
பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ள நிலையில்- ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டதால் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த அரசாங்கத்தில் நூறுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அங்கம் வகித்தனர்.
ஆளும்கட்சி தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவ்வப்போது தம்பக்கம் இழுத்து வந்தது.
றோகித போகொல்லாகம தொடக்கம் கடைசியாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வரைக்கும் இதுவே நடந்தது.
எதிர்க்கட்சியில் இருந்து எம்.பிக்களை வளைத்துப் போட்ட போதெல்லாம் அவர்களை அமைச்சர்களாகவோ, பிரதியமைச்சர்களாவோ நியமிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது. இதன் காரணமாகவே ஆளும்கட்சி தரப்பில் இருந்த பெரும்பாலானோர் அமைச்சர்களாக இருந்தனர். மிகக் குறைந்தளவானோரே ஆளும்கட்சியின் சாதாரண எம்.பிக்களாக இருந்தனர்.
ஆனால் இந்தத் தேர்தலில்; அமைச்சர்களின் எண்ணிக்கையை 40 ஆகக் குறைப்பதாக அரசாங்கத் தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
சில அமைச்சர்கள் இது 35ஆக இருக்கும் என்று கூடக் குறிப்பிட்டனர்.
நூறுக்கு மேல் இருந்த அமைச்சர்களின் எண்ணிக்கையை 40 ஆகக் குறைப்பதே மிகக் கடினமான காரியம். அதில் 35ஆகக் குறைப்பதென்பது முடியாத காரியமாகவே இருக்கப் போகிறது.
இந்தக் கட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு புதிய அமைச்சர்களைத் தெரிவு செய்வதில் குழப்பங்கள் ஏற்பட்டிருப்தாகத் தகவல்.
யாரைத் தேர்வு செய்வது யாரை நிராகரிப்பது என்ற குழப்பமே அது.
கடந்தமுறை அமைச்சர்களாக- பிரதி அமைச்சர்களாக இருந்த ஒன்பது பேர் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து விட்டனர். இது ஒருவகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கலாம்.
காரணம் அமைச்சர் போட்டியில் இருந்து ஒன்பது பேரை விலக்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அரியவாய்ப்பு அது.
ஆனாலும் சுமார் 90 இற்கும் அதிகமான அமைச்சர்களில் இருந்து- சரி பாதியை விடவும் அதிகமாக அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதேவேளை, அமைச்சர்களைத் தெரிவு செய்யும் போது புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஆளும்கட்சியின் எம்.பிக்களையும் இந்தமுறை கணக்கில் எடுக்க வேண்டிய தேவையும் மகிந்த ராஜபக்ஸவுக்கு இருக்கிறது.
இந்தவகையில் பார்க்கும்போது குறைந்தது 100 பேரில் இருந்தாவது 40 பேரைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அமைச்சர்களைத் தெரிவு செய்யும்போது மகிந்த ராஜபக்ஸ எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றப் போகிறார் என்பது கேள்வி.
விருப்புவாக்குகளின் அடிப்படையில் தெரிவுகள் அமையுமா, திறமையின் அடிப்படையில் அமையுமா அல்லது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அமையுமா என்பதை எதிர்வரும் புதனன்று வெளியிடப்படும் அமைச்சர்களின் பட்டியலில் இருந்தே தெரிந்து கொள்ளமுடியும்.
கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவருமே தமக்கு முக்கியமான பதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேவேளை கடந்த அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகிக்காத விமல் வீரவன்ச போன்றோரும் இந்தமுறை முக்கிய அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
அமைச்சர்கள் நியமனம் என்பது பொதுத்தேர்தலை விடவும் மிகப்பெரிய சவாலான விடயமாக மகிந்த ராஜபக்ஸவுக்கு மாறியிருக்கிறது.
கூட்டணிக் கட்சிகளாக உள்ள சிறியகட்சிகளும் தமக்கு அமைச்சர் பதவிகளைக் கேட்கின்றன.
அரசாங்கத்தோடு இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக ஆசனங்கள் கிடைக்காது- போனாலும் எல்லாக் கட்சிகளும் குறைந்தது ஒரு ஆசனத்தையாவது தக்கவைத்துள்ளன.
எனவே ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவியாவது கொடுக்க வேண்டியது மகிந்த ராஜபக்ஸவுக்கு உள்ள பிரச்சனை.
இதனால் அவரால் 40 பேருக்கு குறைந்த அமைச்சரவையை அமைக்க முடியுமா என்ற கேள்வியும் சந்தேகமும் எழவே செய்கின்றது.
அதேவேளை, இன்னொரு புறத்தில் பிரதமர் பதவிக்கான மற்றொரு போட்டி தீவிரமடைந்திருந்தது.[தற்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்கள் டி.எம் ஜெயரட்ண, மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா போன்றோர் நேரடியாகவே பிரதமர் பதவிக்கான போட்டிக்களத்தில் குதித்திருந்த்கனர்]
பிந்திய செய்தி இணைப்பில்
ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்கு இந்தமுறை பிரதமர் பதவிக்குப் பதிலாக சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
டி.எம்.ஜெயரட்ண சுதந்திரக் கட்சியின் மிகவும் மூத்த தலைவர்.
ஏற்கனவே சந்திரிகா குமாரதுங்க அவருக்குப் பிரதமர் பதவிக்கான வாய்ப்பைக் கொடுக்க முன்வந்த போது- அதை மகிந்த ராஜபக்ஸவுக்கு கொடுக்கும்படி கூறியவர்.
அப்படிப்பட்டவர் இப்போது வெளிப்படையாகவே தனக்கு பிரதமர் பதவி தரப்பட வேண்டும் என்று கேட்டு வந்தவர் இன்று அதை மகிந்தாவிடமிருந்து உத்தியோகபூர்வமாகப் பெற்றுள்ளார்.
இன்னொரு பக்கத்தில் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவ மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளோடு தெரிவாகியவர்
பதுளையில் இருந்து தெரிவான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் பிரதமர் பதவியைக் குறிவைத்து காத்திருந்தார். இவர் மகிந்தாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவர்
இவர்கள் அனைவரும் தமக்கே பிரதமர் பதவி என்ற நம்பிக்கையில் இருந்தனர்
.
இந்தநிலையில் யாருடைய வெறுப்பையும் சம்பாதிக்காமல் பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்வதென்பது மகிந்த ராஜபக்ஸவுக்கு சிக்கலான காரியமாகவே இருந்தது.
அதனால் தான் ஆளும்கட்சியிலேயே அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்ற பசில் ராஜபக்ஸ பிரதமர் ஆகலாம் என்ற ஊகங்களும் கிளம்பியிருந்தன.
சுமார் 425,000 விருப்பு வாக்குகள் பெற்ற பசில் ராஜபக்ஸவை பிரதமர் ஆக்கினால் அதற்கு எதிராக யாருமே பகிரங்கமாக வாய் திறக்கமுடியாது.
அதேவேளை அது மகிந்த ராஜபக்ஸவுக்கு நீண்டகால நெருக்கடியை எற்படுத்தும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களே கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாம். எனவே இந்த நெருக்கடிக்கு அவர் எப்படியும் இன்று தீர்வு கண்டேயாக வேண்டும். என்ற நிலை உருவாகியிருந்தது.
எனவே பசில் ராஜபக்ஸவை பிரதமர் ஆக்குகின்ற விடயத்தில் மகிந்த ராஜபக்ஸ ஒன்றுக்குப் பலமுறை யோசித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தே. இன்று உத்தியேக பூர்வமாக நீண்ட சிக்கல்களுக்கு முடிவுகட்டும் நோக்கில் டி.எம்.ஜெயரட்ணாவை நாட்டின் 15வது புதிய பிரதமராக மகிந்தா அறிவித்து சிக்கல்களுக்கு முடிவுகட்டினார்
இன்று புதன்கிழமை அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரதமர் யார் என்பதை அறிவித்தேயாக வேண்டும்.
இந்தப் பிரச்சினையை மகிந்த ராஜபக்ஸ எப்படிச் சமாளிக்கப் போகிறார்? அடுத்த ஆறு வருடங்களுக்கும் பதவியில் இருக்கக் கூடிய ஒரு பிரதமரைத் தேர்வு செய்வாரா அல்லது சுழற்சி முறையில் வருடத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பதவியில் இருக்கக் கூடிய ஒரு முறையை அறிமுகப்படுத்துவாரா? என்று அனைவரும் எதிர்பாத்திருந்த வேளை
மகிந்தாவின் புதிய அரசுக்கான பிரதமர் பதவி மற்றும் அமைச்சர்கள் நியமனம் பற்றிய விபரங்கள் இன்று வெளிவந்துள்ளன.
எதைச் செய்தாலும் பிரதமர் பதவி மற்றும் அமைச்சர்கள் நியமனம் என்பனவற்றால் அரசாங்கத்துக்குள் அடுத்த சில மாதங்களுக்குள் கருத்து வேற்றுமைகளை நீடிக்கவே போகிறது.
காலப்போக்கில் அது மறைந்து போனாலும் தற்போதைக்கு இந்த மனக்கசப்புகளை மகிந்தவால் தீர்ப்பது இயலாத காரியமாகவே இருக்கும்.
பிந்திய செய்தி இணைப்பில்
பசில், விமல் உட்பட 35 பேர் கொண்ட அமைச்சரவை! : டி. எம். ஜயரட்ண புதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம்
இலங்கையின் புதிய நாடாளுமன்றம் நாளை கூடிய பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 35 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் எனத் தெரியவருகின்றது. புதிய அமைச்சரவையில் பிரதமராக ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான டி.எம்.ஜயரட்ண பதவியேற்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் முப்பத்தைந்து பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் ஆக இரண்டே இரண்டு புதிய முகங்களே இடம்பெறும் என்றும், ஏனைய அமைச்சர்கள் பழைய முகங்களாக இருப்பர் என்றும் கூறப்படுகின்றது.
ஆளும் தரப்பில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பசில் ராஜபக்ஷவும், கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற விமல் விரவன்சவுமே புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்கப் போகின்றவர்கள் என்று அறியப்படுகின்றது.
இந்த இருவரையும் தவிர, ஏனைய அமைச்சர்கள் அனைவரும் முன்னர் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களாகவே இருப்பர் என்றும் கூறப்படுகின்றது.
பிரதமர் பதவிக்கு டி.எம்.ஜயரட்ண நியமிக்கப்பட்டாலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவைக்குள் அதிகப்படியான சில பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் அலுவலக அமைச்சர் என்ற கோதாவில் சில அமைச்சர்களை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில் வெளிவிவகார விடயங்களையும் கண்காணிக்கும் பொறுப்புகள் பசிலுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் ஒவ்வொரு அமைச்சரின் கீழ் வரும் துறைகளின் விரிவும் பரப்பும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கட்டுரையாளர் ஹரிகரன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen