Main Pages Kathiravan.com

Sonntag, 24. Oktober 2010

பின்புலத்தில் இருக்கின்ற மர்மங்கள்?: தமிழ்மக்கள் வலுவான பலத்துடன் உள்ள யாழ்ப்பாணத்திலேயே இந்த நிலை என்றால்.......... ?


மீள்குடியமர்வு என்ற பெயரில் நடக்கிறது இந்த நாடகம்.
சிங்கள மக்களை வைத்து அரசாங்கம் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது என்பது தெளிவாகியுள்ளது. இந்த நாடகம் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் மட்டும் அமைந்தது அல்ல. யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்து முயற்சிக்கான ஒரு ஒத்திகையாகவே தெரிகிறது. அண்மைக்காலங்களில் ஜாதிக ஹெல உறுமய பல்வேறு பொய்யான புள்ளிவிபரங்களை நாடாளுமன்றத்தில் கூட வெளியிட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து 1983 இற்கு பிறகு 21,000 சிங்களவர்கள் வெளியெற்றப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார். இப்படிப் பொய்யும் புரட்டுமான வரலாறு ஒன்றை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களை குடியமர்த்த முனைக்கிறது அரசாங்கம். மீள்குடியமர்வு என்ற பெயரில் நடக்கிறது இந்த நாடகம். தமிழ்மக்கள் வலுவான பலத்துடன் உள்ள யாழ்ப்பாணத்திலேயே இந்த நிலை என்றால்- வன்னியிலும், கிழக்கிலும் நிலைமை எப்படியிருக்கும்?


யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் மீள்குடியமர்வு பின்புலத்தில் இருக்கின்ற மர்மங்கள் விலகுமா?

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமரவென வந்துள்ள சிங்கள மக்களால் புதியதொரு சிக்கல்நிலை உருவாகியுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் சுமார் 180 குடும்பங்களைச் சேர்ந்த 500 வரையிலான சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்து ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கினர். இரண்டொரு நாட்களில் மேலும் 500 பேர் வருவர் என்று கூறினர்- ஆனால் சுமார் 10 குடும்பங்கள் தான் வந்தன. இப்போது சுமார் 200 சிங்களக் குடும்பங்கள் வரை யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளன. 1980களில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய தம்மை மீளவும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

அனுராதபுர, மிகிந்தலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தசாப்தங்களைக் கழித்த இவர்கள் இப்போது திடீரென யாழ்ப்பாணம் வந்துள்ளனர். இது தமிழ் மக்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கச் செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாமோ என்ற அச்சம் தமிழ் மக்களிடையே தோன்றியுள்ளது.


யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள சிங்கள மக்களுக்குப் படைத்தரப்பின் ஒத்துழைப்பும் ஆதரவும் போதியளவில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களிடம், யாழ்ப்பாணத்தில் பிறந்ததாக கூறும் புத்தம் புதிய அடையாள அட்டைகளும் உள்ளன. இவையெல்லாம் இந்த விடயத்தில் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன. இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், மீளக்குடியமரவென வந்துள்ள சிங்களவர்கள் தாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்ற போதும்- அவர்கள் யாழ்ப்பாணத்தை நிரந்தர வாழ்விடமாகக் கொண்டவர்கள் இல்லை என்பது தான்.

யாழ்ப்பாணத்தில் தொழில் நிமித்தம் தற்காலிகமாக வாழ்ந்தவர்கள் தான் இவர்கள். இவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் வராததுமாக, யாழ். அரசஅதிபரிடம் போய் தாம் குடியிருக்க எங்காவது காணிகளை ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தார்கள். அதைவிட யாழ்.போதனா வைத்தியசாலைக்குப் போய் தமக்கு அங்கே வேலை தருமாறு கேட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்கின்ற வகையில் அமைந்துள்ள செயல்கள். யாழ்ப்பாணத்தை நிரந்தர வாழ்விடமாகக் கொண்டவர்களுக்கே காணிகள், வீடுகள் இல்லை. இந்தநிலையில் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிப்பது எப்படி? இதனால் தான் யாழ். மாவட்ட அரச அதிபர் இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்று கைவிரித்திருந்தார்.


ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை. அவர்களுக்கு ஆதரவாக தெற்கில் இருந்து
வலுவான குரல்கள் எழும்பத் தொடங்கின.


முதலில் ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அவர்களை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். பின்னர் ஜாதிக ஹெல உறுமயவும் தனது பாணியில் உறுமத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படாது போனால் போராட்டங்களை நடத்தப் போவதாக எச்சரித்தது ஜாதிக ஹெல உறுமய.
ஆக மொத்தத்தில்,

யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களின் மீள்குடியமர்வு என்பது ஒரு அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்பது வெளிப்படை.

போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட 17 மாதங்கள் கழித்து இந்தப் பிரச்சினை தோன்றியுள்ளது.

இதுவரை காலமும் ஒன்றும் பேசாமல் இருந்து வந்தவர்கள் இப்போது திடீரென ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணம் வந்திருப்பதும்- அவர்களுக்கு அரசாங்க பாதுகாப்புக் கிடைப்பதும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தில் முன்னர் தற்காலிகமாக வாழ்ந்தவர்கள் என்பதற்காக இவர்களுக்கு காணிகளை வழங்கி மீளக்குடியமர்த்த முடியுமா என்பது முதலாவது கேள்வி.

தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் வந்தவர்கள் மீளவும் தொழில்களைச் செய்ய வேண்டுமென்றால் சுயமான அத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கலாம்.

அது பிரச்சினையைத் தோற்றுவித்திருக்காது.

ஆனால் ஒன்று கூடிப் பேசி முடிவெடுத்து- வந்துள்ள இவர்களின் பின்னணி நிச்சயம் சந்தேகத்துக்குரியதொன்றாகவே பார்க்கப்படுகிறது. முன்னர் தற்காலிகமாக வசித்த தமக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்கக் காணி தேவை என்று இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை அதிகபட்சமானது.

முன்னர் தற்காலிகமாக வசித்த தமக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்கக் காணி தேவை என்று இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை அதிகபட்சமானது.

இவர்களுக்கு இதைக் கேட்கும் உரிமை உள்ளது என்றால்-
கொழும்பிலும் தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தற்காலிகமாக தொழில் நிமித்தம் வாழ்ந்த- வாழுகின்ற ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும் அதே உரிமை நிச்சயம் உள்ளது.


யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு காணிகளை ஒதுக்க அரசாங்கம் முடிவு செய்யுமானால்- அதேபோன்று கொழும்பிலும் தென்னிலங்கையிலும் வாழ்ந்து இடம்பெயர்ந்த- வாழுகின்ற தமிழர்களுக்கும் அதே வசதியை அரசாங்கம் செய்து கொடுக்குமா என்ற கேள்வியும் உள்ளது.


1958, 1977, 1983 இனக்கலவரங்களின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து துரத்தப்பட்டு வடக்கில் குடியேறிய ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் உள்ளன. இவர்களும் தெற்கில் மீளக்குடியமர காணி தேவை என்று கோரினால் அரசின் நிலை பரிதாபமாகி விடும். ஏனென்றால் வடக்கில் தற்காலிகமாக வாழ்ந்த சிங்களவர்களின் எண்ணிக்கையை விட தெற்கில் தற்காலிகமாக வாழ்ந்த தமிழர்கள் அதிகம்.


போர் நடைபெற்ற காலத்தில் வன்னியில் தற்காலிகமாக குடியேறியவர்களை அங்கு செல்ல விடாமல்- அவர்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை என்று அரசாங்கம் அனுப்பியுள்ளது. அத்துடன் அவர்கள் வன்னியில் இருந்தபோது வாங்கிய காணிகளின் உரிமம் செல்லுபடியாகாது என்கிறது.

தமிழருக்கான நியாயம் இப்படியிருக்க,
யாழ்ப்பாணத்தில் தற்காலிமாக வசித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தமக்கு காணி தர வேண்டும் என்று சிங்களவர்கள் கோருகின்ற அளவுக்கு நிலைமை மாறிப் போயுள்ளது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொணடிருக்கிறார்கள்.


அரசுக்குத் தாளம் போடும் அரசியல்வாதிகள் இரண்டு பக்கத்துக்கும் நல்லபிள்ளையாக நன்றாகவே நடிக்கிறார்கள். அரசாங்கமோ இந்த விடயத்தில் வெளியே தெரியாமல் பலவற்றை செய்து கொண்டிருக்கிறது.
மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ, இவர்கள் விடயத்தில் தீவிர அக்கறை காண்பிக்கிறார்.

அவர் கடந்த வாரம் யாழப்பாணம் சென்று அவர்களுடன் உரையாடி மூன்று மாதங்களுக்கு நிவாரணம் தருவதாகவும், தற்காலிக குடியிருப்பு வசதிகளை செய்து தருவதாகவும் கூறியுளளார். அத்துடன் மூன்று மாதங்களுக்குள் குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இதிலிருந்து இந்த சிங்கள மக்களை வைத்து அரசாங்கம் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது என்பது தெளிவாகியுள்ளது. இந்த நாடகம் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் மட்டும் அமைந்தது அல்ல. யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்து முயற்சிக்கான ஒரு ஒத்திகையாகவே தெரிகிறது. அண்மைக்காலங்களில் ஜாதிக ஹெல உறுமய பல்வேறு பொய்யான புள்ளிவிபரங்களை நாடாளுமன்றத்தில் கூட வெளியிட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து 1983இற்கு பிறகு 21,000 சிங்களவர்கள் வெளியெற்றப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார். இப்படிப் பொய்யும் புரட்டுமான வரலாறு ஒன்றை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களை குடியமர்த்த முனைக்கிறது அரசாங்கம். மீள்குடியமர்வு என்ற பெயரில் நடக்கிறது இந்த நாடகம்.

தமிழ்மக்கள் வலுவான பலத்துடன் உள்ள யாழ்ப்பாணத்திலேயே இந்த நிலை என்றால்- வன்னியிலும், கிழக்கிலும் நிலைமை எப்படியிருக்கும்?

கட்டுரையாளர் சத்திரியன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen