
நந்திக்கடலில் மீன்பிடிக்க சீனா போடும் தூண்டில்
முல்லைத்தீவு நந்திக்கடலை மீன்பிடி அபிவிருத்தித் திட்டம் ஒன்றுக்காக சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது. கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த வாரம் இதுபற்றிய தகவலை வெளியிட்டிருந்தார்.
‘சீபாஸ்’ என்ற மீன் இனத்தை வளர்த்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதே அந்த சீன நிறுவனத்தின் திட்டம்.
இது குறித்து அந்த நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டிருப்பதாகவும்- விரைவில் அவர்கள் இதுபற்றிய திட்டவரைபைக் கையளிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. அரசாங்கம் அந்தத் திட்டவரைபைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
நந்திக்கடலை சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அது தயாராகி வருகிறது என்பது மட்டும் தெளிவு. சீபாஸ் என்பது சீனர்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு வகை மீன். இது உலகம் முழுவதும் அதிகமாக விரும்பப்படும் மீனினமும் கூட. உலகில் வெவ்வேறு பகுதிகளிலும் இதன் அமைப்பும் நிறமும் வேறுபடுகிறது.
குறிப்பாக சீன, ஜப்பான், கொரிய நாட்டவர்களால் விருப்பப்படும் சீபாஸ் மீனையே நந்திக்கடலில் வளர்ப்பதற்கு திட்டமிடப்படுகிறது. இந்த சீபாஸ் மீன் இனத்தை ஜப்பானியர்கள் ‘சுசுகி’ என்றே அழைப்பர். அவர்களுக்குப் பிடித்தமான பிரபல மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் சுசுகி தான்.
‘சுசுகி’ மீனை வளர்த்து சீனா, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கே சீன நிறுவனம் முயற்சி செய்கிறது. அதற்காக நந்திக்கடலைத் தெரிவு செய்தது ஏன் என்பது கேள்வி.
நந்திக்கடல் கடந்த வருடம் இதே காலப்பகுதியில் மிகவும் அறியப்பட்டதொரு பெயர். அதற்கு முன்னர் இலங்கையில் கூடப் பலருக்குத் தெரியாது. கடந்த வருடம் இறுதிப்போர் நடந்தபோது இந்தப் பெயரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நந்திக்கடலின் ஒரு பகுதியில் இருக்கும் முள்ளிவாய்க்காலில் தான் புலிகளின் ஆயுதப்போராட்டம் கடைசி மூச்சை நிறுத்தியது. நந்திக்கடலில் தான் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பெருந்தளபதிகள் பலரின் சாவும் நிகழ்ந்தது.
அந்த வகையில் நந்திக்கடல் உலகளவில் பிரபலமானது. இப்போது இந்த நந்திக்கடலை சீன நிறுவனம் கைப்பற்ற முயற்சிக்கிறது. நந்திக்கடல் தற்போது யாரும் மீன்பிடிக்க முடியாமல் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. இது இறால் போன்ற உள்நாடு மீன்பிடி நடவடிக்கைளுக்கு பெயர் பெற்றது.
உவர்நீரேரியான இது, சீனாவுக்கு வழங்கப்படுமானால் அங்கு உள்நாட்டு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கடலேரியில் மீன்பிடித் தொழில் செய்து வந்தவர்களால் அதைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது போகும். இடம்பெயர்ந்த அவர்கள் மீளக்குடியமர்ந்து தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்ப முடியாது போகும்.
எனவே, நந்திக்கடலில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பேரிடியாகவே அமையப் போகிறது, ஆனால் இதை அரசாங்கம் ஒரு அபிவிருத்தித் திட்டமாக- ஏற்றுமதி வாய்ப்பை கொடுக்கின்ற திட்டமாகவே காண்பிக்கப் போகிறது. அதாவது வடக்கில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி அபிவிருத்தித் திட்டம் என்று அரசாங்கம் இதற்குக் காரணம் கூறப் போகிறது. ஆனால் இதன் மூலம் உள்நாட்டு மீனவர்களுக்கோ- மக்களுக்கோ எந்தப் பயனும் கிடைக்காது. அவர்கள் மீனைப் பிடிக்கவும் முடியாது- அதன் மூலம் வருவாயைத் தேடவும் முடியாது.
அதேவேளை இங்கு வளர்ப்பதற்குத் திட்டமிடப்படும் சீபாஸ் மீனுக்கு இலங்கையில் அவ்வளவாகப் பிரபல்யம் கிடையாது. இலங்கையர்களால் உண்ணக் கூடியதாக இருந்தாலும் கூட அதை வாங்கி உண்ணும் வாய்ப்புக் கூட அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அது சீனர்களுக்கோ ஜப்பானியர்களுக்கோ கொரியர்களுக்கோ தான் கிடைக்கப் போகிறது.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையின் மீன்பிடித்துறை மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. நந்திக்கடலில் மட்டுமன்றி அவர்களுக்கு இரணைமடுக் குளத்திலும் ஒரு கண் இருக்கிறது. போர்நிறுத்த காலத்தில் கிளிநொச்சிக்குச் சென்ற ஜப்பானிய நிபுணர் ஒருவர் அபிவிருத்தி பற்றிய கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது- இதைத் தெளிவாகவே கூறியிருந்தார்.
இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதைக் கைவிட்டு அங்கு நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டத்தை மேற்கொண்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியிருந்தார். வடபகுதிக்குப் பயணத்தை மேற்கொள்ளும் சீன, ஜப்பானிய நிபுணர்கள் இங்குள்ள இயற்கையான கடலேரிகளையும், குளங்களையும் தமக்கான வாய்ப்புகளாக்கிக் கொள்வதற்கே முனைகின்றனர்.
இலங்கையில் பலவேறு கடலேரிகள் இருந்த போதும் நந்திக்கடலைத் தெரிவு செய்தது ஏன் என்ற கேள்வி உள்ளது. கடலுணவு ஏற்றுமதி வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் இதை சீனாவுக்கு வழங்க வேண்டியதில்லை. அரசாங்கம் நினைத்தால் இதுபோன்ற திட்டத்தை தானே உருவாக்கிக் கொள்ளலாம். அது ஒன்றும் பெரியமும் அல்ல- பெருந்தொகைச் செலவும் எற்படாது. அது உள்ளுர் மீனவர்களுக்கும் தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்- வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் இதை சீனாவுக்கு வழங்க முற்படுவது சந்தேகத்துக்குரியதொன்றாகவே இருக்கிறது.
தென்பகுதியில் அரசாங்கத்தால் இதுபோன்ற திட்டத்தை இலகுவாகச் செயற்படுத்தி விட முடியாது. ஆனால் வடக்கில் இதைச் செய்தால் கேள்வி கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். அந்தத் துணிவில் தான் அரசாங்கம் நந்திக்கடலை சீனாவிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நந்திக்கடலையும் முள்ளிவாய்க்காலையும் தமிழர்கள் திரும்பிக் கூடப் பார்க்க முடியாத இடங்களாக வைத்திருக்கவே விரும்புகிறது போலும்.
சீனாவிடம் இந்தக் கடலேரியை ஒப்படைத்து விட்டால் யாருமே அங்கு செல்ல முடியாது போய்விடும். சீனா கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கின்ற நிதியுதவிக்கான பதிலுதவியாக இது இருக்கலாம். எது எவ்வாறாயினும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால்; -அது இந்தக் கடலேரியில் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மக்களினது வாழ்க்கைக்கு மட்டுமன்றி- அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கின்ற மக்களின் இருப்புக்கும் கூட ஆபத்தாக அமையலாம்.
சம்பூரைப் போன்று இங்குள்ள மக்களும் தமது நிலங்களைப் பறிகொடுத்து நிர்க்கதியாக நிற்க நேரிடலாம்.
கட்டுரையாளர் கபில்
Keine Kommentare:
Kommentar veröffentlichen