
வடக்கில் இராணுவத் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசாங்கம்?
வடக்கில் இராணுவத் தலையீட்டை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் புளொட் தலைவர் சித்தார்த்தன். படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக கடந்த வாரம் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இராணுவத்தின் தலையீடு என்பது எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் ஒன்றாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தாலும் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் ஆதிக்கமே வலுவாக இருக்கிறது. இது மிகவும் அவசியமானதென்று கருதுகிறது அரசாங்கம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வடக்கில் இன்னொரு ஆயுதப்போர் தோற்றம் பெற்று விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதனால் தான் போரின் முடிவுக்குப் பிறகும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாவைக் கொட்டிப் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகிறது. அதுமட்டுமன்றி வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தை பொதுமக்களுடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது.
நான்காவது கட்ட ஈழப்போரில் புலிகளால் யாழ்ப்பாணத்தில் பெரிதாக எதையும் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் அரசபடைகள் பரவலாக எல்லா விவகாரங்களிலும் தமது தலையீடுகளை வைத்திருந்ததேயாகும்.
வடக்கில் வாழும் மக்களை புலிகளுடன் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்தவோ அல்லது அவர்களுக்கு உதவவோ முடியாதபடி ஒரு புலனாய்வு முற்றுகைக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கியிருந்தது. அதன் அடிப்படையிலேயே, பொதுமக்கள் எல்லாவற்றுக்கும் இராணுவத்தையே சார்ந்திருக்க வேண்டியதொரு நிலை உருவாக்கப்பட்டது. அதன்மூலம் தான், புலிகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தலையெடுக்க முடியாமல் இராணுவத்தால் செய்ய முடிந்தது. அதே தந்திரத்தை போரின் முடிவின் பின்னரும் தொடர்ந்து கடைப்பிடிக்க முனைகிறது அரசாங்கம்.
இராணுவத்தையே எல்லாவற்றுக்கும் தங்கி வாழ வேண்டியதொரு நிலையை வடக்கில் உருவாக்கியிருப்பதன் மூலம் அங்கு நடக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் அரசுக்கு காதுகளுக்குச் சுலபமாகவே சென்று சேர்ந்து விடும்.
வடக்கில் நடக்கின்ற எந்தவொரு நிகழ்வானாலும் சரி அதில் இராணுவ சீருடை அணிந்த அதிகாரிகளைக் காணலாம். போர் முடிந்து ஒன்றரை வருடங்களாகப் போகிறது ஆனாலும் இராணுவத்தின் தலையீடுகள் கொஞ்சமும் குறையவில்லை. இங்கு பொலிசாரின் அதிகாரத்தை விட அரசின் சிவில் நிர்வாகத்தை விட இராணுவத்தின் அதிகாரமே மேலோங்கியுள்ளது.
நாடு முழுவதிலும் இதே நிலை தான் என்றில்லை.
இப்போது ஒரே நாடு எல்லைக் கிராமங்கள் என எதுவுமில்லை என்றெல்லாம் அரசாங்கம் கூறினாலும் வடக்கிலும் தெற்கிலும் நடப்பது வெவ்வேறு முறையான ஆட்சிகள் தான்.
வடக்கில் இராணுவப் பின்னணியுடனான சிவில் நிர்வாகமே நடக்கிறது.
தெற்கிலோ அரசியல் பின்னணியுடனான சிவில் நிர்வாகம் நடக்கிறது.
வடக்கில் ஒரு பாடசாலை நிகழ்வாகட்டும், சமூக நிகழ்வாகட்டும், கோவில் திருவிழா ஆகட்டும் எங்கு பார்த்தாலும் சீருடை தரித்த இராணுவ அதிகாரிகளின் பிரசன்னத்தை அவதானிக்கலாம். இன்னமும் திருமணம் போன்ற வீட்டு நிகழ்வுகளில் பங்கேற்காத குறை தானே தவிர, மற்றெல்லா வகையிலும் இராணுவத் தலையீடுகள் விரிந்து கிடக்கின்றன. இதேபோன்ற நிலை தெற்கில் இல்லை. தெற்கில் எங்காவது பாடசாலைகளில், சமூக நிகழ்வுகளில் இராணுவ அதிகாரிகளை மாலை மரியாதைகளுடன் காணமுடியாது. அப்படிக் காண்பது அபூர்வம். போர் முடிந்த சிறிது காலம் வரை அப்படியான சில கௌரவிப்பு நிகழ்வுகள் நடந்தாலும் அங்கு இது வழக்கமானதொன்றாக இல்லை.
ஆனால் வடக்கில் இது வழக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
இது அழுத்தத்தின் பேரில் நிகழ்ந்ததா அல்லது அச்சத்தின் பேரில் இயல்பாகவே மாறியதா என்பது கூடப் பலருக்கும் தெரியாது. ?
எப்போதும் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடு, கயிறு அறுந்து போனாலும் கூட தனது எல்லையை மீறாமல் எப்படி சற்றிச் சுற்றி வருகிறதோ அதே போலத்தான் வடக்கிலும் இராணுவத்தினரைச் சுற்றிச் சுற்றிவரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எங்கே இதை மீறினால் தாம் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ தம்மை தேசிய ஒருமைப்பாட்டுக்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயம், அரச அதிகாரிகள் தொடக்கம் பொறுப்புகளில் இருக்கும் சமூகப் பிரதிநிகள் வரை எல்லோரிடமும் உள்ளது.
இராணுவத் தலையீடுகள் சிவில் நிர்வாகம் தொடக்கம் அனைத்து விடயங்களிலும் இருந்து வருகிறது. அதற்கெதிராக குரல் கொடுக்க வடக்கில் யாருமே தயாராக இல்லை.
பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினை தான்.
இந்தநிலையில் புளொட் தலைவர் சித்தார்த்தனிடம் இருந்து இந்தக் கோரிக்கை வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
அரசஅதிபர் கூட இராணுவ அதிகாரிகளின் தயவில் செயற்பட வேண்டியுள்ளது சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
இது வடக்கின் சிவில் நிர்வாகம், ஜனநாயக சூழல் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகிறது.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தனர்.
அப்போது அவர்கள் இராணுவத்தின் தலையீடுகள் ஏன் அதிகமாக உள்ளது?, அவர்கள் ஏன் வீடமைப்பு போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்? என்பன போன்ற கேள்விகளை கேட்டு அரச அதிகாரிகளைத் துளைத்தெடுத்திருந்தனர். அதற்கு நல்லிணக்க சூழலை உருவாக்க இராணுவத்தினர் விரும்புவதாகக் கூறி அரச உயர்மட்ட அதிகாரிகள் மழுப்பி விட்டனர். ஆனால் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு பல உண்மைகள் புரிந்திருக்கிறது. போர் முடிவுக்கு வந்து விட்டது வடக்கில் முற்றிலும் ஜனநாயக சூழல் வந்து விட்டது என்றெல்லாம் பிரசாரம் செய்கின்ற அரசாங்கம் அதற்கான சூழலை உருவாக்கவில்லை. இராணுவத் தலையீடுகள் எல்லைகளின்றி விரிந்து கிடக்கின்ற நிலையில் ஒரு போதும் சிவில் ஆட்சியோ ஜனநாயக சூழலோ உருவாகமாட்டாது.
இராணுவத்தை ஒதுக்கி ஒருபுறத்தில் வைத்து விட்டால் வடக்கில் பாதுகாப்புச் சூழல் கெட்டுப்போய் விடும் என்று நினைக்கிறது அரசாங்கம். தற்போதுள்ள இந்தத் தலையீடுகள் தான் எதிர்காலத்தில் தமிழ்மக்களிடத்தில் வெறுப்பையும் விரக்தியையும் தோற்றுவிக்கக் கூடும். இதை சித்தார்த்தன் தனது சாட்சியத்தில் கூறியிருப்பது முற்றிலும் உண்மையானது.
தெற்கில் நிலவும் அதே ஜனநாயக சூழலை வடக்கிலும் உருவாக்குவது தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழியாக இருக்கும். ஆனால் அந்த வழிமுறையைப் பின்பற்றும் நிலையில் அரசாங்கம் இல்லை. ஏற்கனவே பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச
""தமிழர்களை நாம் சந்தேகத்துடனேயே பார்க்கிறோம். அதுபோல அவர்களும் எம்மை நம்பவில்லை"" என்று கூறியிருந்தார்.
இந்த நம்பிக்கைபயற்ற நிலை இருக்கும் வரை நல்லிணக்கத்தை எட்ட முடியாது.
இப்போது புலிகளும் இல்லை ஆயுதப்போராட்டமும் இல்லை. இந்தநிலையில் நம்பிக்கையில்லாத நிலையில் இருந்து இருதரப்பும் விடுபடுமா என்பதைத் தீர்மானிக்கின்ற காரணிகளில் ஒன்றாக வடக்கில் நிலவும் இராணுவத் தலையீடுகளும் அமைந்துள்ளன. தமிழ் மக்களிடத்தில் அரசின் மீதான நம்பிக்கையீனம் முற்றாகவே மறைந்து போவது உடனடிச் சாத்தியமல்லை. ஏனென்றால் அவர்கள் நிறையவே அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்துள்ளனர். ஆனால் அரசாங்கம் தமிழ்மக்களின் நம்பிக்கையை வெல்வது மிகவும் கடினமான காரியமாக இருக்காது. அதற்கு இராணுவ சூழலில் இருந்து வடக்கை விடுவிப்பது முக்கியமானது.
அதை அரசாங்கம் செய்ய முனையுமா என்பது தான் சந்தேகத்துக்குரியது.
கட்டுரையாளர் சத்திரியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen