
'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் கைக்கொண்ட வழிவகைகள்தான் என்ன என்பதை அறிந்து அந்த
முறைமையினத் தானும் கைக்கொள்ளும் முனைப்புக்களில் பர்மிய அரசாங்கம் [Myanmar] ஈடுபட்டிருப்பதைக் காட்டும் சம்பவங்கள் இடம்பெறுகிறது' என அண்மையில் தனது
ஆய்வறிக்கையில் கிம் ஜொலிவ் [Kim Joliffe] என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு The Irrawaddy இணையத்தளத்தில் SIMON ROUGHNEEN எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் திவண்ணமதி.
ஒரு வாரத்தினுள் போரின் காரணமாக கிழக்கு பர்மாவிலிருந்து [Myanmar] தாய்லாந்தின் தக் மாகாணத்திற்கு ஆயிரம் அகதிகள் வந்துசேர்ந்துள்ள நிலையில், தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சிறுதேசிய இனத்தினர் [ethnic minority ] வசிக்கும் கிழக்கு பர்மாவின் பகுதிகளில் போர் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.
30,000 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய வா அரச இராணுவம் [United Wa State Army - UWSA] போன்ற சிறுதேசிய இனத்தவரின் ஆயுதக்குழுக்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்வதற்கு வழங்கப்பட்ட பல காலக்கெடுக்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், புதிய அரசாங்கம் பதவியேற்றதும் இனப்பிரச்சினையில் கவனஞ் செலுத்தப்படும் என நம்பப்படுகிறது.
நவம்பர் 13 அன்று விடுதலை செய்யப்பட்ட பர்மிய [Myanmar] எதிர்க்கட்சித் தலைவியான Aung San Suu Kyi பர்மாவின் ஆட்சி தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறுதேசியங்களின் [ethnic minority] கோரிக்கைக்கு அமைய கூட்டாட்சி முறையிலமைந்த தீர்வு திட்டம்பற்றிக் [federal-type solution] கலந்துரையாடுவதற்கான இரண்டாவது பான்லோங் மாநாடு ஒன்றுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
எது எவ்வாறிருப்பினும், பர்மாவினது [Myanmar] அமைதிக்கும் அபிவிருத்திக்குமான சபையானது 24 ரசியத் தயாரிப்பு தாக்குதல் உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்திருப்பதும் சல்வீன் ஆற்றுக்கு அருகாக உலங்குவானூர்திகளுக்குமான தளத்தினை அமைதிருப்பதும் நாட்டினது இனப்பிரச்சினைக்கு 'இராணுவ வழித் தீர்வை' ஏற்படுத்தும் நோக்கிலேயே பர்மிய இராணுவம் செயற்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
பர்மாவில் புதிய மோதல்கள் வெடிக்கலாம் என எழுந்த அச்சத்தினையடுத்து, அங்கு செயற்பட்டுவரும் ஆறு சிறுதேசிய இன ஆயுதக் குழுக்களும் ஒரு புரிந்துணர்வு பாதுகாப்பு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
இந்தக் குழுக்களில் ஏதாவதொருகுழு 'டட்மடோ' [Tatmadaw ] என அழைக்கப்படும் பர்மிய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகுமிடத்து ஏனைய அனைத்துக் குழுக்களும் இராணுவத்திற்கு எதிரான தாக்குதலைத் தொடுக்கும் என்பதே அது.
குறித்த இந்த ஆயுதக் குழுக்கள் தம்மிடத்தே 60,000 போராளிகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறிருப்பினும், இந்த ஆறு ஆயுதக் குழுக்களும் இணைந்து இராணுவ அணியொன்றை உருவாக்கி படைச்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன.
"இங்குள்ள பலதரப்பட்ட ஆயுதக்குழுக்களும் ஒன்றுடனொன்று பிரித்தே வைக்கப்பட்டிருப்பதனால் இவை அனைத்தும் இணைந்து இராணுவ ரீதியிலான கூட்டணி ஒன்றை அமைத்துக் கொள்ளவதற்கான வாய்ப்பு பெரிதாக இல்லை" என 'தேர்தலுக்குப் பின்னான பர்மா' என்ற அரங்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆங் நாய்ங் ஓ [Aung Naing Oo ] கூறுகிறார்.
பர்மாவில் [Myanmar] மீண்டும் மோதல்கள் வெடித்துவிடுமோ என்ற அச்சம் இந்தப் பிராந்தியத்தின் ஊடாக போதைப்பொருட்கள் அதிகம் கடத்தப்படுவதற்கு வழிசெய்கிறதாம்.
ஐ.நாவின் போதைப்பொருட்கள் மற்றும் குற்றவியல் செயற்பாடுகளுக்கான செயலகத்தின் [UN Office on Drugs and Crime (UNODC] அறிக்கை கடந்தவாரம் பாங்கொக்கில் வெளியிடப்பட்டிருந்தது.
2009ம் ஆண்டு தாய்லாந்து நோக்கி போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது என இதன்போது குறிப்பிட்ட இந்த செயலகத்தின் பணியாளரான கறி லூயிஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதானது ஆயுதக்குழுக்கள் தமக்குத் தேவையான ஆயத தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்காக
தம்மிடமுள்ள போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் வழிசெய்திருக்கிறது.
2009ம் ஆண்டு செப்ரெம்பரில் இடம்பெற்ற கொஹங் பிராந்தியத்தின் மீதான பர்மிய இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் சீனா தனது அதிருப்தியினை வெளியிட்டிருந்தது.
குறித்த இந்தத் தாக்குதல் சம்பவத்தின் விளைவாக 40,000 அகதிகள் சீனாவின் யுனான் பிராந்தியத்தினை நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்கள்.
இவ்வாறாக இடம்பெயர்ந்த மக்களில் பொரும்பான்மையானவர்கள் சீன இனத்தைச் சேர்ந்தவர்களென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இறுதிப் போரின்போது சீனா போர்த்தளபாட மற்றும் இரசதந்திர ஆதரவினைச் சிறிலங்காவிற்கு வழங்கிநின்றது.
இந்த இறுதிப்போரின் போது சிறிலங்கா அரச படையினர் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதலை நடாத்தியதாகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
சீனா இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முன்னெடுக்கும் 'முத்துமாலைத்' திட்டத்தில் பர்மாவினைப் [Myanmar] போலவே சிறிலங்காவும் ஓர் அங்கமே.
இந்தத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாடர், பங்களாதேசின் சிற்றகொங், பர்மாவின் ஸ்ரூவே மற்றும் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை ஆகிய இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனா துறைமுகங்களைப் புதிதாக அமைத்து வருகிறது அல்லது ஏற்கனவே உள்ள துறைமுகங்களைத் திருத்தியமைத்து வருகிறது.
2007ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி வலிந்த தாக்குதலைச் சிறிலங்கா அரசபடையினர் தொடுத்த அதேவேளையில் சீனா சிறிலங்காவினது தென்முனையில்
அம்பாந்தோட்டைப் பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் பணியினை ஆரம்பித்தது.
கொழும்புக்கான மேற்கு நாடுகளின் கடனுதவிகள் வற்றிச்சென்ற நிலையில் கொழும்புக்கு அதிகளவிலான நிதியுதவியினை வழங்கும் நாடாக சீனா மாறியது.
விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்பட்ட கையோடு பர்மாவிற்கு [Myanmar] பயணம் செய்திருந்த சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச பர்மிய இராணுவ அரசாங்கத்தின் தலைவர் தான் ஸ்வேவை [Than Shwe] சந்தித்திருந்தார்.
சிறிலங்காவிற்கும் பர்மாவிற்கும் [Myanmar] இடையிலான 60 ஆண்டுகால இராசதந்திர உறவினைப் பூர்த்திசெய்யும் வகையில் கடந்த யூன் 2009ம் ஆண்டு பர்மிய இராணுவத் தலைவர் தான் ஸ்வெ மற்றும் அந்த நாட்டின் முதன்மையான ஜெனரல்களை உள்ளடக்கிய குழுவொன்று சிறிலங்காவிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.
பர்மாவில் விடுதலைப் புலிகளமைப்பு முன்னெடுத்த சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தின் போது பர்மிய ஜெனரல்களுக்கு சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்த இருநாட்டு அரசாங்கங்களும் தேரவாத பௌத்தச் சிந்தனையின் [Theraveda Buddhism] அடிப்படையிலேயே செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த விடுதலைப் புலிகளுக்கெதிரான போரைச் சிறிலங்கா வென்றது எவ்வாறு என்பதை பர்மிய இராணுவத்தினர் அறிய விரும்புவதாக வெளிபடையாக தெரிவத்திருந்தனர்.
இந்த நிலையில் இரண்டு நாடுகளும் தமக்கிடையே பரஸ்பர படைத்துறைசார் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள் எனத் தெரிகிறது.
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் கைக்கொண்ட வழிவகைகள்தான் என்ன என்பதை அறிந்து அந்த
முறைமையினத் தானும் கைக்கொள்ளும் முனைப்புக்களில் பர்மிய [Myanmar] அரசாங்கம் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் சம்பவங்கள் இடம்பெறுகிறது" என அண்மையில் தனது
ஆய்வறிக்கையில் கிம் ஜொலிவ் [Kim Joliffe] என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்த சிறிலங்காவின் இராணுவ அரசயில் மூலேபாயத்தின் அடிப்படையில், ஹரன் தேசிய விடுதலை இராணுவம் [Karen National Liberation Army - KNLA] என்ற அமைப்புடன் முதலில் போர்நிறுத்தத்தினை ஏற்படுத்துவதன் ஊடாக அந்த அமைப்பினைப் பலவீனமடையச் செய்வதுதான் பர்மாவினதும் மூலோபாயம்.
குறிப்பிட்ட இந்த அமைப்புத்தான் பர்மிய இராணுவ அரசாங்கத்துடன் இன்னமும் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்தவில்லை.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் செயற்பட்ட ஹரன் தேசிய விடுதலை இராணுவம் [Karen National Liberation Army - KNLA] என்ற அமைப்பு தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு நாடுகளைச் சேர்ந்த படை வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தூரத்திலிருந்து இயக்கப்படும் வீடியோ கமராக்கள், உளவு நடவடிக்கைக்கான கமராக்கள் மற்றும் உணரிகளை பர்மாவினது கிழக்குப் பகுதிக் காடுகளில் பொருத்தியிருக்கிறது.
பர்மாவின் கிழக்குப் பகுதியில் பர்மிய அரச படைகளின் 237 பற்றாலியன்கள் நிலைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இந்தப் பிராந்தியத்தில் பர்மிய இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக 73,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வசிப்பதாகவும் பர்மிய சமூக அமைப்புக்களின் அவையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் க்நியோ பா கூறுகிறார்.
பர்மிய நகரங்களான மியாவடி மற்றும் திறீ பகொடாஸ் பாஸ் ஆகியவற்றுக்கு அருகே இடம்பெற்ற மோதல்களின் விளைவாக 30,000க்கும் அதிகமான பொதுமக்கள் எல்லையினைக் கடந்து அகதிகளாகத் தாய்லாந்திற்குச் சென்றிருக்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க உள்நாட்டில் 446,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வசிக்கிறார்கள்.
சிறுதேசிய இனங்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் சிறுதேசிய இனத்தினருக்கு எதிரான பல்வேறுபட்ட குற்றச்செயல்களில் பர்மிய இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
கட்டாய வேலை, கட்டாய இடப்பெயர்வு மற்றும் பாலியல் வல்லுறவுகள் போன்றவை இவற்றுள் அடங்கும்.
இவ்வாறாக பர்மிய இராணுவத்தினர் புரிந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான சுதந்திர ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் வாதிட்டுவருகின்றன.
ஹரன் Karen இனத்தினைச் சேர்ந்த மக்கள் செறிவாக வாழும் கிழக்குப் பர்மாவில் அதிக வன்முறைகள் வெடிக்கலாம் என ஜொலிவ் [Kim Joliffe] தனது அறிக்கையில் கூறுகிறார்.
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்ததைப் போல, "சிறுதேசிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களைப் படுகொலைசெய்தல், ஹரன் தேசிய விடுதலை இராணுவம் என்ற அமைப்பினது முக்கிய தளங்களை இலக்குவைத்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளுதல், பொதுமக்களை கொலை வலயத்திற்குள் கவர்ந்திழுத்தல் போன்ற செயற்பாடுகள் இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்துக் காணப்படும்".
"ஈற்றில் சிறிலங்காவில் இடம்பெற்றதைப் போல கொலைவலயத்திற்குள் கவர்ந்திழுக்கப்படும் அனைவரும் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் என்ற வேறுபாடு எதுவுமின்றி செறிவான எறிகணைத் தாக்குதல்களின் ஊடாகப் படுகொலைசெய்யப்படுவார்கள்" என ஜொலிவ் [Kim Joliffe] தனது ஆய்வு அறிக்கையில் கூறுகிறார்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen