Main Pages Kathiravan.com

Dienstag, 26. Januar 2010

தமிழ் என்ன செய்யப் போகிறார்கள்?: "தமிழர்களுக்கான "தலைமை யார்? என்பதை" தீர்மானிக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல்"


ஜனாதிபதி தேர்தலில்:  தமிழ்மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
 நாளை நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் பெரிதும எதிர்பார்ப்புக்குரியதொன்றாக மாறியுள்ளது.

இதுவரை நடந்துள்ள ஜனாதிபதித் தேர்தல்களில் இந்தத் தேர்தலில் தான் சிறுபான்மை அரசியல் கட்சிகளின பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது.அத்துடன் இந்தத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினரே இருப்பர் என்ற கணிப்பினாலும் இது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுதத்தியுள்ளது.

1982ம் ஆண்டில் குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தமிழ்மக்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தது. அதற்குப் பிந்திய தேர்தல்களில் தமிழ்மக்களின் பங்கேற்பு ஜனாதிபதித் தேர்தல்களைப் பொறுத்தவரையில் குறைவாகவே இருந்தன. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மிகமிகக் குறைந்தளவானோரே வாக்களிக்கும் தேர்தலாக- ஜனாதிபதித் தேர்தல் இருந்து வந்துள்ளது. ஆனால் இந்தமுறை அதிகளவிலான தமிழ்மக்கள் வாக்களிப்பர் என்ற கருத்து நிலவுகிறது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வடபகுதி மக்களுக்கு இலங்கையின் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் உரிமையை வழங்குவதற்காகவே முன்கூட்டியே தேர்தலை நடத்த முன்வந்ததாகக் கூறியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆனால் வடபகுதி மக்களால் முழுமையாக தமது வாக்குகளை அளிக்கக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதும்- அவர்கள் வாக்களிக்கும் மனநிலையில் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.



தேர்தல் புறக்கணிப்பை தவிர்க்குமாறு பல தரப்புகளில் இருந்தும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டுவார்களா என்பது கேள்வியே. அத்துடன் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் அதிகமாகவே உள்ளது.
கட்சி சார்ந்து வாக்களிக்கப் போகிறார்களா?


அல்லது வேட்பாளர்களின் தராதரத்தை அறிந்து வாக்களிக்கப் போகிறார்களா?


அல்லது கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கப் போகிறார்களா?
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சரத் பொன்சேகாவின் பக்கம் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக கருத்துக்கணிப்புகள் கூறினாலும்- அது உண்மையா என்பதை தேர்தலுக்குப் பிறகே உறுதி செய்ய முடியும்.
வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்களான மகிந்த ராஜபக்ஸ மற்றும் சரத் பொன்சேகா, ஆகியோருடன் தமிழ் வேட்பாளரான சிவாஜிலிங்கம், தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரட்ண என்று நான்கு தெரிவுகள் அவர்களுக்கு இருப்பதை மறுக்க முடியாது.


தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கிறது. ஆட்சி மாற்றம் ஒன்றினூடாகவே தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஆதரவு கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சில வாக்குறுதிகளை சரத் பொன்சேகா வழங்கியிருந்தாலும் அது தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கக் கூடியதாக இருக்கவில்லை என்பது வெளிப்படை.  ஆனாலும் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்ஸவைத் தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது. அதன் காரணமாகவே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.


இன்னொரு பக்கத்தில் ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட் போன்ற அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்ஸவின் பக்கம் நிற்கின்றன. அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு இந்தக் கட்சிகள் கோரி வருகின்றன.

ஆனால் தமிழ்மக்களின் தெரிவு யாருக்கு சாதகமாக இருக்கும்? ஒருபக்கம் சார்ந்திருக்குமா அல்லது வாக்குகள் பிரிந்து போகுமா என்ற கேள்விகள் நீடிக்கின்றன.
தமிழ்மக்களின் தெரிவு என்பது சரத் பொன்சேகா- மகிந்த ராஜபக்ஸ என்ற இரு பிரதான வேட்பாளர்களிடம் இருந்து பிரிந்து போகுமேயானால் அது தற்போது இவர்களை நம்பி அரசியல் நடத்தும் பெரும்பாலான கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அதாவது சிவாஜிலிங்கம் அல்லது விக்கிரமபாகுவுக்கு கிடைக்கும் வாக்குகள் தமிழ் அரசியல்கட்சிகளின் செல்வாக்கை கேள்விக்குட்படுத்துவதாக அமையும். அதேநேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இது நெருக்கடி மிக்கதொரு நிலை தான்.


இந்தக் கட்டத்தில் அவர்களின் ஆதரவு பெற்ற சரத் பொன்சேகாவுக்கு வாக்குகள் அதிகமாகக் கிடைக்கத் தவறினால் அது ஐதேகவின் தோல்வியாகவோ- பொன்சேகாவின் தோல்வியாகவோ அல்லது ஜேவிபியின் தோல்வியாகவோ பார்க்கப்படமாட்டாது. முற்றிலும் அந்தத் தோல்விக்கு கூட்டமைப்பே பொறுப்பேற்க நேரிடும். இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்படுமானால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி விடும் ஆபத்தையும் தோற்றுவிக்கலாம்.

அதேவேளை மகிந்த ராஜபக்ஸவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கத் தவறினால் ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட் போன்ற- அவருக்கு பின்னாலுள்ள கட்சிகளின் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் கட்சிகளுக்கு இதுவரையில் கிடைத்த அரசமரியாதைகள் தொடருமா என்ற கேள்வி எழும். தமிழ் அரசியல்கட்சிகள் மத்தியில் இரண்டுபட்டு நின்று ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைத்தாலும் அது தமிழ்மக்களின் பிரச்சினைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வராது என்றே நம்பப்படுகிறது. இதைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட தெளிவாக ஏற்றுக்கொள்கிறது. ஈபிடிபியும் அதில் தெளிவாக இருக்கிறது. படிப்படியாகவே உரிமைகளை மீட்கலாம் என்பது அதன் நிலைப்பாடு. இதைத் தெரிந்திருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்குக் காரணம் ஆட்சிமாற்றம் அவசியம் என்பதே. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பிரதான வேட்பாளர்கள் இருவரினதும் பின்னணி மற்றும் கடந்த காலங்களை அவர்களால் இலகுவில் மறக்க முடியாது.
இரு பிரதான வேட்பாளர்களினது நகர்வுகளும் நடவடிக்கைகளும் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கியது வரலாற்று உண்மை. அதை யாரும் பூசிமெழுகி விடமுடியாது. பசப்பு வார்த்தைகளால் அதை முறைத்து விடவும் முடியாது. அப்படிப் பூசிமெழுகி விட முனையும் சக்திகளை தமிழ் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புவதற்கும் இல்லை. இந்த ஜனாதிபதித் தேர்தல் தனியே இலங்கையின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கானதாக மட்டும் கருதப்படாது.

தமிழ் மக்களின் தெரிவு என்ன- அவர்களின் விருப்பம் என்ன என்ற கேள்விக்கும் பதிலளிக்கப் போகிறது.
தமிழ் மக்கள் மகிந்தவுக்கு அதிகளவில் வாக்களித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு மீது கேள்வி எழும்பும். அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு அதிகளவில் வாக்களித்தால் ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட் போன்றவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.


சிவாஜிங்கம் அல்லது விக்கிரமபாகுவுக்கு அதிகளவு வாக்களித்தாலோ- தேர்தல் புறக்கணிப்பில் அதிக அக்கறை காண்பித்தாலோ ஒட்டுமொத்தத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளுமே தமிழ் மக்களின் நாடித் துடிப்பை- அவர்களின் விருப்பை- அபிலாஷைகளைப் புறக்கணித்து விட்டதாக அர்த்தப்படும்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் என்ன செய்யப் போகிறார்கள்?

- ஹரிகரன்-

Keine Kommentare:

Kommentar veröffentlichen