இந்தியாவால் இலங்கைத் தமிழருக்கு உதவமுடியுமா?
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு எனவே அதன் சொற்படிதான் இலங்கையும் நடக்க வேண்டும் என்பது இந்திய ஆதரவாளர்கள் மற்றும் இந்திய வல்லாதிக்க சிந்தனா வாதிகளின் பெரும் விருப்புக்குரிய கருத்தாக உள்ளது. ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதே கள நிலையாக உள்ளது.
இப்படி இவர்கள் கூறுவதற்குக் காரணம் தென்னிலங்கையில் கால் பதித்தும் கச்சதீவில் கை வைத்தும் இலங்கை முழுவதிலும் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி நிற்கும் சீனாவின் நிலையைச் சரிவரக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே.
இலங்கை எப்போதும் தன்னைச் சார்ந்தே இருக்கும் என்ற இந்தியக் கொள்கை வகுப்பாளரின் எதிர்பார்ப்பு தவறு என்பதை பண்டார நாயக்கா காலம் முதலே இலங்கை படிப்படியாக சீனாவின் கைக்குள் விழுந்து வந்ததை எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாததே.
இன்று இந்தியாவும் சீனாவும் மோதிக் கொண்டால் விளைவு என்னவாகும் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல சிறு குழந்தைக்கும் நன்கு புரியும்.
எனவே ஆற்றிலை வார தண்ணியை அண்ணை நீ எடு தம்பி நானும் எடுக்கிறேன் என்பது போன்ற நிலையே இந்தியாவுக்கு ஆகிவிட்டது.
இனி இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த மூன்று நாடுகளின் கடந்த கால வரலாற்றை சிறிது தெரிந்து கொண்டால் அல்லாது இன்றைய நிலையை விளங்கிக் கொள்ள முடியாது.
….மேலும்
எதனை மாற்ற முடியாதோ அதனைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது.
அதை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலை தனி மனிதருக்கு மட்டும் அல்ல உலகில் உள்ள சகல நாடுகளுக்கும் பொருந்தும். துப்பாக்கி பீரங்கி விமானங்களோடு நாடுகளைத் தாக்கி ஆதிக்கம் செலுத்திய காலம் மலையேறிவிட்டது.
சீனாவின் இந்திய எல்லைக் கோடு பற்றிய விவகாரம் இரு நாடுகளுக்கும் பகைமையை உருவாக்கினாலும் அது ஒரு பெரும் போராக நடத்தி வெற்றி காணும் படை வலுவும் வளமும் இந்தியாவிடம் இல்லை என்பதை இந்தியா நன்கு தெரிந்து கொண்டுள்ளது. வெளிக்கு வேண்டுமானால் இந்திய அரசியல் வாதிகள் வாய்ச் சவடால் அடித்தாலும் உண்மை நிலை இதுவே. சீனா இந்தியாவை என்றைக்கும் அமைதியாக இருக்க விடும் எனவும் சொல்ல முடியாது.
அது இந்திய இராணுவ கணிணிகளை ஊடுருவி இந்திய இராணுவ இரகசியங்களைத் திருடி விட்டது என இந்தியச் செய்திகளே அண்மையில் குறிப்பிட்டன. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் கண்காணிப்புக்கு உட்படாது இந்தியாவில் செயற் பட்ட சீனத் தயாரிப்புக் கைத்தொலை பேசிகளை இந்தியா முடக்கி அவற்றை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது.
ஆனால் சீனா ஒரு உறுதியான நீண்டகால வேலைத் திட்டத்தில் செயற்படுவதை எவரும் அவதானிக்லாம். அதன் நாடு பிடிக்கும் ஆசை எந்த அளவு அல்லது எத்தகையது எனக் கூறிவிட முடியாது என்றாலும் அதற்கு ஏதோ ஒரு வகையில் நாடுகளை உட்படுத்தும் ஆசையும் உள்ளது. அதற்கேற்ப அதன் வேலைத் திட்டங்களும் உள்ளன. அந்த வகையில் அதன் வலையில் சிக்கிய மிகப் பெரிய மீன் பர்மா என்று முன்னர் அழைக்கப் பட்ட இன்றைய மியன்மாராகும்.
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளருக்கு ஆதரவு அளித்து அவர்களை ஆட்சியில் உறுதியாக உலகையே எதிர்த்து நிற்கும் அளவுக்குச் சீனா தன் ஆதிக்கத்தை நிறுவி விட்டது. ஆங் சுங் சீ என்ற மக்கள் ஆதரவும் உலக அரசுகளின் ஆதரவும் கொண்டுள்ள ஜனநாயக வாதியும் முன்னாள் பிரதமரான இப் பெண்மணி சிறையிலும் வீட்டுக் காவலிலுமாக தமது வாழ் நாளைக் கழித்து வருகிறார். ஆனால் அங்கே உள்ள கனிம வளங்களையும் காடுகளையும் சுரண்டுவதில் சீனாவும் இந்தியாவும் ஆப்த நண்பர்களாகச் செயற்படுகின்றன.
இன்று இலங்கைக்குள் சீனா ஆழக் காலூன்றிய பின்னர்தான் இந்தியா தனது வீட்டுக் கோடிக்குள் சீன வெள்ளம் வந்து விட்டதைத் தெரிந்து கொண்டது. இந்தியாவும் அமெரிக்காவும் திருகோணமலைத் துறைமுகத்துக்காகத் தமக்குள் அடித்துக் கொள்ள சீனா அம்பாந் தோட்டையைத் தனதாக்கிக் கொண்டதோடு சிங்கள இனவெறியர்களின் அடியாளாகவும் மாறி இலங்கை என்ற அப்பத்தை முழுவதும் தனதாக்கிக் கொண்டு விட்டது.
சீனாவின் திட்டமிட்ட பொருண்மிய வளர்ச்சி அதன் எரி பொருள் தேவையை அதிகமாக்கி விட்டது. அதன் ஏற்றுமதி கடல் வழி வர்த்தகத்துக்கு பரந்த அளவில் நாடுகளுடன் தொடர்பு பேண வேண்டிய தேவையும் அதிகரித்து விட்டது. எனவே அதன் துறைமுக வசதிகளை தனது செலவிலேயே ஏனைய நாடுகளில் ஏற்படுத்தி நட்பையும் கடல்வழி ஆதிக்கத்தையும் நிலை நாட்டத் தொடங்கியது.
முதலில் அன்பளிப்புகளாகவும் சலுகைகளாகவும் கடன் உதவிகளாகவும் தொடங்கிப் பின்னர் வர்த்தகம் இராணுவம் என மாறி முடிவில் ஆக்கிரமிப்பாக மாறுவதையே வரலாறுகள் காட்டும் பாடமாக உள்ளது. இலங்கையை இந்தியா இராணுவ வழியில் மாலைதீவை பிடித்தது போல் பிடித்துவிடலாம் என நம்பியது. ஆனால் விடுதலைப் புலிகளின் அதீத வளர்ச்சியும் அடங்காத் தன்மையும் இந்தியாவின் ஆசையில் மண் போட்டுவிட்டது.
இந்த இழுபறியில் பேச்சு வார்த்தை என்று காலங்கடத்தி இந்தியா தனது சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கையில் மகிந்தவின் வருகையும் சிங்களத்தின் சிந்தனைக்கு ஏற்பச் சீனாவின் வெளியுறவும் அமைந்து விடவே இந்தியாவுக்கும் இனப் பிரச்சனைக்கும் முழுக்குப் போடும் சிங்களத்தின் ஆசையும் மகிந்த சிந்தனையும் வெற்றி கண்டுவிட்டன.
இந்தியாவும் சீனாவும் என்னதான் எலியும் பூனையும் போலத் தென்பட்டாலும் புதிய உலக மயமாக்கல் இயங்கியல் உலகில் யாரும் எவருடைய வீட்டை எரித்தாலும் புடுங்கியது மிச்சம் என்பது போல் வந்தவர் போனவர் புடுங்கிப் போவதே நடைமுறையாகக் காணப் படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணமாக விளங்குவது மியன்மார் என்றழைக்கப் படும் பர்மா ஆகும். மியன்மாரின் வளங்களைச் சுரண்டுவதில் முக்கிய பங்காளிகளாகச் சீனாவும் இந்தியாவும் விளங்குகின்றன.
இதே போன்று திபெத் மற்றும் வங்க தேச விடையங்கிளல் இந்தியா ஏதும் அறியாதது போல் நடக்கிறது. காஷ்மீர் நேபால் ஏன் கச்ச தீவிலும் அதனருகே தமிழ் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் நிலையிலும் கூட எதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது. இவற்றை நன்கு தெரிந்து கொண்ட மகிந்தவும் சிங்கள இனவெறி அரசும் இந்தியா சொல்லும் எதனையும் செய்யப் போவதில்லை. அப்படித் தமிழர்க்கு ஆதரவாக எது சொன்னாலும் அதற்கு நேர்மாறாகவே நடந்து கொள்ளும் பாரம்பரியத்தை ஜே.ஆர். காலத்தில் இருந்தே சிங்கள அரசுகள் கடைப் பிடித்து வருவதைக் காணலாம். இந்தியாவோ வேறு எந்த நாடோ தமிழர் சார்பாக குரல் கொடுத்தால் உடனே சீனாவைக் காட்டிச் சிங்களம் தப்பித்துக் கொள்ளும்.
எனவே இந்தியாவுக்கு உள்ள ஒரே தீர்வு எரியிற வீட்டில் புடுங்கிப் போவது ஒன்றுதான். இன்று இந்தியா அம்பாந்தோட்டையில் துணைத் தூதரகம் நிறுவுவதும் அம்பானி சகோதரர்களின் எயர் டெல் தொலை பேசி நிறுவனத்தின் பரிவர்த்தனைக் கோபுரங்களை சீன நிறுவனங்கள் மேற் கொள்வதும் கொள்ளையருக்குள் கொள்கைகள் கிடையாது என்பதையே காட்டுகிறது.
தொலைத் தொடர்பு இந்தியாவின் கைக்குள் போயிருப்பதானது முழுமையான உளவுக் கண்காணிப்பு வேலைகளுக்கு மிகச் சாதகமான நிலையை அதற்குக் கொடுத்து விட்டது போலாகும். அதே வேளை வடக்கில் இந்தியாவும் அமெரிக்காவும் யாழ்ப்பாணத்தில் தமது துணை அலுவகங்களை தொடங்க முனைவது வடபகுதி புதிய தொரு ஆடுகளமாக உருவாகும் நிலை தெரிகிறது.
தமிழர் தரப்பைத் தன்னோடு வைத்துவிட வேண்டிய பரிதாப நிலை இந்தியாவுக்கு. அந்த முயற்சியில் வீடுகட்டித் தருகிறேன் என வீராப்பாக வாக்குறுதி வழங்கியதை நினைத்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்ல.
13வது திருத்தச் சட்டம் என்ற பல்லவி இப்போ பஞ்சாயத்து என்ற சரணத்தில் நிற்கிறது. தமிழர் கட்சிகளைத் தனித் தனியாக அழைத்து விருந்து வைத்து இனப்பிரச்சினைக்கு முடிவு தேடப் போகிறதாம்.
கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானாம் என்ற கதை போல் தெரிகிறதா?
த.எதிர்மன்னசிங்கம் ஆய்வாளர்
Keine Kommentare:
Kommentar veröffentlichen