
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் பலருக்கு அதிர்ச்சியாக அமையலாம்.
சிலருக்கு ஆத்திரம் கூட வரலாம்.
ஆனால் உண்மை இது தான்.
நாம் ஒன்றும் கற்பனையில் இதை எழுதவில்லை.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தேறிய சம்பவங்களை வைத்துக் கொண்டும்- சிங்களப் பேரினவாதிகள் காலம்காலமாக எமக்குத் தந்த படிப்பினைகளை வைத்துக் கொண்டும் தான் இது எழுதப்படுகிறது.
உண்மையை உணர்ந்து இனியாவது ஒன்றுபடமாட்டோமா? என்ற ஆதங்கத்தில் எழுதப்படுகிறது.
கானல்நீரைக் காண்பித்து கற்பனைக் கோட்டைகளை மனதில் கட்டிக் கொள்ளச் செய்யும்; எண்ணம் எம்மிடம் கிடையாது.
தொடர்ந்து படியுங்கள்- கருத்துக்களை எழுதுங்கள். (infotamil.ch@gmail.com)
‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சிங்களதேசம் மேற்கொண்ட கொடியபோர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.
இந்தப் போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதை திறக்கப்பட்டு விட்டது.
சோதனைச்சாவடிகள் இல்லை- இப்போது எல்லாச் சுதந்திரமும் கிடைத்து விட்டது போலவே தாயகத்து உறவுகள் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் கொண்டாடினர்.
முள்ளிய்க்காய் பேரவலத்துக்குப் பின்னர்- தமிழ் மக்கள் எல்லாவிதத்திலும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை வெளிகாட்டியது இது.
அதாவது ஒரு காலத்தில் தமீழழத்தைத் தவிர எதுவுமே வேண்டாம் என்ற கொள்கையில் நின்று பிடித்தவர்கள்- பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்றளவுக்கு வந்திருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் முள்ளிவாய்க்கால் தந்த பேரவலம்.
இந்தப் போர் பேரவலத்துடன் முடிந்ததே இப்படியொரு நிலை உருவாகக் காரணம்.
சிங்களதேசம் தமிழ்மக்களை கொன்று- புதைத்து-நரவேட்டையாடி- சிறையில் அடைத்து அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விட்டது.
தாயகத்தில் வாழும் மக்களிடத்தில் அச்சத்தை விதைத்து அவர்களின் சுதந்திர தாகத்தின் மீது சுடுநீரை ஊற்றிக் கருகச் செய்து வருகிறது.
இதன் விளைவாக தாயகத்தில் வாழும் மக்கள் இன்று தம்மைச் சுற்றி நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் திராணியற்றவர்களாக- தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க வழியற்றவர்களாக- வெறும் வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்து விட்டால் போதும் என்றளவுக்குத் தம்மைச் சுருங்கிக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையை ஏற்படுத்தியது முள்ளிவாய்க்கால் பேரவலம் தான்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சந்தித்த அழிவுகள்- அவலங்கள் வார்த்தைகளிலோ- எழுத்துகளிலோ வடித்து விட முடியாதவை.
இதன்விளைவுகள் தமிழ் மக்களுக்கு நீண்டகால ரணமாக- ஒரு சாபக்கேடாக அமையப் போகிறது.
போர் முடிந்து விட்டது?
இனிமேல் எல்லா வசதி வாய்ப்புகளோடும் நிம்மதியாக இருக்கலாம் என்று கணக்குப் போடுபவர்களின் நினைப்பு ஒரு போதும் பலிக்கப் போவதில்லை.
அப்படி எம்மை விட்டு வைப்பதற்கு சிங்களதேசம் ஒருபோதும் முன்வரப் போவதில்லை.
அது அவர்களின் சுபாவம்.
பிறப்போடு கூடிய இயல்பு.
நாய் வாலை எப்படி நிமித்த முடியாதோ அப்படி.
முள்ளிவாய்க்காலில் முடிந்தது அழிவு தரும் ஒரு போர் அல்ல.
அது தமிழரின் அவலங்களுக்கான திறவுகோல்.
இதுவரையில்லாதளவு அவலங்களை தமிழ்மக்கள் இனிமேல் தான் சந்திக்கப் போகின்றனர்.
தமிழ்மக்களின் நிம்மதியான வாழ்வையும் நிரந்தர அமைதிக்கான தேடலையும் முள்ளிவாய்க்காலில் புதைத்து விட்டே நாம் வந்திருக்கிறோம்.
அது தொலைக்கப்பட்டு விட்டதொன்று.
இனித்தேடியும் பிடிக்க முடியாத ஒன்றாக மாறிவிடுமோ என்ற அச்சம் தான் மேலோங்குகிறது.
இந்த ஒரு வருடகாலத்துக்குள் முள்ளிவாய்க்கால் தந்த படிப்பினைகள்- நாம் எப்படித் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறோம் என்;பனவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.
நாளை சந்திப்போம்.
தொல்காப்பியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen