
இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அத்தனை அடக்குமுறைகள்- கொடூரங்களுக்கும் தனியே சிங்கள ஆட்சியாளர்கள் மட்டும் காரணமல்ல.
அவர்களை ஆன்மீக ரீதியாக வழிநடத்துவதாகக் கூறிக்கொண்டு அரசியல்ரீதியாக வழிநடத்தி வந்த- பௌத்த மத பீடங்களுக்கும் அதில் கணிசமான பங்குகள் உள்ளன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அத்தனை பேரும் சிங்கள பௌத்தர்களாகவே இருந்துள்ளனர்.
அவர்கள் தமது ஒவ்வாரு நகர்வுகள், நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது பௌத்தமத பீடாதிபதிகளுக்குத் தெரிவித்து, அவர்களின் ஆசிபெற்றே செய்வது வழக்கம்.
பௌத்தமத பீடங்களின் ஆதரவில்லாமல் யாருமே ஆட்சியில் இருக்கமுடியாது என்ற நிலை இருந்து வந்ததால்- இந்த இருதரப்புகளுக்கும் இடையில் அப்படியொரு இறுக்கமான பிணைப்பு இருந்து வந்தது. தமிழ்மக்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாக்கி, அவர்களைச் சொந்த நிலங்களில் இருந்து துரத்தி இன அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து, படுகொலைகள் தொடக்கம் அகதிகளாக அலையவிட்டது வரைக்குமான அத்தனை அக்கிரமங்களுக்கும் பௌத்தமத பீடங்கள் துணைபோயிருக்கின்றன.
ஏன் இனப்பிரச்சனைக்குத்தீர்வு காண்பதற்கான எத்தனையோ முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும்- அவற்றைக் குழப்பிவிடுவதில் பௌத்தமத பீடங்களே முன்னின்றன.
அவ்வப்போது இந்தவிடயத்தில் பௌத்த மத பீடங்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றினாலும்; அவர்கள் சமரசம் செய்துகொள்வது வழக்கம்.
பண்டா -செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஜேஆர் கண்டி நோக்கிப் பாதயாத்திரை போனார் அத்தோடு அந்த ஒப்பந்தம் கிழித்துப்போடப்பட்டது.
ஜேஆர் கண்டிக்குப் பாதயாத்திரை போனது ஒன்றும் அங்குள்ள அழகை ரசிக்கவில்லை. கண்டியில் உள்ள அஸ்கிரிய-மல்வத்த பீடங்களின் ஆசியயையும்,; ஆலோசனையையும் பெறுவதற்கே. அது பழைய கதை.
அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்,; ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்தான போதுதான் எத்தனை குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
நோர்வேக்கு எதிராகவும்,; உடன்பாடடைக் கிழித்தெறியவும் கோரிப் போராட்டம் நடத்தியது பௌத்த பிக்குகள் தான். எத்தனைபெயர்களில் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள் ,ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இவையெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களின் மீது பௌத்த மத பீடங்கள் எத்தனை செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதைத்தெளிவாக உணர்த்துகிறது.
தமிழருக்கு எதிரான போரின்-இன அடக்குமுறையின் ஆணிவேராக இருந்தது பௌத்த மதபீடங்கள் தான். அந்த ஆணிவேரின் பிடிமானத்தில் இருந்துகொண்டே சிங்களத் தலைமைகள் தமிழ்மக்கள் மீது கொடூரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
அகிம்சையைப் போதித்த புத்தபிரானின் வழிவந்த பௌத்த மத பீடங்களே இலங்கையில் வன்முறைகள் தலைவிரித்தாடுவதற்கு காரணமாக இருந்தன.
தமிழருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு இவர்களே காரணம் என்பதில் எந்தச்சந்தேகமும் கிடையாது.
சிங்களத் தலைமைகளின் தன்னிச்சையான நடவடிக்கையாக இருந்திருந்தால்- அதற்கு பௌத மத பீடங்களின் ஆதரவு கிடைக்காதிருந்தால் போரை நிறுத்தும்படியும், அமைதிவழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாணும்படியும் குரல்கொடுத்திருப்பார்கள், போதித்திருப்பார்கள். அனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
போரை -நடத்து, நடத்தென்றே அவர்கள் சிங்களத் தலைமைகளுக்கு ஆணையிட்டார்கள், ஆசிவழங்கினார்கள். அதன் விளைவு இப்போது அவர்களையே பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது.
போரை நடத்தி வெற்றிகண்ட திமிரில் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் இப்போது பௌத்தமத பீடங்களுடன் முரண்பட்டு நிற்கவும் துணிந்துவிட்டது.
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ எதிர்பாராத வகையில் பதினெட்டரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே அவரை இந்தநிலைக்குக் கொண்டுபோயிருக்கிறது. பௌத்தமத பீடங்களை மிரட்டும் அளவுக்கு அவர்போயிருக்கிறார்.
இந்தளவுக்கு பௌத்த பிக்குகளில் ஒருபகுதியினரைத் தன்வசத்தில்; வைத்துக்கொண்டே அவர் இந்தக் காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்.
சரத்பென்சேகா அரசியலுக்கு வர முடிவுசெய்தபோது அதற்கு பௌத்த மத பீடங்கள் பெரிதாக வரவேற்ப்புக் கொடுக்கவில்லை. காரணம் போரைவென்ற புண்ணியராக மகிந்தவை பௌத்த பீடங்கள் நினைத்துக்கொண்டிருந்தன. இந்தநிலையில் போர்வெற்றியின் இரு கதாநாயகர்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதை பௌத்தமத பீடாதிபதிகள் விரும்பவில்லை. அதனால் சரத்பொன்சேகா ஆசிபெறுவதற்காக அவர்களைத் தேடிச்சென்றபோது அவர்கள் அவசரம் என்று கூறிவிட்டு எங்கோ போயிருந்தனர்.
அப்படிப்பட்ட பௌத்தமத பீடாதிபதிகள் சரத்பொன்சேகா மீதான நடவடிக்கையை விரும்பவில்லை.

அவரைக் கைதுசெய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பௌத்த மத பீடங்களை எதிர்க்கட்சிகள் உசுப்பிவிட – அவசரமாக மகாசங்கக் கூட்டத்தைத் தலதா மாளிகையில் கூடுவதற்கு முடிவுசெய்தன நான்கு பௌத்தமத பீடங்களும்.
இங்கேதான் ஆரம்பித்தது பிரச்சனை. மகாசங்கக்கூட்டம் என்பது ஆட்சியாளர்களை வழிப்படுத்துவதற்காகவும் சிங்கள-பௌத்தர்களுக்கு அரசியல்நிலைகுறித்த தெளிவை வழங்குவதற்குமான ஒரு கூட்டமாகவே கருதப்பட்டது.
அதாவது ஆட்சியாளரின் போக்கு குறித்து ஆராய்ந்து அதைக்கண்டித்தல் அல்லது திருந்தி நடக்கும்படியான ஆலோசனையை முன்வைப்பதற்கே அந்த அவசரக்கூட்டம் அழைக்கப்பட்டது. கடந்த 18ம் திகதி அழைப்புவிடுக்கப்பட்ட கூட்டத்தை மகிந்த ராஜபக்ஸ அரசு எப்படியோ நிறுத்திவிட்டது. அதாவது பௌத்தமத பீடாதிபதிகளை மிரட்டியே அதைச்சாதித்திருக்கிறார்.

நேரடியாகச்சென்று பௌத்த மத பீடாதிபதிகளை மகிந்த மிரட்டவில்லை. தமக்கு ஆதரவுவழங்கும் பிக்குகள் மூலமே இதைச்சாதித்திருக்கிறார் மகிந்த. மகாசங்கக்கூட்டம் நடக்கும் போது குண்டு கள் வெடிக்கும் என்றும், புத்தரின் புனித பல் இருப்பதாகக் கூறப்படும் தலதாமாளிகைக்குள் குண்டுகள் விசப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமன்றி மல்வத்தை பீடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 500 வரையான விகாரைகளைத் தனித்தனியாகப்பிரித்து புதிதாக பௌத்த பீடம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். குருபீடம் என்ற பெயரில் அந்த பௌத பீடத்தை அமைக்கப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார் மகிந்த.
அதாவது மகிந்த ராஜபக்ஸ கண்டியில் உள்ள உயர்குழாமின் கட்டுப்பாட்டில் உள்ள அஸ்கிரிய-மல்வத்தை பீடங்களின் செல்வாக்குகளை வெட்டிக் குறைத்துவிட்டுத் தென்பகுதியில் குருபீடம் ஒன்றை நிறுவ எத்தணிக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.
புதிதாக குருபீடத்தை நிறுவினால் மல்வத்தை -அஸ்கிரிய பீடங்களின் செல்வாக்கு கேள்விக்குறியாகிப்போகும். செல்வாக்கில்லாத ராமன்ய, அமராபுர பீடங்களின் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தை அஸ்கிரிய மல்வத்தை பீடங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.
இதையடுத்தே அவர்கள் இந்த அவசர மகாசங்கக்கூட்டத்தை ஒத்திப்போட்டுள்ளனர்.
இப்போது பௌத்த பிக்குகள் தமக்கிடையில் மோதிக்கொள்கிறார்கள்.
சிங்களவர்களும் தமக்கிடையில் மோதிக் கொள்கிறார்கள்.
எல்லாம் அதிகாரத்துக்காக. ஒருகாலத்தில் தமிழருக்கு தீங்கிழைப்பதற்காக ஒன்றிணைந்து நின்ற சிங்கள, பௌத்த பேரினவாதிகள் இப்போ தமக்கிடையே மோதிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதுதான் காலத்தின் சுழற்சி.
பிரபாகரன் கூட செய்யாததை மகிந்த செய்திருக்கிறார் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
அதாவது சிங்கள ஆட்சித் தலைமைகளுக்கும், பௌத்த பீடங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்திவிட்டார் மகிந்த என்பதே ரணிலின் ஆதங்கம்.
இது காலத்தின் நியதியா அல்லது காலம்காலமாக இந்த பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கொடூரங்களுக்குப் பலியான தமிழ் மக்களின் சாபமா?
தொல்காப்பியன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen