
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த மாத இறுதியில்; உக்ரேனுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.நான்கு நாட்கள் அவர் உக்ரேனில் தங்கியிருந்தார். மகிந்த ராஜபக்ஸவின் உக்ரேன் பயணத்தின் முக்கியத்துவம் பலராலும் உணரப்படவில்லை. ஏதோ நாட்டில் இருப்பது அலுப்புத் தட்டியதால் வெளிநாட்டுச் சுற்றுலா சென்று வந்ததாகக் கருதக் கூடாது. இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்ஸ இதுவரை அதிகாரபூர்வமாகப் பயணம் செய்துள்ள நாடுகள் நான்கு.
முதலில் அவர் சென்றது ரஷ்யாவுக்கு. அடுத்து ஈரானுக்கு. கடைசியாக இந்தியாவுக்குச் சென்றார். இதன் பின்னர் உக்ரேனுக்குச் சென்று வந்தார்.
மாலைதீவுக்கு தனிப்பட்ட ரீதியாக நடுநிலை சமாதானத் தூதுவராகச் சென்று குட்டையைக் குழப்பி விட்டு வந்திருக்கிறார். இது தற்செயலான பயணம் என்பதால் திட்டமிட்ட பயணமாக இங்கு நாம் எடுத்துக் கொள்ளவில்லை.
உக்ரேனுக்கு இலங்கை ஜனாதிபதி ஒருவர் பயணம் செய்தது இதுவே முதல் முறை.
1992இல் சோவியத் ஒன்றியம் பிளவுபட்ட போது உருவான ஒரு நாடு தான் உக்ரேன். அதனுடன் இலங்கை அரசு இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்தியதே 1998இல் தான். அது கூட ஆயுத தளபாடங்களை மலிவான விலையில் வாங்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு தான் அந்தத் தொடர்பு உருவாக்கப்பட்டது.
புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட மிக்-27 போர் விமானங்களை இலங்கைக்கு வழங்கியது உக்ரேன் தான்.
2000ம் ஆண்டுக்கும் 2007ம் ஆண்டுக்கும் இடையில் மொத்தம் 11 மிக்- 27, போர்விமானங்கள் மற்றும் மிக்- 23 பயிற்சி விமானங்களை இலங்கை விமானப்படைக்கு உக்ரேன் வழங்கியிருந்தது.
இவற்றில் இப்போது பயன்பாட்டில் இருப்பவை 8 மட்டுமே. ஏனையவை விபத்துக்களின் போதும் புலிகளின் தாக்குதல்களின் போதும் அழிக்கப்பட்டு விட்டன.
மிக்- 27 போர் விமானங்களை வாங்கிய காலகட்டத்தில் இலங்கை விமானப்படையின் விமானிகளுக்கு அவற்றை ஓட்டுவதற்கான பயிற்சி இருக்கவில்லை.
யாழ்ப்பாண நகரம் நோக்கிப் புலிகள் முன்னேறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதனால் அந்த விமானங்களை உடனடியாகவே வடக்கில் தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருந்தது. எனவே கூடவே ஒரு தொகுதி உக்ரேனிய விமானப்படை விமானிகளையும் உடன்பாடு செய்து அழைத்து வந்தது. அவர்களே வடக்கில் குண்டுவீச்சுக்களை நடத்தினர். அத்துடன் இலங்கை விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சியும் கொடுத்தனர்.
அண்மைக்காலம் வரை உக்ரேனிய விமானப்படை விமானிகள் இலங்கை விமானப்படைக்காகப் போரில் பணியாற்றியிருந்தனர். இவர்களில் சிலர் விமான விபத்துகள் மற்றும் தாக்குதலின்போது மரணமானதும் குறிப்பிடத்தக்கது.
மிக்- 27 போர் விமானக் கொள்வனவில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றன என்பது அப்பட்டமான உண்மை. இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டது மகிந்த ராஜபக்ஸவின் குடும்பம்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவே இந்தக் கொள்வனவில் நேரடியாக ஆதாயத்தை அனுபவித்தவர். அது ராஜபக்ஸ சகோதரர்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கமோ அப்படி ஏதும் முறைகேடுகள் நிகழவில்லை என்று மறுத்திருந்தது.
தற்போது பாவனையில் உள்ள 8 மிக்- 27 போர் விமானங்களினதும் பயன்பாட்டுக் காலம் இன்னமும் நான்கு வருடங்களில் முடியப் போகிறது அதற்குப் பிறகு அவற்றைப் பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகம். ஏனென்றால் அவை 1980களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள். தொடர்ந்தும் பயன்படுத்தினால் அவை விபத்துக்குள்ளாவது அதிகரிக்கும். எனவே உக்ரேனிடம் கொடுத்து அவற்றைப் பழுதுபார்க்க வேண்டும். சீரமைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தேவை இலங்கைக்கு இருக்கிறது.
அடுத்து உக்ரேனிடம் இருந்து இலங்கை வேறும் பல இராணுவத் தளபாடங்களை வாங்கியிருந்தது. அதாவது மில்லியன் கணக்கான டொலர்களில் இந்த இராணுவ தளபாடக் கொள்வனவுக்கான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருந்தன.
புலிகளுடனான போர் முடிந்து விட்டதால், இலங்கை அரசுக்கு இனிமேல் பெருந்தொகையில் ஆயுத தளபாடத் தேவை ஏற்படாது போனாலும் உக்ரேனுடனான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறது.
அதற்குக் காரணம் இராணுவ நோக்கம் அல்ல. வியாபார நோக்கம்.
உக்ரேனியர்கள் தேனீர் அதிகம் பருகுபவர்கள்.பொதுவாகவே முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் தேயலை முக்கியமானதொரு நுகர்வுப் பொருள்
அதற்குப் பொருத்தமான சந்தை வாய்ப்புள்ள நாடுகளில் உக்ரேனும் ஒன்று. உக்ரேன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளுக்குத் தான் இலங்கை அதிகமானளவு தேயிலையை இப்போதும் ஏற்றுமதி செய்கிறது.
வருடாந்தம் கிட்டத்தட்ட 57.6மில்லியன் கிலோ தேயிலை இந்தப் பதினொரு நாடுகளுக்கு மட்டும் தான் ஏற்றுமதியாகிறது. இதைவிட ரஷ்யாவுக்கு 46.1 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்கிறது இலங்கை.
இலங்கை அரசு இப்போது நெருக்கமான உறவை வளர்த்துத் கொள்ளத் தெரிவு செய்துள்ள நாடுகளில் ரஷ்யா, உக்ரேன், ஈரான் போன்ற நாடுகள் முக்கியமானவை. இவற்றுக்குத் தான் மகிந்த ராஜபக்ஸ அண்மைக்காலத்தில் சென்று வந்துள்ளார்.
ஈரானும் வருடாந்தம் 12.5 மில்லியன் கிலோ தேயிலையை இலங்கையிடம் வாங்குகிறது. ஆக தேயிலை ஏற்றுமதியை மையமாக வைத்தே மகிந்தவின் காய்கள் இப்போது நகர்த்தப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையால் ஆடைத் தயாரிப்புத் தொழில் முடங்கிப் போகும் ஆபத்து தோன்றியுள்ளது. இதனால் அவர் தேயிலை மற்றும் ஏனைய வர்த்தக வாய்ப்புகளை தேடத் தொடங்கியிருக்கிறார். அதைவிட இராணுவத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
உக்ரேனில் மகிந்த ராஜபக்ஸ அந்த நாட்டு வர்த்தக சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். சுற்றுலாத்துறை அபிவிருத்தி, தேயிலை, வாசனைப்பொருட்கள், மாணிக்கக் கற்கள், ஆடைகள், றபர், பிளாஸ்ரிக் போன்றவற்றின் ஏற்றுமதி வாய்ப்புகளைக் குறிவைத்தே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது,
உக்ரேனில் இருந்து வரும் முதலீட்டாளர்களுக்கு இலங்கை 5 தொடக்கம் 10 வருடங்கள் வரிச்சலுகை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ சலுகைகளை அறிவித்தார். அங்கிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக நேரடி விமானசேவை நடத்தும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய நாட்டு பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்குச் சென்ற மகிந்த ராஜபக்ஸ அந்த நாட்டு முப்படை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார் அங்கு அவரது உரை கூட இடம்பெற்றது. அதேவேளை உக்ரேனுடன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.
இந்த உடன்பாடு ஆயுத தளபாடங்களை இலங்கைக்கு அவசியம் ஏற்படும் போது அவசரமாக- கடன் அடிப்படையில் வழங்குவதற்கு வழி செய்கிறது. அத்துடன் போர் சம்பந்தமான நிபுணத்துவ உதவிகளுக்கும், பரிமாற்றங்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உடன்பாடு வழிசெய்கிறது. எனவே, மகிந்த ராஜபக்ஸவின் உக்ரேனியப் பயணத்தை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது.
அவர் இப்போது தெரிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் நாடுகள் இராணுவ உதவிகள் ஒத்துழைப்புகளை வழங்குவது மட்டுமன்றி பொருளாதார உறுதித் தன்மையைப் பேணுவதற்கு உதவக் கூடியனவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற தரப்புகளில் இருந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மகிந்தவுக்கு அடுத்த கட்டமாக எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் இருக்கவே செய்கிறது. அப்படியானதொரு நிலை ஏற்படுமானால் அதைச் சாமாளிக்க ஈரான், ரஷ்யா, உக்ரேன், சீனா, இந்தியா, பாகிஸ்தான் என்று ஒரு அணியைத் தனக்குச் சார்பாகத் திருப்புவதில் கவனமாக இருக்கிறது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம்.
இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே அவரது எல்லா நகர்வுகளும் அமைந்துள்ளன. மகிந்தவின் உக்ரேனியப் பயணத்தின் பின்னால் இருக்கும் மர்மமும் இது தான்.
கட்டுரையாளர் சுபத்ரா
Keine Kommentare:
Kommentar veröffentlichen