
சிறீ லங்காவில் அரசியல் யாப்புச் சீரமைப்பை ஐக்கிய இராச்சியம் வேண்டுகின்றது'தமது தன்மானம், நீதி, விடுதலை... போன்றவற்றின் மேலுள்ள வேட்கையால் மக்கள் ஒன்றுகூடியுள்ள இந்தப் புனிதமான நிகழ்ச்சியின்பொழுது...நீவிர் நிமிர்ந்து நின்று உங்கள் கனவுகள் நனைவாவதற்குப் போராட வேண்டும்...நீவிர் உங்கள் பயணத்தைக் கைவிடாது தொடர வேண்டும்...தென் அமெரிக்க மக்களால் முடியுமென்றால், தென் ஆபிரிக்க மக்களால் முடியுமென்றால் உங்களாலும் முடியும், எனவே கைவிடாதீர்கள்' என அமெரிக்காவின் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் வண. ஜெசி ஜக்சன் அடிகளார் உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே) தொடக்க மாநாட்டின் இறுதி நிகழ்வில் (பெப்ரவரி 24 - பெப்ரவரி 26 2010) அவருக்கே சிறப்பியல்பான கவர்ச்சி உரையின் பொழுது எடுத்துரைத்தார்.
இலண்டன் டொக்லன்ட்ஸ் பன்னாட்டு நட்சத்திர விடுதியில் பெப்ரவரி 26- 2010 அன்று அனைத்துலகச் சார்பாளரும் பிரித்தானியத் தமிழரும் கலந்துகொண்ட குதூகல இரவு விழாவின் பின்னர் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியின்போதே இவ்வாறு அவர் கூறினார். மேன்மை தங்கிய ஸ்ரீபன் ரிம்ஸ் நா.உ. அவர்களும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு விலைமதிப்பற்ற பங்காற்றிய சமூகத் தொண்டர்களுக்கு விருதுகளும் வழங்கினார். முன்னூறுக்கும் அதிகமான பிரித்தானிய தமிழரும் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த உ.த. பேரவை சார்பாளரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய வண. ஜெசி ஜக்சன் அடிகளார் நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியையும் வரலாற்றிலிருந்து பெற்ற பாடங்களையும் அவையோரோடு பகிர்ந்து கொண்டார். ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் வென்றெடுக்கத் தான் மேற்கொண்ட பயணம் பற்றி அவைக்கு நினைவூட்டினார்.
விடுதலைப் போராட்டமென்பது கடினமானது எனினும் தாயகக் கனவுகளைக் கைவிடக்கூடாது என்ற பாடத்தை தமிழர் வரலாற்றிலிருந்து படிக்க வேண்டும் - தம் தாயகத்துக்காகப் போராட எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார். உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. (முனைவர்) எஸ்.ஜே. இமானுவேல் பற்றிக் குறிப்பிடும்போது 'வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் தமிழரது போராட்டத்திற்கு பேராயர் ரூற்று போன்றவர்' எனப் புகழாரம் சூட்டினார்.
உ.த. பேரவை அதன் தொடக்க மாநாட்டை புதன்கிழமை பெப்பிரவரி 24இ 2010 அன்று இலண்டன்த வெஸ்ற்மின்ஸ்ரரிலுள்ள நாடாளுமன்றத்தில் நடத்தியது. ஐக்கிய இராச்சிய அமைச்சரவை உறுப்பினர்கள, மூன்று முதன்மை அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துலகச் சார்பாளர் மற்றும் சமூகப் பேராளர் ஆகியோர் உரையாற்றிய இம்மாநாட்டில் ஐந்து கண்டங்களையும் தழுவிய 14 நாடுகளிலிருந்து சார்பாளர் பங்கேற்றனர். ஐக்கிய இராச்சிய அரசின் வெளிநாட்டுச் செயலர் மேன்மைதங்கிய டேவிட் மிலிபான்ட் அவர்கள் மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றினார்.
அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் முறையை ஏதுவாக்கும் பொருட்டு சிறீ லங்காவில் அரசியல் யாப்புச் சீரமைப்பின் தேவையை அவர் எடுத்துரைத்தார். 'தேசிய ஒருமைப்பாட்டை அடைய உண்மையான முயற்சி எடுக்கவும் ஒவ்வொரு சிறீ லங்கா குடிமகனின் உரிமைகளை மதிப்பதற்கு உண்மையான முயற்ச்சி எடுக்கவும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழிகள், அரசியல் யாப்புச் சீரமைப்புகள் மற்றும் பிற சீரமைப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற உண்மையான முயற்ச்சி எடுக்கவும் குடியரசுத் தலைவர் தனக்குக் கிடைத்த ஆணையை பயன்படுத்த வேண்டுமென நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்' என அவர் கூறினார்.
முடிவுரை வழங்கிய நிழல் வெளிநாட்டுச் செயலர் மேன்மை தங்கிய விலியம் ஹேக் அவர்களும் சிறி லங்காவில் அரசியல் சீர்திருத்தத்தினை வலியுறுத்தியதோடு போரின்பொழுது அனைத்துத் தரப்பினரும் புரிந்த போர்க் குற்றங்கள் பற்றிய பக்கசார்பற்ற விசாரணையும் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். 'நிலவும் கடினமான அரசியல் சிக்கல்களைத் தீர்க்கும்படியும் தமிழ் மக்களினதும் மற்றைய சிறுபான்மையினரினதும் கவலைகளையும் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நாம் சனாதிபதி இராசபக்சவின் அரசை வலியுறுத்துகின்றோம். கருத்தாழமிக்க அரசியல் சீரமைப்புக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உடனடி முதன்மை வழங்கப்படவேண்டும். இனவேறுபாடின்றி அனைத்து சிறீ லங்கா குடிமக்களினதும் சனநாயக வேட்கைகளைப் நிறைவு செய்தால்தான் இச்சீர்திருத்தங்கள் நியாயப்படுத்தப்படும்.' எனவும் அவர் எடுத்துரைத்தார்.
ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சரான மேன்மை தங்கிய கோடன் பிரவுண் அவர்களைச் சந்திக்கப் பேராளர்களில் சிலர் தூதுக் குழுவாக அழைக்கப்பட்டனர். சிறி லங்காவின் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை தலைமை அமைச்சர் வலியுறுத்தியதோடு தமிழ் மக்களின் சிக்கலை ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அனைத்துலக அரங்கங்களுக்கு எடுத்துச் செல்வதை தன் சொந்தப் பொறுப்பாக ஏற்றுக்கொள்வதாக அவர் தூதுக் குழுவிடம் தெரிவித்தார். பொதுநல நாடுகளின் அடுத்த மநாட்டை சிறீ லங்காவில் நடத்தவிடாது தடுப்பதற்கு தலைமை வகித்து அம்மாநாட்டை நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியாவுக்கு வழங்கியமைக்கு அவுஸ்திரேலியப் பிரதிநிதி தன் நாட்டின் சார்பாகவும் உ.த. பேரவை சார்பாகவும் தலைமை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தையும் அனைத்துலகத்தையும் சார்ந்த பேராளர்களில் தென் ஆபிரிக்க குடியரசின் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு சிசா ஜேம்ஸ் ஜிக்கிலேனா, முன்னாள் ஐரோப்பிய நாடளுமன்ற உறுப்பினரும் தென் கிழக்காசிய குழுத்தலைவருமான திரு றொபேட் ஈவன்ஸ், சிங்கள பௌத்த சமூகத்தைச் சேர்ந்த வண. மடம்பகம அஸ்சாஜி மகாநாயக்க தேரோ, சிறீ லங்காவிலுள்ள முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த சமூகத் தலைவர் திரு அப்துல் மஜீத், ஐக்கிய இராச்சிய அமைச்சரவை உறுப்பினர்கள பலர் நிழல் அமைச்சர்கள், பல்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர். அமெரிக்க அரசத் துணைச் செயலர் மேன்மைதங்கிய றொபேட் ஓ பிளேக் அவர்கள் தனது பேராளரைப் பார்வையாளராக அனுப்பி வைத்திருந்தார்.
அவரின் வேண்டுகோளுக்கமைய அவரது செய்தியை அமெரிக்காவிலுள்ள உ.த. பேரவையின் உறுப்பு அமைப்பான ஐக்கிய அமெரிக்க தமிழ் அரசியல் செயற்குழுவின் தலைவர் வாசித்தார். நோர்வே அரசும் அதன் இலண்டன் தூதுவர் அலுவலகத்திலிருந்து ஒரு மேல்மட்ட அலுவலரைப் பார்வையாளராக அனுப்பி வைத்திருந்தது.இந்நிகழ்வின் அடையாளமாக ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சரும் வெளிநாட்டுச் செயலரும் எழுதிய அறிக்கைகளைக் கொண்ட ஒரு தொடக்க நிகழ்வு மலர் வெளியிடப்பட்டது.
தொடக்க நாள் நிகழ்ச்சிகளுக்கு பழமைபேண் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேன்மை தங்கிய டேவிட் கமெரோன் அவர்களும் ஆதரவுச் செய்தி அனுப்பியிருந்தார். ஐக்கிய இராச்சியத்தையும் உலகெங்கணுமுள்ள பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்,நோர்வே அரசு, ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களம் போன்ற பல்வேறு நலவிரும்பிகளுள் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த செனேற்றர் றொபேட் கேஸ்சி அவர்களும் அடங்குவர்.சிறீ லங்காவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்காது தவிர்த்தல், சிறீ லங்கா ஆட்சியாளர் தமிழருக்கெதிராகச் செயற்படுவதை ஊக்குவிக்கின்ற முதலீடுகளிலும் பொருளாதாரச் செயற்பாடுகளிலும் பங்குபற்றாது தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் சிறீ லங்காவிற்கு எதிரான உலகளாவிய பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவேண்டுமெனப் பேரவை கேட்டுக்கொண்டது.
சிறுவர்கள் உட்பட உள்நாட்டில் இடம்பெயர்தோருக்கு உதவுதல் போர்க் குற்றங்கள் புரிந்தவருக்கும் மனிதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்தவருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பன பற்றி ஏற்கனவே மேற்கொண்ட உறுதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. சிறீ லங்காத் தீவில் வாழுகின்ற தமிழ் மக்களுடனும் பிற சமூகங்களுடனும் ஒருமித்து செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை மீளப் பெறவும் சிறீ லங்காத் தீவிலுள்ள அவர்களின் மரபுவழித் தாயகத்தில் மக்களாட்சி முறையிலும் வன்முறையற்ற வழி முறைகளிலும் சனநாயக தன்னாட்சியை ஏற்படுத்தவும் உ.த. பேரவை உழைக்கும்.கடந்த வியாழக்கிழமை, பெப்பிரவரி 25 அன்றும் வெள்ளிக்கிழமை பெப்பிரவரி 26 அன்றும் உலகெங்கிருந்தும் வந்திருந்த தமிழ்ப் பேராளர்கள் தம்முள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உ.த. பேரவையின் தொலை நோக்கையும் இலக்குகளையும் முன்னெடுப்பதற்கான ஓர் ஐந்தாண்டு வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.
போர் முடிவுற்றதாயினும் முரண்பாடு முடிவுறவில்லை. அடுத்த ஐந்தாண்டுக்கான வேலைத் திட்டத்தை ஏற்குமுன் நாம் போருக்குப் பின்னான விளைவுகள்பற்றி அதிகம் ஆலோசித்தோம். உ.த. பேரவையானது அதன் தொலை நோக்கையும் இலக்குகளையும் அடைவதற்கு அதாவது தாயகத்தில் தமிழரின் விடுதலைக்கு, நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளை மேற்கொள்ளும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen