேளை, ஐ.நா நிபுணர்குழு இலங்கை வருவது தடைப்பட்டாலோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவினருடனான சந்திப்பு நடக்காது போனாலோ, அதையிட்டு அனைத்துலக மட்டங்களில் கவலையைத் தோற்றுவிக்கும்.
தனியே தமிழர் தரப்பு மட்டுமன்றி அதற்கும் அப்பால் பல நாடுகள் இதை முக்கிய விவகாரமாகப் பார்க்கின்ற சூழல் உள்ளது.
இப்போது இலங்கையும், ஐ.நாவும் இரண்டு முக்கியமான அணிகளைக் களமிறக்க முடிவு செய்து விட்டன. ஆனால் என்ன ஆடுகளம் எங்கு என்பது ஒரு பிரச்சினை. இந்த அணிகள் இரண்டும் மோதலுக்குத் தயாரா என்பது அடுத்த பிரச்சினை. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் தான் இந்த ஆட்டம் நடக்கும். ஆட்டத்தில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதல்ல முக்கியம். இதன் காரணமாகப் பர்வையாளர்களாக உள்ள மக்களுக்குச் சொல்லப்படப் போகும் செய்தி தான் முக்கியமானது. அது தமிழர்களுக்கு ஆறுதலாக அமையுமா அல்லது அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையுமா என்பதெல்லாம் இந்த அணிகள் ஆட்டத்துக்குச் சம்மதிக்கும் நிலையில் இருந்தே முடிவு செய்யப்படும். ஆக, இப்போது சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்பதே முதன்மையான பிரச்சினை. அதன் பின்னர் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும்.
கட்டுரையாளர் சத்திரியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen