Main Pages Kathiravan.com

Montag, 2. August 2010

சரணடைந்த புலிகளின் தலைவர்கள்: அரசாங்கம் மௌனம் சாதிப்பது ஏன்? பாலகுமாரன், யோகி ஆகியோர் எங்கே……..



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் உருண்டோடி விட்டது. எனினும் இந்தப்போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பல சம்பவங்கள் பற்றிய முடிச்சுக்கள் இன்னமும் அவிழவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளே இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழு ஒன்றை நியமிப்பதற்கும் காரணமாக அமைந்தது.

இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க புதியதொரு சர்ச்சை தோன்ற ஆரம்பித்துள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த புலிகளின் முக்கிய தலைவர்கள் எங்கே- அவர்கள் தற்போதும் காவலில் வைக்கப்பட்டுள்ளனரா- அல்லது இறந்து விட்டனரா? இதுவே இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள விவகாரமாகும்.

முள்ளிவாய்க்காலில் போர் முடிவடையும் கட்டத்தில் பெருமளவு புலிகள் இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அரசபடைகளிடம் சரணடைந்தனர். இவர்களில் புலிகளின் முக்கிய தலைவர்களும் அடங்கியிருந்தனர். சரணடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஒருபோதுமே சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படவில்லை. அவ்வப்போது வெளியாகிய புள்ளிவிபரங்கள் எல்லாமே மாறுபட்டவையாகவே இருந்துள்ளன.

சரணடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11,000 தொடக்கம் 13,000 என்று பல்வேறு புள்ளிவிபரங்களும் கூறின.

இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிவை ஆதாரம் காட்டி கடந்த வாரம் வெளியான செய்தி ஒன்று, தற்போது 8037 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் தடுப்புக்காவலில் இருப்பதாகக் கூறியது. ஆனால் சில தினங்களில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க 7948 பேரே தடுப்புக்காவலில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இரண்டொரு தினங்களுக்குள் வெளியான புள்ளிவிபரங்களுக்குள்ளேயே இத்தனை வேறுபாடுகள்;

சரணடைந்த புலிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தினாலோ அல்லது படைத்தரப்பினாலோ வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும் அதற்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக புலிகள் இயக்கத்தின் பல முக்கிய தலைவர்களின் கதி என்னவாயிற்று என்ற கேள்வி வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டொரு வாரங்களளுக்குள் தான் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தூக்கி விட்டவர் வேறு யாருமல்ல புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தான்.

அண்மையில் அவர், கணவனை இழந்த பெண்களை வவுனியா ,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளில் சந்திக்கச் சென்றிருந்தார். அங்கிருந்து கொழும்பு திரும்பியதும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அதில் புலிகளின் தலைவர்களான யோகியின் விதவை மனைவியும், பாலகுமாரனின் விதவை மனைவியும் தன்னிடம் உதவி கேட்டு வந்தாக கூறியிருந்தார்.

பாலகுமாரன் கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடந்த போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் யோகியின் மரணம் எப்போது நிகழ்ந்தது என்று கூறாத போதும் அவரது மனைவியை விதவை என்று அமைச்சர் டியூ.குணசேகர கூறியிருந்தார். இவரது கருத்து வெளியாகும் வரை அவர்கள் இருவரும் உயிரோடு இரகசியமான இடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவே பொதுவாக நம்பப்பட்டு வந்தது.

கடந்த வருடம் போர் முடிவுக்கு வந்த பின்னர் ‘சண்டே ரைம்ஸ்’ வார இதழ் தடுப்புக்காவலில் உள்ள புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலரின் பெயர்களை வெளியிட்டிருந்தது. கரிகாலன், யோகி, பாலகுமாரன், திலகர், தங்கன், இளம்பரிதி, பாப்பா, பூவண்ணன் ,ஞானம், தமிழினி ஆகியோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் இவர்கள் தடுப்புக்காவலில் உள்ளனரா இல்லையா என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அப்போதைய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருந்தார்.

தமிழினி தடுப்புக்காவலில் இருப்பதை மட்டும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார். அதுபோல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலகுமாரன். யோகி ஆகியோர் தடுப்புக்காவலில் இருப்பது பற்றிய செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபற்றி பாதுகாப்பு அமைச்சோ அரசாங்கமோ எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவர்கள் உயிருடன் தடுப்புக்காவலில் இருப்பதாகவும் சொல்லவில்லை. இறந்து போனதாகவும் கூறவில்லை.

போரின் முடிவில் பாதுகாப்பு அமைச்சு கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்களின்; சடலங்களை அடையாளம் கண்டு அவர்களின் விபரங்களை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலிலும் பாலகுமாரன், யோகி போன்றோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆக, அரசாங்கம் இவர்களின் மரணத்தையோ அல்லது உயிருடன் இருப்பதாகவோ முன்னர் உறுதி செய்திருக்கவில்லை. திடீரென அமைச்சர் டியூ.குணசேகர இவர்களின் மனைவிமாரை விதவைகள் என்று கூறியதும் சர்ச்சை உருவானது. தடுப்புக்காவலில் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவே கருதப்பட்டது. இரண்டொரு நாட்களில் இந்த விவிகாரம் சூடு பிடித்த நிலையில், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் அமைச்சர் டியூ. குணசேகர, அந்த விவகாரத்தில் இருந்து நழுவப் பார்த்தார்.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர்- அத்தோடு நின்றால் பரவாயில்லை. அதுபற்றி தாம் பேச விரும்பவில்லை என்றும் கூறினார். அது இந்த விவகாரத்தில் ஏதோ ஒளிவு மறைவு இருப்பதான சந்தேகத்தை வலுப்படுத்தியது. உண்மையைச் சொல்வதற்கு அவர் தயங்குகிறாரா? அதனால் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சுகிறாரா? என்ற ஐயத்தை அது ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கடந்த வாரம் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, “தடுப்புக்காவலில் 737 தீவிர உறுப்பினர்கள் உள்ளிட்ட 7948 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்குள் யோகி, பாலகுமாரன் ஆகியோர் இல்லை” என்று கூறியுள்ளார். அப்படியானால் அவர்கள் எங்கே?
போரின் இறுதி நாட்களில் அவர்கள் சரணடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி பலமாக எழும்ப ஆரம்பித்துள்ளது. இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலைக் கூறக்கூடிய நிலையில் இருக்கும் ஒரே தரப்பு அரசாங்கம் தான். ஆனால் அதற்கு அரசாங்கம் முன்வருமா என்பது சந்தேகமே.? பாலகுமாரன், யோகி ஆகியோர் மட்டுமன்றி மேலும் பல முக்கிய உறுப்பினர்களின் நிலை கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
அரசாங்கம் தீவிர உறுப்பினர்கள் என்று பட்டியலிட்டுள்ள 737 பேரின் விபரங்களை வெளியிட்டால் தான் அதில் யார் யார் இல்லை என்பது தெரியவரும். அத்துடன் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களின் பெயர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தான் யார் யாரெல்லாம் விடுபட்டுள்ளனர் என்பது தெரியவரும். அமைச்சர் டியூ. குணசேகர ஆரம்பத்தில் யோகி, பாலகுமாரன் அகியோரின் மரணங்கள் பற்றிக் கருத்து வெளியிட்ட பின்னர், அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

சரணடைந்தவர்களாக கூறப்பட்டவர்கள் இறந்து விட்டதாக கூறப்படுவது சாதாரண விடயமாக இருக்காது. ஏனென்றால் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஸ் போன்றோரின் மரணங்கள் மீதான சர்ச்சை இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. அப்படியான சம்பவம் நடந்ததா இல்லையா என்ற கேள்வியும், அதுபற்றிய விசாரணைகளும் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் போரில் சரணடைந்தவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு போர் பற்றிய சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் வகையில் சரணடைந்தவர்களுக்கு ஏதேனும் நடந்திருந்தால் அது நிச்சயம் சர்ச்சைக்குரியதொன்றாகவே அமையும்.
இந்தச் சிக்கலில் தான் சிக்கிக் கொள்ளாதிருக்க அமைச்சர் டியூ. குணசேகர முனைந்திருக்கலாம்.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சரணடைந்த புலிகள் பற்றி வெளிப்படைத் தன்மையை ஆரம்பத்திலேயே கடைப்பிடித்திருந்தால் இதுபோன்ற சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் சரணடைந்த புலிகள் பற்றிய ஒரு இறுக்கமான போக்கை அவர்களின் நிலை பற்றிய தெளிவற்ற நிலையைக் கடைப்பிடிக்க முற்பட்டதால், எதிர்காலத்தில் பாரிய சிக்கல் ஒன்றுக்கு அது முகம் கொடுக்க நேரிடலாம்.

பாலகுமாரன், யோகி ஆகியோர் எங்கே என்ற கேள்வி எதிர்காலத்தில் இன்னும் வலுப்பெறக் கூடும். அதுமட்டுமன்றி இவர்களைப் போன்று இன்னமும் நிலை அறியப்படாதுள்ள புலிகளின் தலைவர்கள் எங்கே- என்னவாயினர் என்ற கேள்வியும் இலங்கை அரசுக்கு முன்பாக எழுப்பப்படக்கூடும். அத்தகைய சூழலில் இலங்கை அரசு அதற்குப் பதிலளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம்.

இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி சர்ச்சைகள் தொடரும் நிலையில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் நிலை தொடர்பாக அரசாங்க தெளிவுபடுத்தாமல் மௌனம் காப்பது அதன் மீதான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

கட்டுரையாளர் சுபத்ரா

Keine Kommentare:

Kommentar veröffentlichen