Main Pages Kathiravan.com

Dienstag, 7. September 2010

ஏமாறும் யாழ்பாணம்: ஆசை காட்டி மோசம் செய்யும் அரசுகள்…………….?


காங்கேசன்துறை நோக்கி எப்போது புறப்படும் யாழ்தேவி?
காங்கேசன்துறைக்கான யாழ்தேவி ரயில்சேவை இடைநிறுத்தப்பட்டு இரண்டு தசாப்தங்கள் முழுமையாக முடிந்து விட்டன. போர் முடிவுக்கு வந்த கையோடு ஏதோ இன்னும் சில மாதங்களில் காங்கேசன்துறை வரைக்கும் ரயிலில் சென்று வரலாம் என்பது போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவையெல்லாம் மக்களை மயக்குவதற்காக நடத்தப்பட்ட பிரசாரங்கள் தான் நடைமுறைச் சாத்தியமாக நீண்டகாலம் எடுக்கும் என்பது இப்போது தான் பெரும்பாலானோருக்கு தெரியவருகிறது.
யாழ்தேவி ரயில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி எப்போது பயணத்தைத் தொடங்கப் போகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கக் கூடிய நிலையில் இன்று எவருமே இல்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.
இது வெறும் பொதுமக்களின் பிரச்சினை மட்டுமல்ல. பிராந்திய நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரமாகவும் மாறிவிட்டதால் தான் இந்தச் சிக்கல்.

வடமாகாணத்தில் இரண்டு ரயில் பாதைகள் இருந்தன.
ஒன்று யாழ்ப்பாணத்துக்கானது இது காங்கேசன்துறையில் முடிவடையும்.


அடுத்தது மன்னாருக்கானது இது தலைமன்னார் இறங்குதுறையில் முடிவடையும்.
இந்த இரண்டு பாதைகளிலும் நடைபெற்று வந்த சேவைகளுமே 1990ம் ஆண்டுக்குப் பிறகு செயலிழந்து போய் விட்டன. சேவைகள் மடுமல்ல பாதைகள் இருந்த இடமே தெரியவில்லை. ரயில்பாதையில் போடப்பட்டிருந்த தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள், கற்களைக் கூட இப்போது காண முடியாது. அதைவிட ரயில்பாதையில் குடியிருப்புகள். கடைகள். கோவில்கள் கூட முளைத்து விட்டன. அந்தளவுக்கு மீளவும் ரயில் சேவை ஆரம்பமாகப் போவதில்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வடபகுதி மக்களிடத்தில் ஏற்பட்டிருந்தது.

இப்போது எல்லாம் மாறிவிட்டது. போர் முடிவுக்கு வந்த பின்னர் காங்கேசன்துறைக்கு யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பிக்கப் போவதாக அரசாங்கம் சொல்லியது. அதைக் கேட்பதற்கு குளிர்ச்சியாகத் தான் இருந்தது. ரயிலில் என்றால் குறைந்த நேரத்தில் படுத்துறங்கும் வசதிகளுடன் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்பது அநேகமானோரின் கணக்கு. அதனால் தான் இத்தனை எதிர்பார்ப்பு.


போர்முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் ஐந்து கட்டங்களாக வடபகுதி ரயில் பாதைகளைப் புனரமைக்கும் திட்டம் ஒன்றை வரைந்தது.
வவுனியா தொடக்கம் ஓமந்தை வரையிலான பாதையை அமைப்பது முதலாவது கட்டம்.


அங்கே இங்கு உண்டியல் குலுக்கி நிதி திரட்டி முதலாவது கட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது.


ஏற்கனவே வவுனியா வரை நடைபெற்று வந்த ரயில் சேவைகள் தற்போது தாண்டிக்குளம் வரை நடைபெறுகிறது.


தாண்டிக்குளம் வரையிலான பாதை சீரமைக்கப்பட்டதையடுத்தே இது சாத்தியமானது.


தற்போது ஓமந்தை வரையிலான ரயில் பாதையும் அமைக்கப்பட்டு விட்டது. ரயில் நிலையக் கட்டுமானப்பணிகள் முடிந்ததும் முதலாவது கட்டம் நிறைவடையும். பெரும்பாலும் சில வாரங்களில் ஓமந்தை வரை ரயில்சேவைகள் நடைபெறும்.
ஆனால்,
அரசாங்கம் போட்ட திட்டத்தின் மீதமுள்ள நான்கு கட்டங்கள் பற்றித் தான் இப்போது கேள்விகள் எழுகின்றன.
ஓமந்தை-பளை, பளை-காங்கேசன்துறை ஆகிய இரண்டு கட்டங்களும் யாழ்ப்பாணம் நோக்கிய பாதைக்குரியவை.


அடுத்து மதவாச்சி-மடு, மடு-தலைமன்னார் ஆகிய இரண்டு கட்டங்களும் மன்னார் பாதைக்குரியவை.
யாழ்ப்பாணத்துக்கான பாதையில் வவுனியா தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான 159 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட வேண்டியுள்ளது.இந்தப் பாதையில் மொத்தம் 89 பாலங்கள், 16 ரயில் நிலையங்கள், 12 துணை ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். இது இது கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டம் வவுனியா தொடக்கம் ஓமந்தை வரையிலானது. அது முடிந்துவிட்டது. ஓமந்தை தொடக்கம் பளை வரையிலானது இரண்டாவது கட்டம். இது 90 கி.மீ தூரம் கொண்டது. அடுத்து பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலானது மூன்றாவது கட்டம். இது 56 கி.மீ தூரத்தைக் கொண்டது. ஐந்து கட்டத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் வரைந்த போது இதற்காக இந்தியாவோ சீனாவோ நிதியை அள்ளி அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பது அதற்குத் தெரியவே தெரியாது. இதனால் முதலாவது கட்டத்தை, உள்ளுரில் நிதி திரட்டி நிறைவு செய்வதற்கு முடிவு செய்தது. இரண்டாவது கட்டத்தை இந்தியாவிடம் நிறைவேற்றித் தருமாறு கேட்டது அதற்கு இந்தியாவும் இணங்கியது.

மூன்றாவது கட்டத்தை சீனாவிடம் நிறைவேற்றித் தருமாறு கேட்பதற்கும் தீர்மானித்தது.

இந் நிலையில் கடந்த கடந்த ஜனவரி 12ம் திகதி இந்திய அரச நிறுவனமான இர்கோன் நிறுவனத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது அரசாங்கம். ஓமந்தை தொடக்கம் பளை வரையிலான ரயில் பாதையை இரண்டரை வருடங்களுக்குள் அமைத்துத் தருவதற்கு இந்திய நிறுவனம் இணங்கியது. சுமார் 185 மில்லியன் டொலர் செலவிலான இந்த ரயில் பாதை அமைப்புப் பணிகள் இந்த வருடம் முதல் காலாண்டுக்குள் ஆரம்பமாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்று வரை இந்தப்பணிகள் ஆரம்பமாகவில்லை. ரயில்வே பாதையில் உள்ள கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை என்பது இதற்குக் கூறப்படும் காரணமாகும். அதேவேளை, பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான 56 கி.மீ ரயில் பாதையை அமைப்பதற்கான பணி சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டம் இலங்கை அரசுக்கு இருந்தது.

ஆனால், கடந்த ஜுன் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்தியப் பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வடபகுதிக்கான ரயில் பாதை முழுவதையும் இந்தியாவே புனரமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது பளை காங்கேசன்துறை ரயில் பாதையை அமைப்பதற்கு ரயில்வே திணைக்களத்துக்கு இந்தியா உதவும் என்று கூறப்பட்டிருந்தது. எனினும் இன்னமும் இதை சீனாவிடம் வழங்கும் திட்டம் இலங்கை அரசுக்கு இருக்கிறது. இதுபற்றிய உடன்பாடு எதுவுமே இன்னமும் எந்தத் தரப்புடனும் கையெழுத்திடப்படவில்லை.

இதற்கிடையில், கடந்த 17ம் திகதி மதவாச்சி தலைமன்னார் ரயில் பாதை யை அமைப்பதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இரண்டு கட்டங்களாக இந்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. முதற்கட்டமாக மதவாச்சியில் இருந்து மடு வரைக்கும், அடுத்த கட்டமாக மடுவில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புனரமைப்பு வேலைகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 110 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் ஆறு ரயில் நிலையங்களும், ஆறு பிரதான பாலங்களும் கட்டப்படவுள்ளன.

43கி.மீ தூரத்தைக் கொண்ட முதற்கட்டப் பணிகளுக்கு 7350 மில்லியன் ரூபா அல்லது 81.3மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. முதற்கட்டப் பணிகள் அடுத்த வருடம் இறுதிக்குள் முடிவடையும். அதன் பின்னர் மடுதலைமன்னார் ரயில் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகும். இரண்டாவது கட்டப் பணிகளுக்கு 17.220 மில்லியன் ரூபா அல்லது 149.74 மில்லியன் டொலர் செலவிடப்படும்.

மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரையிலான ரயில் பாதை அமைப்புப் பணிகளை 30 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இதற்கென பொறியியலாளர்கள் குழுவொன்று மதவாச்சி வந்துள்ளது.
ஒக்ரோபரில் ரயில் பாதை அமைப்பு மூழுவீச்சில் இடம்பெறத் தொடங்கி விடும். ஓமந்தை காங்கேசன்துறை ரயில்பாதை அமைப்புப் பணிகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்கத் தலைவர் அண்மையில் கூறியிருந்தார். ஆனால் இப்போது தலைமன்னார் ரயில்பாதை அமைப்புப் பணிகள் முடிந்த பின்னரே யாழ்ப்பாணத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

இப்போது இந்தியாவும் சீனாவும் எதற்கெடுத்தாலும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கையில் காலடி எடுத்து வைக்கின்றன. அதிலும் ரயில்பாதை அமைப்பு, துறைமுகம், விமான நிலையம், வீதிகள் அமைப்பு போன்றவற்றில் இந்தப்போட்டி வெளிப்படையானது. வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகளை சீரமைக்க இந்தியா கடந்த வருடம் 425 மில்லியன் ரூபா கடனுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. அதேவேளை சீனா 110 கி.மீ நீளமான மாத்தறை கதிர்காமம் ரயில் பாதை புனரமைப்புப் பணியை மேற்கொள்ள இணங்கியது. இதையடுத்து இந்தியா 167.4மில்லியன் டொலர் செலவில் கொழும்புமாத்தறை ரயில்பாதையை சீரமைத்துத் தர முன் வந்தது. தாமதமாகவே இந்தத் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் வழங்கிய போதும் இந்தப் பணிகளை அதிவேகத்தில் ஆரம்பித்து விட்டது. அதேவேளை, கடந்த ஜனவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைப்பு வேலைகளை மட்டும் இந்தியா ஆரம்பிக்கவில்லை.

அதற்கிடையில் தலைமன்னாருக்கான ரயில்பாதையை அமைக்கத் தொடங்கி விட்டது. இந்தப் பணி முடிந்த பின்னர் தான் யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம் பயனடையக் கூடிய மக்களிள் எண்ணிக்கையயை விட தலைமன்னாருக்கான பாதை அமைப்பின் மூலம் பயனடையக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனாலும் இந்தியாவின் கவனம் அதன் மீதே இருக்கிறது.


யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகத்தை அமைப்பதற்கு காட்டும் அவசரத்தை ரயில் பாதை அமைப்பில் இந்தியா காட்டவில்லை.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
ஒன்று கண்ணிவெடிகள்அகற்றப்படாதுள்ளமை. இந்தியா நினைத்தால் இந்தப் பணிகள் நடைபெறும்போதே பாதை அமைப்பையும் தொடங்கலாம். ஆனால் அதற்கு இந்தியா தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.


இரண்டாவது காரணம் யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதையை விட இந்தியாவுக்கு வேறொரு முக்கிய தேவை உள்ளது. அது தான் தலைமன்னார்ராமேஸ்வரம் கப்பல்சேவையை மீள ஆரம்பிக்கும் திட்டம். இது இரு நாடுகளினதும் வர்த்தக,சுற்றுலாப்பயண வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதுகிறது இந்தியா.

விரைவாக இந்தக் கப்பல் சேவையை ஆரம்பிப்பிதற்கான உடன்பாடும் தயார்நிலையில் இருக்கிறது. கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அதில் பயணம் செய்பவர்கள் வசதியாக கொழும்புக்குச் செல்வதற்கு தலைமன்னார் ரயில் பாதை அவசியம். இதனால் தான் இந்தப் பாதைக்கு இந்தியா முன்னுரிமை கொடுக்கிறது.


மூன்றாவது காரணம் இந்தியா முதலில் ஓமந்தை பளை ரயில் பாதையை அமைக்கவே ஒப்புக்கொண்டு உடன்பாடு செய்து கொண்டது.

பளைகாங்கேசன்துறை பாதையை சீனாவிடம் வழங்கத் திட்டமிட்டிருந்தது இலங்கை அரசு. அதுபற்றிய உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படாத நிலையில் இந்தியா அதையும் செய்து தருகிறேன் என்றது. ஆனால் இது பற்றிய இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தப் பாதை புனரமைப்பையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. அதேவேளை, சீனா அதை நிறைவேற்ற முனைந்தால் அதைத் தாமதப்படுத்த வேண்டிய தேவையும் அதற்கு உள்ளது. இதுவும் கூட இந்தியா பளை வரையில் ரயில் பாதையை அமைத்துக் கொடுத்தால் தான் அதற்கப்பால் சீனாவால் தொடர முடியும். இதுவும் கூட இந்த இழுபறிக்கு ஒரு காரணம்.

தலைமன்னார் ரயில் பாதை அமைப்புக்கு 30 மாதங்கள் செல்லும். அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி அதை முடிப்பதற்கு எவ்வளவு காலம் செல்லப் போகிறது? இவற்றையெல்லாம் பார்க்கும் போது காங்கேசன்துறைக்கு யாழ்தேவியில் பயணம் செய்யும் அதிஷ்டம் எல்லாம் இப்போதைக்குக் கிடைக்கப் போவதில்லை என்றே தெரிகிறது.

கட்டுரையாளர் சத்திரியன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen