.gif)
இந்தியாவின் நம்பகத் தன்மையை இலங்கை அரசு இழந்து விட்டதா?
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் திசைமாறிப் பயணமாவதாக ஒரு குற்றச்சாட்டு இந்தியாவில் இருந்து கிளம்பியுள்ளது.
இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது இந்தியாவின் மிகமுக்கியமான ஊடகமான “ஹிந்து“ நாளேடு. இந்தியாவில் “ஹிந்து“ நாளேட்டுக்கு ஒரு வலுவான அரசியல் பின்புலம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. புதுடெல்லி அதிகார வர்க்கம் வரை அதன் செல்வாக்கு வியாபித்திப்பது ஒன்றும் மறைபொருளல்ல. கடந்த காலங்களில் “ஹிந்து“ ஆசிரியர் என். ராமுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருந்த வந்தன. லக்ஸ்மன் கதிர்காமர் காலத்தில் உருவாக்கப்பட்ட அந்த உறவு சந்திரிகா, மகிந்த ராஜபக்ஸ வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வருடம் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை அரசாங்கம் வவுனியாவில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்த போது அரசுக்கு எதிராக பெரும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஊடகத்துறையினர் எவருமே முகாம்களுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை. அப்போது தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற பிரசாரத்தை முறியடிக்க இலங்கை அரசாங்கம் தெரிவு செய்தது ஹிந்து என்.ராமைத் தான்.
சென்னையில் இருந்து என்.ராம் விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தான் முதல்முதலாக முகாம்களுக்குள் சென்ற ஊடகவியலாளர். அதுமட்டுன்றி அவரது ஒவ்வொரு கொழும்பு வருகையின் போதும் மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதும் பேட்டி காண்பதும் வழக்கம். அந்தளவுக்கு இலங்கை அரசுக்கும் “ஹிந்து“ நாளேட்டுக்கும் இடையிலான நெருக்கம் மிகவும் இறுக்கமானது. இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையை இந்தியாவில் உருவாக்குவதற்காக “ஹிந்து“ நாளேடு எவ்வளவோ செய்தது. அது தமிழர்களைப் பாதிக்கும் என்று தெரிந்த போதும் இருவருக்கும் இடையிலான நட்புறவு அதை இரண்டாம் பட்சமாக்கியது தான் உண்மை.
ஆனால் கடந்தவாரம் “ஹிந்து“ எழுதியுள்ள ஒரு ஆசிரியர் தலைப்பில்.
இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வுப் பயணத்தில் திசை மாறத் தொடங்கி விட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் அது உடனடியாக அதிகாரப்பகிர்வு அரசியல் தீர்வில் இறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது இலங்கை அரசாங்கத்தின் போக்கில் “ஹிந்து“வும் இந்தியாவும் வெறுப்படைந்துள்ளதற்கான அறிகுறிகள் என்பதில் சந்தேகமில்லை.
கொமன்வெல்த் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. அவருக்கு புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் தனது இல்லத்திலேயே மதிய விருந்தளித்தார். சுற்றிவர தனது சகாக்களுடன் இருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அரசியல்தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மகிந்த ராஜபக்ஸவிடம் பேசியிருந்தார். இது தான் அரசியல் தீர்வுக்கு தக்க தருணம் என்றும் உடனடியாக அதற்கான முயற்சிகளை எடுக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.
ஆனால் இலங்கை அரசாங்கமோ இதைப் பெரிய விடயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை போலத் தெரிகிறது. ஏனென்றால் இந்தச் சந்திப்பின் போது அரசியல் தீர்வுபற்றி அழுத்தமாகக் கூறப்பட்டதாக இந்தியத் தரப்பு கூறியது. ஆனால் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசோ அப்படிப் பெரிதாக ஒன்றும் பேசவில்லை என்றார்.
அதாவது ஆழமாக எதைப் பற்றியும் பேசவில்லை- இனப்பிரச்சினைத் தீர்வு பற்றியும் மேலோட்டமாகவே பேசப்பட்டது என்று அவர் மழுப்பிக் கொண்டார். இந்தநிலையில் “ஹிந்து“ நாளேடு 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வை வலியுறுத்தியிருப்பதுடன் அந்த விடயத்தில் இலங்கை அக்கறை செலுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. இந்தியப் பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் கிட்டத்தட்ட இதே ஆலோசனையைத் தான் கூறியுள்ளனர். இன்னொரு பக்கத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் இனியாவது அதிகாரங்களைப் பகிர்ந்து அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவையெல்லாம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் இந்தியா அதீத அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளதற்கான அடையாளங்களாகவே பார்க்க முடிகிறது..
இது எந்தளவுக்கு செயல்வடிவம் பெறும் என்பது வேறு விடயம்.
ஆனால் இந்தியா இந்த விடயத்தில் சில அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பிக்கிறது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னொரு பக்கத்தில் வெளியாரிடம் இருந்து தீர்வு வரக் கூடாது என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இது இந்தியாவுக்கும் நன்றாகவே தெரியும். ஏற்கனவே இந்தியா அதுபற்றி சூசகமாகப் பலமுறை குறிப்பிட்டும் உள்ளது. இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றும் அதன் உள்விவகாரங்களில் தலையிட முடியாதென்றும் இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமது நாடு முற்றாகவே ஒதுங்கியிருக்காது என்பதையும் இந்தியா இப்போது வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இந்தியாவின் இந்தக் கருத்து மகிந்த ராஜபக்ச இந்தியாவின் போக்கைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவோ அல்லது இலங்கை அரசின் மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். இன்னொரு பக்கத்தில் இனப்பிரச்சனை தீர்வு நீண்டஇழுபறியாகத் தொடர்வதை இந்தியா விரும்பாது. ஏனென்றால் போரைக் காரணம் காட்டித் தான் சீனா இலங்கைக்குள் நுழைந்தது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இழுபறி நீடித்தால் அது இலங்கையில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் . அது தமது நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது.
இலங்கையில் ஏற்படக் கூடிய நிச்சயமற்ற நிலை இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தியா தன் நாட்டில் மட்டுமன்றி இலங்கையிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அதிக அக்கறை காண்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தங்கள் தொடர்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- கட்டுரையாளர் கபிலன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen