
சிறிலங்காவின் பல பகுதிகளிலுமுள்ள தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுடனும் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பவர்களது நெருங்கிய உறவினர்களுடனும் உலக சோசலிசவாதிகளுக்கான இணையத்தளம் World Socialist Web Site அண்மையில் உரையாடியிருந்தது.
தடுப்புமுகாம்களில் எவ்வாறு தாங்கள் அடக்குமுறைக்கு உட்பட்டோம் என்பதை மட்டும் அவர்கள் விபரிக்கவில்லை. அத்துடன் ஒருவரது அடிப்படை சனநாயக மற்றும் சட்ட ரீதியிலான உரிமைகளை மீறும் வகையிலேயே தாங்கள் எவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்தோம் எனவும் கூறுகிறார்கள்.
மே 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளமைப்பு வீழ்ச்சிகண்டதைத் தொடர்ந்து போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்திருந்நத 280,000 தமிழ்ப் பொதுமக்கள் அரச படையினரால் நிர்வகிக்கப்பட்ட 'நிவாரணக் கிராமங்களில்' அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த முகாம்களைச் சுற்றி முட்கம்பி வேலிகள் இடப்பட்டிருந்ததோடு ஆயுதம் தாங்கிய படையினர் 24 மணி நேரமும் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு தனியான இடங்களில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்த இளவயது ஆண்களிடமும் பெண்களிடமும் விசாரணை நடாத்திக்கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வாளர்கள் தினமும் நூற்றுக்கணக்கானவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து இரகசியமான இடங்களுக்குக் கொண்டு சென்றனர்.
ஈற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்களின் தொகை 12,000 ஆக உயர்ந்தது. மக்களை அச்சத்திற்குள்ளாக்கி அமைதியாக்குவதே புலனாய்வாளர்களின் நோக்கம்.
விடுதலைப் புலிச் 'சந்தேக நபர்கள்' என்ற பெயரில் 11696 பேர் கைதுசெய்யப்பட்டு பல்வேறுபட்ட தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 5586 பேர் புனர்வாழ்வின் பின்னர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க கடந்த திங்களன்று கொழும்பிலிருந்து வெளிவரும் 'ஐலண்ட்' பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அளவில் பெரிய தடுப்பு முகாம்களின் தேசமாக சிறிலங்கா மாறியிருக்கிறது என என கடந்த செப்ரெம்பரில் அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு சிறிலங்காவினைக் குறிப்பிட்டிருந்தது.
சிறிலங்கா அரச படையினரால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் இந்த இரகசிய தடுப்பு முகாம்களில் உண்மையில் எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுதந்திரமாக உறுதிப்படுத்துவதற்கான எந்த மார்க்கமும் கிடையாது.
இந்தத் தடுப்பு முகாம்களின் நிலைமை எவ்வாறுள்ளது என்பதும் எவருக்கும் தெரியாது.
அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவினர் கூட இந்த முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கட்டாயக் காணமல்போதல்களுக்குச் சிறிலங்கா இராணுவத்தினர் பெயர் போனவர்கள்.
பொலநறுவைக்கு அண்மையில் வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவரும் தடுப்பு முகாமிலுள்ள ஒருவரின் உறவினர்களுடன் நாம் உரையாடினோம்.
குறிப்பிட்ட இந்தப் பகுதியில் காடழிப்புச் செய்யப்பட்டு மூன்று தொகுதிகளாக பாரிய தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 17 அடி நீளமான கூடாரங்களிலேயே இவர்கள் தடுத்துவைக்கப்ட்டிருக்கிறார்கள்.
1000 பேர் வரை இங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட நபர் எங்களிடம் கூறுகிறார். ஒவ்வொரு கூடாரமும் ஆறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அறைகளுக்கும் ஐந்து பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். காட்டின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தடுப்பு முகாமினைச் சுற்றி முட்கம்பிச் சுருள்கள் இடப்பட்டிருப்பதோடு ஆயுதம் தரித்த படையினர் 24 மணி நேரமும் காவல் செய்கிறார்கள்.
தடுப்பிலுள்ள ஒரு சிலர் மாத்திரமே தலையணைகளையும் பாயினையும் வைத்திருக்கிறார்கள் என அவர்களது உறவினர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் இவர்களுக்கு சவர்க்காரக் கட்டி ஒன்று, சம்பூ பை ஒன்று, பற்பசை ஒன்று என்பன வழங்கப்படுகின்றன. மூன்று நேரமும் சோறு வழங்கப்படுவதாகவும்
ஆனால் அது போதாதிருப்பதாகவும் அதன் தரமும் மோசமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.
உடுபுடவைகள் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றோரே பெற்றுக்கொடுக்கிறார்கள். தடுப்பிலுள்ளவர்களது பெற்றோர்களும் திருமணம் செய்தவர்களாயின் மனைவி பிள்ளைகளும் இவர்களைச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
தடுப்பு முகாம்களிலுள்ள நிலைமையினை தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் ஒருவர் இவ்வாறு விபரிக்கிறார்.
சிங்கள தேசியவாதத்தினை வலுப்படுத்தும் வகையில் செயற்படுமாறும் கொழும்பு அரசாங்கத்திற்கு தங்களது விசுவாசத்தினைத் தடுப்பிலுள்ளவர்கள் வெளிப்படுத்தவேண்டும் என்றும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருமே வற்புறுத்தப்படுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் அங்குள்ள மைதானங்களில் அணிதிரளும் தடுப்பிலுள்ளவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படமாட்டோன் என உறுதியுரை எடுக்குமாறு பணிக்கப்படுவதோடு சிறிலங்காவினது தேசியக் கொடியினை ஏற்றும் நிகழ்விலும் கலந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தடுப்பு முகாமினைத் துப்பரவாக்கும் பணிகளிலும் தடுப்பு முகாம்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் பண்ணைகளில் கடுமையாக வேலைசெய்யுமாறும் பணிக்கப்படுகிறார்கள்.
வெலிக்கந்தை பகுதியிலுள்ள தடுப்பு முகாமில் அளவில் பெரிய பண்ணைகளில் நாள் பூராவும் கடும்பணி செய்யவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மரக்கறிச்செய்கை, நெற்செய்கை என்பன இங்கு இடம்பெறுகிறது.
பண்ணைகளில் வேலைசெய்துவிட்டு மாலையில் திரும்பும்போது கடுமையான உடற்சோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள்.
"அரசாங்கமும் தடுப்பு முகாமினை நிர்வகிக்கும் இராணுவத்தினரும் எங்களை அடிமைகள் போலவே நடத்தினர்" என தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இன்னொருவர் எம்மிடம் கூறினார்.
"எங்களது திருமணத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்திருக்கிறார். அமைப்பிலிருந்து அவர் விலகிய பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் எனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எமக்கு நான்கு பிள்ளைகள். மூத்த பிள்ளையின் வயது எட்டு. மாணிக்கம் பண்ணை முகாமில் வைத்து எனது கணவனைக் கைதுசெய்த படையினர் சிறிய விசாணையின் பின்னர் விடுவித்துவிடுவோம் என எங்களிடம் அவர்கள் உறுதியளித்தபோதும் இன்னமும் அவரை விடுவிக்கவில்லை" என வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரது மனைவி எமக்குக் கண்ணீருடன் விபரித்தார்.
போரின் காரணமாக இவர்களது வீடு மற்றும் உடமைகள் அனைத்தும் அழிந்துவிட்ட நிலையில் தனது நான்கு பெண் பிள்ளைகளுடனும் தாயாருடனும் இந்த இளம்தாய் சிறிய ஓலைக் குடிசையில் வசித்து வருகிறாள். "என்னிடம் போதிய பணம் இல்லாமையினால் கடந்த இரண்டரை மாதங்களாக நான் கணவனைச் சென்று பார்வையிடவில்லை" என்கிறார்.
"நான் அங்கு சென்றுவருவதற்கு 5000 ரூபாய்களாவது [45 டொலர்] தேவைப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்வையிடுவதற்காக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் 4,000 ரூபாய்களைத் தருகிறார்கள். நான் எனது பிள்ளைகளுடன் சென்றுவரவேண்டுமெனில் இந்தத் தொகை எமது பயணத்திற்குப் போதாது. முதலில் நான் வவுனியாவிற்குச் செல்லவேண்டும். அங்கு ஒருநாள் தங்கியிருந்துவிட்டு பின்னர் ஏனையவர்களுடன் இணைந்து வாகனமொன்றை ஒழுங்குசெய்து வெலிக்கந்தைக்குச் செல்லவேண்டும். சென்று திரும்பி வருவதற்கு நான்குநாள் ஆகும்" என்கிறார் இவர்.
இவளது கணவனை காவல்துறையினரோ அல்லது இராணுவத்தினரோ அல்லது புலனாய்வாளர்களோ இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தவுமில்லை, எந்தவிதமான
குற்றச்சாட்டுக்களைச் சுமத்தவுமில்லை. "இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எனது கணவனிடமிருந்து கடிதம் கிடைக்கும். இவ்வாறு தடுப்பிலுள்ளவர்களை விடுவிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு எந்த அரசியல் கட்சிகளோ உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை" என இவர் முறையிடுகிறார்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை ஆதரித்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது கொழும்பு ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறது. இவ்வாறு தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் விடுதலைக்காக எந்தவிதமான போராட்டங்களையும் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை.
தடுப்பில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவேண்டும் அல்லது அவர்கள் உடனடியாகவே விடுவிக்கப்படவேண்டும் என அதிபர் ராஜபக்சவுடனும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனும் தாங்கள் உரையாடியிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேச்சுக்களின் விளைவாக ஆக்கபூர்வமாக எதுவுமே இடம்பெறவில்லை. அத்துடன் தடுப்பிலுள்ளவர்களின் விடுதலையினை விரைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு வேறு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
வவுனியாவிலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில் கணவன் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஒரு நடுத்தர வயதினையுடைய பெண்ணொருவர் இவ்வாறு கூறுகிறார்.
"போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினை விட்டு தப்பிச்செல்வதற்காக நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் நானும் எனது கணவரும் ஒருவரையொருவர் பிரிந்துவிட்டோம். எறிகணைத் தாக்குதலின் விளைவாக காயமடைந்த எனது கணவர் இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பதாக நான் பின்னர் அறிந்தேன்".
"மோசமான வறுமையில் தாங்கள் வாடுகிறோம். எனது உறவினர் ஒருவரின் வீட்டில் இணைந்து வாழும் நாங்கள் உண்ணுவதற்கு எதுவுமற்ற நிலையில் சிலசமயம் பட்டினி
கிடந்திருக்கிறோம். என்னிடம் போதிய பணவசதி இல்லாதமையினால் பல மாதங்களாக தடுப்பிலுள்ள எனது கணவனைச் சென்று நான் பார்க்கவில்லை" என தனது பரிதாப
நிலையினை விபரிக்கிறார் இந்தப் பெண். தடுப்பிலுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுவிப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையினையும் எடுக்காத தமிழ்க் கட்சிகள் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இவர் தனது கடுமையான ஆதங்கத்தினை வெளிப்படுத்துகிறார்.
2006ம் ஆண்டு நான் வேலை தேடி வன்னிக்குச் சென்றபோது போர் மீளவும் மூண்டுவிட பாதைகள் மூடப்பட்ட நிலையில் நான் அங்கு அகப்பட்டதாகக் கூறுகிறார் அண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கும் இன்னொருவர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்திரட்டலுக்கு இவர் உட்பட்டிருக்கிறார். "அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர் நான் களமுனைக்கு அனுப்பப்பட்டேன். காலில் பலமாகக் காயமடைந்த நிலையில் எனது காலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் நான் மூன்று மாதங்களாச் சிகிச்சை பெற்றேன். அந்த வேளையில் மருத்துவமனையினை இலக்குவைத்து சிறிலங்கா அரச படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்" என அவர் தனது கதையினை விபரிக்கிறார்.
இறுதி யுத்தத்தின் போது இந்த நபர் படையினரிடம் சரணடைந்திருக்கிறார். "யூன் 14ம் நாளன்று நான் இராமநாதன் முகாமிலிருந்து ஏனையோருடன் அழைத்துச் செல்லப்பட்டேன். நான் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்ட கதையினை படையினருக்குக் கூறுமிடத்து அவர்கள் என்னை உடனடியாகவே விடுவித்துவிடுவார்கள் என நம்பினேன். ஆனால் வெலிக்கந்தை பகுதியிலுள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்ட நான் அண்மையில் விடுவிக்கப்படும் வரைக்கும் அங்கு ஒன்றரை ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டேன்" என்கிறார் அவர்.
"தமிழ் மக்களின் விடுதலைக்காகவே விடுதலைப் புலிகள் போராடுகிறார்கள் என்ற நிலையில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளித்தோம். புலிகளமைப்பு ஒரு முதலாளித்துவ அமைப்பு என்பது தொடர்பாக அப்போது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. அமெரிக்கா தமிழர்களுக்கு உதவும் என்ற பெரு நம்பிக்கை இறுதிக் காலத்தில் புலிகளிடத்தே காணப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை பொய்யாகிவிட்டது. சிங்களவர்களுடன் இணைந்து வாழவேண்டும் என்ற உங்களது நோக்கம் எனக்கு புதிதாகவே தெரிகிறது. முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ் மற்றும் சிங்களவர்கள் ஒன்றிணைவது நல்லதொரு விடயம்தான். இரண்டு சமூகங்களின் மத்தியிலும் காணப்பட்ட இதுபோன்ற ஒற்றுமை போரினால் பெரிதும் சிதைந்து விட்டது. இதனை மீளவும் கட்டியெழுப்புவது அவசியமானது" என அவர் தனது கருத்தினை எங்களிடம் கூறினார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கிறது. விசாரணைகள் எதுவுமின்றி ஒருவரை காலவரையின்றித் தடுத்துவைக்க உதவும் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றின் கீழ் இவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் 30 பெண்கள் உள்ளிட்ட 700 பேர் வரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுச் சிறிலங்காவினது சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். போர் முடிவுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
கட்டாயத்தின் பெயரில் வேறு வழியின்றித் தான் வழங்கியதொரு வாக்குமூலத்தின் விளைவாக கடந்த 13 ஆண்டுகளாகத் தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் தமிழ் கைதி ஒருவர் பி.பி.சி செய்திச் சேவையிடம் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும் மறுக்கப்படுவதானது நாட்டின் ஏனைய மக்களுக்கு தெளிவான எச்சரிக்கையினை வழங்குவதாக அமைகிறது.
சிறிலங்காவிலுள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த மதம் மற்றும் மொழியினைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் கொழும்பு அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுமிடத்து மகிந்த அரசாங்கம் அவர்களை அடக்கும் வகையில் இதுபோன்ற கடுமையான உத்திகளைக் கையாளுவதற்கு ஒருபோதும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen