Main Pages Kathiravan.com

Samstag, 12. März 2011

தவிப்பில் தமிழினம்: "குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும்"


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கும் "குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும்".......................?
த.தே.கூட்டமைப்பு தப்பிப் பிழைக்குமா
"......................இப்போது தமிழ்த்

தேசியக் கூட்டமைப்பு வெளியே பலமானதொரு கட்சியாக இருந்தாலும் விரைவில் உடைந்து போகக் கூடியளவுக்கு உழுத்துப் போயுள்ளது என்ற உண்மை இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் தரக்கூடிய செய்தியாகவே இருந்தது.

ஆனாலும் இத்தகைய மோதல்களையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் கவலைப்பட்டதாகவோ அல்லது அதுப ற்றிக் கண்டு கொண்டதாகவோ தெரியவில்லை. முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது. தமிழ் மக்களின் சார்பில் வலுவானதொரு அரசியல் சக்தியாக அவர்களின் குரலை ஒலிக்கச் செய்யும் ஒரு ஊடகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கும் குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும் அமைந்துள்ளன. இது தமிழ்மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது..................."


இனி,

வடக்கில் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள முக்கிய தலைவர்கள் ஒன்றாக இருக்கும்போது சிரித்தபடி இருந்தாலும் யாருடைய காலை எப்போது வாரிவிடலாம் என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். இதை அண்மைய சில சம்பவங்களின் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடங்கப்பட்ட காலம் தொடக்கம் அதற்குள் புகைச்சல்கள் இருந்தே வந்தன. ஆனால் அப்போதெல்லாம் அத்தகைய புகைச்சல்கள் வெளியே தெரிவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் புலிகளே இயக்கியதால் முக்கிய தலைவர்கள் கூட, இப்படியான பிரச்சினைகளைச் சமாளித்து நடந்து கொண்டனர். அல்லது அத்தகைய சில பிரச்சனைகளைப் புலிகள் தலையிட்டுத் தீர்த்து வைத்தனர்.

இப்போது புலிகள் இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மோதல்கள் வலுக்கத் தொடங்கி விட்டன.

யார் பெரியவர் என்ற பிரச்சினை உருவெடுத்து விட்டது.
அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுகவீனம் காரணமாக – சத்திரசிகிச்சை செய்து கொண்டு இந்தியாவில் தங்கி விட்ட பின்னர், நிலைமைகள் இன்னும் மோசமடைந்து விட்டன என்பதே உண்மை.

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் ஒரு முனைப்பாக பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் வகையில் ஆனந்தசங்கரியையும், சித்தார்த்தனையும் இணைத்துக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதைவிட ஈபிஆர்எல்எவ்வை சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.

இதன் காரணமாக ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும் மட்டுமே கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் நிலை உருவானது. வேறு கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இப்போது உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாகவே போட்டியிட்டாலும் கட்சி ரீதியாகப் பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும், முரண்பாடுகள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டதே இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம்.

அண்மையில் பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய பொ. ஐங்கரநேசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது உரை தமிழரசுக் கட்சியைச் சாடும் வகையில் அமைந்திருந்தது.

இந்த விவகாரத்தைப் பயன்பத்திக் கொண்டு தமிழரசுக் கட்சி தாக்குதலில் இறங்கி விட்டது.

ஐங்கரநேசன் சுரேஸ் பிறேமச்சந்திரனால் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிவாஜிலிங்கத்தின் கட்சியை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு திடீர் மாற்றமாக சிவாஜிலிங்கம் வல்வை நகராட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

அது மாவை சேனாதிராசாவும், வல்வெட்டித்துறை நகரசபை வேட்பாளரான குலநாயகமும் மேற்கொண்ட முடிவு.

இந்த இணக்கப்பாடு சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும், செல்வம் அடைக்கலநாதனுக்கும் பிடிக்கவில்லை.

அவர்கள் தமிழரசுக் கட்சியின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி தருணம் பார்த்துக் காத்திருந்தது.

இந்தநிலையில் ஐங்கரநேசன் வாயைக் கிளற அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

கூட்மைப்பைத் தனியான அரசியல் கட்சியாக இயங்க அனுமதிக்க மாட்டோம் என்றும்,தனியான அலுவலகம் திறக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தீர்மானம் பல மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஒற்றுமை கருதி அதை வெளியிடவில்லை என்றும் கூறினர்.

அது மட்டுமன்றி கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதும் ஈபிஆர்எல்எவ் அதற்கு இணக்க கடிதம் சமர்ப்பிக்கவில்லை என்றும் பதிலடி கொடுத்தார் சி.வி.கே.சிவஞானம்.

இதையடுத்து இந்தக் குற்றசாட்டுகளை நிராகரித்து சுரேஸ் பிறேமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியே பலமானதொரு கட்சியாக இருந்தாலும் விரைவில் உடைந்து போகக் கூடியளவுக்கு உழுத்துப் போயுள்ளது என்ற உண்மை இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் தரக்கூடிய செய்தியாகவே இருந்தது. ஆனாலும் இத்தகைய மோதல்களையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் கவலைப்பட்டதாகவோ அல்லது அதுப ற்றிக் கண்டு கொண்டதாகவோ தெரியவில்லை. முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது. தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள் உள்ளதென்றால் அதை முக்கியத்துவப்படுத்துவது ஆச்சரியம் இல்லை என்பது அவர்களின் வாதமாக உள்ளது. ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதலே தலைதூக்குவதாகத் தெரிகிறது.

குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இந்த மோதல்கள் தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக மாகாணசபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்ற வெளியே உள்ள சிலரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனால் அதற்குள் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்கு இடையிலும் மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிக்கான இழுபறிகள் தொடங்கி விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக நிற்கும் கனவுடன் பலரும் இருப்பதால் தான் இந்த மோதல்கள் மேலும் வலுப்படக் கூடும். தமிழ் மக்களின் சார்பில் வலுவானதொரு அரசியல் சக்தியாக அவர்களின் குரலை ஒலிக்கச் செய்யும் ஒரு ஊடகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கும் குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும் அமைந்துள்ளன.

இது தமிழ்மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் இயக்கம் தமிழ் மக்களின் சார்பில் செயற்படும் அவர்களின் சார்பில் பேசக் கூடியதொரு அமைப்பாக நிலைக்க வேண்டும். அந்தத் தகைமையை அது உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் நிரூபிக்க வேண்டியுள்ளது. இப்படியான கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்கள், கீழ்நிலைத் தலைவர்களை முன்வைத்து மோதிக் கொள்வது அநாகரிகமானது. இந்த மோதல்களுக்கு முடிவு கட்டி உட்பூசல்களை நிறுத்திக் கொள்ள முன்வராது போனால் தமிழ்மக்கள் மாற்று வழிகளில் புதிய அரசியல் தலைமைகளை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதைப் புரிந்து கொண்டு பொறுப்பை உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் நடந்து கொள்வதே புத்திசாலித்தனமானது.

வெறுமனே கூட்டமேடைகளிலும், ஒளிப்படங்களிலும் சிரித்துக் கொண்டு நிற்பதை விட்டு, ஒன்றுபட்டு நிற்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு அவசியத் தேவை. அதை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் தமிழ்மக்களிடம் முற்றாக உடைந்து போகவில்லை. அது முற்றாக உடைந்து போகும் நிலையை உருவாக்குவதோ அல்லது தவிர்ப்பதோ தமிழ் மக்களின் கையில் இல்லை. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வெளிப்படுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும்இ தலைமைகளுக்குமே உள்ளது.


கட்டுரையாளர் சத்திரியன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen