
உலகெங்கும் அடித்துக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் அலையில் இருந்து இலங்கையும் தப்பிக் கொள்ளவில்லை.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட சுமார் 3000 இற்கும் அதிகமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் கைப்பற்றியுள்ளது.
இவற்றில் சிலவே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை வெளியிடப்பட்ட ஆவணங்களில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய கருத்துக்கள், போர்க்குற்ற விசாரணைகள் பற்றி அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள், லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையில் காலூன்ற முனைவது பற்றிய விடயம், வடகொரியாவில் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியது என்று பல்வேறு விவகாரங்களை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.
போர்க்குற்றங்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் குறித்த அமெரிக்காவின் தகவல் பரிமாற்றங்கள் வெளியானதால் இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்து போயிருந்தது. கடந்த வாரம் லஷ்கர் ஈ தொய்பா இலங்கையில் இயங்குவது பற்றிய ஒரு தகவலும், வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியது பற்றிய தகவலும் வெளியாகின. லஷ்கர் ஈ தொய்பா இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகள், தாக்குதல்களை மேற்கொண்ட ஒரு தீவிரவாத அமைப்பு. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படும் இந்த்த் தீவிரவாத அமைப்பு இலங்கையில் பயிற்சி முகாம்களைக் கொண்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தின் சூத்திரதாரி என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிமாயத் பெக் என்ற தீவிரவாதி கொழும்பிலேயே வெடிபொருட்களைப் பொருத்தும் பயிற்சியைப் பெற்றதாகக் கூறியிருந்தார்.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பும் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்துவதாக இந்தியாவை எச்சரித்திருந்தது.
இந்தத் தகவல்கள் இப்போது விக்கிலீக்சிலும் வெளியாகியுள்ளன.
லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துவதாக ஏற்கனவே வெளியாகிய தகவல்களை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ ஏற்கனவே மறுத்துள்ளார்.
இலங்கையில் புலிகள் உள்ளிட்ட எந்தவொரு பயங்கரவாத அமைப்புமே கிடையாது என்று அவர் அடித்துக் கூறியிருந்தார். ஆனால் இப்போது புனே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில பொலிசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஹிமாயத் பெய்க் கொழும்பிலேயே வெடிபொருட்களை ஒருங்கிணைத்து வெடிக்க வைப்பதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற ஒரு விவகாரம்.
ல்ஷ்கர் ஈ தொய்பா அமைப்பு தெற்காசியாவில் பல்வேறு நாடுகளில் இயங்குகிறது. ஆனால் அதன் அடிப்படை நோக்கம் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதாகும். அத்துடன் மேற்கு நாடுகளின் உல்லாசப் பயணிகளையும் அது குறி வைக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் வெளிப்படையாக அவ்வப்பேர்து பேசிக் கொண்டாலும் மறைமுகமாக ஒரு பனிப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படையான விடயம்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்பு தமது நாட்டுக்குள் வன்முறைகளைத் தூண்டி விடுவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்தக்கட்டத்தில் ஐ.எஸ்.ஐக்கும் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்புகள் இருக்காது என்று நம்ப முடியாது.
ஏனென்றால் இவையிரண்டினதும் அடிப்படை நோக்கங்கள் இந்தியாவைச் சிதைப்பதேயாகும்.
பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இலங்கை உள்ளது.
அதேநேரம் இந்தியாவுடனும் அது நெருக்கமான உறவை வைத்திருக்கிறது.
இந்தநிலையில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்புக்கு இலங்கை தளம் அமைத்துக் கொடுத்தால் அது இந்தியாவை வெறுப்படைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே இலங்கை அரசின் ஆசீர்வாதம் லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கு இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஆனால் வருகை வீசாவுடன் பாகிஸ்தானில் இருந்து வரக் கூடிய எந்தவொரு லஷ்கர் தீவிரவாத அமைப்பினரையும் இலங்கை கண்டு கொள்ளாமல் விடுவதற்கு சாத்தியம் உள்ளது. அதேவேளை இலங்கையில் லஷ்கர் தீவிரவாத அமைப்பினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை மறுத்தாலும் அதற்கான வாய்ப்புகள் முற்றாக இல்லை என்று கூற முடியாது.
ஏனென்றால் வெடிபொருட்கள் தொடர்பாகப் பரிச்சயமுள்ள பல ஆயிரக்கணக்கானோர் இலங்கையில் உள்ளனர். அரசபடைகளில் இருந்தவர்கள், இருப்பவர்கள், தப்பி ஓடியவர்கள் ஏனைய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று வெடிபொருட்களைக் கையாளுவது பற்றிய அறிவு ஏராளமானோருக்கு இருக்கிறது. இவர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கபட்டிருக்கலாம். அதற்காக பெருந்தொகைப் பணம் கைமாறியிருக்கலாம். இதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை என்று அரசாங்கத்தால் உறுதியளிக்க முடியாது.
ஆனால் ஒரு சந்தேகம்.
எல்லாப் பயிற்சிகளையும் பாகிஸ்தானில் பெற்ற லஷ்கர் தீவிரவாதிகளுக்கு அங்கேயே வெடிபொருட்களைக் கையாளும் பயிற்சி மட்டும் வழங்கப்படாதது ஏன் என்பது தான் புதிராக உள்ளது. அங்கு எல்லா வசதிகளும் இருக்கும் போது கொழும்பில் வைத்து இந்தப் பயிற்சியைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேவேளை, இந்தியாவுக்குள் நுழைவதற்கான தளமாக இலங்கை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
அதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
எந்த வகையில் பார்த்தாலும் இது இலங்கைக்குத் தலைவலியை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது.
அதேவேளை வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலும் இலங்கைக்கு நெருடிக்கடியைக் கொடுத்துள்ளது.
உலகிலே தனித்து விடப்பட்ட ஒரு நாடு தான் வடகொரியா.
இன்றைய நிலையில் உலகில் சீனாவை விடவும், ஈரானை விடவும் அதிகம் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வடகொரியாவே உள்ளது.
கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் அந்த நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்ற விபரங்களே வெளிவருவதில்லை.
வடகொரியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அந்த நாட்டுடன் பெரும்பாலான நாடுகள் வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளைத் தவிர்த்தே வந்துள்ளன.
இந்தநிலையில் தான் விக்கிலீக்ஸ் வடகொரியாவிடம் இருந்து 2009இன் தொடக்கத்தில் இலங்கை அரசு றொக்கட் லோஞ்சர்களை வாங்கியதாக தகவல் வெளியிட்டுள்ளது.
புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்தது.
தொலைபேசி உரையாடல் மூலமும் ஆயுதங்கள் வாங்கப்பட்டதாகக் கூறிப் பெருமைப்பட்டிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ.
இந்த நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் அடங்கியுள்ளதா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.
ஏற்கனவே வடகொரியாவிடம் இருந்து புலிகள் ஆயுதங்களை வாங்கியதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியிருந்தது.
ஆனால் சீனாவே வடகொரியா ஊடாகப் புலிகளுக்கு ஆயுதங்கள் விற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனா புலிகளுக்கு ஆயுதங்களை விற்ற விவகாரத்தை அவ்வளவாக இலங்கை அரசு கண்டுகொள்வில்லை.
காரணம் அது இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு.
எனவே வடகொரியாவுக்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போட்டது இலங்கை அரசு.
இப்போது அதே வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கியதாக இலங்கை மீது குற்றச்சாட்டு விழுந்துள்ளது. ஆனால் ஆயுதக் கொள்வனவுகளுக்குப் பொறுப்பாக இருந்த மூத்த அரச அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை மறுத்துள்ளார்.
1971 இல் மேற்கொள்ளப்பட்ட ஜேவிபி கிளர்ச்சிக்கு வடகொரியா உதவியதாக சந்தேகிக்கப்பட்டதை அடுத்து அந்த நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை முறித்துக் கொண்டது என்றும் வடகொரியாவிடம் ஆயுதங்களை வாங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் தென்கொரியாவிடம் இருந்து கடற்படைக்கான அதிவேகத் தாக்குதல் படகுகள் சிலவற்றை 1980களில் வாங்கியிருந்தது இலங்கை.
தென்கொரியாவுடன் இலஙகை நெருக்கமான வர்தக உறவுகளையும் பேணி வருகிறது. வடகொரியாவுடன் இலங்கை இரகசிய உறவை வைத்திருந்தது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதால் தென்கொரியா தன்னை விடப் போய் விடுமோ என்ற அச்சமும் இலங்கைக்கு உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காக ஆயுதங்களை வாங்கிக் குவித்த அரசாங்கம் அது எங்கிருந்து, எப்படி வருகிறது என்றெல்லாம் ஆராயத் தயாராக இருக்கவில்லை.
ஆனால் போரின் முடிவுக்குப் பிறகு வெளியாகும் தகவல்கள் அவற்றை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
வடகொரியாவிடம் ஆயுதங்களை வாங்கிய விவகாரத்தை விட, லஷ்கர் ஈ தொய்பா பற்றிய விவகாரத்தை விட இலங்கை அரசு அதிகம் அச்சம் கொள்ளும் பல விவகாரங்கள் இன்னமும் வெளியாகவில்லை என்றே தெரிகிறது.
இறுதிப்போரின்போது போர்க்களத்திலும் அதற்கு வெளியே அரசியல், இராஜதந்திரக் களங்களிலும் மறைமுகமாக நடந்த பல சம்பவங்கள் பற்றிய ஆவணங்களும் விக்கிலீக்சிடம் உள்ளதா என்பதே இலங்கை அரசின் கவலை. அவை வெளியானால் இலங்கை அரசு அதிகளவிலான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர் சுபத்ரா
Keine Kommentare:
Kommentar veröffentlichen