
எப்படியோ ஒரு புதிய வழி இன்று தேவை.
இனிமேல் தொடரப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இதுவரையான அரசியற் பாடங்களை மறுபார்வைக்குட்படுத்துவது அவசியமாகியிருக்கிறது. தோல்விகளிலிருந்தும் பின்னடைவுகளில் இருந்தும் பாடங்களைப் படிப்பது ஒரு கலை. அதுஒரு அறிவியல் ஒழுக்கம். அதுவே முன்னேற்றத்துக்கான வழி. கசப்பாயினும் மருந்து உடலுக்கு நல்லதையே செய்யும். மட்டுமல்ல, கசந்தாலும் மருந்தை உட்கொண்டால்தான் நோயைக் குணப்படுத்தலாம். ஆகவே எத்தகைய நெருக்கடியைத் தரும் விமர்சனமாயினும் அதை எதிர்கொண்டு, ஏற்றுக்கொண்டாலே மேலே முன்னோக்கிச் செல்ல முடியும். இந்த வகையில், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் முன்னெடுப்புகள் பற்றிய ஆழமான, முக்கியமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும். ஏனெனில்,அறுபது ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்னரும், பெரும் இழப்புகளையும் தியாகங்களையும் செய்த பிறகும் தமிழ் பேசும் மக்கள் இப்பொழுது அரசியல்ரீதியாகவும் வாழ்க்கை நிலையிலும் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர்.
‘எதற்கும் மக்கள் கோரிக்கை விடுக்கலாம். அரசியல் தலைவர்கள் அப்படிக்கோரிக்கை விடலாமா? அவர்கள் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் நடவடிக்கை எடுத்தல், செயற்படுத்தல் என்று அல்லவா அவர்களுடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும்?’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசாங்கம் திட்டமிடுகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதைப் போலகூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் வேறு அறிவிப்புகளையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.
தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், அகதிகளின் பிரச்சினை, சிங்களக் குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், தமிழ்ப்பகுதிகளைப் பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகள், சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இப்படிப் பலவகைகளில் இந்தக் கோரிக்கைகளும் கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் அமைகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த அறிவிப்புகளும் கோரிக்கைகளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மேற்க் கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை போலவும் தோன்றும்.
ஆனால், அரசியற் பெறுமானத்தைப் பொறுத்தவரை இவை எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாத வெறும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன. இருக்கவும் போகின்றன. இப்படி எத்தனையோ கண்டனங்களையும் அறிவிப்புகளையும் குற்றச் சாட்டுகளையும் கோரிக்கைகளையும் கூட்டமைப்பும் பிற அரசியற் கட்சிகளும் கடந்த காலங்களில் விடுத்துள்ளன. ஆனால், அவை எதற்கும் இலங்கை அரசாங்கமோ சிங்களத் தரப்பினரோ முறையான பதிலைத் தந்ததும் இல்லை. உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதும் இல்லை.
அரசாங்கத்துக்குவெளியே இருக்கும் சிங்களக் கட்சிகள், சிங்கள ஊடகங்கள் கூட இந்த மாதிரி அபிப்பிராயங்களைப் பொருட்படுத்துவதில்லை. தன்னுடன் இணங்கிச் செயற்படும் ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு போன்ற கட்சிகளின் கருத்துகளையே அரசாங்கம் மதிப்பதில்லை என்பதும் இங்கே கவனத்திற்குரியது. இல்லையென்றால், இந்தத் தரப்பினர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கான தீர்வை அரசாங்கம் கண்டிருக்கும்.
நீடித்த பிரச்சினைகளுக்கான முடிவை அது எட்டியிருக்கும். குறிப்பாக உயர்பாதுகாப்பு வலயம் போன்ற – இப்போது மிகச் சாதாரணமாகி விட்ட விடையங்களைக் கூட அது இன்னும் நிறைவேற்றவில்லை. இப்படிப் பலவுண்டு. இதற்கு ஏராளம் உதாரணங்களும் இருக்கின்றன. கூட்டமைப்பு உட்பட அசாங்கத்துடன இணைந்து நிற்கும் கட்சிகள் வரை எல்லாத் தமிழ்க் கட்சிகளும் கடந்த காலங்களில் விடுத்த எந்த அரசியற் கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தியதில்லை. இவ்வாறான அறிவிப்புகளுக்கு அப்பால், அவற்றினால், எதனையும் செய்ய முடியாது என்று அரசாங்கத்துக்குத் தெரியும்.
இதில் கூட்டமைப்பின் நிலைமை இன்னும் வித்தியாசமானது. வேண்டுமானால், அது வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திக்கும் போது இந்தப் பிரச்சினைகளைப் பற்றிஅவர்களிடம் முறையிடும். அல்லது, இந்தியத் தலைவர்களுக்கும் இந்திய உயர்அதிகாரிகளுக்கும் கடிதங்களை எழுதும். சிலவேளைகளில் அவர்களுடன் இடம் பெறும் சந்திப்புகளின்போது இப்படியெல்லாம் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறது என்று சொல்லிக் கவலைப்படும். அந்தளவுடன் கூட்டமைப்பின் அரசியற்பணிகள் நின்று விடும். கூட்டமைப்பின் இந்த அரசியல் முறைமையைப் பற்றி, இலங்கை அரசாங்கம் மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது. வெளிநாடுகளும் இந்தியாவும் கூட இதைத் தெரிந்து வைத்திருக்கின்றன. ஆனால், அவர்கள் இதையெல்லாம் மறுக்காமல் தலையாட்டிக்கேட்பார்கள். அப்படியா? என்பது போல அக்கறையைக் காட்டுவார்கள்.பார்ப்போம். இதைப்பற்றி, இலங்கை அரசாங்கத்துடன் பேசுகிறோம் என்றுசொல்வார்கள். ஆனால், இப்படி ஆர்வத்தோடும் ஆதங்கத்தோடும் கூட்டமைப்பு முன்வைக்கும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் அவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் பேசியதாக இல்லை எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவையோ மாற்றத்தையோ கண்டதாகவும் இல்லை.
இந்தக் கவலைக்குரிய நிலைமையைப் பற்றி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஏமாற்றத் தோடு சொல்லிக் கவலைப்படுகிறார். இதேவேளை, இது தனியே கூட்டமைப்பு மட்டும் பின்பற்றி வரும் அணுகுமுறையல்ல என்பதையும் நாம் இங்கே குறிப்பிடவேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணி, (இதன் இப்போதையதலைவர் திரு, வீ. ஆனந்தசங்கரி எழுதிவரும் கடிதங்கள்) பிறதமிழ்க்கட்சிகள், முன்னர் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழரசுக் கட்சி போன்ற சகலவற்றுக்கும் பொருந்தும். ஆனால், இந்த அணுகுமுறை இப்போதும் மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலவீனமான, வெற்றியடையாத இந்த மரபார்ந்த நடைமுறையை மிகத் தெளிவாகவே இலங்கை அரசாங்கமும் சிங்கள அதிகார வர்க்கமும் புரிந்து வைத்திருக்கின்றன. என்றபடியால்தான் அவை இந்த அறிவிப்புகளையிட்டு எந்த அச்சமும்கொள்வதில்லை.
பொதுவாக தமிழ் அரசியல் கட்சிகளினதும் அரசியற் தலைவர்களினதும் கருத்துகளை இலங்கை அரசாங்கமும் சிங்கள அரசியற் தலைவர்களும் பெரிதும் கவனத்திற்கொள்வதில்லை. ஏனெனில் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில், அரசாங்கத்துக்கு நெருக்கடியை அளிக்கக்கூடிய வகையில் இந்த அரசியற் கோரிக்கைகளை ஒரு செயற்பாட்டு வடிவமாக்குவதில் தமிழ்பேசும் மக்களின் தரப்பு எப்போதும் முடியாமலே இருக்கிறது.
விடுதலைப் புலிகளின் போராட்டம் ஒரு காலத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியிருந்தது என்பது ஒரு உண்மை என்றாலும், அது இராணுவரீதியிலான நெருக்கடியாக இருந்ததே தவிர, அரசியல், இராஜதந்திர ரீதியானநெருக்கடிகளை அரசாங்கத்துக்கு உருவாக்கவில்லை. இந்தக் குறைபாடு – சர்வதேச சமூகத்தைக் கையாளும் இராஜதந்திர நடவடிக்கைகள் முதல்,சிங்கள மக்களை வேறாகவும் அரசாங்கத்தை வேறாகவும் ஆக்கும் முயற்சிகள் வரையில் -தமிழ் பேசும் மக்களின் சார்பாக முன்னெடுக்கப்படும் அரசியலில் நீடிக்கிறது. சிங்கள மக்களை எப்போதும் எதிர் நிலைக்குக் கொண்டு போகும் விதமாகவே தமிழ்த் தரப்பினரால் முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுஅரசாங்கத்துக்கும் சிங்கள அதிகாரத்தரப்பினருக்கும் வாய்ப்பாகிறது. பதிலாக சிங்கள மக்களையும் அரசாங்கத்தையும் பிரித்துக் கொள்ளும் தந்திரோபாயத்தை தமிழ்த்தரப்பு ஒரு போதும் கையாளவில்லை. தமிழ்த்தரப்பின்போராட்ட வழிமுறைகளில் உள்ள பிரதான குறைபாடு இதுவாகும்.
ஒடுக்கப்படும் மக்களின்அரசியற் போராட்டங்கள் எந்தத் தரப்பு மக்களையும் எதிர் நிலைக்குக் கொண்டுபோவதாக அமையக்கூடாது. ஆனால், இலங்கையில் அப்படி அமைந்து விட்டது. இதனால், அரசாங்கமும் சிங்கள அதிகார வர்க்கமும் சிங்கள மக்களையும இணைத்துக்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றன. இதனால் தமிழ்பேசும் தரப்பின் குரல்கள் இலகுவாகப் புறக்கணிக்கப்படுகின்றன. இதுதான் நடைமுறை. இதனால் தான் தமிழர்கள் தனியாகப் போராட வேண்டியேற்பட்டதும். ஆனால், அந்தப் போராட்டங்களே இன்று சிதைந்தும் தோல்வியடைந்தும் விட்டன. இதைப் பின்னர் பார்க்கலாம். ஆகவே தமிழ்க் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் கருத்துகளுக்கு மதிப்பளிக்காத போக்குக்கு தமிழர் தரப்பின் அரசியல் முன்னெடுப்புகளில் உள்ள பலவீனமான அம்சங்களும் ஒரு காரணம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
ஆகவே, இனிமேல் தொடரப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இதுவரையான அரசியற் பாடங்களை மறுபார்வைக்குட்படுத்துவது அவசியமாகியிருக்கிறது. தோல்விகளிலிருந்தும் பின்னடைவுகளில் இருந்தும் பாடங்களைப் படிப்பது ஒரு கலை. அதுஒரு அறிவியல் ஒழுக்கம். அதுவே முன்னேற்றத்துக்கான வழி. கசப்பாயினும் மருந்து உடலுக்கு நல்லதையே செய்யும். மட்டுமல்ல, கசந்தாலும் மருந்தை உட்கொண்டால்தான் நோயைக் குணப்படுத்தலாம். ஆகவே எத்தகைய நெருக்கடியைத் தரும் விமர்சனமாயினும் அதை எதிர்கொண்டு, ஏற்றுக் கொண்டாலே மேலே முன்னோக்கிச் செல்ல முடியும். இந்த வகையில், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் முன்னெடுப்புகள்பற்றிய ஆழமான, சீரியஸான விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும். ஏனெனில்,அறுபது ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்னரும், பெரும் இழப்புகளையும் தியாகங்களையும் செய்த பிறகும் தமிழ் பேசும் மக்கள் இப்பொழுது அரசியல்ரீதியாகவும் வாழ்க்கை நிலையிலும் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர். மிகநெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? ஒரு சிறிய இனம் அளவுக்கதிகமாக இரத்தம் சிந்தியிருக்கிறது. அது தன்னுடைய சக்திக்கு மீறி தியாகங்களைச் செய்திருக்கிறது. தாங்கிக் கொள்ள முடியாத இழப்புகளையெல்லாம் தாங்கியிருக்கிறது. தன்னுடைய ஆற்றலுக்கும் அப்பாலான வகையில் அது வீரத்தின் உச்சிகளைத் தொட்டிருக்கிறது. ஆனாலும் அது வெற்றியடைய முடியாமல், வீழ்ந்து போயிருப்பது ஏன்?’ என்று ஒரு அரசியல் ஆய்வாளர் எழுப்பிய கேள்வி இங்கே கவனிக்கத்தக்கது. இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, இலங்கைக்கு வெளியே (தமிழகம் உட்பட) இந்தியா,மற்றும் மேற்குலக நாடுகள் எதுவும்கூட, தமிழர்களின் அரசியற் கூற்றுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இல்லையென்றால், இப்படித் தமிழர்கள் இவ்வளவு போராட்டத்துக்குப் பின்னரும் கிடந்து துன்பப்பட வேண்டுமா? என்று ஒரு முன்னாள் போராளி கவலையோடு கேட்டது இங்கே கவனிக்கத்தக்கது.
இவ்வளவு தூரம் வெற்றிக்கான அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் செய்தபின்னரும் வெற்றியடைய முடியவில்லை. நெருக்கடிகளைக் குறைக்க முடியவில்லை. அரைவாசிப்பிரச்சினைகளைக் கூடத்தீர்க்க முடியவில்லை என்றால், எங்கோதவறிருக்கிறது. எதிலோ பிரச்சினையுள்ளது. ஆகவே அவற்றைக் கண்டறிய வேண்டும். அவற்றை நிவர்த்தி செய்ய வேணும். இல்லையென்றால், இறைக்கும் நீரெல்லாம் அந்த ஓட்டையின் வழியே எங்கோ சென்றுவிடும். இறைப்பும் உழைப்பும் வீணாகிப்போய்விடும். அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இதேவேளை அரசாங்கம் வேறு வகையான தந்திரோபாயங்களின் வழிகளால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு முன்னேறுகிறது. முன்னேயிருக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணாமல் விடுவதன் மூலம், அல்லது புதிய பிரச்சினைகளை உருவாக்குவதன் மூலமாக அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் விடலாம். அதைப் பற்றிய கவனத்தைத் திசை திருப்பி விடுலாம் என்பது அதிகாரத் தரப்பின் ஒரு வகையானஅரசியல் உபாயமாகும்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாய நிலை இலங்கை அரசாங்கத்துக்கு இப்போதுண்டு. ஆனால்,அது அதைத் தட்டிக்கழிக்க முயற்சிக்கிறது. அதற்காக அது ஏற்கனவே இருந்து வரும் பிறபிரச்சினைகள் எதனையும் தீர்க்காமல் இழுத்தடிக்கிறது. அதேவேளை அது இன்னும் பலபுதிய பிரச்சினைகளையும் தோற்றுவிக்கிறது. இப்படித் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளின் நெருக்கடிகளைத் தீர்க்கவேண்டும் என்ற கவலையோடு நாமிருக்கும்போது அது தன்னுடைய அதிகாரத்தின் எல்லையை இன்னும் நீடித்து விடுகிறது. மறுவளத்தில் ஒடுக்கப்படுவோராகிய நாம் மேலும் பலவீனப்பட்டு விடுகிறோம். இதுவரையான – இப்போதும் தொடருகின்ற தமிழ் பேசும் தரப்பினரின் அரசியல் இப்படித்தானிருக்கிறது. அத ஒடுக்கும் அதிகாரத்தரப்பின் வலைகளில் சிக்குவதாகவும்அதிலிருந்து மீள வழியற்றதாகவும் இருக்கிறது. ஒடுக்கும் தரப்பு தன்னுடைய பாதுகாப்புக்கும் ஒடுக்குமுறை வடிவத்தை மறைப்பதற்காகவும் தன் பக்கத்தின் மக்களை திசை திருப்பி வைத்திருக்கும்.
சிங்கள மக்களிடம் சிங்கள அதிகார வர்க்கம் இனவாதத்தை விதைத்து அவர்களை தனது பக்கம் சாய்த்துவைத்திருப்பது இந்த அடிப்படையில்தான். இதற்கு ஏட்டிக்குப் போட்டி என்ற வகையில் தமிழ் பேசும் மக்கள் கையாண்ட அரசியல் முன்னெடுப்பு முறைகள் முடிவற்ற சேதங்களையும் பின்னடைவுகளையம் தந்திருக்கின்றன.ஆகவே தான், கடந்த காலத்தின் அரசியல் வழிமுறைகள் பற்றிய பரிசீலனை வேண்டும் என்ற குரல்கள் இப்போது அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. இந்தக் குரல்களை நிச்சயம் தமிழ் பேசும் மக்களின் அரசியலாளர்கள் கவனத்திற்கொள்வது அவசியம். அது இல்லையென்றால், மக்கள் தங்களின் சொந்த அறிவினாலும் இதுவரையான அனுபவங்களின் வழியாகவும் தங்களுக்கான அரசியற் பாதைகளைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். எப்படியோ ஒரு புதிய வழி இன்று தேவை.
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen