Main Pages Kathiravan.com

Freitag, 25. Juni 2010

காலம் கடந்தும் வாழும் "தமிழ்" "கலைஞர் விழா எடுப்பதால் மட்டும்" காப்பாற்றப்படும் என்பதல்ல…….?



உட்புகுமுன் உரிமையோடு......."

ஜூன் 23 – 27ஆம் திகதி வரை தமிழ் நாட்டின் கோயம்புத்தூரில் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகுந்த பொருட்செலவில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம்மாநாட்டை நடத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்காக விழா எடுக்கின்றாரா அல்லது தனக்காக விழா எடுக்கின்றாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, ஈழத்தமிழரைக் காப்பாற்றவில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவும் "நானே தமிழின் பாதுகாவலன் என்தன்னைக் காட்டிக்கொள்வதற்காகவுமே இந்த மாநாட்டை நடத்துகின்றார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இக்குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை.


உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் அதன் வளர்ச்சி பற்றி ஆராயவும் உலகத் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்து தமிழ் மொழியின் ஏற்றத்திற்கு வழிகாண தமிழ்த்தூது தனிநாயம் அடிகளாரின் பெருமுயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் "உலகத் தமிழாராய்ச்சி மன்றம் . இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகளாவிய தமிழ் அமைப்பு. இந்த மன்றத்தின் ஏற்பாட்டில் இதுவரை எட்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்து முடிந்துவிட்டன. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இடம்பெறவேண்டிய நிலையில் அம்மன்றத்தைப் புறக்கணித்துவிட்டு "தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் தனது புகழ்பாடும் மாநாடாக இந்மாநாட்டை தமிழக முதல்வர் கலைஞர் நடத்த முனைந்துள்ளமையும் அவருக்கெதிரான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.


கலைஞருடைய உள்நோக்கம் எதுவாக இருப்பினும் தமிழுக்காக எடுக்கப்படும் விழா என்ற அடிப்படையில் கலைஞரின் கொள்கையோடு ஒத்துப்போகாத பல தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் பங்குகொள்கிறார்கள். இந்நிலையில் தமிழ் மொழியின் செம்மொழித் தகைமை பற்றியும் காலம் கடந்த நிலையில் இந்திய மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்ததன் நோக்கம் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது. [ஆய்வரங்க நிகழ்ச்சி நிரல் அடங்கிய கோப்பை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.]
- இன்போதமிழ் குழுமம் -

இனி,

ஆய்வுக்குள் செல்வோம்

".......தமிழின் செம்மொழித்தகமை இது ஒரு ஆய்வுத்தடாகம்........."


செம்மொழி என்றால் என்ன?

" ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய , "முதல்தரமான இலக்கிய நலம் வாய்ந்த போன்ற கருத்துகள் வழங்கப்பட்டுள்ளன. கழகத்தமிழ் அகராதியில் (மீள்பதிப்பு 2004)"செம்மொழி என்ற சொல்லுக்கு இணையான கருத்துடைய சொற்களாக "இயற்றமிழ் மொழி, நயமொழி, நன்மொழி, தனிமொழி ஆகிய சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. செம்மொழி என்பது செம்மையான மொழி, செவ்வியல் மொழி என்ற கருத்துகளையும் கொண்டுள்ளது.
"செம்மொழி என்று தகைமைக்குரிய அளவுகோல்கள்

ஒரு மொழி"செம்மொழி என் அழைக்கப்படுவதற்கு சில அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும்.

1. அம்மொழி தொன்மை வாய்ந்த மொழியாக இருக்க வேண்டும்

2. அம்மொழி வேறு மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் தற்சார்புரிமையுடைய மரபைக்கொண்ட மொழியாக இருக்க வேண்டும்

3. அம்மொழி ஏராளமான, உச்ச அளவு வளம் பொருந்திய பண்டைய இலக்கியங்களைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும்
என அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் பன்மொழி வல்லுனருமாகிய பேராசியர் ஜோர்ச் எல். ஹாட் குறிப்பிடுகின்றார்.

செம்மொழிக்கான இத்தகுதிப்பாடுகளைச் சற்று விரிவாக்கி பதினொரு தகுதிகளாகச் சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் அவையாவன;

1. தொன்மை

2. தனித்தன்மை

3. பொதுமைப் பண்பு

4. நடுவு நிலைமை

5. தாய்த்தன்மை

6. பாண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு

7. பிறமொழித் தாக்கமில்லாத தன்மை

8. இலக்கிய வளம்

9. உயர் சிந்தனை

10. கலை இலக்கியத் தன்மை வெளிப்பாடு

11. மொழிக் கோட்பாடு என்பனவே இந்த 11 தகுதிப்பாடுகள்.
உலக மொழிகளில் செம்மொழிகள் எவை

2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யுனெஸ்கோ நிறுவன அறிக்கையின்படி இன்று உலகில் 6700 மொழிகள் பேசப்படுகின்றன. இம்மொழிகளிலே எட்டு மொழிகள்தான் "செம்மொழிகள் எனப் பொதுவாக அடையாளம் காணப்பட்டுள்ளன

1. கிரேக்கம்

2. இலத்தீன்

3. எபிரேயம்

4. பேர்சியன்

5. வடமொழி

6. சீனம்

7. அரபிக்

8. தமிழ்
என்பவையே அந்த எட்டு மொழிகள்.

இதைவிட வேறு தகைமைகளின் அடிப்படையில் வேறுசில மொழிகளும் செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டாலும் அவை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல. இவற்றுள் சில இந்திய மொழிகளும் அடங்கும். ஆயினும் மேற்கூறப்பட்ட 8 மொழிகளும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செம்மொழிகளாக உள்ளன.


தமிழின் செம்மொழித் தகுதியை நிறுவிய அறிஞர்கள்

உலக மொழிகளில் முதன் முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார்.


19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ் மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித் தளத்தில்தான் மனோன்
மணியம் சுந்தரம்பிள்ளை தமிழ்த் தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு எனும் நூலில் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினை பாவாணர் "கூடலு என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.


கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ் மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள் கி.பி. 18ஆம் நூற்றாண்டினராகிய மாதவச்சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிர விருத்தியில், "தமிழ்மொழி புணர்ச்சிக்குட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது.


தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞானமுனிவர் கருதுதற்கு உரியர். சுவாமி ஞானப்பிரகாசர்அடிகளார், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார், பன்மொழி அறிஞர் தாவீது அடிகளார் போன்ற பன்மொழிப் புலமைமிக்க, தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ் மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் எழுத்துக்களிலும், ஆய்வு நூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.
தமிழின் செம்மொழித் தகுதிகள்

செம்மொழித் தகுதிக்கான அளவுகோல்களின் அடிப்படையில் தமிழ் மொழியை வைத்து நிறுத்துப் பார்க்கையில் அதன் தகுதிப்பாடு தெற்றெனப் புலப்படும். “உலகத்திலேயே தமிழ் ஒப்பற்ற மொழி. தமிழைப்போல சிறப்பு வாய்ந்த பல மொழிகள் செத்தொழிந்துவிட்டன. தமிழ் ஒரு வாழும் மொழி. செம்மொழிக்குரிய எல்லாத் தகைமைகளும் உள்ள மொழி என பரிதிமாற்று கலைஞர் குறிப்பிடுகின்றார்.
தொன்மையான மொழி

முதலாவது செம்மொழித் தகுதியைப் பெறுவதற்கு ஒரு மொழி தொன்மையான மொழியாக இருக்க வேண்டும். தமிழ் தொன்மையான உலக மொழிகளில் ஒன்று. தற்காலத்தைய ஏனைய இந்திய மொழிகளைவிட தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடியதான மிகத்தொன்மையான நூலாகிய தொல்காப்பியத்தின் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இதைப் பழங்கால கல்வெட்டுப் பொறிப்புகளும் உதிசெய்கின்றன. தொன்மையான தமிழ் மொழியின் மாபெரும் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் கி. மு. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் எழுந்த முதல் சமயம்சாரா பெரும் கவிதை இலக்கியமாக இச்சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. வடமொழியில் காளிதாசரின் இலக்கியங்கள் தோன்றுவதற்கு இருநூறு வருடங்களுக்கு முன்பே சங்க இலக்கியங்கள் தோற்றம்பெற்றுவிட்டன.

