Main Pages Kathiravan.com

Samstag, 11. September 2010

கட்சியை உடைப்பேன் ஆதரவு தரவேண்டும்: "இது தான் இன்று இலங்கையின் நவீன இராஜதந்திரம்"


சிறுபான்மையினக் கட்சிகளுக்கு இணக்க அரசியல் ஒத்துவருமா?

அண்மைக்காலமாக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது விநோதமான கொள்கையொன்றைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. அரசியலமைப்புக்கு ஆதரவாவாக அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்துள்ளது. ஆனால் தொடர்ந்தும் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரப் போவதாகவும் கூறுகிறது.

பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி என்பது அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இருக்க்க வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவு அத்தகையதொன்றாகத் தெரியவில்லை. இக்கருத்து தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும் பொருந்தக்கூடியதே இக்கட்டுரை எழுதப்படும் போது த.தே,கூட்டமைப்பின் நிலை சரியாக அறியப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிமுறை நீக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அந்தப் பதவியை இன்னமும் பலப்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எடுத்துள்ள முடிவை பொறுப்பு வாய்ந்த செயல் என்று சொல்ல முடியாது. இதைப் பொறுப்பற்ற தனம் என்றே கருதலாம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தநிலைப்பாட்டை எடுப்பதற்குக் காரணங்கள் பல இருந்தன. அந்தக் கட்சியை உடைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுகின்ற அளவுக்கு ஆளும்கட்சி ஊடுருவி இருந்தது.

கட்சியின் உடைவைத் தவிர்ப்பதற்காக ஆட்சியைப் பலப்படுத்த அது ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள்ளே இப்படியான பிளவுகள் வருவதோ இப்படியான முடிவுகளை அது எடுப்பதோ ஒன்றும் பதிதான விடயமல்ல.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், மலையகக் கட்சிகளும் இதே போக்கில் தான் செயற்படுகின்றன. சில தமிழ்க்கட்சிகளுக்கும் இது விதிவிலக்கானபோக்கல்ல.

அரசாங்கங்களின் இழுப்புக்கு ஏற்ப வளைந்து நெளிந்துபோகின்ற இந்தப்போக்கினால் தான் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்படாமலேயே போகின்றன. வெறுமனே சில அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மையின மக்களின் உரிமைப் பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டன. மறைக்கப்பட்டன. இப்போது சொல்லப் போனால் முஸ்லிம்களின் தரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே அரசாங்கத்துடன் ஐக்கியமாகியுள்ளன அல்லது அதன் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளன.

இந்தக் கட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடிந்ததா?

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள், கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது என்று ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்ற போதும் அவர்களால் அவற்றுக்குத் தீர்வு காண முடியாத நிலையே உள்ளது. அதுபோலவே மலையகத்தில் எல்லாக் கட்சிகளும் அரசாங்கத்துடன் நின்ற போதும் அங்குள்ள மக்களின்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

வடக்கில் ஈபிடிபி போன்ற கட்சிகளும், கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்து சாதித்தது தான் என்ன?

ஏதோ சில நிவாரணத் திட்டங்கள், சிறியளவிலான நிதியுதவிகள்,முதலீடுகளை செய்யக்கூடிய திட்டங்களை அவர்களால் நிறைவேற்ற முடிகிறதே தவிர வடக்கு,கிழக்கு மக்களின் அடிப்படை, அரசியல் பிரச்சினைகள் குறித்து எதையுமே செய்ய முடியாத நிலை தான் உள்ளது.

அரசுடன் இணைந்து கொள்வதால் மட்டும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது. அப்படி அரசுடன் இணக்க அரசியல் நடத்துவதே புத்தசாலித்தனம் என்று நினைப்பதும் சொல்வதும் சில கட்சிகள் தம்மை நியாயப்படுத்துவதற்காகக் கூறுகின்ற காரணமாகும்.

சிறுபான்மையினக் கட்சிகளை தன் சொற்படி ஆடும் பொம்மைகளாகவே அரசாங்கம் வைத்திருக்கிறதேயின்றி, அவர்கள் மூலம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண்பது அதன் நோக்கம் அல்ல.

சிறுபான்மையினக் கட்சிகள் வளைந்து நெளிந்து கைகட்டி நிற்கின்ற போக்குத் தான் இந்த நிலையை ஊருவாக்கியது. எப்போதெல்லாம் அவர்கள் வளைந்து குனிந்து போகிறார்களோ அப்போதெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு அதிகளவு பாதிப்புத் தான் ஏற்பட்டுள்ளது. இது தான் வரலாறு. தமிழ், முஸ்லிம், மலையக சிறுபான்மைக் கட்சிகள் இந்த விடயத்தில் பலமுறை பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளன என்பதே உண்மை. வெறுமனே உத்தரவாதங்களும், உறுதிமொழிகளும் தான் அவர்களை காலம் காலமாக அடிமைப்பட வைத்தன. இப்போது அது மிரட்டலாக உருவெடுத்துள்ளது.

கட்சியை உடைப்பேன் ஆதரவு தரவேண்டும் என்று மிரட்டிப் பணிய வைக்கும் போக்கு தலை தூக்கியிருக்கிறது. இது தான் இன்று இலங்கையின் நவீன இராஜதந்திரம். இந்த இராஜதந்திர பொறிக்குள் தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் சிக்கிப் போயிருக்கிறது.

அரசுடன் இணைந்து கொள்வதன் மூலம் தமது மக்களுக்கு நன்மைகளை செய்ய முடியும் என்று அறிக்கை வெளியிட்டு மக்களை முட்டாள்களாக்கும் போக்கில் இருந்து சிறுபான்மைக் கட்சிகள் இன்னமும் மாறவில்லை. அதேவேளை,இதுபோன்ற சில்லறைத்தனமான அரசியல் நகர்வுகளின் ஊடாக சிறுபான்மையினக் கட்சிகளை விலைபேசும் போக்கு மிகவும் மோசமானது. இதேபோக்கு நீடிக்குமேயானால்,சிறுபான்மையின மக்களின் நலனும் கௌரவமும் முற்றாகவே பாதிக்கப்பட்டு விடும். சிறுபான்மையினர் என்றால் அவர்கள் சார்ந்த கட்சிகள் என்றால் கிள்ளுக்கீரையாக நினைக்கத் தொடங்கி விடுவார்கள்.

இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்கும் தடுக்கும் பொறுப்பு அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளுக்கும் இருக்கிறது. அதை மறந்துபோனால் ஆதரவளித்த மக்களிடத்தில் இருந்து அந்நியப்படும் நிலை ஏற்படலாம்.

கட்டுரையாளர் கபில்

Keine Kommentare:

Kommentar veröffentlichen