Main Pages Kathiravan.com

Donnerstag, 13. Mai 2010

முள்ளிவாய்க்கால்::அழிவுகளின் முடிவு அல்ல அவலங்களின் திறவுகோல் பாகம் 2


முள்ளிவாய்க்காலில் முடிந்து போன போருக்குப் பின்னர் தமிழரின் தேசிய பலம் சிதைந்து போயிருப்பது தான் மிச்சம்.

ஆயுதங்களை மௌனிக்கும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் நடந்த தற்காப்புப் போருடன் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்தும் தமிழர்களால் ஆயுதப் போரை முன்னெடுப்பது சாத்தியமற்றதென்ற கட்டத்திலேயே ஆயுதங்களை மௌனிக்கும் முடிவு தேசியத் தலைமையால் எடுக்கப்பட்டது.

ஆயுதப்போருக்கான புறச்சூழல் ஒன்று இல்லை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து எடுத்த முடிவு அது.

இன்றைய உலக அரசியல் சூழலில் உரிமை கோரி நடத்தப்படும் ஆயுதப் போராட்டங்கள் பயங்கரவாதம் என்ற முலாம் பூசப்பட்டு இலகுவாகத் தோற்கடிக்கப்பட்டு விடும் என்பதற்கு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டமே மிகச்சிறந்த உதாரணம்.

தேசியத் தலைமையே ஆயுதங்களை மௌனமாக்குவது என எடுத்த முடிவுக்குப் பின்னரும் எம்மை ஆயுதப்போர் பற்றிய கற்பனை சஞ்சாரத்தில் ஈடுபடுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

சாத்தியமான வழிகளில் எம்மை இன்னொரு போருக்குத் தயார் செய்து கொள்ளவில்லை.

இன்னொரு போர் என்றால் அது ஆயுதம் சார்ந்த ஒன்றல்ல.

அரசியல்- அகிம்சை- இராஜதந்திரம் என்று எத்தனையோ வழிகளில் போர் செய்ய முடியும்.

இந்த ஒரு வருடகாலத்தில் நாம் செய்துள்ள மிகப்பெரிய போர் என்ன?

கடந்த வருடம் மே மாதம் நாம் நின்ற இடத்தில் இருந்து இன்னமும் பின் தள்ளப்பட்டுள்ளோமே தவிர முன்னே ஒரு அங்குலமேனும் அடியெடுத்து வைக்கவில்லை.

இதற்கு என்ன காரணம்?

எம்முன்னே ஒற்றுமையில்லாத நிலை.

விடுதலைப் போரை வீரியத்துடன் விரிவுபடுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல்களில் நாம் இறங்கவில்லை.

அப்படி இறங்கமுடியாத வகையில் எமக்குள் தோன்றிய பிளவுகளும்- பிரச்சினைகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி வைத்துள்ளன.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது ஒன்றா, இரண்டா போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன?

ஆயிரக்கணக்கான போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உலகின் முன் வெற்றி வீரர்களாக உலா வருகிறார்கள்.

அவர்களை இப்படி விட்டு வைப்பதற்கு நாமே காரணமாகியிருக்கிறோம்.

அரசியல்- அகிம்சை- இராஜதந்திர வழிகளில் விடுதலைப் போரை தொடர்ந்தும் வீரியத்துடன் நடத்த முடியாது போனது அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பானது.

அவர்களைத் தண்டிக்க எமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களை அநியாயமாகத் தொலைத்து விட்டு எதுவும் செய்ய முடியாதவர்களாகி நிற்கிறோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரை- எமது இனத்தின் இருப்பையே- சிதைத்து சின்னா பின்னமாக்கியவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டிய நாம் என்ன செய்தோம்?

எமக்குள்ளேயே நாம் மோதிக் கொண்டோம்.

எம்மை நாமே எதிரிகளாக்கிக் கொண்டோம்.

துரோகிகளாக மாறி மாறிப் பட்டம் சூட்டிக் கொண்டோம்.

மிச்சம் மீதியாக சிங்களதேசம் விட்டு வைத்திருந்தவர்களைக் கூட காட்டிக் கொடுத்து காவு கொள்ளச் செய்தோம்.

இதைத் தானே இந்த ஒரு வருடத்தில் நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.

அடிப்படையில் தமிழீழம் என்ற இலட்சியத்தோடு ஒன்றாக இணைந்து கொண்டவர்களெல்லாம் இன்று இரண்டாக நின்று மோதிக் கொள்கிறோம்.

அத்தோடு போகவில்லை.

அவதூறுப் பிரசாரங்களின் மூலம் இல்லாததும், பொல்லாததும் சொல்லி விடுதலைப் போராட்டத்தை எவ்வளவுக்கெல்லாம் களங்கப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு களங்கப்படுத்தியுள்ளோம்.

இது தான் நாம் இந்த ஒரு வருடத்தில் செய்த சாதனை.

இது போதாதா அவர்களுக்கு.

இன்னும் எத்தனையோ சந்ததிக்கு எம்மை அடிமைகளாக நடத்துவதற்கு…!

நாளை மீண்டும் சந்திப்போம்.

குறிப்பு

உண்மையை உணர்ந்து இனியாவது ஒன்றுபடமாட்டோமா? என்ற ஆதங்கத்தில் எழுதப்படுகிறது. கானல்நீரைக் காண்பித்து கற்பனைக் கோட்டைகளை மனதில் கட்டிக் கொள்ளச் செய்யும்; எண்ணம் எம்மிடம் கிடையாது. தொடர்ந்து படியுங்கள்- கருத்துக்களை எழுதுங்கள். (infotamil.ch@gmail.com)
பின்ணிணைப்பு


தொல்காப்பியன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen