
சலுகை அரசியல் புயலை உறுதியுடன் எதிர்கொள்ளுமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சலுகை அரசியல் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் தமிழ்மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்து விட்டது. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி பியசேன அரசதரப்புக்குத் தாவியதை அடுத்து இந்தச் சந்தேகம் வலுவடையத் தொடங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் சலுகைகளைப் புறந்தள்ளி விட்டு நின்று பிடிப்பார்கள் என்று நம்பும் நிலையிலும் தமிழ் மக்கள் இல்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகள் என்று நம்பி நாடாளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் பலர் அவர்களை ஏமாற்றி விட்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய செயற்பாடுகள் தெரிவு செய்த மக்களின் விருப்பங்களுக்கு முற்றிலும் முரணானதாக இருப்பது வெளிப்படை. அரசியல் அதிகாரம், பணம், பதவிகளுக்காக தமிழ் அரசியல்வாதிகள் தமது கடந்த காலத்தையெல்லாம் மறந்து விட்டு யார் யாரையோ எல்லாம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரையோ எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் முனைப்புக் காட்டுகிறது என்றால் அதன் பின்னணி நிச்சயம் ஆபத்து நிறைந்த ஒன்றாகவே இருக்க முடியும். இந்த பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தப்பிக் கொள்ளுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இனி,
கடந்த வாரம் பியசேன எம்.பி தெரிவித்த ஒரு கருத்தை அடுத்து கூட்டமைப்புக்குள் இருந்து சிலர் அரசதரப்புக்குச் செல்லப் போவதாகச் செய்திகள் வெளியாகின.
மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான யோகேஸ்வரன் அரசதரப்புக்குத் தாவினால் அவருக்கு இந்துசமய விவகார அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொடுப்பேன் என்று பியசேன எம்.பி கூறியதாகவும் ஒரு தகவல். அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொடுக்கின்ற அளவுக்கு பியசேன எம்.பி அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியில் கூட இருக்கவில்லை. அவர் ஒரு அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பேன் என்று கூறியிருப்பது தன்னை ஒரு முக்கியமானவராகக் காட்டிக் கொள்வதற்காக இருக்கலாம். அதேவேளை, இதை ஒரு சாதாரண விடயமாகக் கருத முடியாது. அரசதரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக இருக்கிறது என்பதைத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே தனக்கும் ஏனைய கூட்டமைப்பு எம்.பிகளுக்கும் அரசாங்கம் பெருமளவு சலுகைகள்,பணம், பதவிகள் தருவதாகக் கூறி இரகசியமாகத் தூது விடுவதாக மட்டக்களப்பு எம்.பி யோகேஸ்வரன் கூறியிருந்தார்.
ஆயினும் தான் ஒருபோதும் கட்சி மாறப் போவதில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். இப்போது பியசேன எம்.பியின் கருத்து தொடர்பாக அவரது தரப்பில் இருந்து இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் எந்தக் கருத்தும் வரவில்லை. அதேவேளை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள 13 எம்.பி.க்களில் எவரும் கட்சி தாவப் போவதில்லை என்று அரியநேத்திரன் எம்.பி கூறியுள்ளார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எல்லாக் கட்சிகளையும் அது உடைத்து விட்டது அல்லது தன் பக்கம் இழுப்பதில் வெற்றி பெற்று விட்டது. ஜே.வி.பி, ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்று எல்லாக் கட்சிகளையும் அரசாங்கம் நிம்மதியாக அரசியல் நடத்த விடவில்லை என்பதே உண்மை. பியசேனவைப் பிரித்தெடுத்த போதும் இன்று வரை வலிமையான எதிர்ப்பைக் காண்பித்து வருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.
இப்போது அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையில்லை. அது எப்போதோ அரசுக்குக் கிடைத்து விட்டது. எனவே அதற்காக ஆட்களைப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் முனைப்புக் காட்டுகிறது என்றால் அதன் பின்னணி நிச்சயம் ஆபத்து நிறைந்த ஒன்றாகவே இருக்க முடியும்.
எதிர்க்கட்சிகளில் குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அரசாங்கத்துக்கு எதிரான போக்கில் இருந்து விலகி தமக்கு ஆதரவளிக்க வேண்டிய ஒரு நிலையை உருவாக்கும் முயற்சிகளில் தான் அரசாங்கம் இறங்கியுள்ளது. அண்மைக்காலத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்ற திகாம்பரம், பிரபா கணேசன், சிறிரங்கா, பியசேன போன்றவர்கள் இப்போது அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாகி விட்டனர். அவர்கள் அரசாங்கத்தைப் புகழ்ந்து தள்ளுவதையே இப்போது வழக்கமாக்கியுள்ளனர்.
இதுபோலத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களையும் மாற்றுவதற்கு அரசாங்கம் முனைகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா எம்.பி.க்களும் இப்படி மாறி விடுவர் என்று அரசாங்கம் நம்பா விட்டாலும் சிலரை மாற்றி விட முடியும் என்று அது நம்புவதாகத் தெரிகிறது. அதனால் தான் இந்த நிலை. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது மடக்கி அவர்களின் வாயை அடைப்பதற்கு முனைகிறது அரசாங்கம்.
அதாவது தமிழர்களிடம் இருந்து எழுகின்ற குரலை அடக்குவது தான் அதன் ஒரே நோக்கமாக இருக்கிறதே தவிர வேறெந்த அரசியல் நலனுக்காகவும் அது இவ்வாறான காரியத்தில் இறங்கவில்லை. இதுவரையில் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு எந்த உருப்படியான வெற்றியும் கிடைத்தாகத் தெரியவில்லை. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் சலுகைகளைப் புறந்தள்ளி விட்டு நின்று பிடிப்பார்கள் என்று நம்பும் நிலையிலும் தமிழ் மக்கள் இல்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகள் என்று நம்பி நாடாளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் பலர் அவர்களை ஏமாற்றி விட்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய செயற்பாடுகள் தெரிவு செய்த மக்களின் விருப்பங்களுக்கு முற்றிலும் முரணானதாக இருப்பது வெளிப்படை.
அரசியல் அதிகாரம், பணம், பதவிகளுக்காக தமிழ் அரசியல்வாதிகள் தமது கடந்த காலத்தையெல்லாம் மறந்து விட்டு யார் யாரையோ எல்லாம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரையோ எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அந்த வகையறாக்களுக்குள் இவர்களும் சேர்ந்து விட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதம் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதை வைத்துக் கொண்டு பலரும் பல விடயங்களைச் சாதிக்க முனைகின்றனர்.
இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சலுகை அரசியல் என்ற வலுவான புயலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
அரசாங்கத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வடக்கு,கிழக்கு அபிவிருத்தி, மீள்குடியமர்வு விவகாரங்களில் இணைந்து செயற்படப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ளது. இதற்கென கண்காணிப்புக் குழு ஒன்றை நியமிப்பதற்கு வசதியாக ஏழு பேரின் பெயர்களையும் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவுக்கு வந்ததற்குக் காரணம் அரசதரப்பின் அழுத்தங்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை எப்படி வழிக்குக் கொண்டு வந்ததோ அதுபோன்ற வழியில் தான் இதுவும் நடந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசதரப்புடன் புனர்வாழ்வு விவகாரங்களில் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவா அல்லது தமிழர் நலனுக்காகவா என்பது விரைவிலேயே தெரிந்து விடும். இதுபோலத்தான் அரசாங்கம் ஐ.தே.கவுடனும் பேச்சு நடத்துவதாகக் கூறிக் கூறியே அதன் எம்.பிக்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இந்த வரலாற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்திருக்க நியாயமில்லை. அது போன்றதொரு பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தப்பிக் கொள்ளுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
கட்டுரையாளர் ஹரிஹரன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen