
தலைவர் பிரபாகரனுடன் தமிழ் தேசிய கூட்டணி எம்பிக்கள்... கோப்புப் படம்
கொழும்பு: இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தன் கூறுகையில், “தேர்தல் புறக்கணிப்பு முடிவு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நான் நீண்ட நேரம் வாதிட்டேன். அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கா விட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம். மக்களின் வாழ்விலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விஷயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விஷயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாங்கள் இன்னமும் முடிவு எடுக்கவில்லை” என்றார்.
இது புலிகளால் வந்த அங்கீகாரம்…
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்பியாகி, அந்தக் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள இரா சம்பந்தன் இப்போது விடுதலைப் புலிகள் மீதே சேறு பூசத் துவங்கியுள்ளது தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தாயகம், தேசியம், தன்னாட்சி எனும் கோட்பாட்டையும், விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டதாலேயே இவர்கள் தேர்தலில் நிற்க அனுமதிக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் கை காட்டியதால்தான் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை வேட்பாளர்களையும் எம்.பிக்களாக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர் தமிழர்கள்.
பிரிந்து கிடந்த பல்வேறு தமிழ்க் கட்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகளே. தலைவர் பிரபாகரனின் இந்த நடவடிக்கையால்தான் இலங்கை அரசின் பல்வேறு அராஜக நடவடிக்கைகளின் வேகத்திற்கு அன்று முட்டுக்கட்டை போடப்பட்டது. தமிழருக்கு இன்று நேர்ந்த துயரங்களுக்கு முழுக் காரணமும் தமிழரின் தனித்துவத்தை ஏற்கத் தயாராக இல்லாத ஆதிக்க நாடுகள்தான் என்பது உலகம் அறிந்த ஒன்று.
ஆனால், தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் வேலையாக, தனக்கு அடையாளம் தந்த விடுதலைப் புலிகள் மீதே இன்று பழி சுமத்த முற்பட்டிருக்கும் சம்பந்தனின் செயல் தமிழர் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்துள்ளதாகவும், இவரின் இன்றைய இக்கருத்துக்களினால் எதிர்வரும் காலங்களில் இவர் மக்களால் ஒதுக்கப்படும் நிலமை ஏற்படும் என்றும் ஈழத் தமிழ் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
30000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் இழந்து நிற்கும் தமிழினம், இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கடந்தகால இரத்தக்கறை படிந்த வரலாற்றை என்றுமே மறந்துவிடமாட்டார்கள் என்றும் மறந்தால் அவர்கள் மனிதர்களே அல்ல என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen