
இரு நாடுகள் கொண்ட ஒரு தேசம் என்ற அரசியல் தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கையின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை களத்திலும் புலத்திலும் கடும் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருப்பதுடன்
மக்கள் மத்தியிலே குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனத்தின் ஒற்றுமைக் குலைவும் அவ்வினத்தின் அரசியற் பலம் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்படுவதும் போராட்டத்தின் மீது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். இதனால்தான் ஒற்றுமையில் பலம் காண வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
ஆனால் சில அரசியற் போராட்ட விடுதலைப் பயணங்களில் வேற்றுமையில் பலம் காணுகின்ற அரசியற் சாணக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டியதும் தவிர்க்க முடியாததும் காலத்தின் தேவையுமாக ஆகிவிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இன்று பிளவு ஏற்பட்டுப் போயிருக்கின்ற இந்த நிலமையில் இந்தப் பிளவினால் ஏற்பட்டுள்ள வேற்றுமையால் ஏற்படுத்தப்படக்கூடிய பலாபலன்கள் அதிகம் இருக்கின்றன.
ஒன்றை மட்டும் தமிழ் மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வி கண்டிருக்கின்றமையானது தமிழ்த் தேசிய விடுதலைக்கான வெற்றிவாய்ப்பை இல்லாமல் செய்து விடவில்லை. உண்மையில் தமிழ் மக்களினது இந்த தேசிய விடுதலைப் போராட்டமானது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அரசியல் ரீதியாக தற்போது நிறையவே காணப்படுகின்றது.
போராட்டமானது சர்வதேச மயப்பட்டு களத்திலும் புலத்திலும் இலங்கை அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக கடும் சவாலிடுவதற்கான வாய்ப்பு மாறிவரும் இன்றைய உலக ஒழுங்கில் அதிகம் காணப்படுகின்றது. 50 வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் ரீதியான விடுதலைப் போராட்டத்திற்கு கடந்த 30 வருடகாலமான ஆயுதப் போராட்டம் அது தோல்வி அடைந்திருந்தாலும் கூட ஒரு கூடுதல் வலுவையும் புதிய பரிமாணத்தையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
நாடு கடந்த அரசியற் செயற்பாடுகள் (Transnational Political Practices)
குறிப்பாக களத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய அரசியல் செயற்பாடுகளிற்குச் சமாந்தரமாக புலத்திலே தமிழ் மக்கள் மேற்கொள்ளக் கூடிய நாடு கடந்த அரசியற் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் சவாலிடக்கூடிய ஆனால் என்றுமே தோற்கடிக்கப்பட முடியாத ஒரு பெரும் சக்தியாக மாறி வருகின்றது.
குறிப்பாக நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சி முற்று முழுதாக ஜனநாயக சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு துரித பரிமாணம் அடைந்து வருகின்ற நிலையிலும் உலகம் பூராகவுள்ள சகல புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து உலகத் தமிழ் பேரவையினூடாக(GTF) நிறுவனமயப்படுத்தப்பட்ட முறைசார்ந்த நாடுகடந்த அரசியலில் ஈடுபட ஆரம்பித்திருப்பதும் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்ட காலத்தில் சம்பாதித்திருந்த அரசியல் பேரப்பேச்சு வலுவைக் காட்டிலும் கூடுதலான வலுவை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்து விடுமோ என்று இலங்கை இந்திய அரசாங்கங்கள் அஞ்சத்தொடங்கி இருக்கின்றன.
அதனால்தான் தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் மேலும் தீவிரமடைந்து பலம் பெறுவதற்குள் தாங்கள் முந்திக்கொண்டு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணித்து போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டுமென்று அவை பிரயத்தனப்படுகின்றன.
குறிப்பாக அண்மையில் லண்டனில் நடந்து முடிந்த உலகத் தமிழ் பேரவையின் மாநாடு ஒரு பெரும் அரசியல் வெற்றி என்றும் உலகத் தமிழ் மக்களின் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நாடுகடந்த அரசியல் செயற்பாட்டில் ஒரு பெரும் முன்னோக்கிய பாய்ச்சல் என்று கருதப்படுகின்றது.
இம் மாநாட்டில் பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமையானது உலகத் தமிழர் பேரவைக்கு பிரித்தானியா கொடுக்கின்ற அங்கீகாரத்தையே காட்டுகின்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானியாவின் மூன்று பிரதான அரசியல் கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது விருப்பத்தையும் உலகத் தமிழர் பேரவையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கான தமது ஆசியினையும் வழங்கிச் சென்றமை இங்கு கவனிக்கத்தக்கது.
அத்துடன் முதன் முறையாக தமிழ் மக்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாடு ஒன்றின் ஊடாக பிரிட்டன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போர்க் குற்றங்கள் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியமையும் அரசியலமைப்பு மாற்றம் ஒன்றினூடாக தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியமையும் முக்கியத்துவம் பெறுகின்றது. இவை அரசியலில் தற்செயலாக நடைபெறும் நிகழ்வுகள் அல்ல. மாறாக ஒரு நாட்டின் அரசியல் யதார்த்தம் மற்றும் அரசியல் மனப் போக்கின் நோக்கம் கருதிய பிரதிபலிப்புக்களே ஆகும். ஆகவே தற்போது ஏற்பட்டுள்ள தருணம் தமிழ் மக்களுக்காக ஏற்பட்டிருக்கின்ற தருணம். இதனை நன்கு பற்றிப் பிடித்துக் கொண்டு தமிழ் மக்கள் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு வாய்ப்புக்கள் நிறைந்து காணப்படுகின்ற தற்போதைய சந்தர்ப்பத்தில் எமது பல தசாப்த காலப் போராட்டத்தின் இலக்கினையோ அல்லது கொள்கையினையோ விட்டுக் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாததும் அவசியம் அற்றதுமான ஒன்றாகும்.
தமிழ்த் தேசியத்தை உயிர்ப்பாக பேணுதல்
இந்த நிலையில் ஆயுதப் போராட்டத்தின் தோல்வியினை ஒரு காரணமாகக் காட்டி சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில விட்டுக்கொடுப்புக்களை செய்துதான் ராஜதந்திர அரசியல் நடாத்த வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாதமும் செயற்பாடும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
அரசியல் ராஜதந்திரம் என்று கூறி பல்வேறு விடுதலைப் போராட்டங்களில் கொள்கைகளிலும் குறிக்கோள்களிலும் விட்டுக் கொடுப்புக்கள் செய்யப்பட்டிருக்கின்றனதான். ஆனால் அத்தகைய போராட்டங்கள் தமது இலக்குகளை முழுமையாக அடைந்ததாக வரலாறு இல்லை. மாறாக அயராத தொடர்ச்சியான போர்க் குணம் மிகுந்த அரசியற் போராட்டங்களே தமது இலக்குகளை முழுமையாக அடைந்திருக்கின்றன. இதற்கு தென்னாபிரிக்கா, குறோசியா, கிறீமியன் டாடா போன்ற பல சமூகங்களை உதாரணமாக குறிப்பிடலாம்.
ஆகவே தமிழ் தேசிய போராட்டத்தின் தேசியம் என்ற கொள்கையை கைவிட்டு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் அதனை 50 வருடங்களுக்கு முன்னரே செய்திருந்திருக்கலாம். தேசியத்திற்காக இத்தனை பெரும் தியாகங்கள் செய்யப்பட்டு அரசியல் போராட்டம் ஒரு பலம் பெற்றிருக்கின்ற ஒரு வேளையில் அதனைக் கைவிடுவது என்பது ஒரு வரலாற்றுத் துரோகம்.
தற்போது தமிழ்த்தேசிய விடுதலைப் பேராட்டத்தைப் பொறுத்த வரையில் தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளின் முக்கிய கடமை எதுவென்றால் தமிழ்த் தேசியத்தை அணைய விடாமல் உயிர்ப்பாக வைத்திருப்பதும் அதனை அவர்களால் தமது காலத்தில் வென்றெடுக்க முடியாது விட்டால் அடுத்த சந்ததிக்கு அதனைக் கொண்டு செல்வதும் தான். தந்தை செல்வா 1949 ஆம் ஆண்டு கூறிய ஒரு கருத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. ”நாங்கள் ஒரு பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். எமது காலப் பகுதிக்குள் அதனை பூர்த்தி செய்வதற்கு நம்புகின்றோம். எமது காலப்பகுதிக்குள் இதனை அடைவதற்கு நாம் தவறினாலும் கூட எமது இளைய சந்ததியினரை நாம் அணி திரட்டி இந்தப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி காரணமாக தமிழ் மக்கள் உளவியல் ரீதியில் சோர்வடைந்து போயிருக்கின்ற இத்தருணத்தைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு அரைகுறைத் தீர்வை திணித்து விடுவதன் மூலம் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளயை வைத்து விட முடியும் என்ற சிங்கள, இந்திய அரசாங்கங்களின் முயற்சியில் சிக்கி போராட்டத்தினை மழுங்கடிக்கும் பாதையில் விளங்கியோ விளங்காமலோ தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்வதாகவே தெரிகின்றது.
இந்திய மேற்பார்வையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் எந்தத் தீர்வும் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக அணைத்து விடும் ஆபத்து இருக்கின்றது. எவ்வாறு இந்தியாவிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினால் பல தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திராவிட நாடு என்ற தனிநாட்டுக் கோரிக்கை ஒரு கட்டத்தில் செத்துப்போனதோ அதே நிலைமை ஈழத்தமிழ் மக்களுக்கும் ஏற்படும் ஆபத்து இதனால் இருக்கின்றது.
தமிழ் தேசிய அரசியல் கருத்து வினைப்பாடு (Tamil National Political Discourse)
தற்போதுள்ள நிலையில் தமிழ் தேசியத்தை உயிர்ப்பாக வைத்திருப்பதற்கு தீவிரத் தன்மையான ஒரு அரசியல் கருத்து வினைப்பாடு அல்லது அரசியல் கலந்துரையாடலை (Political Discourse) உருவாக்குவது மிகவும் அவசியம். அதுமட்டுமன்றி எந்த ஒரு சந்தர்ப்பத்திலேனும் மேற்கொள்ளப்படக் கூடிய ஒரு தீர்வுத் திட்ட முயற்சியில் அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு சில அனுகூலங்களை ஏற்படுத்துவதற்கும் இது உதவும். இதற்கு சிங்கள அரசாங்கங்கள் எவ்வாறு கடும்போக்கு சிந்தனை வாதத்தை தீர்வுத் திட்ட முயற்சிகளின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சாதகமாக பயன்படுத்தி அம்முயற்சிகளை தோற்றுப்போக வைத்தன என்பதனையே நாம் உதாரணமாக பார்க்க முடியும்.
அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் கிடைக்காமல் செய்வதில் சிஹலஉறுமய, ஹல உறுமய மற்றும் தேசப் பற்றுக்கான தேசிய இயக்கம் ஆகியவற்றின் கடும்போக்கு சிங்களத் தேசிய சிந்தனை அல்லது கலந்துரையாடல் பெரும் பங்கு வகித்திருக்கின்றது. பேரினவாத சிங்களப் புத்திமான்களினால் நன்கு திட்டமிடப்பட்டு 1980 களில் உருவாக்கப்பட்டதே இந்தச் சிங்கள சிந்தனை அல்லது சிங்கள தேசிய கருத்து வினைப்பாடு (Sinhala Nationalist Discourse) ஆகும்.
குணதாச அமரசேகர மற்றும் நளின் டி சில்வா ஆகியோரே இதன் முன்னோடிகள் ஆவர். இக் கோட்பாட்டின்படி சிங்கள தேசத்தின் முன்னாள் புகழ் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். முற்றுமுழுதாக சிங்களம் பேசுகின்ற மக்களையே இந்த இலங்கை என்ற சிங்கள தேசம் கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் சிங்கள ஒருமைப்பாடும் பௌத்தத்தின் கீர்த்தியும் இந்துத் தமிழ் மக்களினாலும் பின்னர் கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது. 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் மீண்டும் சிங்களவர்கள் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் தாமே என்பதனை நிலைநாட்டவும் பௌத்தத்தை நாட்டின் முதன்மைச் சக்தியாக ஏற்படுத்துவதற்குமான நேரம் ஏற்பட்டிருக்கிறது என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
இதனடிப்படையில் சிங்கள இனவாதக் கட்சிகள் தீர்வு முயற்சின் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் மேற்கொண்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தினால் இலங்கை அரசாங்கம் சில வரையறைகள், அழுத்தங்களுக்கு உட்பட்டே தீர்வு முயற்சியில் செயற்பட வேண்டியிருக்கின்றது என்று புரிந்து கொள்வதற்கு உதவியது. அதற்கேற்பவே அவையும் செயற்பட்டன. ஆனால் ஒட்டுமொத்தத்தில் இது சிங்கள இனவாத அரசியலில் ஒரு உபாயமே ஆகும். இந்த இனவாத அரசியல் உபாயமே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்பட்டு ஈற்றில் தோற்றுப் போவதற்கும் காரணமாக இருந்துள்ளது.
அதேபோல விடுதலைக்காக போராடிய பல்வேறு சமூகங்களும்; இத்தகைய கடும் போக்கு நிலைப்பாட்டை அரசியல் உபாயகமாகப் பயன்படுத்திருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக பாலஸ்தீனத்தில் அம்மக்களின் விடுதலைக்கான போராட்டம் இன்று வரை இலக்கு மாறாமல் உயிர்ப்பாக இருப்பதற்கு ஹமாஸ் இயக்கத்தின் கடும்போக்கு நிலைப்பாடு காரணமாக இருந்திருக்கின்றது. இல்லையென்றால் யசீர் அரபாத் எப்போதோ ராஜதந்திரம் என்று போர்வையில் விட்டுக்கொடுப்பை செய்து அம்மக்களின் தேசியத்திற்கான விடுதலை நெருப்பை அணைத்து விட்டிருப்பார். அதேபோலத்தான் வடஅயர்லாந்தில் சின்பெயின் அமைப்பின் ராணுவப் பிரிவான ஐரிஷ் குடியரசு ராணுவத்தின் கடும் போக்கு நிலைப்பாடு ஈற்றில் நல்ல அரசியல் பலாபலன்களைப் பெற்றுக் கொடுத்தது.
இத்தகையதொரு கடும்போக்கு அரசியல் செயற்பாடு தற்போதுள்ள நிலையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அவசியம். தமிழ் தேசிய மக்கள் முன்னணி அத்தகையதொரு கடும்போக்கு கொள்கையை கொண்டிருக்கவில்லையாயினும் இரு நாடுகள் ஒரு தீர்வு என்ற அம்முன்னணியின் நியாயயபூர்வமான நிலைப்பாடு இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டு தேசியம் உயிர்ப்பாக பேணப்படுவதற்கும் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.
இது தற்போது தமிழ் மக்களின் பலவீனமான நிலையை பயன்படுத்தி திணிக்கப்பட முயற்சிக்கப்படும் எந்தவொரு தீர்வு முயற்சியில் இருந்தும் தேசிய விடுதலைப் போராட்டத்தை பாதுகாப்பதற்கு உதவுவதுடன் ஒரு அரசியற் கருத்து வினைப்பாட்டை ஏற்படுத்துவதனூடாக தேசியப் போராட்டம் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப்படுவதற்கும் வலுசேர்க்கும்.
தற்போது அரசியற் கருத்துக் களத்திலே தமிழ் தேசியம் என்ற அரசியல் கருத்து வினைப்பாடு பலமாக எதிரொலிப்பது இன்றியமையாதது. இல்லாவிட்டால் இந்நிலைமை தேசியத்திதை உயிர்ப்பாக வைத்திருப்பதில் ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
தொடர்ந்து போராடுவோம்
ஆகவே தற்போது எது முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் எமது விடாத தொடர்ச்சியான போராட்டம் தான். உலகமயமாதலின் ஆதிக்கத்தில் ஏற்பட்டு வரும் மாறிவரும் உலக ஒழுங்கின் கீழ் தமிழ் மக்கள் தமது தேசிய விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு. சிறந்த அரசியல் உபாயங்களுடன் வழமையான மரபு ரீதியான வலஞ்சுழியான அரசியற் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளை விடுத்து இடம் சுழியான அரசியற் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளினூடாக போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வெற்றிபெற வேண்டும்.
தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசிற்கெதிரான நெல்சன் மண்டேலா தலைமையிலான அரசியற் போராட்டம் அத்தகைய உபாயங்களுடன் தான் செயற்பட்டது. பெரும் கனியவள செல்வச் செழிப்பும் கைத்தொழில்துறை வளமும் சிறுபான்மை வெள்ளையின அரசாங்கத்துடன் இருந்த போதும் அவ்வரசாங்கமானது அதன் அண்டை நாடுகளிளும் மேற்கத்தைய நாடுகளிலும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. இதனை நன்கு புரிந்து கொண்டே கறுப்பர்களின் அரசியற் போராட்ட உபாயம் வகுக்கப்பட்டது.
அவர்களது அரசியல் இயக்கமானது தென்னாபிரிக்காவின் உள்ளே பல்வேறு உத்திகளுடன் போராட்டம் நடத்திய அதேவேளை நாட்டுக்கு வெளியே ஏனைய சமூகங்களுடன் உறவுகளைப் பேணியது. வெள்ளையின இனவெறி அரசாங்கம் எங்கெங்கெல்லாம் பலமாக இருந்ததோ அங்கெல்லாம் சவாலிடுவதைத் தவிர்த்து எங்கெங்கெல்லாம் பலவீனமாக இருந்ததோ அவற்றை இனங்கண்டு இலக்கு வைத்து செயற்பட்டது. இது அவர்களது உபாயத்தின் வெற்றிக்குக் காரணம்.
இலங்கை அராசாங்கத்தின் பலவீனங்கள் பல இருக்கின்றன. அவற்றை அறிந்து களத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆனால் பல்முனைக்குரிய போராட்டங்களை மேற்கொள்ளும் போது அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்ய முடியும். புலத்திலே தமிழ் மக்கள் வெகுஜன இயக்கங்களாகச் செயற்பட்டு நாடு கடந்த அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான உபாயங்கள் வகுக்கப்பட்டு செயற்பாடுகள் தொடங்கப்பட்டிருக்கின்ற அதேவேளை நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியும் ஒரு புறத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றுக்கு சமாந்தரமான முறையில் களத்தில் அரசியல் ரீதியாக செயற்படக் கூடிய தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்படுவது இன்றியமையாதது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூறுவது போல அரசியல் பலம் பிளவுபடுத்தப்படாமல் காக்கப்படுவது தமிழ் மக்களின் அரசியல் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க உதவும் என்பது அர்த்தமற்ற ஒன்று என்பதை தமிழ் சிங்கள முரண்பாட்டின் வரலாற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெற்று பேரம் பேசும் சக்தியை அதிகரித்து தீர்வு முயற்சியில் பலாபலன் அடையலாம் என்பது இதுவரை யதார்த்தத்திற்கு ஒத்துவராத ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. உண்மையில் அரசியல் பேரம் பேசும் சக்தி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு களத்திலும் புலத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களினூடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
இத்தகைய போராட்டங்களினூடாக ஒரு அரசியல் பேரம் பேசும் சக்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காமல் இந்தியாவிடம் சரணாகதி அடைந்து ஒரு போதும் தமிழ் தேசிய விடுதலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றெடுக்க முடியாது.
உலகமயமாதலில் அஹிம்சையின் புதிய பரிணாமம்
பெரும்பான்மையின மக்களுக்கு எதிராக சிறுபான்மையின மக்கள் அஹிம்சை ரீதியாக அரசியல் போராட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. இது பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையைப் பொருத்தவரையில் ஒரு யதார்த்த பூர்வமான உண்மையாகவே காணப்பட்டது. இந்தியாவிலே காந்தி பெரும்பான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆங்கிலேய அதிகாரத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டமையினால் வெற்றிபெற்றிருந்தார்.
ஆனால் இலங்கையிலே தமிழரசுக் கட்சி சிறுபான்மையின தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கொண்ட போராட்டங்கள் வன்முறைப் பிரயோகங்களினால் நசுக்கப்பட்டன. உண்மையில் அஹிம்சையின் பலம் என்பது பெரும்பான்மையின மக்களின் ஒன்று திரண்ட பலத்திலேயே தங்கியிருக்கின்றது. இது இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு இல்லாமல் இருந்தமையும் தமிழரசுக் கட்சியின் அஹிம்சைப் போராட்ட தோல்விக்கு காரணமாக இருந்தது. பெரும்பான்மையின சிங்கள மக்களின் பலமே சிங்கள அதிகாரபீடத்தை தாங்குவதனால் அஹிம்சைப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களால் அதனை ஆதிக்கம் செய்ய முடியவில்லை.
ஆனால் இன்றைய உலகமயமாதலின் கீழ் அஹிம்சைப் போரின் பரிமாணம் மாற்றம் கண்டிருக்கின்றது. ஒப்பீட்டளவில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான தமிழ் மக்களே உலகெங்கிலும் பரந்து வாழுகின்ற பொழுதிலும் அஹிம்சை வழியில் அவர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய நாடு கடந்த அரசியல் போராட்டம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
இது இன்று தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு பெரும் பலமாக மாற்றம் கண்டிருக்கிறது. பல்வேறுபட்ட போராட்ட வடிவங்களை இதனூடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒரு உதாரணமாக இலங்கையிலிருந்தான பொருட்களை நிராகரிக்கும் போராட்டம் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும். இந்தப் போராட்டம் தமிழ் மக்களையம் தாண்டி ஏனைய நாட்டு சமூகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு பாரியளவில் மேற்கொள்ளப்படும் போது அதன் தாக்கத்தை இலங்கை அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். இது ஒரு உதாரணம் மட்டுமே.
மகாத்மாகாந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக ”சுவதேசி” என்ற உள்ளுர்ப் பொருளாதாரம் காணப்பட்டது. இது சமூக ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் தமக்குத் தாமே வளங்கள் மற்றும் திறமைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் சுய அபிவிருத்தி கண்டு எவர் மீதும் சார்ந்து இராமல் அஹிம்சைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படையை வலியுறுத்துகிறது. சுவதேசி என்பது மக்களின் பொருளாதாரத்தையும் தம்மைத் தாமே அவர்கள் ஒழுங்கமைத்துக் கொள்வதையும் குறிக்கிறது. பொருளாதார விடயங்களிலே சுயஒழுங்கமைப்பானது ஒரு சமூகத்தின் பொருளாதார சுதந்திரத்திற்கு அடிப்படையானது என்றும் இந்தப் பொருளாதார சுதந்திரம் இன்றி அரசியற் சுதந்திரமோ அல்லது சுய நிர்ணயமோ ஏற்பட முடியாது என்றும் காந்தி நம்பினார்.
இன்று இலங்கையில் சிங்கள அரசாங்கத்தின் மீதும் இந்தியாவின் மீதும் தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி தங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் களத்தில் உள்ள தமிழ் மக்கள் காந்தியின் சுவதேசி என்ற கொள்கையின் அடிப்படையில் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உண்மையான அரசியல் சுதந்திரம் ஏற்பட முடியும். இதற்கான வேலைத்திட்டங்களை புலம்பெயர் சமூகத்தில் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்படக் கூடிய ஒரு கட்சி இன்று களத்தில் தேவை.
வரலாறே எமது வழிகாட்டி
நாம் எதனையுமே சாதிக்கவில்லை என்ற மனப்போக்குடன செயற்படுபவர்கள் ஒருபோதுமே ”எம்மாலும் முடியும்” என்ற நேர்த்தன்மையான உத்வேகத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். மல்கம் என்ற அறிஞர் கூறுவது போல 'நீ ஒன்றையுமே செய்யவில்லை என்று நான் உன்னை நம்ப வைப்பேனானால் பின்னர் உன்னால் எதனையுமே செய்ய முடியாது'. நாம் எத்தனையோ பல சாதனைகளை எமது அரசியல் இராணுவ போராட்டங்களினூடாக அடைந்திருக்கின்றோம். இதனை மக்கள் மத்தியில் தெளிவு படுத்துவதை விட்டுவிட்டு நாம் எதனையுமே இந்தப் போராட்டங்களினூடாக சாதிக்கவில்லை என்றும் எல்லாவற்றையுமே இழந்து நிற்கின்றோம் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்தை ஏற்படுத்துவது இளம் சந்ததியினர் மத்தியில் ஏற்படக் கூடிய உத்வேத்தை மழுங்கடிக்கச் செய்வதாகவே அமையும்.
ஆபிரிக்க வரலாற்று ஆசிரியரான ஜோன்கென்றிக் கிளார் பின்வருமாறு வரலாறு பற்றிக் கூறுகிறார். ”நாளொன்றின் தமது அரசியல் மற்றும் கலாச்சார நேரத்தினை கூறுவதற்காக மக்கள் பயன்படுத்துவதே வரலாறு என்ற கடிகாரம். மனிதப் புவியியலின் வரைபடத்தில் தம்மைக் கண்டுபிடிப்பதற்காக மக்கள் பயன்படுத்தும் ஒரு திசையறி கருவியாகவும் அது காணப்படுகிறது. மக்கள் இதுவரை எப்படி இருந்து வந்தார்கள், எங்கே இருந்தார்கள் எதுவாக இருந்தார்கள் என்பவற்றை மக்களுக்கு கூறுவதே இந்த வரலாற்றின் பணியாகும்”
வரலாறு ஆற்றுகின்ற முக்கியமான பணி என்னவென்றால் மக்கள் இன்னமும் எங்கே பயணிக்க வேண்டியிருக்கிறது என்பது பற்றியும் எதுவாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் கூறுவதாகும்.
மேலே காட்டப்பட்டுள்ள தமிழ் மக்களின் வரலாற்று விளக்கப்படம் இதனூடாக ஒரு தெளிவான செய்தியை தமிழ் மக்களுக்குச் சொல்லுகிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen