
அரசியல்தீருவுக்கு வழிதிறந்துள்ளது என்பதே சர்வதேசம் இலங்கைக்கு வழங்கும் செய்தி
பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்துள்ளன. அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் வாழ்த்துகள் இவற்றில் முக்கியமானவை. இலங்கை அரசாங்கம் பெற்ற வெற்றியை எல்லா நாடுகளும் விரும்பி வரவேற்றுள்ளன, வாழ்த்தியுள்ளன. ஏற்கனவே இலங்கை அரசுடன் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் ஜிஎஸ்பி பிளஸ் போன்ற பல விவகாரங்களில் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து வாழ்த்துச் செய்தி வந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம்.
இந்த வாழ்த்துச் செய்திகளின் பின்னால் இருக்கின்ற விடயங்கள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த வாழ்த்துச் செய்திகளின் அடிப்படை நோக்கம் இலங்கை அரசுக்குச் சார்பானதாக இருக்க வேண்டும் என்றில்லை.
அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் வரை, தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் சர்வதேச சமூகம் தம்மை மிரட்ட முடியாது என்று கூறிவந்தது நினைவில் இருக்கலாம். இப்போது அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு நெருக்கமான ஆசனங்கள் கிடைத்துள்ளன. இந்தநிலையில் இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் அணுகுமுறை எப்படி அமையப் போகிறது என்று பார்ப்பது பொருத்தம்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அரசாங்கத்தின் தரப்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை சர்வதேச சமூகம் மதித்து நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கருத்தின் பின்னால் ஒளிந்துள்ள விடயம் இது தான்- மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் போர்க்குற்ற விசாரணைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டு- இலங்கையுடன் கை கோர்க்க வேண்டும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் அது ஜனநாயக ரீதியாக மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படும். எனவே தான் அரசாங்கம் அதைக் குறிவைத்து இயங்கியது.
தனியே அரசியலமைப்பு மாற்றங்களுக்காக மட்டுமே அரசாங்கம் இந்தப் பெரும்பான்மையைக் கோரவில்லை. சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கும் தான்.
ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசாங்கத்தை இலகுவில் மிரட்டவோ அசைத்துப் பார்க்கவோ விரும்பமாட்டது.
அதாவது இலங்கை மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்ற கட்சி என்பதால் அரசாங்கத்துடன் முரண்பட விரும்பாது என்பது இலங்கை அரசின் கணிப்பாக இருந்தது.
ஒருவகையில் அரசாங்கத்தின் இந்தக் குறி தப்பிவிட்டது உண்மை.
150 ஆசனங்களுடன் பெறவேண்டிய மூன்றில் இரண்டு பெரும்;பான்மையை தவறவிட்டு விட்டது. இப்போதைய நிலையில் 143 ஆசனங்கள் தான் ஆளும்கட்சிக்குக் கிடைக்கும் என்று தெரிகிறது. [தேர்தலுக்கு முன் எமது ஆய்வு இது]
இனி தேர்தல் முடிவு பற்றிய எமது செய்தி இணைப்பில்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 (தேசியப் பட்டியல் உட்பட) ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 20 ஏப்ரல் 2010, 03:56.15 PM GMT +05:30 ]
இதுவரையில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 127 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது. அத்துடன், இக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 17 பேருடன் சோ்த்து மொத்தமாக 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மொத்தமாக இதுவரையில் 51 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 9 பேருடன் சோ்த்து மொத்தமாக 60 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது..
இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், இக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒன்றுடன் சோ்த்து மொத்தமாக 14 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி 5 ஆசனங்களையும் இக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 2 பேருடன் சோ்த்து மொத்தமாக 7 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இதுவரையில் மொத்தமாக 4846386 வாக்குகளையும், இது மொத்த வாக்குகளில் 60.33 வீதமாகவும், (144 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி மொத்தமாக 2357057 வாக்குகளையும், இது மொத்த வாக்குகளில் 29.34 வீதமாகவும், (60 ஆசனங்கள்)
ஜனநாயக தேசிய முன்னணி மொத்தமாக 441251 வாக்குகளையும், இது மொத்த வாக்குகளில் 5.49 வீதமாகவும், (07ஆசனங்கள்)
இலங்கைத் தமிழரசுக் கட்சி 233168 வாக்குகளையும், இது மொத்த வாக்குகளில் 2.90 வீதமாகவும் (14 ஆசனங்கள்) பெற்றுக்கொண்டுள்ளன.
ஆனாலும் அனைத்து முடிவுகளும் வெளியாகிய நிலையில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறும் முயற்சிகளில் இறங்கப் போவதாகவும் தகவல். அவ்வாறாயின் அதற்கு மூன்று தெரிவுகள் உள்ளன.
ஒன்று ஐதேகவில் இருந்து ஏழு அல்லது அதற்கும் அதற்கும் அதிகமான எம்.பிக்களை ஆளும்கட்சி பக்கம் இழுக்க வேண்டும்.
அல்லது 14 ஆசனங்களைப் பெறும் நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது தெரிவு- 8 ஆசனங்கள் பெறும் நிலையில் உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை இழுத்துப் போட்டுக் கொள்ளவேண்டும்.
இவற்றில் மூன்றாவது வாய்ப்பே அதிகமாகத் தெரிகிறது.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் இப்போது முஸ்லிம்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற ஒன்றாக விளங்குகிறது.
ஏனைய முஸ்லிம் தலைமைகள் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபிக்கத் தவறிவிட்டன. இந்தநிலையில் அரசாங்கம் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தன் பக்கம் இழுத்துப் போட்டுக் கொள்ள விரும்புவது இயற்கை.
அத்துடன் ரவூப் ஹக்கீமுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட முடியாது என்று கூறமுடியாது. ஏற்கனவே அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்தவர்கள் தான். இந்தவகையில் ஆளும்கட்சியின் தெரிவு முஸ்லிம் காங்கிரசாக இருந்து அந்தக் கட்சியும் அரசுடன் இணைவதற்கு சம்மதம் தெரிவிக்குமேயானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்துக்குக் கிடைத்து விடும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு அரசாங்கம் எதைச் செய்யப் போகிறது என்பது அடுத்த கேள்வியாக உள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும் சரி- கிடைக்காது போனாலும் சரி- அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கப் போவது தமிழர் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தான்.
சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் வெற்றியை வாழ்த்தியதற்கும் வரவேற்றதற்கும் பின்னால் இருக்கின்ற இரகசியம்- இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதே என்பதற்காகத் தான்.
அதாவது இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எல்லாமே சர்வதேசத்துக்கு சில சாட்டுப் போக்குகளைச் சொல்லி வந்தன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை- மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை, அது இருந்தால் தான் துணிவோடு மாற்றங்களைச் செய்யலாம்- அதிகாரங்களைப் பகிரலாம் என்ற நியாயங்கள் கூறப்பட்டு வந்தன.
ஆனால் இப்போது இப்படிச் சாட்டுகளைச் சொல்லும் வாய்ப்புகள் இல்லாது போயுள்ளன. இந்தநிலையில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பது இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைத் தான்.
வாழ்த்துச் செய்திகளின் ஊடாக சர்வதேசம் இந்தச் செய்தியையும் இலங்கை அரசுக்குச் சொல்லியிருப்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
ஆனால் சர்வதேசம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறதே தவிர தமிழர்கள் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி நாம் கற்பனை செய்வது மிகையானதொரு நிலைப்பாடாக இருக்கும்.
சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில் நியாயமான நீதியான தீர்வாக அது வலியுறுத்துவது ஆகக் குறைந்த அரசியல் தீர்வாகவே இருக்க முடியும்.
அவர்களுக்குத் தேவை இலங்கையில் அமைதி.
சமஷ்டி முறையில் தீர்வு அமைவது பற்றியோ அல்லது வேறெந்த வடிவிலான தீர்வு பற்றியோ அவர்களுக்குக் கவலையில்லை.
இந்தக் கட்டத்தில் அரசாங்கம் தமக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பெரும்பான்மை மக்களினது என்று கூறி எப்படி சர்வதேசத்தை சமாளிக்கிறதோ அதுபோலவே தமிழ் மக்களும் ஜனநாயக ரீதியாக தமது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் பொதுத்தேர்தலை தமிழ்மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்களா என்பது சந்தேகமே.
வடக்கிலும், கிழக்கிலும் பிரதான கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஆசனங்கள் இந்தக் கேள்வியை எழுப்புவதற்கு வசதியாக அமையும்.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சக்தியாக வந்திருப்பதால் அவர்களை சர்வதேசம் புறக்கணிக்க முனையாது என்று நம்பலாம்.
தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வந்துள்ள நிலையில் அதனுடன் அரசு பேச்சு நடத்துவதையே சர்வதேசம் விரும்பும். இது இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
அதேவேளை பொதுத்தேர்தலில் மட்டுன்றி அடுத்து வடக்கில் நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கப் போகிறது. இதில் வெற்றிபெறும் தரப்புகள் இனப்பிரச்சினைத் தீர்வில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே சர்வதேசத்தின் அணுகுமுறைகளைத் தமக்கு சார்பாக வைத்திருக்க தமிழ்மக்கள் விரும்பினால்- வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும்; தமது அபிலாசையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சக்தியாக மாகாணசபைத் தேர்தலில் உருவெடுக்க வேண்டியது அவசியம்.
இந்தச் சந்தர்ப்பதை அவர்கள் தவறவிடுவது- சர்வதேச ஆதரவைத்தக்க வைக்கும் முயற்சிக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
கட்டுரையாளர் கபிலன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen