Main Pages Kathiravan.com

Sonntag, 27. Dezember 2009

காரணம் சொல்லாமல் இலங்கை எம்பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்திய இந்திய அதிகாரிகள்!


திருச்சி: இலங்கை எம்பியும், அந்நாட்டு அதிபர் தேர்தல் தமிழ் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டார்.

தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் நேற்று அதிகாலை வந்தார் சிவாஜிலிங்கம்.

ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அங்கேயே நிறுத்தி வைத்தனர்.

சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டனர். துபாயிலிருந்து பின்னர் சிவாஜிலிங்கம் கொழும்பு சென்றுள்ளார்.

என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடியேற்றத் துறை அதிகாரிகள் அவருக்குத் தெரிவிக்கவில்லை.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் வந்த கோபமா?

இலங்கை அதிபர் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும், மகிந்த ராஜபக்சேவுக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், தமிழர்களின் வாக்கு வெற்றிக்கான துருப்புச் சீட்டாக அமைந்துள்ளது.

இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் விழும் தமிழர்களின் வாக்குகளை அவர் பக்கம் சேர்த்துவிடும் வாய்ப்புள்ளது. இதனால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று சிங்கள பேரினவாதம் கருதுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியின் வாயிலாக தமிழர்களின் வாக்குகளை அதிபர் ராஜபக்சேவுக்கு சாதகமாக திருப்புவதில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த திட்டத்திற்கு எதிராக சிவாஜிலிங்கம் களமிறங்கியதால் ஏற்பட்ட கோபம்தான், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் அவர் கலந்து கொள்ளாத வண்ணம் ஆட்சியாளர்களை நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இந்திய அரசு தரப்பில் சிவாஜிலிங்கம் நாடுகடத்தப்பட்டது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை!

Keine Kommentare:

Kommentar veröffentlichen