Main Pages Kathiravan.com

Freitag, 19. Februar 2010

தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியல் வியூகம்


"சர்வதேச அரசுகளின் உதவிகளுடனும், ஒத்துளைப்புகளுடனும் நான் பயங்கரவாத்தை வெற்றி கொண்டுவிட்டேன்" என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருமிதம் கொண்டுள்ளார்.

எப்படியோ வெற்றி அவர்களுக்குரியதாயும், தோல்வி எங்களுக்குரியதாயும் வரலாறு நீள்கிறது. எதிரிகளையும் நண்பர்களாக்கக் கூடிய வித்தை சிங்கள இராஜதந்திரத்திற்கு எப்போதும் கைவந்த கலை.

எதிரியைத் தனிக்கப்பிடித்தலும், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளலும் என்பது சிங்கள இராஜதந்திரத்தின் மகுட வாக்கியம். "பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக நான் பேயுடனும் கூட்டுச் சேர்வேன்" என ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1980 களின் நடுப்பகுதியில் கூறிய கூற்று இத்தகைய பொருளின் அடிப்படையில் அமைந்ததே ஆகும்.

`நாம் ஓர் அரசுக்குள் மட்டும் வாழவில்லை. அரசுகள் எனப்படும் ஓர் உலக அமைப்புக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.` என ஓர் அரசியல் மாமேதை கூறிய கூற்று இங்கு மிகவும் கவனத்திற்குரியது.

ஈழத்தமிழர்கள் சிங்கள தலைமைகளிடம் பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதற்கான பிரதான காரணம் இத்தகைய சர்வதேச அரசியலின் முக்கியத்துவத்தையும், பொருத்தமான வெளியுறவுக் கொள்கையையும் பற்றிய ஒரு சரியான கண்ணோட்டம் இல்லாமல் போனமையாகும்.

சுதந்திர இலங்கையின் உடனடி அரசியலை சற்று நோக்குவோம். 1947 ஆம் ஆண்டு சோல்பரிக் குழுவினர் ஈழத்தமிழருக்கு குழிதோண்டவல்ல அரசியல் யாப்பை உருவாக்கிய போது அப்போதைய தமிழ்த் தலைவர்கள் அந்த யாப்புக்கான பின்னணியை பிரித்தானிய அரசின் குடியேற்றவாத நலன்களுக்குள்ளால் பார்க்காமல், அப்பிரச்சினையை சிங்களத் தலைவர்களுக்குள்ளால் மட்டும் பார்த்தனர். அவர்கள் பிரித்தானிய எஜமானை குற்றாவாளிக் கூண்டில் வைத்து பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், அவர்களை நீதிபதிகளாக எண்ணி பிரச்சினையை அணுகினர்.

இந்தியாவுக்கு எதிராகவும், இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏற்ற வகையில் கடற்படை, விமானப்படைத் தளங்களை இலங்கையில் அமைப்பதற்கு ஏற்ற வகையில் சிங்களத் தலைவர்களை திருப்திப்படுத்தும் அரசியல் யாப்பை உருவாக்க விரும்பினார்கள். இதைப் புரிந்துகொண்ட சிங்களத் தலைவர்கள் பிரித்தானியர்களின் கால்களை இறுகப் பற்றிப் பிடித்து தமிழ் விரோத அரசியல் யாப்பை பெறுவதற்கும், தளங்களை பிரித்தானியருக்கு வழங்குவதற்கும் தயாரானார்கள். ஆனால் அப்போதைய தமிழ் தலைவர்கள் யாரும் இதனைச் சிறிதும் புரிந்திருக்கவில்லை.

தமிழ்த் தலைவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாக அல்லாமல், முழுநேர வழக்கறிஞர் தொழிலும் பொழுது போக்கு அரசியலுமாக காணப்பட்டார்கள். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக வரும் வரை எந்தவொரு தமிழ் தலைவரும் முழுநேர அரசியல்வாதியாக இருக்கவில்லை. அதுவும் எதிர்கட்சித் தலைவர் வேறு தொழில் புரியக் கூடாது என்ற சட்டத்தடை காரணமாகவே அமிர்தலிங்கம் முழுநேர அரசியல்வாதியாக நேர்ந்தது.

இப்பின்னணியில் தமிழ் தலைவர்கள் யாரும் சர்வதேச அரசியல் விடயங்களை கற்றறிவதில் அக்கறை செலுத்த முடியாத அளவிற்கு அவர்களது ஏனைய முழுநேரத் தொழில்கள் அமைந்திருந்தன என்ற வேதனை மிகுந்த உண்மையைத் தமிழர்கள் புரிந்து கொண்டால் நாம் தொடர்ந்து தோல்வியடைவதற்கான உண்மையைப் புரிவதில் சிரமம் இருக்காது.

அதாவது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே சர்வதேச பரிமாணத்தில் எமது பிரச்சினையை பார்க்க வேண்டும் என்ற அரசியற் பாரம்பரியம் எம்மிடம் உருவாகத் தவறியது. இதனால் சர்வதேச அரசியல் உறவின்றி அரசியல் நடத்தலாம் என்ற பிழையான பாரம்பரியம் எம்மத்தியில் நிலவத் தொடங்கியது.

அரசியல் யாப்புக்களை வரைந்த ஆணைக்குழுவினாரான பிரித்தானியரை நோக்கி எமது தலைவர்கள் `பிரபுவே` என்றழைத்து சிங்களவருக்கு எதிரான விண்ணப்பங்களை பணிவாக முன்வைத்தார்களே தவிர, இப்பிரச்சினைக்கு பிரித்தானியரது நலன்களும், அவர்களது நோக்கு நிலையும் தான் பிரதான காரணங்கள் என்பதை அப்போதைய தமிழ்த் தலைவர்கள் யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என்ன துயரம்! எமது அறியாமையினாலும், எமது தவறுகளினாலும் ஈழத்தமிழர் பிரித்தானியர்களின் காற் செருப்பாக்கப்பட்டு தேயும் துயரம் உருவானது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், நாம் கெட்டிக்காரர் என்று தமது மார்பை தாமே தட்டவும், டி.எஸ்.சேனநாயக்கவை கல்வித் தகைமையற்றவர் என்று இழிவுபடுத்தவும் எம் பழைய தலைவர்கள் தவறவில்லை. ஆனால் டி.எஸ்.சேனநாயக்கவின் இராஜதந்திரத்திற்கு முன்னால் எம் பழந்தலைவர்கள் பலர் பொருட்டற்று போயினர் என்பதை வரலாறு நிரூபித்து நிற்கின்றது.

1956 ஆம் ஆண்டு சேனநாயக்க குடும்பத்தை வீழ்த்துவதற்காக பிரித்தானிய தளங்களை அகற்றுவது என்று பண்டாரநாயக்க முடிவெடுத்த போது அதன் பின்னால் இருந்த வெளியுறவுக் கொள்கையின் நுட்பத்தை தமிழ்த் தலைவர்கள் புரிந்திருக்கவில்லை. அவ்வாறு தளங்களை அகற்றுவது இந்தியாவுக்கு விருப்பானது என்பதும், அதன் மூலம் இந்திய நட்பைப் பெற்று பண்டாரநாயக்க தன்னைப் பலப்படுத்த முடியும் என்பதையும் தமிழ் தலைவர்கள் புரிந்திருக்கவில்லை.

மாறாக பிரித்தானிய ஏகாத்திபத்தியத்திற்கு துணை புரியும் வகையிலும், இந்தியாவின் பிராந்திய, இராணுவ மற்றும் பாதுகாப்பு நிலையை கருத்தில் எடுக்காமலும் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டனர். தமிழ் தலைவர்கள் மனதால் இந்திய சார்பாளர்களாக இருந்த போதிலும் சர்வதேச அரசியலில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடின்மையால் இதற்கான வெளியுறவு இராஜதந்திரப் பின்னணியை புரியாது தீர்மானங்களை எடுத்துள்ளனர் எனத் தெரிகிறது.

பிரித்தானிய தளங்களை அகற்றுவதென்ற முடிவினை பண்டாரநாயக்கா எடுத்தபோது அத்தளங்களை அகற்ற வேண்டாம் என்று சி.சுந்தரலிங்கம் பிரித்தானிய மகாராணியாருக்கு தந்தி அனுப்பினார். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல். இத்தளங்கள் இல்லையென்றால் தமிழருக்கு பாதுகாப்பு இல்லாது போய்விடும் என்பதே அவரின் வாதமாக இருந்தது. பொதுவாக தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இப்படித்தான் கருதினார்கள்.

பிரித்தானியத் தளங்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய நன்மைக்காகத் தான் அமைக்கப்பட்டதே தவிர, தமிழரின் நன்மைக்காக அல்ல என்பதை சி.சுந்தரலிங்கத்தால் புரிந்திருக்க முடியவில்லை. பிரித்தானியர் இலங்கையில் ஆதிக்கத்திலிருந்த காலத்திலேயே தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோள்களுக்கும், விருப்பங்களுக்கும் மாறாக தமிழருக்கு பாதகமானதும், சிங்களவருக்கு சாதகமானதுமான யாப்பை உருவாக்கிய பிரித்தானியரை தமிழரின் பாதுகாவலராக கருதித் தந்தி அனுப்பிய விந்தையை எப்படி வர்ணிப்பது.

பிரித்தானியரைக் கட்டித்தழுவித் தமக்கும் தமது சிங்கள பேரினவாதத்திற்கும் சாதகமான ஒரு யாப்பை டி.எஸ்.சேனநாயக்கவினால் இலகுவாகவே பெறமுடிந்த போது, எங்கள் தலைவர்கள் பிரித்தானிய எஜமான்களை நீதிபதிகளாக கருதி அவர்களின் காலடியில் மன்றாடி நின்றார்கள் என்பது ஒரு முரண்நகைக்குரிய விடயமாகும்.

எமது தலைவர்கள் தமது தொழிசார் அறிவுத் துறைகளில் நிபுணர்களாய் இருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திரத் துறைகளில் அவர்கள் துறைசார் ஈடுபாட்டினை கொண்டிருக்கவில்லை என்பதே இங்கு கவலையுடன் கவனிக்கத்தக்க விடயமாகும்.

அதேவேளை பிரித்தானிய இராணுவத் தளங்களை அகற்றியதன் மூலம் இந்தியாவின் மனதைக் பண்டாரநாயக்கா குளிரவைத்து தனிச்சிங்களச் சட்டத்தை அவர் இலகுவாக நிறைவேற்றினார். இவ்வாறு பண்டாரநாயக்கா இந்தியாவை அணைத்து தன் காரியத்தை இலகுவாக்கி இனவாதத்தை முழுஅளவில் அரங்கேற்றிக் கொண்ட போது நம் தலைவர்களோ, பழம் கொத்தும் குருவிக்கு கல்லெறிவதாக நினைத்து, மரத்துக்கு கல்லெறிந்து அதனைக் காயப்படுத்தும் வேலையைச் செய்தனர்.

அதாவது டி.எஸ்.சேனநாயக்க மற்றும் பண்டாரநாயக்கா உட்பட்ட சிங்களத் தலைவர்கள் இலங்கையில் பிரித்தானிய தளங்களை 1947 ஆம் ஆண்டு; அமைத்த போதும் அதன்வாயிலாக தமிழருக்கு எதிராக பிரிதானியரிடம் இருந்து தமக்குச் சாதகமான யாப்பை உருவாக்கி வெற்றி பெற்றார்கள்.

அதேவேளை தளத்தை அகற்றிய போதும் தமிழருக்கு எதிராக சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். அதாவது சர்வதேச அரசியற் சூழலைக் காலத்திற்கேற்ப சரிவரப் புரிந்து கொண்டதன் மூலம் தளத்தை உருவாக்கியதிலும், தமிழருக்கு எதிரான அரசியலில் வெற்றி பெற்றார்கள். அதேபோல தளத்தை அகற்றியதிலும் தமிழருக்கு எதிரான அரசியலில் வெற்றி பெற்றார்கள். இரு காலகட்ட நிலைமைகளுக்கு ஏற்ப தமது இரு எதிரிகளை இருவேறு நிலைகளில் கையாண்டு தொடர் வெற்றிகளை அவர்கள் ஈட்டியுள்ளார்கள்.

இத்தகைய பாடங்களில் இருந்து படிப்பினைகளை கற்றறிவதின் வாயிலாக தமிழீழத்திற்கான பாதையை நாம் திறக்க வேண்டும். எதிரி பேயுடனேனும் கூட்டுச் சேர்ந்து எம்மை அழிக்க வேண்டும் என்று முனைகிறான். அப்படியாயின் நாங்கள் உலகளாவிய சாதக நிலையை உருவாக்க, பரந்த நட்பு வட்டத்தைத் தேட எவ்வாறு பாடுபடவேண்டும் என்பதே கேள்வி.

யாருடன் கூட்டுச் சேருவது, எப்போ கூட்டுச் சேர்வது, எப்படிக் கூட்டுச் சேர்வது என்பன கூட்டுப் பற்றிய அடிப்படைக் கேள்விகளாக அமைகின்றன. ஒரு கூட்டு என்பது எதிரிக்கு ஆப்பாக அமைய வேண்டுமே தவிர, அது எமக்கு ஆப்பாக அமைந்திடுமா என்பதையும் கவனிக்க வேண்டும். மொத்தத்தில் சர்வதேச அரசியல் வியூகத்தில் இருந்தே எமக்கேற்றதும் காலப் பொருத்தமானதுமான ஒரு வியூகத்தை நாம் எமக்கு வகுக்க வேண்டும்.

இருப்பதில் இருந்தே நாம் எதனையும் செய்யலாம். இல்லாததில் இருந்து நாம் எதனையும் படைக்க முடியாது. காணப்படும் இருப்பு நிலைகளில் நல்லதும் கெட்டதும், சாதகமானதும் பாதகமானதுமென பல அம்சங்கள் இருக்கவே செய்யும். இவற்றில் எமக்கு சாதகமானதும் நன்மையளிக்க வல்லதுமான அம்சங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய கலவையாக்குவதன் மூலமே நாம் ஒரு வரலாற்றைப் படைப்பவராகலாம்.

தேர்வும், கலவையும் முழுமைப்படுத்தப்பட்ட பார்வையில் பொருத்தப்பாடு உடையவைகளாக இருக்க வேண்டும். இந்த வகையில் தேர்வு மிக நுட்பமானது. பாலுக்கு நஞ்சு கலந்தாற் போல் தேர்வு இருந்துவிடக் கூடாது. நன்மையளிக்ககூடிய ஒரு தேர்வு எம்முடன் இணங்கி வரமுடியாததாக இருக்குமிடத்து அதனை வென்றெடுப்பதற்கான உபாயம் முதலிடத்தைப் பிடிக்கிறது.

தேர்வு, வென்றெடுத்தல், விலகிச் செல்லல், தூர வைத்தல், வைத்துப் பார்த்தல், நட்புறவு, கூட்டுறவு, நட்பற்ற முகம் பார்க்கும் உறவு, பகைமையற்ற நிராகரிப்பு என பலவகை உறவுமுறை சர்வதேச அரசியலில் உண்டு.

அதேவேளை நன்மைபோல் தோன்றும் தீய உறவு என்றும், உடனடி நன்மை தந்து பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல உறவென்றும் உறவுகள் பலவகைப்படுகின்றன. ஒரு நட்பில் நான்கு பகை வருதலும், ஒரு பகையில் நான்கு நட்பு வருதலுமென பகையும், நட்பும் பற்றிய கோட்பாடு உண்டு. அதேவேளை அப்பத்திற்கு நொதியம் நட்பாகும் இன்னொரு முரண்நிலையும் நட்பு பற்றிய கலையில் உண்டு. இந்தவகையில் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கான அடிப்படை நிபந்தனையாக ஒரு சிறப்பான வெளியுறவுக் கொள்கையினை வகுத்துக் கொள்ள வேண்டியமை அமைகிறது.

சிங்களத் தலைவர்கள் அரசுகளுடன் முரண்டும், அவற்றைத் தம்வசப்படுத்தி வெல்லுகிறார்கள். அரசுகளின் பிடரியைத் தடவியும், தம்வசப்படுத்தி வெல்லுகிறார்கள். ஒட்டியும் வெல்லுகிறார்கள், வெட்டியும் வெல்லுகிறார்கள், சில அரசுகளை தூற்றியும் வெல்லுகிறார்கள், சில அரசுகளை போற்றியும் வெல்லுகிறார்கள். காலையில் அணைத்து மாலையில் பகைக்கிறார்கள். அடித்துவிட்டு அணைக்கிறார்கள், அணைத்து அடிக்கிறார்கள். இவ்வாறு அணைக்கும் போதும் வெற்றி பெறுகிறார்கள். விலக்கும் போதும் வெற்றி பெறுகிறார்கள்.

இந்த உலகம் சிங்களத் தலைவர்களிடம் இருந்து கற்க வேண்டிய இராஜதந்திரப் பாடங்கள் நிறையவே உண்டு. சாணக்கியனும், மாக்கியவல்லியும் உயிரோடு இருந்தால் அவர்கள் நிச்சயம் டி.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற சிங்களத் தலைவர்களிடம் இருந்தும் பல புதிய அத்தியாயங்களை எழுதியிருக்க முடியும்.

நன்றி : பொங்குதமிழ்

Keine Kommentare:

Kommentar veröffentlichen