
வடக்கின் மீது திரும்பியுள்ள நாமல் ராஜபக்ஸவின் கரிசனை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவை இப்போது யாழ்ப்பாணம், வன்னிப் பகுதிகளில் அதிகமாகக் காணமுடிகிறது. அவர் தனது சொந்த மாவட்டத்துக்கு செல்கிறாரோ இல்லையோ வடக்குக்கு அடிக்கடி சென்று வருகிறார். இப்போதெல்லாம் அவரை முதன்மைப்படுத்தியே அங்கு நிகழ்வுகள்; நடத்தப்படுகின்றன- ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கிளிநொச்சியில் கடந்த வாரம் ஒரே நாளில் ஒன்பது நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார் நாமல்.
அதுபோல சமாதான பாத யாத்திரையாக பருத்தித்துறைக்குச் சென்றது, பூநகரி பயணிகள் படகுச்சேவை மீதான அவரது கரிசனை எல்லாமே ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அவர் இயங்கிக் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றன. இப்போது வடக்கு மக்கள் மத்தியில் பரிச்சயமான தென்னிலங்கை நபராக அவர் மாறியிருக்கிறார். இதன் அடிப்படைக் காரணம் அவரது அரசியல் உள்நோக்கம் கொண்ட நிகழ்ச்சிநிரல் தான்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலும் சரி- பொதுத்தேர்தலும் சரி அரசதரப்புக்கு தெளிவானதொரு பாடத்தைக் கற்பித்திருந்தது. என்னதான் இருந்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு அதரவாக வடக்கு மக்களின் வாக்குகளை திருப்ப முடியவில்லை என்பதே அது.
ஒரு வருடத்துக்கு முன்னர் முடிந்த போரும் அதற்குப் பிந்திய நிகழ்வுகளும்- மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களால் நம்பப்படுகின்ற ஒரு தலைவர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முடியாமல் செய்து விட்டன. இனிமேலும் தமிழ் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நம்ப முடியாது. எனவே தான் அடுத்த தலைமுறையின்; மூலம் இந்தநிலையை மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ராஜபக்ஸ குடும்பத்தில் அடுத்த தலைமுறை வாரிசாக களமிறக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவே மகிந்த ராஜபக்ஸவுக்கு அடுத்தாக- சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்பது இப்போதே தெளிவாகி விட்டது. எனவே வடக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே இப்போதைய நகர்வுகள் இடம்பெறுகின்றன. அத்துடன் வடக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவைத் தேடிக் கொடுக்கின்ற ஒருவராக நாமல் ராஜபக்ஸ புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
வடக்கில் விரைவில் நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தல் உள்ளுராட்சித் தேர்தல் என்பனவற்றில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் களமிறங்கப் போகிறது. ஏற்கனவே யாழ்.மாநகரசபைத் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளர் கூட வடக்கில் வெற்றிபெற முடியவில்லை. எல்லா இடங்களையும் கைப்பற்றியது ஈபிடிபி தான். இந்தநிலையை மாற்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது நாமலின் மற்றொரு திட்டம்.
நாமல் ராஜபக்ஸ போருடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒருவரல்ல என்பதால் அவர் மீது தமிழ்மக்கள் மத்தியில் வெறுப்பு இருக்காது என்பது அரசதரப்பின் கருத்து. அதனால் தான் அவர் அடிக்கடி கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பறந்து கொண்டிருக்கிறார். எந்த நிகழ்ச்சியென்றாலும் இப்போது அவரே முதன்மை விருந்தினராக இருப்பதன் சூட்சுமம் இதுதான்.
அதேவேளை வடக்கில் தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை அரசாங்கம் கண்டு கொள்வதேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசதரப்பு நிகழ்வுகளுக்கு அழைப்பதும் இல்லை- அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. பொதுவாக ஒரு அரச நிகழ்வு நடைபெறும் போது அந்தப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்புவது வழக்கம். ஆனால் வன்னியில் எந்தவொரு நிகழ்வுக்கும் தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று குறைபடுகின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் விரிசல் ஒன்றைத் தோற்றுவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே தெரிகிறது. முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கியே நின்றது. ஆனால் இப்போது அவர்களின் நிலைப்பாடு மாறிவிட்டது. வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து விட்டது.
வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக தம்முடனும் கலந்துரையாட வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் நேரடியாகவே கூறப்பட்டு விட்டது. ஆனாலும் அரசதரப்பு இவர்களை அழைப்பதேயில்லை. அபிவிருத்தி நடவடிக்கைளில் இணைந்து பணியாற்றத் தயார் என்று அறிவித்த போதும் கூட்டமைப்புக்கு அரசு அழைப்பு விடாமல் இருப்பது அதன் வன்மப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
அரசாங்கத்துடன் முரண்போக்கைக் கடைப்பிடிக்காமல் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வதாக அண்மையில் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். அவர் அப்படிக் கூறியதற்கும் செயற்பட்டதற்கும் காரணம் அரசுடன் இணைந்து ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதே. அதற்காக கூட்டமைப்பு வளைந்து நெளிந்து போவதை அவர்களின் பலவீனமாகவே பார்க்கிறது அரசாங்கம். இதனால் தான் தமிழ்மக்களின் எத்தனையோ பிரச்சினைகள் பற்றி வாயைத் திறக்காமல் நல்லபிள்ளையாக நடந்து கொண்டும்- கூட்டமைப்பை அரசு புறக்கணிக்கிறது.
இந்தக் கட்டத்தில் கூட்டமைப்புக்கு நெருக்கடி வலுத்து வருகிறது. ஒரு பக்கத்தில் தமது பிரச்சினைகள் பற்றிப் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கின்றனரே என்று தமிழ்மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இன்னொரு பக்கத்தில் அரசாங்கமும் அவர்களை கணக்கில் எடுக்காமல் உதறித் தள்ளுகிறது.
இரண்டு பக்கத்தாலும் கூட்டமைப்பு இடிபட்டுக் கொண்டிருக்க- இந்த இடைவெளியைப் பயன்படுத்தி நாமலை உள்ளே களமிறக்கி விட்டிருக்கிறது அரசதரப்பு.
வடக்கின் அபிவிருத்தியில் அங்கிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விட வேறெவருக்கும் கூடுதல் அக்கறை இருந்து விட முடியாது. கிளிநொச்சி அபிவிருத்திக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு தமிழரும் இல்லை. இந்தளவுக்கும் கிளிநொச்சி ஒரு தமிழர் பிரதேசம். ஆனாலும் அதன் அபிவிருத்தியைத் துரிதப்படுத்த அமைக்கப்பட்ட குழுவில் தமிழர்கள் எவரும் இல்லாது போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
எந்தவொரு தமிழர் தரப்பினதும் தலையீடு- செயற்பாடுகள் இல்லாமல் வடக்கின் அபிவிருத்தியைத் தனது கைக்குள் வைத்திருப்பதே அரசின் நோக்கம். இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு. வடக்கின் அபிவிருத்தியில்- மீள்எழுச்சியில் அனைவரது பங்களிப்பும் அவசியம். ஆனால் அதை அரசியலாக்க முனைவது- பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வின் மீது அரசியல் நடத்த முனைவது அபத்தமானது- அநாகரீகமானது.
- கட்டுரையாள்ளர் ஹரிகரன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen