
புலம்பெயர்ந்த எமது மக்கள் தந்த பின்புல ஆதரவும் பலமும் தான் தேர்தலுக்கு முன் நாம் எதிர்கொண்ட உட்கட்சி முரண்பாடுகளினை துணிவுடனும் தெளிவுடனும் கையாள்வதற்கு உதவியது என எமது செய்தித்தளமான புதினப்பலகையிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
முதலில் உங்களுடைய கேள்விக்கு செல்வதற்கு முன்பு புலம்பெயர் மக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் பாரிய கடமை எனக்குண்டு.
திருக்கோணமலை முடிவுகள் அறிவிக்கப்படாத பரபரப்புக்கும், தனது தலைமைக்கு கிடைத்த வெற்றியின் உற்சாகத்திற்கும் இடையில், தனது பழுத்த அரசியல் முதிர்ச்சியுடன் தற்போதைய அரசியல் நிலமை, தேர்தல் நிலவரங்கள் பற்றி 'புதினப்பலகை' ஆசிரியர்களுடன் உரையாடினார்.
குரல்வழியான அவரது உரையாடலின் எழுத்துவடிவம் இது. அதிலிருந்து முக்கிய பகுதிகள்:
இம்முறை வாக்களித்த தமிழ்மக்களின் அளவு எதிர்பார்த்ததினைவிட குறைவாக இருந்துள்ளது? இந்நிலைமை குறிப்பாக யாழ்ப்பாணம் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தது. இதற்கு குறிப்பான காரணங்களினை எதனையும் கூறமுடியுமா?
நீங்கள் கூறுவதில் வெளிப்படையான உண்மை உண்டு.
யாழ்ப்பாண மாவட்டத்தினைப் பொறுத்தவரை மாவட்டத்தின் மக்கள் முழுமையாக மீண்டும் அங்கு வந்து குடியமரவில்லை. இது மிகமுக்கியமான விடயமாகும்.
இதற்கு மேலாக நடந்து முடிந்த தேர்தலின்போது அதிக எண்ணிக்கையான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தெளிவான அரசியற் கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ இல்லாமல் போட்டியிட்டமையும், ஏற்படுத்தப்பட்ட குழப்பகரமான பரப்புரைகளும் மக்களினை விரக்தி நிலைக்கு தள்ளி தேர்தலிலிருந்து தூர நிற்பதற்கு தூண்டியுள்ளதாகவே உணர்கின்றோம்.
திருகோணமலையைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் தங்களது அடிப்படைச் சனநாயக உரிமையான வாக்குப் பிரயோகத்தினை பயன்படுத்துவதற்கு எதிராக மிகத்திட்டமிட்டு செயற்பாடுகள் மேற்கோள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகரும், அவரது குண்டர்கள் அணியும் மிகமோசமான அச்சுறுத்தல்களிலும் தடைகளினை ஏற்படுத்துவதிலும் தமிழ்மக்களினை வாக்களிக்கச் செய்யவிடாமல் தடுப்பதிலும் ஈடுபட்டனர்.
தமிழ்மக்களின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டன. திருகோணமலை வடக்கில் சலப்பையாற்றுப் பகுதியில் தமிழ்மக்களிடமிருந்து வாக்காளர் அட்டைகள் பறித்துக் கிழிக்கப்பட்டன.
வாக்காளர்களின் போக்குவரத்திற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொதுப்போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடமுடியாமல் தடுக்கப்பட்டன. அதன் சாரதிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டனர்.
திருகோணமலையின் தொலைதூர கிராமங்களுக்கு இடையில் ஏற்கனவே காணப்படும் போக்குவரத்து தொடர்பாடல்களின் மட்டுப்பாடுகளுக்கு மேலாக மென்மேலும் திட்டமிட்டு சிரமங்கள் உருவாக்கப்பட்டன.
மூதூர், ஈச்சிலம்பற்று, நிலாவெளி, குச்சவெளி, திரியாய் ஆகிய இடங்களில் வாழ்ந்திருந்த மக்கள் இன்னமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்மாறியும் சிதறியும் வாழுகின்றார்கள்.
அவர்கள் மிகுந்த சிரமங்களினைத் தாண்டி வாக்களிக்க வேண்டிய நிலை இங்கு காணப்பட்டது.
இத்தகைய நிலைமைகளினைத்தான் அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்களும் எதிர்நோக்கவேண்டி இருந்தது.
வன்னி மாவட்டத்தினைப் பொறுத்தவரை ஏற்கனவே இடம்பெயர்ந்து பலதிக்குகளிலும் தற்காலிக இடங்களிலும் முகாம்களிலும் தங்கியுள்ள மக்களினை ஒருங்கிணைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் குறைபாடுகள் அதிகம் காணப்பட்டன.
குறிப்பாக உரிய வாக்குச் சாவடிகளுக்கு மக்களினை பேருந்து வண்டிகளில் அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மக்கள் ஆர்வம் கொண்டிருந்தும் உரியநேரத்திற்குள் அவர்களால் வாக்குகளினை அளிக்க முடியவில்லை. இதனை தற்செயல் நிகழ்ச்சியாக நாங்கள் கருதமுடியாது.
இவற்றுக்கு மேலாக பெருமளவில் பணபலமும் அதிகாரபலமும் பிரயோகிக்கப்பட்டது. பலமுனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மத்தியிலேயே மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது.
இம்முறை நடந்த தேர்தல் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக எம்மால் கொள்ளமுடியாது.
எனினும் நாம் தெளிவான குறிக்கோள்களுடனும் உறுதியான தீர்மானத்துடனும் எம்மக்களுக்காக எவ்வித தடுமாற்றமுமின்றி செயற்பட்டோம்.
தேர்தலினை அண்டிய காலங்களில் சில கட்சிகளும் குழுக்களும் மிகத்தவறான முறையில் மக்களினை திசை திருப்புவதற்கு முற்பட்டன.
பொய்யான தகவல்களினையும், பிழையான வாதங்களினையும் மக்கள் மத்தியில் பரப்பி மக்களினை குழப்பத்தில் ஆழ்த்தின. இது ஏற்கனவே துன்பத்தில் வாழுகின்ற மக்களினை மேலும் குழப்புவதற்கும் தேர்தலில் பங்கேற்கும் ஆர்வத்தினை குறைப்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தது.
புலம்பெயர் தமிழர்கள் நடந்துமுடிந்த தேர்தல் தொடர்பாக எத்தகைய செல்வாக்கினை அல்லது தாக்கத்தினைச் செலுத்தியிருந்தனர்?
முதலில் உங்களுடைய கேள்விக்கு செல்வதற்கு முன்பு புலம்பெயர் மக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் பாரிய கடமை எனக்குண்டு.
மிகப் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிகநெருக்கமாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர்.
அவர்கள் தந்த பின்புல ஆதரவும் பலமும் தான் தேர்தலுக்கு முன் நாம் எதிர்கொண்ட உட்கட்சி முரண்பாடுகளினை துணிவுடனும் தெளிவுடனும் கையாள்வதற்கு உதவியது.
அவர்களுக்கு எங்கள் மக்கள் சார்பான நன்றிகள்.
பலமுனைகளிலும் நெருக்கடிகளினை உருவாக்கியிருந்த இந்த தேர்தலினை, வெற்றிகரமாக கையாளுவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்மக்கள் தனியாட்களாகவும் குழுக்களாகவும் அமைப்புக்களாகவும் உதவி செய்தனர்.
புலம்பெயர் சமூகத்து பொதுசனத் தொடர்பு ஊடகங்களும் மக்களுக்கு உண்மைகளினைத் தெரிவிப்பதிலும் ஆரோக்கியமான விவாதங்களினை உருவாக்குவதிலும் துணைநின்றன.
அவைகளின் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட என்னால் முடியாது. ஆனால் அவர்களின் பணி முடிந்துவிட்டது என திருப்திப்பட இயலாது.
குறிப்பாக தாயகத்தின் கிராமங்களும் மக்களின் வாழ்வும் யுத்தத்தினாலும் சிங்கள ஆட்சியாளரின் தொடர்ந்த தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாகவும் சிதைந்து போயுள்ளன.
மீள்கட்டமைப்பும் இயல்பு வாழ்க்கையும் கூட அம்மக்களுக்கு மிகப்பாரிய சவால்களாக உள்ளன.
எல்லா விடயங்களுக்கும் அரசாங்கத்தினையும், அரசுசாரா தொண்டர் நிறுவனங்களினையும் நம்பி காத்திருக்க முடியாது. அதுவும் ஒருவிதமான அடிமைத்தன நிலைக்கே இட்டுச்செல்லும்.
இத்தகைய நெருக்கடியிலிருந்து தாயகத்து மக்களினையும் அவர்களது கிராமங்களினையும் மீட்டெடுக்க புலம்பெயர் தமிழர்களின் பொருள்வளமும், மனிதவளமும் மூளைவளமும் அவசியமாக உள்ளது.
கடந்த காலத்தில் அவர்கள் செய்த பங்களிப்பு அளப்பரியது எனினும், வேறுபட்ட பரிமாணத்தில் தேசியப் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதற்கு புதிய சவால்களினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
புலம்பெயர் தேசத்து தமிழ்மக்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து தாயகத்து மக்களால் இன்று உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் கைகோர்த்து ஆக்கபூர்வமாக செயற்படுவார்கள் என்பதில் எங்களுக்கு துளியளவும் சந்தேகம் இல்லை.
நடந்து முடிந்த தேர்தலினூடாக சிறீலங்கா பாராளுமன்றத்தின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கப்போகின்றது. இந்நிலையில் தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படப் போகின்றீர்கள்?
இங்கு நாங்கள் இரண்டு விடயங்களினைக் கவனிக்கவேண்டும்.
சிறீலங்கா பாராளுமன்றத்தில் மூன்றாவது தனிப்பெருங்கட்சி என்பதனைவிட முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிக்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ்மக்கள் தெரிந்தெடுத்து ஆணைப்படுத்தியிருக்கின்றார்கள்.
இதுவே மிகமிக முக்கியமான விடயமாகவுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல தமிழ்க்கட்சிகளும் சுயேட்சைகளும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தினை சரியான திசையில் பொருத்தமான அணுகுமுறைக்கு ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் முன்னெடுக்கும் என்ற தங்களுடைய அசையாத நம்பிக்கையினை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
எங்களது தேர்தல் அறிக்கையில் [விஞ்ஞாபனத்தில்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்காலத்தில் செயற்படும் என்பது மிகத்தெளிவாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
எமது தமிழ்த் தேசியவிடுதலையின் அடிப்படைகளிலிருந்து எவ்விதத்திலும் பிறழாமல் உறுதியாக நின்றுகொண்டு நாங்கள் செயற்படுவோம்.
அதன்பொருட்டு நிலைமைகளினை புரிந்துகொண்டு எங்களுடன் இணைந்து செயற்படவிரும்பும் சகல தமிழ் சக்திகளினையும் அணைப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமுமில்லை.
அமையப்போகும் புதிய அரசாங்கமும் குடியரசு அதிபர் [ஜனாதிபதி] மகிந்த இராஜபக்சவும் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக பேசவேண்டிய ஓரேயொரு தரப்பாக நமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
விரைவில் எங்களுடன் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளினை திருப்திப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளினை குடியரசு அதிபர் [ஜனாதிபதி] மகிந்த இராஜபக்ச ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கின்றோம்.
ஆரம்பிக்கவேண்டும்.
சர்வதேசநாடுகளினதும், சிறப்பாக இந்தியாவினதும் ஆதரவுடன் தமிழ்மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சிகளினை முன்னெடுக்க இருக்கின்றோம்.
தாங்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கு கூறவிரும்புவது....?
தமிழ்த் தேசியத்தின் உயிர்நாடியே வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தின் அரசியல் அடையாளமும், சமூக இருப்பும், பொருளாதாரச் செழுமையுமாகும். இது மூன்று பரிமாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
தமிழ்மக்களினை அரசியல் தெளிவுள்ளதும் விழிப்புடன் தொடர்ச்சியாக ஜனநாயக செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டக்கூடியதுமான பலம் வாய்ந்த மக்கள் கட்மைப்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வளப்படுத்த வேண்டியுள்ளது.
இரண்டாவது தமிழ்த் தேசிய விடுதலைக்கான முயற்சிகளில் முழுமையான பலத்துடனும் தீர்க்கமான பார்வையுடனும் உறுதியான முன்னெடுப்புக்களினை சாத்தியமான நெகிழ்வுகளுக்கூடாக சகல தளங்களிலும் முன்னெடுப்பது.
மூன்றாவதும் முக்கியமானதும் தமிழர் தாயகத்தின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியமர்வு அபிவிருத்தி ஆகியவிடயங்களினை சிறப்பாகவும் உரித்துடனும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவது.
இவற்றினை மேற்கொள்வதற்கு வேண்டிய தலைமைத்துவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித கேள்விக்கும் அப்பாற்பட்ட வகையில் வழங்கும்.
அதனோடு இணைந்து தோள் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தேசத்து மக்களுக்கும் குறிப்பாக அறிவாளிகள், வல்லுனர்கள், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரினதும் தவிர்க்க முடியாத கடமையாகும்.
அதனை அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி நிறைவேற்ற வேண்டும்.
என வேண்டுகோளும் விடுத்துள்ளார்
Keine Kommentare:
Kommentar veröffentlichen