ஏறத்தாழ 1900 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குலகில் டிராஜன் என்பவனது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரிப் பேரரசு உச்சநிலை அடைந்திருந்தபோது – கிழக்கில் பசிபிக் சமுத்திரத்திலிருந்து காஸ்பியன் கடல்வரை – அட்லாஸ் மலைகளிலிருந்து இமாலயத் தொடர் வரை சீனப்பேரரசு எழுந்து சிறந்தபோது, தமிழில் ஆழ்ந்த கருத்தமைந்த அழகான கவிதைகள் சிறந்த – உயர்ந்த இலக்கியத் தகுதிகளோடு பாடப்பட்டுள்ளன. தமிழில் எழுத்து வடிவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. வடமொழிக் கல்வெட்டுக்களைவிட தமிழ் மொழிக் கல்வெட்டுக்கள் மிகப்பழமையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் எழுத்து வடிவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கிரேக்க – உரோமானிய இலக்கியத்தின் இதிகாச காலம், சீனத்தின் உன்னத நேரம், போலவே சங்க காலம் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்படுகின்றது. "500 கோடி ஆண்டுகளுக்கு முன் கதிரவனிலிருந்து சுழன்று சிதறிய கனல் பிழம்பு, நீள்வட்டப்பாதையில் சுழன்று, சுழற்சி விசையினால் குளிர்ந்து இறுகி உருண்டு, திரண்டு உலகமானது. குளிர்ந்த பூமியின் நடுப்பகுதி உயிர்வாழத் தகுதிபெறும். இலெமூரியா எனப்படும் குமரிக்கண்டம். அங்கு முதலில் தோன்றிய பூமி இலெமூரியா. அதில் முதல் மனிதன் தமிழன். உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் என தமிழின் தொன்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்.

வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் ஃகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூல மொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். சிந்துவெளி அகழ்வாய்வின் தந்தை எனப்படும் ஹீராஸ் பாதிரியார்,"ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட ஒரே மொழி தமிழ். ஏன் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழ் பேசப்பட்டு வந்தது எனக் குறிப்பிடுகின்றார்.

தமிழும் தமிழரும் மூத்த குடிகள் என்பதற்கு புவியியல் வல்லுநர்கள் தரும் வரலாற்று ஆதாரங்கள் உண்டு. மரபணு ஆராய்ச்சிகள் போன்ற விஞ்ஞானபூர்வ ஆய்வுகளினாலும் இந்த உண்மையை நிரூபிக்கலாம்.
தற்சார்பு மரபைக்கொண்ட மொழி

இரண்டாவது, ஒரு மொழி செம்மொழித் தகுதியைப் பெறுவதற்கு வேறு மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் தற்சார்புரிமையுடைய மரபைக்கொண்ட மொழியாக இருக்க வேண்டும், இத்தகுதிப்பாடு தமிழ் மொழிக்கு முற்றிலும் பொருந்தும். தமிழ் மொழி வேறு மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் தனித்துவமான மரபைக்கொண்ட தற்சார்பு மரபைக்கொண்ட மொழியாக விளங்குகிறது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி மட்டும்தான் வடமொழியினின்று பெறப்படாத இந்தியச் சூழமைவில் தோன்றிய இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

தென்னிந்தியாவில் வடமொழியின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் தோன்றிவிட்டன. அதேபோன்று வடமொழியைவிட, வேறு எந்தவொரு இந்திய மொழிகளையும்விட தரத்தில் சிறப்பான இலக்கியங்களாக தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. தமிழ் மொழி தனக்கே உரித்தான இலக்கியக் கோட்பாட்டையும், இலக்கண மரபையும், அழகியலையும், அனைத்திற்கும் மேலாக தனித்துவமான, பெருந்தொகையான இலக்கியங்களையும் கொண்டுள்ளது. வடமொழியில் இருந்தும் ஏனைய இந்திய மொழிகளிலிருந்தும் வேறுபட்டதான, இந்திய உணர்வை வெளிப்படுத்துபவையாக தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. தமிழ் மொழியானது மிகவும் வளமான, பரந்துபட்ட அறிவுசார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

திராவிட மொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம்.பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தமது அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், எபிரேயம், சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச்சொற்களைக் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.

மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்தபண்பாட்டு வணிகத் தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதராரங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர். எனவே செம்மொழித் தமிழின் சிறப்பும் உலக மக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும்.

திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை வடமொழிச் சொற்களை விரும்பி ஏற்றுக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

மலையாளச் சொல்லகராதியை உருவாக்கிய கரானந்த் குஞ்சன் பிள்ளையே இக்கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அருகிலிருக்கிற மற்ற மொழிகள் வடமொழிச் சொற்களை விரும்பி ஏற்றுகொண்டிருக்கிறபோது, தமிழ் மாத்திரம் வடமொழிச் சொற்களை மாத்திரமல்லாது பிறமொழிச் சொற்களைக்கூட ஏற்காமலேயே தனது தனித்தன்மையோடு விளங்குவதைக் காண்கிறோம். தமிழ் மூத்த மொழி – மாற்றம் வளர்ச்சி இவற்றிற்கான கூறுகளைத் தன்னகத்தே இயல்பாகக்கொண்ட தனிமொழி என்பதாலேயே இவ்வாறு மிளிர முடிந்தது.

“பேச்சு வழக்கிலே பிரதேசத்திற்குப் பிரதேசம் ஒலி வேறுபாடுகளோடும், சில மாற்றங்களோடும், தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டிருந்தாலும், எழுத்து மொழியைப் பொறுத்தவரையில் செந்தமிழ் மொழியாகவே முற்காலத்தில் விளங்கியது. வேற்றுமொழிக் கலப்பில்லாமல் செம்மொழியாக விளங்கிய தமிழ் மொழியை எல்லா மொழிகளையும்விட சிறந்த உயர் தனிச் செம்மொழி என உலகம் போற்றயது என தமிழறிஞர் அகளங்கன் குறிப்பிடுகின்றார்.

பின்னைய காலங்களில் தமிழில் அந்நிய மொழிக் கலப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராகத் தனித்தமிழ் இயக்கங்கள் போன்ற குழுக்கள் தோன்றி தமிழ் மொழியின் தூய்மைக்காக உழைத்தன. தமிழ் மொழியில் முதலில் ஆரிய மொழிக் கலப்பு ஏற்பட்டது. அதனால் பல அரிய சொற்கள் வழக்கிழந்து போயின. உருது, அரபு, போர்த்துக்கல், ஒல்லாந்து, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல்வேறு மொழிகளும் பல்வேறு காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மொழியில் கலந்து தமிழ் மொழியின் தூய்மையைக் கெடுத்துவிட்டன. நல்ல பல தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்துபோக அர்த்தமற்ற சொற்கள் அவ்விடங்களைப் பிடித்துக்கொண்டன. "தமிழ் மொழியால் தனித்தியங்க முடியாது" என்றும் "மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்றும் பலர் கூறியவேளையில் மறைமலை அடிகளார், பருதிமால் கலைஞர், வி.க. தேவநாயப் பாவாணர் போன்ற பலர்தமிழ் மொழி பிறமொழிக் கலப்பில்லாமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டது என நிறுவினர்.
ஏராளமான, வளமான இலக்கியங்களைக் கொண்ட மொழி

மூன்றாவது ஒரு மொழி செம்மொழித்தகுதியைப் பெறுவதற்கு அம்மொழி ஏராளமான, உச்ச அளவு வளம் பொருந்திய பண்டைய இலக்கியங்களைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களின் தரம் அல்லது பண்பு நலமானது. பெரும் இலக்கியங்களான வடமொழி, கிரேக்க, இலத்தீன், சீன, பேர்சிய, அராபிய இலக்கியங்களுக்கு நிகரான இடத்தில் தமிழை வைக்கின்றது. தமிழிலக்கியங்களின் நுணுக்கம், ஆழம் அதன் பரந்த பரப்பெல்லை, உலகளாவிய தன்மை போன்றவை உலகின் உயர்ந்த செழுமைமிக்க செவ்வியல் இலக்கியங்களின் வரிசையில் தமிழை நிமிர்ந்து நிற்கச் செய்கின்றன.

இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகள் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ் மண் வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.

சங்கச் செய்யுள் மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமை பெற்ற வெளிப்பாடாகத் திகழ்கிறது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் பிடியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில் சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும் எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகின்றார்.

அகம்,புறம் என் இலக்கியத்தின் கூறுகளைக் காட்டி, களவியல், கற்பியல் என்ற பிரிவுகளையும் நிலைநாட்டி நிற்பது தமிழ் இலக்கியம்.

உலகம் அளாவிய பொதுமைக் கருத்துக்களையும் தமிழ் இலக்கியம் தன்னுள் கொண்டுள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர் , "தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கணியன் புங்குன்றனாரின் புறநானூறு அடிகளும், "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் திருமந்திர வாக்கும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருநாவுக்கரசாரின் பக்தி இலக்கியக் கூற்றும், "சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஒளவைப் பிராட்டியின் வாக்கும், "உலகமெலாம் என்று பெரியபுராணத்தின் முதல், நடு, முடிவு ஆகிய இடங்களில் பாடிய சேக்கிளாரின் வார்த்தையும் இன்னும் பலவும் தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட உலக மனப்பான்மையின் வெளிப்பாடுகளாக உள்ளன.

தமிழில் எழுதப்பட்டும் "தமிழ் என் கூட எங்குமே பேசாமல் மனித குலத்திற்கே பெருவிளக்காக எழுந்து வழிகாட்டும் ஒப்பற்ற நூலாக திருக்குறள் விளங்குகிறது. ஒழுக்கவியல் மற்றும் நன்னெறிக்கோட்பாடு பற்றி எழுந்த பெரும் உலக இலக்கியங்களில் ஒன்றாக திருக்குறள் விளங்குவதை அனைவரும் அறிவார்கள். மானிட வர்க்கத்தின் மாபெரும் தத்துவப்பேழை என்று திருக்குறல் உலகோரால் போற்றப்படுகின்றது. ஒரு மொழிக்கோ, ஓர் இனத்திற்கோ உரிய நூலாக இல்லாமல் உலகிற்கே வழிகாட்டும் ஒப்புயர்வற்ற பெரு நூலாக திருக்குறள் விளங்குகிறது. ஆனால் இது எண்ணற்ற பரந்துபட்ட பல இலக்கியங்களை உள்ளடக்கிய தமிழ் செவ்வியல் மரபின் ஒரு இலக்கியம் மட்டுமே.

தமிழ் உருக்க உணர்வைக் காட்டும் "இரக்கத்தின் மொழி என்று தனிநாயக அடிகளார் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் அடிப்படைக்கூறு உண்டு. அவ்வியல்பில் மாத்திரமே அது சிறந்தோங்கி – பொன்றாப் பொலிவுடன் நின்று நிலைபெறும். ஒரு மொழி கவிதைக்குப் பொருத்தமாக இருக்கும் மற்றொன்று கட்டளை பிறப்பிக்கவே பொருத்தமாக அமையும். அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே என் உள்ளத்தை உருக்குகின்ற உணர்ச்சிப் பாடல்களே தமிழில் மிக நன்றாக வடிவம்பெறும் என்பது தனிநாயக அடிகளார் கருத்து. இருந்தாலும், ஆற்றலை வெளிப்படுத்துகின்ற கலிங்கத்துப்பரணி, அன்புணர்வை வெளிப்படுத்துகின்ற தேவாரம், திருவாசகம், இரண்டுமே தமிழில் இடம்பெறக் காண்கிறோம். நகை, அழுகை, இளிவரல் மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமநிலை என்கிற ஒன்பான் சுவைகளும் ஒருங்கே பரவி நிற்கின்ற அழகினை தொட்ட இடமெல்லாம் தமிழில் தட்டுப்படக் காண்கிறோம்.

இன்னதுதான் இம்மொழியிலே சிறப்பாக வரும் என்கிற பொது விதிக்கு மாறாகத் தமிழில் எந்த உணர்வினையும் வெளிக்காட்ட இயல்வதைக் காண்கிறோம்.

"தற்கால இந்திய மொழிகள் அனைத்தையும்விட தமிழே செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டு விளங்குகிறது. தமிழ் மொழி இலத்தீன் மொழியைப்போல பழமையானது. அதேவேளை அரேபிய மொழியைவிடப் பழமையானது. தமிழ் வேறு மொழி மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் தற்சார்புரிமையுடைய மரபைக்கொண்ட மொழியாக இருக்கின்றது. விவரித்துக்கூறமுடியாத பரந்த, வளமான தொன்மை இலக்கியங்களைக் கொண்டதாக உள்ளது என பன்மொழி அறிஞர் பேராசிரியர் ஜோர்ச் எல். ஹாட் குறிப்பிடுகின்றார்.
காலங்கடந்த செம்மொழி அங்கீகாரம்

தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கவேண்டுமென தமிழக அரசும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன. இந்தக் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி அன்றைய இந்தியாவின் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்தொடரில் தமிழைச் செம்மொழி என்று அறிவித்தார். 12.10.2004 இல் இந்திய அரசு தமிழ் செம்மொழி என்ற அறிவிக்கையை எழுத்து மூலமாக அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

தமிழ் உயர் தனிச் செம்மொழி என்பதை மொழியியல் அறிஞர் ரொபர்ட் கால்டுவெல், "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல்வழியே 1856ஆம் ஆண்டு உலகிற்குத் தெரிவித்து சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

அறிஞர் பெருமக்களும் மொழி வல்லுனர்களும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே தமிழ் செம்மொழி என்ற கருத்தினைத் தளராது வலியுறுத்திக் கூறிவந்துள்ளனராயினும் கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் தான் அது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை நாம் நோக்க வேண்டும்.

செம்மொழிக்கான தகுதிப்பாடுகளைக் கொண்ட தமிழ் மொழியை ஏன் இப்போதுதான் இந்திய மத்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்திருக்கின்றமைக்கு முக்கியமாக அரசியல் ரீதியான காரணங்களே அன்றி வேறில்லை எனக்கொள்ளலாம். தமிழை செம்மொழியாக அறிவித்தால் ஏனைய இந்திய மொழிகளும் செம்மொழி அந்தஸ்துக்கான கோரிக்கையை விடுக்கலாம் என்ற பயமே இந்தக் கால தாமதத்திற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்தபோது இன்னுமொரு பிரச்சினையையும் மத்திய அரசு ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது செம்மொழியின் தொன்மைக்கு நிர்ணயம் செய்திருக்கிற கால அளவு என்பது ஆயிரம் ஆண்டுகள்தான். இதுதான் அந்தப் பிரச்சினை. அதாவது வடமொழிபோல அல்லாமல் தமிழ் சற்றே தாழ்வாக வைக்கப்பட்டே செம்மொழி அங்கீகாரமும் வந்துள்ளதாகவேபடுகிறது. அதனால்தான் தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள மொழியினரும் தங்கள் மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து தரப்படவேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினர்.
அதாவது

இந்தியாவின் தொன்மையான மொழி வடமொழிதான். போனால் போகட்டும் என்று தமிழையும் ஏற்கிறோம் என்ற வகையில் தமிழ் மொழிக்கான செம்மொழி அந்தஸ்து அறிவிப்பு வெளியிடப்பட்டதை நோக்கும்போது, தென்னிந்திய மொழிக்காரர்கள் தங்களுக்குள் ஒரு முரண்பாட்டை வளர்த்துக்கொள்ளட்டுமே என்ற உள்நோக்கத்துடனேயே இந்த ஆயிரம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
தமிழர்கள் தம் தாய்மொழி செம்மொழி என் அங்கீகரிக்கப்பட்டது கண்டு அகமகிழ்வதா அல்லது இன்னும் பலரும் தங்கள் மொழிக்கும் இதே அந்தஸ்து வேண்டும் என்று போட்டி போடுவதால் தமிழின் தனிப்பெருமைக்குக் பங்கம் ஏற்படப்போவதை நினைந்து வருந்துவதா என்று தெரியவில்லை.

ஆய்வாளர் பெருந்தகை அருட்திரு தமிழ்நேசன் அடிகள்

Keine Kommentare:

Kommentar veröffentlichen