Main Pages Kathiravan.com

Mittwoch, 24. November 2010

அச்சத்தில் சிறீலங்கா:மகிந்த ராஜபக்ஸவினால் பிரித்தானியாவுக்கு செல்ல முடியுமா?


பிரித்தானியச் சட்டத்தின் கீழ் மகிந்த ராஜபக்ஸவை கைது செய்வது ஒன்றும் இலகுவான விடயமாக இருக்காது.

தமிழர் பேரவையின் எச்சரிக்கையை இலங்கை அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும் கருத முடியவில்லை. ஏனென்றால் தம் மீது எத்தகைய போர்க்குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று பிரித்தானியாவிடம் இலங்கை அரசு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது அச்சத்தின் விளைவாக எழுப்பட்ட கேள்வி தான். இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை லண்டனில் வைத்து கைது செய்வதானால் அதற்கு முந்திய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். அத்தகைய முயற்சிகள் இன்னமும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் அதுவும் இதுவரை நடக்கவில்லை. பிரித்தானிய தமிழர் பேரவையின் இந்த மிரட்டல் வெளியான போது அதையிட்டுப் பலரும் கண்டு கொள்ளவில்லை.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ லண்டனுக்கான பயணத்தைக் கைவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான போது தான் இதன் தீவிரத்தைப் பலரும் புரிந்து கொண்டனர். மனிதஉரிமைச் சட்டங்களின் படி பிரித்தானிய மஜிஸ்ரேட் நீதிமன்றம் ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் பிடியாணையைப் பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அளவுக்கு வலுவான ஆதாரங்களுடன் அந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட வேண்டியது முக்கியம்.

[போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கொள்கையில், ஈழம் வெல்லும்வரை எம் பேனா முணை உண்மையயே எழுதும்] "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்"


இனி,

சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்றது பிரித்தானியா.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிரித்தானியாவின் ஆதிக்கம் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தான் பிரித்தானியாவின் காலனி ஆதிக்கம் மெல்ல மெல்ல உடைந்து போகத் தொடங்கியது.

பிரித்தானியா பல நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள் இன்னமும் அங்கு நடைமுறையில் இருக்கின்றன. அதைவிட பிரித்தானியா எழுதப்படாத அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ள ஒரு நாடு. மரபுகள் தான் அதன் அடிப்படையாக உள்ளன. எனவே காலனித்துவ காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களை பிரித்தானியா இப்போதும் பின்பற்றுவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல.

உலகின் எப்பாகத்திலும் ஒருவர் படுகொலை அல்லது ஏதுதேனும் மனிதஉரிமை மீறலை புரிந்திருந்தால் அவருக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடுத்து விசாரணை நடத்தும் வசதிகள் இருந்தன. இதற்குக் காரணம் பிரித்தானிய அரசின் ஆதிக்கம் உலகம் முழுவதிலும் விரிந்து கிடந்தது. இதனைக் கருத்தில் கொண்ட உருவாக்கப்பட்ட சட்டம் தான் இப்போது இலங்கை அரசுக்கு நெருடிக்கடியாக மாறியுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரித்தானியாவுக்கான பயணத்தை பிற்போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதை அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னதாகவே சர்வதேச ஊடகங்களில் கதை வேறு விதமாக வந்து விட்டது.

ஒக்ஸ்போட் யூனியனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த மாத இறுதியில் உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் லண்டனுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளவிருந்தார். இந்தக் கட்டத்தில் தான் இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடுக்கப் போவதாக தமிழர் பேரவை அறிவித்தது. பிரித்தானிய தமிழர் பேரவையின் இந்த மிரட்டல் வெளியான போது அதையிட்டுப் பலரும் கண்டு கொள்ளவில்லை.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ லண்டனுக்கான பயணத்தைக் கைவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான போது தான் இதன் தீவிரத்தைப் பலரும் புரிந்து கொண்டனர்.

மனிதஉரிமைச் சட்டங்களின் படி பிரித்தானிய மஜிஸ்ரேட் நீதிமன்றம் ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் பிடியாணையைப் பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அளவுக்கு வலுவான ஆதாரங்களுடன் அந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட வேண்டியது முக்கியம்.

சிலியின் சர்வாதியாக இருந்த அகஸ்ரோ பினோசே 1998ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக பிரித்தானியா சென்றிருந்த போது அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார். சிலியில் ஸ்பானியர்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்காகவே அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அச்சத்தில் தான் மகிந்த ராஜபக்ஸ லண்டன் செல்லவில்லை என்றும் கூட கதைகள் அடிபட்டன. சிலியின் சர்வாதிகாரி பினோசே லண்டனில் கைது செய்யப்பட்டிருந்தாலும் பிரித்தானிய நீதிமன்றத்தின் பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்படவில்லை. ஸ்பானிய நீதிமன்றம் ஒன்றின் உத்தரவின் பேரில் அந்தப் பிடியாணையைப் பிறப்பித்திருந்தது இன்ரபோல். இன்ரபோல் பிடியாணையின் அடிப்படையில் தான் அவர் பிடிக்கப்பட்டார். சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் அவர் பிரித்தானிய நீதிமன்றங்களுடன் போராடி மீளவும் சிலி திரும்பினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விவகாரத்தையும் சிலியின் பினோசே விவகாரத்தையும் ஒரே விதமாகப் பார்க்க முடியாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் வழக்கே தொடுக்கப்படவில்லை என்பது முக்கியமான விடயம். அதேவேளை பலஸ்தீனர்கள் பிரித்தானியாவில் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக விடுத்த மிரட்டல்களால் இஸ்ரேலியப் பிரதமர், அமைச்சர்கள் லண்டனுக்கான பயணங்களை மேற்கொள்ள அச்சத்துடன் இருக்கின்றனர். சிலர் விமான நிலையத்திலேயே திரும்பியும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை லண்டனில் வைத்து கைது செய்வதானால் அதற்கு முந்திய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். அத்தகைய முயற்சிகள் இன்னமும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் அதுவும் இதுவரை நடக்கவில்லை. இந்தநிலையில், இந்த மாதம் லண்டன் செல்வதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கைவிட்டதற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. பிரித்தானியச் சட்டத்தின் கீழ் மகிந்த ராஜபக்ஸவை கைது செய்வது ஒன்றும் இலகுவான விடயமாக இருக்காது.

சிலியின் சர்வாதிகாரி பிடிபட்ட போது அவர் ஆட்சியில் இருக்கவில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருக்கிறார். ஆட்சியில் இருக்கின்ற ஒருவரைக் கைது செய்வதற்கு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தால் அதனால் நெருக்கடிகளைச் சந்திக்கப் போவது பிரித்தானிய அரசும் கூட. இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்காக குரல் கொடுக்கின்ற நிலையில் பல வல்லமை வாய்ந்த கூட்டாளி நாடுகள் அதற்கு இருக்கின்றன.

இலங்கை அரசுக்கு எதிரான மனிதஉரிமை மீறல் குற்றசாட்டுகள் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தபோது அதை முறியடிப்பதில் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முன்னின்றதை எவரும் மறக்க முடியாது. இப்படியான நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவில் வைத்து போர்க்குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யும் நிலை உருவானால், அதை இந்த நாடுகள் சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை தமிழர் பேரவையின் எச்சரிக்கையை இலங்கை அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும் கருத முடியவில்லை. ஏனென்றால் தம் மீது எத்தகைய போர்க்குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று பிரித்தானியாவிடம் இலங்கை அரசு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது அச்சத்தின் விளைவாக எழுப்பட்ட கேள்வி தான்.

பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் எனக் கருதுகிறது. ஆனால் இலங்கையின் நிலைப்பாடோ அதற்கு எதிர்மாறானது. போர்க்குற்றங்கள் எதுவும் நடக்கவேயில்லை. நடந்திருந்தாலும் அதுபற்றி நாமே விசாரிப்போம். வெளியார் யாரும் தலையிட முடியாது தலையிடக் கூடாது என்பது அதன் நிலைப்பாடு. இந்தக் கட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் லண்டன் பயண விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாகியுள்ளது. இந்தமாதம் லண்டனுக்கான பயணத்தைத் தான் மகிந்த ராஜபக்ஸ நிறுத்தியுள்ளாரே தவிர அடுத்த மாதம் அவர் அங்கு செல்வார் என்கிறது அரசாங்கம். இந்தமாதம் அவர் தனது பயணத்தைப் பிற்போட்டுள்ளதற்கு, இரண்டாவது பதவியேற்பு விழா, வரவுசெலவுத்திட்டம்., இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை, பாகிஸ்தான் ஜனாதிபதியின் வருகை என்பன அவரது இந்த மாத இறுக்கமான நிகழ்ச்சி நிரல்கள் அவருக்கு வேலைப்பளு அதிகம் என அரசாங்கத்தால் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

எது எவ்வாறாயினும், லண்டனுக்கான பயணம் மகிந்த ராஜபக்ஸ இடைநிறுத்திய விவகாரம் சர்வதேச அளவில் முக்கியமாகி விட்டது. அடுத்த மாதம் மகிந்த ராஜபக்ஸ லண்டனுக்கான பயணத்தை மேற்கொள்ளும் வரைக்கும் அவரால் லண்டன் செல்ல முடியுமா என்ற கேள்வி இருக்கவே செய்யும்.

- கட்டுரையாளர் சுபத்ரா-

Keine Kommentare:

Kommentar veröffentlichen