
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இந்தியாவுக்குச் சென்று திரும்பியது. இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக்குழு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து விட்டு வந்திருக்கிறது. இந்தச் சந்திப்பின் போது வடக்கு,கிழக்கை மீளவும் இணைப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா ஆவன செய்வதாக உறுதி கூட அளிக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்க இடையே இடைவெளி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பேசிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேரந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், “வடக்கு,கிழக்கை இணைக்கக் கோரும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடையாது என்றும்- அவர்கள் அதுபற்றித் தம்முடன் பேசாமல் இந்தியாவுடன் பேசியது தவறு” என்றும் கூறியிருந்தார். அத்துடன் வடக்கு,கிழக்கு இணைப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என்றும் அவர் கூறியிருந்தார். அண்மைக்காலம் வரை வடக்கு,கிழக்கு இணைப்புத் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக நழுவல் போக்குள்ள கருத்தையே வெளியிட்டு வந்தது. ஆனால் இப்போது வடக்கு,கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறது.
வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கப் போவதில்லை என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு. இந்த இணைப்பு தமிழர்களின் விருப்பமாக இருந்தாலும் அது நடக்கக் கூடிய காரியமா என்பது சந்தேகம் தான். ஆனால் அதற்குள்ளாகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏன் எழுந்தது என்பதை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கிக் கொள்ளாதிருக்கிறதா அல்லது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க ஆசைப்படுகிறதா தெரியவில்லை.
வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரியமான தாயகப் பிரதேசமாகும். போர்த்துக்கேயர்களின் வருகைக்கு முந்திய காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவியதற்கான சான்றுகள் உள்ளன. திருகோணமலையை குளக்கோட்ட மன்னன் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் கிழக்கு மாகாணம் தமிழர்களிடம் இரந்து பறிக்கப்பட்டு அவர்கள்; இன்று சிறுபான்மையினராக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. வரலாற்றுக் காலக் கதைகளை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும்- தமிழர்களுக்கு கிழக்கு மாகாணத்தின் மீதான உரிமை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.
1981ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 59 வீதமாக இருந்தது. அப்போது முஸ்லிம்கள் 33.66 வீதமாகவும், சிங்களவர்கள் 4.66 வீதத்தினராகவும் இருந்தனர். 2007ம் ஆண்டு உத்தேச சனத்தொகை மதிப்பீட்டில் தமிழர்களின் எண்ணிக்கை கிழக்கில் 40.39 வீதமாகக் குறைந்து போயுள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 37.64 வீதமாகவும், சிங்களவர்களின் எண்ணிக்கை 21.64 வீதமாகவும் அதிகரித்துள்ளது. இடைப்பட்ட காலப்பகுதிக்குள் கிழக்கில் தமிழர்களின் சனத்தொகை கிட்;டத்தட்ட 19 வீதம்; குறைந்து போயுள்ளது. இதற்குக் காரணம் தனியே போர் மட்டுமல்ல. போருக்கு முன்னரே தமிழர்களின் சனத்தொகை வீதம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது. அத்துமீறிய குடியேற்றத் திட்டங்கள் மூலமே அது சாத்தியமானது. இந்த அத்துமீறிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களின் காரணமாக- அம்பாறை மாவட்டத்தில் 1963இல் 46.11வீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2007இல் 43.99 வீதமாகக் குறைந்து போனது.
23.23 வீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கையும் 18.33 வீதமாகக் குறைந்து விட்டது. ஆனால் 1963இல் 29.28 வீதமாக இருந்த சிங்களவர்கள் 37.49 வீதமாக அதிகரித்து விட்டனர். திருகோணமலையில் சிங்களக் குடியேற்றத்தால் தமிழர்கள் பாரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். 1827ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் 81.76 வீதமாக இருந்தனர். ஆனால் 2007இல் தமிழர்கள் 28.75 வீதமாகக் குறைந்து போய் விட்டனர்.
1827இல் திருகோணமலையில் 16.94 விதமாக இருந்த முஸ்லிம்கள் 2007இல் 45.47 வீதமாகவும், 1.3 வீதமாக இருந்த சிங்களவர்கள் 25.35 வீதமாகவும் அதிகரித்து விட்டனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரம் எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. வடக்கும்,கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்ற அடிப்படையில் இரண்டு மாகாணங்களையும் ஒன்றுபடுத்தக் கோரும் உரிமை தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது. அத்துமீறிய குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மட்டுமன்றி முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இந்த இணைப்பு அவசியமானது.
தமிழ்மக்களின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட- 14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்;டமைப்புக்கு இதுபற்றிக் கோரிக்கை விடுக்க எல்லா உரிமையும் உள்ளது. இதை எந்தவொரு தரப்பினராலும் நிராகரிக்க முடியாது. அதற்கான உரிமையில்லை என்று கூறவும் முடியாது. வடக்கையும் கிழக்கையுமம் இணைப்பதன் மூலம் தமது உரிமைகள் பறிபோய் விடும் என்று முஸ்லிம்கள் அச்சப்படுவார்களேயானால் அது அவர்களுக்கே மிகப் பெரிய ஆபத்தைத் தேடித் தரும்.
தமிழர்களுடன் இணைந்து முஸ்லிகளும் போராடினால் தான் வடக்கு,கிழக்கை அத்துமீறிய குடியேற்றங்களில் இருந்து பாதுகாக்க முடியும். பெரும்பான்மை சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் நலன்களை அனுபவிக்கலாம் என்று அவர்கள் கருதுவார்களேயானால் அது முட்டாள்தனம். அது அதிகார நலன்களைப் பெற்றுக் கொடுத்தாலும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளையோ வேட்கையையோ நிறைவேற்றுவதற்கு உதவாது. இந்த விவகாரத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊதிப் பெருப்பித்து பிரச்சினையாக்கி அரசியல் ஆதாயம் தேட முற்படுமானால் அது இரு இனங்களுக்கும் இடையில் விரிசல்களையும் சந்தேகங்களையுமே ஏற்படுத்தும். அது இரு இனங்களினதும் நலனுக்கு உகந்ததல்ல.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஜனநாயக ரீதியாக வடக்கு,கிழக்கில் வாழும் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகியுள்ளது இந்தநிலையில் இரு இனங்களினதும் ஒத்திசைவான நகர்வுகள் அவசியமாகின்றன. இதிலிருந்து விலகும் போது இன்னுமின்னும் பேரழிவுகளையே தேடிக் கொள்ள நேரிடும்.
கட்டுரையாளர் சத்திரியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen