
முள்ளிவாய்க்கால் பேரவலம் எமக்குக் கொடுத்துள்ள பாடங்கள் பல.
இதற்குப் பின்னர் தான் நிறையப் பேருக்கு நிறையவே பேசவும் எழுதவும் தெரிகிறது.
இறுதிப்போர் தீவிரமாக நடந்த காலங்களிலும் சரி, போராட்டம் தீவிரமாக நடந்த காலங்களிலும் சரி, எதுவுமே பேசாமல் மதில்மேல் பூனைகளாக இருந்தவர்கள் கூட, இப்போது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பிக்கிறார்கள்.
இன்று யார் யாரோவெல்லாம் போராட்டத்தின் விருட்சமாக, ஆணிவேராக இருந்தவர்கள் பற்றி இழிவாகப் பேசும், எழுதும் நிலை வந்துள்ளது.
போராட்டத்தில் ஒரு துளிகூடப் பங்களிப்புச் செய்யாதவர்கள், ஒரு மணி நேரம் கூட காவல் அரணில் நின்று பழக்கப்படாதவர்கள், போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளாதவர், தமது சொந்தங்கள் எவரையும் போராட்டத்துக்காக அர்ப்பணிக்காதவர்கள் கூட, விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கிறார்கள்.
[உலக அரங்கில் அதன் கதவுகளைத்தட்டி ஆதரவு கேட்டபோது உது வேலையற்ற வேலை என்று விமர்சித்தவர்கள், தலைவரின் மாவீரர் நாள் உரை உட்பட விடுதலைப்புலிகளின் பல முக்கிய ஆவணங்களை பலமொழிகளில் மொழி பெயர்ப்புச்செய்து மிக முக்கியமானவர்களுக்கு சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து ,நேரடியாகக் கொண்டுசென்று கொடுத்து நியாயம் கேட்டபோது, ஆதரவு தேடியபோது, அநியாயமாக காசை செலவு செய்து வீண் வேலை செய்கிறான் என்று குற்றம் சாட்டியவர்கள், இன்று அதே வேலை செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள் இது கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் போன்றது]
போராட்டத்தை நியாயமாக விமர்சித்தல் ஆக்க பூர்வமானதே.
ஆனால் இவர்கள் செய்வது கொச்சைப்படுத்தும் பிரசாரங்களை.
அதுவும் உள்ளிருந்து கொண்டே செய்யப்படும் விமர்சனங்கள் கொடுமையானவை.
தேசியத் தலைமை இருக்கும் வரைக்கும் இப்படியொரு நிலை இருந்ததேயில்லை.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை.
முள்ளிவாய்க்கால் மண்ணில் தேசியத் தலைமையின் வீரமரணம் நிகழ்ந்த செய்தியைக் கூட இவர்களில் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தேசியத் தலைமையின் மறைவை ஏற்க முடியாத, அதை அதிகாரபூர்வமாக அறிவிக்காத தரப்புகள், தேசியத் தலைமை இருக்கும் வரைக்கும் செய்ய முடியாத, செய்யத் துணியாத செயலை இப்போது செய்கிறார்கள்.
புலிகள் இயக்கத்தின் உள்வீட்டுப் பிரச்சினை பற்றி தேசியத் தலைவர் இருந்த காலத்தில் யாராவது வாய் திறக்க முடிந்திருக்குமா?
ஆனால் இன்று
அதைப் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசுகிறார்கள். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார்கள்.
இதெல்லாம் யார் கொடுத்த துணிச்சல்?
இது எதைக் காட்டுகிறது?
தேசியத் தலைமையின் மீதான இவர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறதா? அல்லது பகல் வேசத்தைக் காட்டுகிறதா?
எமது மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்து அடுத்த கட்டநகர்வை மேற்கொள்வதற்குக் கூட நாமே தான் தடையாக இருக்கிறோம்.
இப்படிப்பட்ட நிலையில் எப்படி அடுத்த கட்டமாகப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்?
முள்ளிவாய்க்காலில் தமிழரின் ஈழக்கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டதாகச் சிங்களதேசம் மார்தட்டியது.
அது உண்மையல்ல…….
எமது சுதந்திர தாகம் என்றைக்கும் தணிந்து விடாது என்று உரக்கச் சொல்வதற்காக, அடுத்த கட்டமாகப் போராட்டத்தை நடத்திச் செல்வதற்கு நாம்…….?
இந்த ஒரு வருடத்தில் உருப்படியாக எதைச் செய்துள்ளோம்?
எதுவுமேயில்லை, என்பது தான் இந்தக் கேள்விக்கான பதில்.
ஈழக்கனவு பிரபாகரனுடன் செத்துப் போய்விட்டதாக சொன்னது சிங்களதேசம்.
ஆனால் அது உயிர்ப்புடன் இருப்பதாக நாம் வெறுமனே வார்த்தைகளால் சொல்கிறோமே தவிர செயலில் எதையாவது காண்பித்திருக்கிறோமா?
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழர் தரப்பால் உருப்படியாக ஏதாவதொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா?
உலகுக்கு எமது போராட்டத்தின் நியாயத்தை, கொள்கையை, அபிலாசையைச் சொல்வதற்கு எந்த வழிகளிலாவது முயன்றிருக்கிறோமா?
எதுவுமே நடக்கவில்லை.
ஈழக்கனவோடு இருந்தவர்கள் எல்லாம் இப்போது நாங்கள் தனிநாட்டுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று அலறி ஓடுகிறார்கள்.
தாயகம், தேசியம், தன்னாட்சி என்று தேர்தல் காலங்களில் பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி இரகசியப் பேச்சு நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒன்றுபட விரும்பாதவர்கள் ஒற்றுமையை குலைப்பவர்கள் தேசியத் தலைமையின் இலட்சியத்தை குழிதோண்டி புதைக்க நினைப்போர் எதிர்வினைத் துருவங்களை உருவாக்கி அதில், விடுதலை வேட்கையோடும் தாயகக் கனவோடும் புலத்தில் வாழும் இளம் சந்ததியை தவறாக வழிநடத்துகின்றார்கள்.
வல்லவர்களோடு, போராட்ட விசுவாசிகளோடு, விடுதலைக்கு உழைப்பவர்களோடு இளம் சந்ததியை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள்
இது தான் எமது அரசியல். எமது இராஜதந்திரம்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சரியானதொரு அரசியல் தலைமையை கட்டியெழுப்பத் தவறியதன் விளைவை நாம் இப்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளோம்.
மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை மறந்து போய்,
தேசியத்தலைமையினதும் மாவீரர்களினதும் இலட்சியத்தை கனவை அவர்களின் உயர்ந்த, உன்னதமான அர்ப்பணிப்புக்களை விலைபேசியவாறு, தனிப்பட்ட ஒருசிலரின் , கொள்கைவகுப்புக்கும் வரட்டு பிடிவாதத்துக்கும் கட்டுண்டு மீளமுடியாதவர்களாய் அந்த தனிமனிதர்களின் சொற்களுக்குத் தலையாட்டும் பொம்மைகளைத் தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமே தவிர, எமக்கான ஒரு தலைமையை உருவாக்கத் தவறிவிட்டோம்.
அடுத்தகட்டம் பற்றிய சிந்தனைத் தேடலுக்கு கடந்த வருடம் மே மாதத்துக்குப் பிறகு செல்லாததன் விளைவே இது.
மீண்டும் நாள சந்திப்போம்.
குறிப்பு
உண்மையை உணர்ந்து இனியாவது ஒன்றுபடமாட்டோமா? என்ற ஆதங்கத்தில் எழுதப்படுகிறது. கானல்நீரைக் காண்பித்து கற்பனைக் கோட்டைகளை மனதில் கட்டிக் கொள்ளச் செய்யும்; எண்ணம் எம்மிடம் கிடையாது. தொடர்ந்து படியுங்கள்- கருத்துக்களை எழுதுங்கள். (infotamil.ch@gmail.com)
தொல்காப்பியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen