Main Pages Kathiravan.com

Freitag, 5. Februar 2010

‘பிரபாகரன் இருக்கிறார்’ என்கிற உறுதியான மனநிலையே தமிழ் மக்களுக்கு உயரிய பாதுகாப்பு: செல்வம் அடைக்கல நாதன்


பிரபாகரன் இருக்கிறார்’ என்கிற உறுதியான மனநிலையே தமிழ் மக்களுக்கு உயரிய பாதுகாப்பாக இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
”இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு ராஜபக்ஷேதான் அதிபராக நீடிப்பாராமே… இது தமிழர்களுக்கு மேலும் ஆபத்தான விஷயமாகப் பார்க்கப்படுகிறதே?”
”அதிபர் ராஜபக்ஷே தேர்தலை முன்கூட்டியே நடத்தியதால், அவர் இன்னும் ஏழரை அல்லது எட்டு வருடங்களுக்கு அதிபராக இருப்பார். அவர் அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழர் பகுதிகளில் அவருக்குப்பெரிதாக வாக்குகள் விழவில்லை. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற அவர் ரொம்பவே போராடினார். ஆனாலும், தேர்தல் முடிவு தமிழர்களின் மனநிலையை அவருக்கு தெளிவாக உணர்த்தி இருக்கும். அதற்காக தமிழர்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை அவர் மேற்கொள்ள மாட்டார். அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகத்தான் அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அனைத்து மக்களையும் சரிசமமான பார்வையோடு அவர் நடத்துவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கடந்த கால நிகழ்வுகள் கசப்பாக அமைந்ததால்தான், தமிழ் மக்கள் அவரை எதிர்த்தார்கள். அதற்காக மறுபடியும் கசப்பைத் திணிக்கும் வேலைகளில் ஜனாதிபதி ராஜபக்ஷே இறங்கக்கூடாது. இதுகுறித்து பேசுவதற்காக நாங்கள் விரைவிலேயே அவரை சந்திப்போம். தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் தேவைகளையும் அவரிடம் வலியுறுத்துவோம்.”
”சிங்கள இனவாத வெறியைத் தூண்டிவிட்டுத்தான் ராஜபக்ஷே வெற்றி பெற்றதாக சர்வதேச கணிப்பாளர்கள் சொல்கிறார்கள்… அப்படியிருக்க, தமிழ் மக்களுக்கான நன்மைகளை அவரிடமிருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்?”

”அதிபர் பெரும்பான்மையாக வென்றிருந்தாலும், சிறுபான்மை மக்களை நசுக்கும்படியான நடவடிக்கைகளை அவர் ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. ஏனென்றால், சர்வதேசமும் அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. இனவெறி தலைதூக்கினால் அதனைக் கண்டிக்க பல நாடுகள் முனைப்போடு இருக்கின்றன. அதோடு, இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதிபர் நினைத்தால் அதனை நாளைக்கே நடத்த முடியும். அந்தத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழக்க அவர் துணிய மாட்டார். அதனால் தமிழ் மக்களை அரவணைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.”

”தமிழர் வாக்குகள் ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக மாறியது எப்படி? முழுமையாக தமிழ் வாக்குகள் பதிவாகாமல் போனது ஏன்?”
”தேர்தல் அறிவிப்பு வெளியானபோதே, ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆளும் அரசுக்கு எதிரான நிலைப்பாடுதான் அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் நீடித்தது. சுதந்திரம் கேட்ட காரணத்துக்காக அத்தனையையும் வாரிக் கொடுத்த துயரம் தமிழ் மக்களால் மறக்க கூடியதா என்ன? அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஃபொன் சேகாவுக்கு ஆதரவான முடிவை எடுத்தனர். அனுபவித்த ரணங்களுக்கான மருந்தாக வாக்குசீட்டைப் பயன்படுத்த நினைத்த எம் மக்கள் அதையும் சரிவரச் செய்ய முடியாமல் போனதுதான் துயரம். யாழ் மற்றும் வவுனியா பகுதிகளில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு மக்களிடத்தில் அச்சத்தை உண்டாக்கிவிட்டது. குண்டு வீச்சின் கொடூரத்தை ஏக இழப்புகளின் மூலமாக அறிந்து வைத்திருக்கும் அவர்கள் அதன் பிறகு எப்படி வாக்களிக்க வருவார்கள்? அதோடு போக்குவரத்து வசதியும் அடியோடு துண்டிக்கப்பட்டது. அதனால்தான் தமிழர் வாக்குகள் குறைவாகப் பதிவாகின.”
”வெற்றி பெற்ற உடனேயே முதல் வேலையாக தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி, இலங்கையை சிங்களர்களுக்கான நாடாக ராஜபக்ஷே உருவாக்கப் போவதாக சொல்லப்படுகிறதே?”

”தமிழ் மக்கள் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றங் கள் செய்யப்பட்டு வரும் பணிகளே பாதியில் நிற்கின்றன. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னமும் முகாம்களில்தான் வாடிக் கிடக்கிறார்கள். அவர்களை உடனடியாக சொந்த வாழ்விடங்களுக்கு அதிபர் அனுப்ப வேண்டும். மாறாக சிங்களக் குடியேற்றங்களை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர் அமைத்தால், தேவையற்ற குழப்பங்களும் போராட்டத்துக்கான தேவைகளும்தான் உருவாகும். ஆயுதப் போராட்டத்தினால் உண்டான தோல்வியை உணர்ந்திருந்தாலும், எத்தகைய இழிநிலையையும் பொறுத்துக் கொள்ளும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அமைதியை நோக்கித் திரும்பி இருக்கும் அவர்களை மறுபடியும் சிங்கள அரசு வஞ்சிக்கக் கூடாது. அதிபர் ராஜபக்ஷே சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் உருவாக்க மாட்டார் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை. தேர்தலின்போது தமிழ் மக்களுக்கான ஆக்கபூர்வ வளர்ச்சித் திட்டங்களை வாரி வழங்கப் போவதாக அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவற்றை உடனடியாக நிறைவேற்றி, தமிழர்களின் ரணத்தை ஆற்ற வேண்டுமே தவிர, மறுபடியும் ரணத்தில் விஷம் பாய்ச்சும் வேலைகளைக் கைகொள்ளுதல் கூடாது!”
”புலிகளின் தலைவர் பிரபகரனைப் பற்றி மறுபடியும் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கி இருக்கிறதே..?”

”புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட் டதாகவும், அதற்கான சான்றுகளை இந்திய அரசிடம் கொடுத்துவிட்டதாகவும் சிங்கள அரசு சொல்லி வருகிறது. ஆனாலும் தமிழ் மக்கள் அதனை நம்பத் தயார் இல்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ‘பிரபாகரன் இருக்கிறார்’ என்கிற உறுதியான மனநிலையே தமிழ் மக்களுக்கு உயரிய பாதுகாப்பாக இருக்கிறது.”

- இரா.சரவணன்

நன்றி: ஜூனியர் விகடன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen