
காலத்தின் தேவைகருதி மீள் பதிவு செய்யப்படுகிறது
"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'நிலவரம்' ஏட்டுக்காக சண். தவராஜா எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"ஏசுவார்கள் எரிப்பார்கள்
உண்மையை எழுது
உண்மையாகவே எழுது" - யோகர் சுவாமிகள்
"எழுத்தாளனின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில் சுவாமிகள் கூறிய கருத்து அது.
ஒரு எழுத்தாளனுக்கு, சமூகச் சிந்தனையாளனுக்கு எதிர்ப்புக்கள் உருவாவது இயல்பானதே. அவற்றைத் தடுத்துவிட முடியாது. வேறு வகையில் கூறுவதானால் அத்தகைய எதிர்ப்புக்களே எழுத்தாளன் சரியான திசையில் பயணிக்கிறான் என்பதற்கான காட்டிகள் எனலாம்.
உண்மைகள் பிடிவாதமானவை அவற்றை நீண்ட காலத்துக்கு மறைத்துவிட முடியாது. அமாவாசை நாட்களில் சந்திரன் மறைந்து போவதை வைத்துக்கொண்டு சந்திரனே காணாமற் போய்விட்டது எனக் கூறி விடலாமா? அது ஒரு சில நாட்களில் தானாக வெளிப்பட்டுத் தானே ஆகும்?.
அந்த வகையில் உண்மைகளை எவராவது வெளிப்படுத்தாவிட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்.
இன்று புலம்பெயர் தமிழ் மக்களிடையே ஒரு உண்மையை மறைத்து விடுவதற்குப் பகிரங்க முயற்சி நடப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்காக சிறுபிள்ளைத்தனமான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போய் விடும் என்ற அப்பாவித்தனமான எதிர்பார்ப்புடன் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
அண்மைக்காலக் களச்சூழல் பற்றிய ஆதாரமில்லாத செய்திகள் பல இன்று இணையத்தளங்களில் உலாவருகின்றன. அவற்றைச் செய்திகள் என்று கூறுவதைவிட வதந்திகள் என்று கூறுவதே சாலப் பொருத்தமானது. ஆதாரமில்லாதபோது அவை வதந்திகள் தானே?.
அதேவேளை, வேறு சில செய்திகள் இணையத் தளங்களில் வந்த வேகத்திலேயே மறைந்து போகின்றன. ஏனென்று புரியவில்லை. முன்னரெல்லாம் ஒரு பரப்பான செய்தி வந்து விட்டால் நான் நீ என்று போட்டி போட்டு செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் இணையத்தளங்கள் தற்போது எதுவுமே தெரியாதது போன்று மௌனம் சாதிக்கின்றன.
உண்மைக்கு முன்பு நடுநிலைமை என்று ஏதும் இல்லை எனக்கூறும் ஊடகங்கள் நடுநிலைமையுடன் நடக்கவும் இல்லை, உண்மையை வெளிப்படுத்தவும் இல்லை.
பிரபாகரன் வழி நில்லு
சிறிலங்கா அரசுடனான ஊடக யுத்தத்தில் உயிர்ப்பலியான மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் போன்றோர் பணியாற்றிய ஊடகங்கள் கூட இது விடயத்தில் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதே கவலைக்குரியது.
ஊடகங்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள் பலரும் கூட ஆமைகளைப் போன்று தமது தலைகளை உள்ளே இழுத்துக்கொண்டுள்ளார்கள்.
மே மாதம் 17 ஆம் நாளுக்கு முன்னர் தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் போன்று தம்மைக் காட்டிக் கொண்டிருந்த பலர் இன்று தேடினாலும் கிடைக்க முடியாத நிலையில் உள்ளனர். மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ள இந்த நேரத்தில் வாய் திறக்க வேண்டிய இவர்கள் வாய்மூடி மௌனியாய் இருப்பது அப்பட்டமான சுயநலமே அன்றி வேறில்லை. இவர்கள் இன்று செய்ய வேண்டியது தெளிவான கருத்துக்களை முன்வைத்து மக்கள் செல்ல வேண்டிய சரியான பாதைக்கு வழிகாட்டுவதே ஆனால், அது செய்யப்படவில்லை.
ஊடகவியலாளர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றார்கள். கௌரவிக்கப்படுகின்றார்கள். அந்தக் கௌரவமும் மதிப்பும் அவர்கள் கொண்டுள்ள பொறுப்புக்காக அன்றி அவர்கள் ஆற்றுகின்ற பணிக்காகவே தரப்படுகின்றது.
எனவே, அவர்கள் மீது சமூகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அந்தப் பொறுப்பை மறந்து செயற்படுவது சமூகத்துக்கும் தமது மனச்சாட்சிக்கும் செய்யும் துரோகமாகும்.
இன்று இலங்கைத் தீவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுள் சிங்கள ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் முன்னைவிட அதிகமாக உள்ளமையை அனைவரும் அறிவோம். அண்மையில் கூட சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் முக்கியஸ்தரான போத்தல ஜெயந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன.
வேறு சில சிங்கள ஊடகவியலாளர்கள் தமிழர்கள் ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பு காரணமாக வெளிநாடுகளுக்குத் தப்பியோடியுள்ளனர். அவ்வாறு தப்பியோட முடியாத ஒரு சிலர் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையிலும் கடந்த மே 27 ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 11 ஆவது சிறப்பு கூட்டத் தொடரில் சுதந்திர ஊடகவியலாளர் இயக்க இணைப்பாளர் சுனந்த தேசப்பிரிய ஆசிய மனித உரிமைகள் பணிப்பகத்தின் சார்பில் அறிக்கையொன்றை வாசித்து ஊடகவியாளர்களுக்குப் பெருமை சேர்த்தார்.
சமூகத்தின் வழிகாட்டி எனக் கருதப்படுகின்ற ஊடகவியலாளர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு சுனந்த ஒரு முன்னுதாரணத்தைப் படைத்திருக்கின்றார். இது தமிழ் ஊடகவியலாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரி.
தமிழ்ச் சமூகம் குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆரோக்கியமான கருத்தாடல் எதுவும் இல்லாது இறுகிப் போய்க் கிடக்கின்றது. இந்த இறுக்கமான சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கான தருணம் இதுவே அந்தக் கலந்துரையாடல் ஊடாக எடுக்கப்படும் ஆரோக்கியமான முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.
அதற்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையுமே சார்ந்தது. உரிய காலத்தில் செய்யப்படாத எதுவுமே பயனற்றதாகி விடும். எனவே விரைந்து காரியங்கள் ஆற்றப்பட வேண்டியது அவசியம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
உள்ளிருந்தே கொல்லும் வியாதி படைத்தவர்களே? உங்கள் கோபம் தணிந்ததா?
Keine Kommentare:
Kommentar veröffentlichen