
யாருக்காக, யார் போராட்டம் நடத்துவதென்பதல்ல பிரச்சினை.
தென்னிலங்கையில் வலுவிழந்து போயுள்ள ஜேவிபி இப்போது தமிழ்மக்களின் முதுகில் சவாரி செய்யத் தொடங்கியுள்ளது புதுக்கதை. முன்னர் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் பெயரால் மேற்கொண்ட ஜேவிபி இன்று காணாமற்போனதடுப்புக்காவலில் உள்ள தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. யாருக்காக, யார் போராட்டம் நடத்துவதென்பதல்ல பிரச்சினை.
அந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்கு கையாளப்பட்ட வழிமுறைகள் தான் சர்ச்சைக்குரியவை. இப்போதும் வடக்கில் இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. முன்னர் இராணுவ நிர்வாகத்தில் யாழ்ப்பாண மக்கள் நெருக்கடிகளை துன்பங்களைச் சந்தித்த போதெல்லாம் ஜேவிபியினருக்கு இது தெரியவேயில்லை.
ஆனால் அதே இராணுவ நிர்வாகத்தினால் தாம் வஞ்சிக்கப்படும் போது மட்டும் அவர்களுக்கு வலிக்கிறது. எது எப்படியோ ஜேவிபி போன்ற தென்னிலங்கை அரசியல் சக்திகள் இப்போதாவது வடக்கில் ஜனநாயக சூழல் இல்லை இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று சொல்ல முன்வந்திருக்கின்றனவே அதுபோதும்.
இனி
குறைந்தபட்ச ஜனநாயக சூழல் கூட இல்லாத நிலையில் யாழ்ப்பாணம்
குறைந்தபட்ச ஜனநாயக சூழல் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களாகியுள்ள நிலையிலும் ஜனநாயக சூழல் என்பது யாழ்ப்பாணத்தில் எட்டாக்கனியாகவே உள்ளது.
இது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் அவ்வப்போது வந்து போகிறவர்களுக்கு மறைமுகமாக இருந்து வரும் அழுத்தங்கள் வெளியே தெரிவதில்லை. இராணுவ நிர்வாகத்தின் அழுத்தமான பிடியில் இருந்து யாழ்ப்பாணம் இன்னமும் விலக முடியாத நிலையில் தான் இருக்கிறது. இது தான் உண்மையான நிலை.
ஒட்டுமொத்தமாகவே, இலங்கையில் ஜனநாயகம் இல்லை சர்வாதிகாரமே கோலோச்சுகிறது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் குறைந்தபட்சமான ஜனநாயகம் கூட கிடையாது என்பதையும், ஜனநாயக ரீதியாக அங்குள்ள மக்கள் எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பதையும் இப்போது தான் பலராலும் புரிந்து கொள்ள முடிகிறது.
கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியின் ஒரு அங்கமான ""நாம் இலங்கையர்"" என்ற அமைப்பு ஒரு போராட்டத்தை நடத்தியது.
காணாமற்போனவர்களின் நிலையை கண்டறிந்து வெளிப்படுத்தக் கோரியும் சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும், அவர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்று கோரியும் யாழ்.பஸ் நிலையம் முன்பாக அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஜேவிபி எம்.பியான சுனில் ஹந்துநெற்றி கந்தர்மடத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதன் பின்னர் மறுநாள் யாழ். பஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கற்கள், முட்டைகள், தக்காளிப் பழங்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. இவையெல்லாமே பொலிசாரினதும் படையினரினதும் கண் முன்னாலேயே நடந்தன.
"நாம் இலங்கையர்" அமைப்பு ஏற்கனவே கோட்டே ரயில் நிலையம் முன்பாகவும் இதுபோன்ற போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. தென்னிலங்கையில் வலுவிழந்து போயுள்ள ஜேவிபி இப்போது தமிழ்மக்களின் முதுகில் சவாரி செய்யத் தொடங்கியுள்ளது புதுக்கதை. முன்னர் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் பெயரால் மேற்கொண்ட ஜேவிபி இன்று காணாமற்போனதடுப்புக்காவலில் உள்ள தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
யாருக்காக, யார் போராட்டம் நடத்துவதென்பதல்ல பிரச்சினை.
அந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்கு கையாளப்பட்ட வழிமுறைகள் தான் சர்ச்சைக்குரியவை.
ஜனநாயகம் என்பது அனைவருக்கும் பொதுமையானது.
அது ஆளும்கட்சிக்கு ஒன்றாகவும், எதிர்க்கட்சிக்கு இன்னொன்றாகவும் இருக்க முடியாது.
தெற்கில் அதன் பொருள் ஒன்றாகவும் வடக்கில் வெறொன்றாகவும் இருக்க முடியாது.
தமிழருக்கும் சிங்களவருக்கும் தனித்தனியானதாக இருக்க முடியாது.
அரசாங்கம் சொல்கிறது இப்போது தேவேந்திர முனை தொடக்கம் பருத்தித்துறை முனை வரைக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் தான் என்று. ஆனால் உண்மையில் இப்போதுள்ள ஜனநாயக சூழல் என்பது இடத்துக்கிடம் வேறுபட்டதாக, இனத்துக்கினம் வேறுபட்டதாக, கட்சிக்குக் கட்சி வேறுபட்டதாகவே இருக்கிறது. ஜேவிபியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் வடக்கில் இன்னமும் ஜனநாயகம் துளிர்விடக் கூட இல்லை என்பதும், மாற்று அரசியல் என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என்பதும் வெளிப்படையாகியுள்ளது. இப்போதும் வடக்கில் இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
முன்னர் இராணுவ நிர்வாகத்தில் யாழ்ப்பாண மக்கள் நெருக்கடிகளை துன்பங்களைச் சந்தித்த போதெல்லாம் ஜேவிபியினருக்கு இது தெரியவேயில்லை. ஆனால் அதே இராணுவ நிர்வாகத்தினால் தாம் வஞ்சிக்கப்படும் போது மட்டும் அவர்களுக்கு வலிக்கிறது. எது எப்படியோ ஜேவிபி போன்ற தென்னிலங்கை அரசியல் சக்திகள் இப்போதாவது வடக்கில் ஜனநாயக சூழல் இல்லை இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று சொல்ல முன்வந்திருக்கின்றனவே அதுபோதும்.
போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களாகின்ற போதும் வடக்கைத் தமது இறுக்கமான இராணுவக் கட்டப்பாட்டில் இருந்து விடுவிக்க அங்கு ஜனநாயக சூழலை உருவாக்க அரசாங்கம் மறுத்து வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு பிபிசி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தது அரசாங்கம்.
அதுமட்டுமல்ல நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிப்போரும் கண்காணிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவற்றின் அர்த்தம் என்ன?
சுதந்திரமான கருத்துக்கள் எதுவும் வடக்கில் இருந்து வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாகவே உள்ளது என்பதே அது.
மாற்றுக் கருத்துக்களும் போராட்டங்களும் தான் ஜனநாயக்கத்தின் அடிப்படை.
புலிகளின் காலத்தில் ஜனநாயகம் இல்லை மாற்றுக் கருத்தை வெளிப்படுத்த முடியாது நிலை என்றெல்லாம் முன்னர் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நின்றவர்கள் எல்லோரும் இப்போது மௌனமாக உள்ளனர். அதே ஜனநாயக மறுப்பு சூழலை வடக்கில் ஏற்றுக் கொண்டு அவர்களும் தலைகுனிந்து வாழப் பழகிக் கொண்டுள்ளனர். இல்லையேல் அவர்களின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தல் வந்து விடும். இது எந்தவகையிலான ஜனநாயகம் என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது.
ஜேவிபியினர் மட்டுமன்றி வடக்கில் யாரும் எதிர்ப்புப் போராட்டங்கள், பேரணிகளில் இறங்கக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகக் கவனமாகவே உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மனிதஉரிமைகள் தினத்தன்று நடத்தப்படவிருந்த பேரணி ஒன்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு நிறுத்த வைக்கப்பட்டது பலரும் அறிந்த ஒன்று தான்.
வடக்கில் இனி எந்த வகையிலான அரசியல் போராட்டமும் நடக்கக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு. அதற்காகவே தான் ஜேவிபியையும் அதேவழியில் அடக்கும் முயற்சிகள் நடந்துள்ளன.
இந்தநிலையில்,
சுனில் ஹந்துநெற்றி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யாழ்ப்பாண மக்கள் மீது பழியைப் போட்டது அரசாங்கம். ஆவேசம் கொண்ட யாழ்ப்பாண மக்கள் தாக்கியிருக்கலாம் என்று அங்குள்ள மக்களை வன்முறையாளராக அரசாங்கம் சித்திரிக்க முற்பட்டது தான் மிகமோசமான செயல். இப்படியான கருத்து இன வன்முறைகளைத் தூண்டி விடக் கூடிதென்பதைத் தெரிந்திருந்தும் கூட அரசாங்கம் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இவையெல்லாம் அரசாங்கம் வடக்கில் ஜனநாயக சூழல் திரும்புவதில் விரும்பம் கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.
மாற்றுக் கருத்தும், ஜனநாயகமும், அரசியல் போராட்டங்களும் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் தான் உள்ளன. இந்தநிலை நீடிக்கும் வரை வடக்கில் நிரந்தரமான அமைதி தோன்ற முடியாது. அரசாங்கம் நிரந்தர அமைதியையும் ஜனநாயக ஆட்சியையும் விரும்புவது உண்மையானால் முதலில் வடக்கின் மீது கவிந்துள்ள இராணுவ சூழலைத் தளர்த்த வேண்டும். அத்துடன் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், அரசியல் பிரசாரங்களைத் தடங்கலின்றி சுதந்திரமான முறையில் மேற்கொள்ள வழிசெய்ய வேண்டும். இதைச் செய்யாமல் எத்தனை தடவைகள் மாகாணசபைத் தேர்தலையோ உள்ளூராட்சித் தேர்தலையோ நடத்தினாலும் உண்மையான சிவில் நிர்வாகம் என்பது ஏற்படப் போவதில்லை.
கட்டுரையாளர் சத்திரியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen