Main Pages Kathiravan.com

Montag, 26. Juli 2010

தோற்கடிக்கவே முடியாத சக்தியாகவே கருதப்பட்ட: கடற்புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் அது விரையில் இராணுவ கல்வித்துறைக்கான ஒரு நூலாகவும் வரப் போகிறது


இலங்கையை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுக் கடற்படைக் கப்பல்கள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல் விவகாரங்கள் இலங்கைக்குச் சிக்கலாக இருந்தாலும்- போரை முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி என்று அறிவதில் பல்வேறு நாடுகளும் ஆர்வமாகவே உள்ளன. புலிகளை இலங்கை அரசாங்கம் எப்படித் தோற்கடித்தது என்று அறிந்து கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் முனைந்து கொண்டிருக்கின்றன.

பிலிப்பைன்சின் புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள ஜெனரல் ரிக்காடோ டேவிட் ஜுனியர் கடந்தவாரம் மணிலா ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், பயங்கரவாதத்தை தோற்கடிப்பது எப்படியென்று இலங்கையிடம் பாடம் கற்க வேண்டும் என்று கூறியிருந்தார். பிலிப்பைன்சில் இரண்டு விதமான ஆயுதப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒன்று- புதிய மக்கள் இராணுவம் என்ற இடதுசாரி ஆயுதக்குழு ஆட்சி மாற்றத்துக்காக நடத்தும் போராட்டம்.


அடுத்தது- மோரோ இனமக்களுக்கு தனிநாடு கோரி- மோரோ இஸ்லாமிய விடுதலை முன்ணணியால் நடத்தப்படும் ஆயுதப் போராட்டம்.
இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கே இலங்கையிடம் பாடம் கற்க வேண்டும் என்று அந்த நாட்டு இராணுவத் தளபதி கூறியிருக்கிறார். ஆயுதப் போராட்டங்களைத் தோற்கடித்தல் எப்படி என்பது பற்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இருப்பதாக இலங்கையின் இராணுவத் தளபதிகள் பலரும் பெருமையாகக் கூறி வந்தனர். அந்தக் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை.
கடந்தவாரம் இலங்கைக்கு இரண்டு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள வந்திருந்தன.
அமெரிக்காவின் பாரிய துருப்புக்காவி- தரையிறங்கு போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் பேர்ள் ஹாபர்’.


அடுத்தது- பங்களாதேஷ் கடற்படையின் ஆய்வுக் கப்பலான ‘பிஎன்எஸ் அனுசாந்தன்’.
அமெரிக்கப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரித்து நின்றபோது கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது பங்களாதேஷ் கடற்படைக் கப்பல். இரு கப்பல்களினதும் வருகையின் அடிப்படை நோக்கம் நல்லெண்ணப் பயணம் தான். தத்தமது நாட்டு கடற்படையினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி போர் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளே இவை. ஏற்கனவே கடந்தமாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் ‘ஐஎன்எஸ் டெல்கி’ என்ற பாரிய போர்க்கப்பல் ஒருவார காலமாக தரித்து நின்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா,அமெரிக்கா, பங்காளாதேஷ் போன்ற நாடுகளின் போர்க்கப்பல்கள் மட்டுமன்றி அண்மைய காலங்களில் பாகிஸ்தான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் கடற்படைப் போர்க்கப்பல்களும் கூட கொழும்பு வந்திருந்தன. இவற்றின் கொழும்பு வருகை வெறும் நல்லெண்ண நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டாலும் இலங்கைக் கடற்படையினரின் போர் அனுபவங்களை அறிந்து கொள்வதே அடிப்படை நோக்கமாகும். பல்வேறு நாடுகளுக்கும் கடற்புலிகளை இலங்கைக் கடற்படை தோற்கடித்தது எப்படி என்பது பெரும் கேள்வியாகவே இருந்து வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கடற்புலிகள் என்பது தோற்கடிக்கவே முடியாத சக்தியாகவே கருதப்பட்டது.. சண்டைப் படகுகள், கரும்புலித் தாக்குதல் படகுகள் என்று பலமான ஆயுத தளபாடங்கள் பொருத்தப்பட்ட ஒரு வல்லமை மிக்க கடற்படையாகவே அது கருதப்பட்டது. ஆனால் இன்று கடற்புலிகள் அமைப்பின் நாமமே இல்லாது போயுள்ளது. இது எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வியை உலகின் பெரும்பாலான நாடுகளின் கடற்படைகள் கேட்கின்றன.
கடந்த மாத இறுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உக்ரேனுக்கு மூன்றுநாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அந்தப் பயணத்தின் போது உக்ரேன் தலைநகர் கீவ் இல் உள்ள இராணுவ ஆய்வு நிலையம் ஒன்றுக்கும் அவர் சென்றிருந்தார். அந்த இராணுவ ஆய்வு நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமானதொரு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. கடற்புலிகளைத் தோற்கடித்தது எப்படி என்பது பற்றியதே அந்தக் கலந்துரையாடல்.

அந்த ஆய்வு நிலையத்தில்,
கடற்புலிகள் தோற்கடிக்கப்பட்டது எவ்வாறு என்பது பற்றிய ஒரு ஆய்வு இடம்பெற்று வருகிறது. சிறிய படகுகள் கொண்ட அணியின் மூலம் பலம்வாய்ந்த கடற்படை அணியை எப்படித் தோற்கடிக்கலாம் என்பது பற்றிய ஆய்வு அது. தனியே அந்த ஆய்வு இலங்கைக் கடற்படை பற்றியதாக மட்டும் இருக்கவில்லை. கடற்புலிகள் எவ்வாறு சிறிய படகுகளின் மூலம் இலங்கைக் கடற்படையினரை முறியடித்து வந்தனர் என்பது பற்றியும், அவர்கள் பலம்பெற்ற பின்னர் அதேவழியில் எப்படித் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது பற்றியும் அங்கு ஆய்வு நடக்கிறது.
அது விரையில் இராணுவ கல்வித்துறைக்கான ஒரு நூலாகவும் வரப் போகிறது.

உலகின் பல நாடுகளுக்கு இலங்கைப் போர், இன்னமும் மூக்கில் விரலை வைத்த வியக்கும் ஒன்றாகவே இருக்கிறது.

இலங்கையில் போரில் கையாளப்பட்ட உத்திகள் என்ன- எப்படி வெற்றி கிடைத்தது என்று அறிந்து கொள்ளவே ஆயுதப் போராட்டங்களுக்கு முகம் கொடுக்கும் நாடுகளும் சரி- அதற்கு முகம் கொடுக்காத நாடுகளும் சரி விருப்பப்படுகின்றன.

ஆனால் இடையில் ஒரு சிக்கல்.

இலங்கையின் மீதான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இந்த நாடுகளுக்கு நெருக்கமான இராணுவத் தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் ஒத்துழைப்புகளைப் பெறுவதற்கும் குறுக்கே நிற்கின்றன. இதனால் தான் நல்லெண்ணப் பயணங்கள் என்ற அடிப்படையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகளாக கடற்படைக் கப்பல்கள் அனுப்பப்படுகின்றன. இலங்கை நோக்கி வரும் வெளிநாட்டுக் கடற்படைக் கப்பல்களின் அடிப்படை நோக்கம் இதுவே.
அதற்கு அப்பால் இது இலங்கையை உளவு பார்க்கும் வேலை என்றோ- கண்காணிக்கும் முயற்சி என்றோ சொல்லப்படுவதெல்லாம் வெறும் கற்பனையே.

கட்டுரையாளர் சுபத்ரா

Keine Kommentare:

Kommentar veröffentlichen