
இலங்கையில் சென்ற அரச அதிபர் தேர்தலில் புலிகள் தமிழ் மக்களைப் பகிஷ்கரிக்கச் செய்தது பெரும் தவறு அதனைத் தமது ஆலோசனைக்கு எதிராகப் புலிகள் செய்தனர். அதன் விளைவே இன்ற தமிழினத்தின் அழிபாடுகளுக்குக் காரணம். இவ்வாறு கூறியிருப்பவர் வெறும் இளநீர் வியாபாரம் செய்து பிளைப்பு நடத்தும் சாதாரணத் தமிழ் மகன் அல்ல. அப்படியான ஒரு தற்குறி அல்லது அரைவேக்காடு சொல்லியிருந்தால் மன்னிக்கலாம்.
பிறப்பால் அரசியல் பிழைப்பு நடத்தும் ஆசிய அரசியல் பாரம்பரியத்தில் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு அதிகமாகத் திருகோணமலைத் தமிழ்ப் பாராளுமன்றக் கதிரையின் சொந்தக்காரரான முன்னால் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் திரு.இராஜவரோதயம் அவர்களின் தவப் புதல்வன் சம்பந்தன் என்பதும் அவரே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தயவால் தமிழினத்துக்கு பணிசெய்ய தமிழினத்தால் தெரிவாகி அரசியல் தலைமை ஏற்றுள்ள தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதும் உலகே அறியும்.
தமிழினத்தின் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டிய உரிமைக் குரல் இப்படி கோழைத்தனமாக வசைபாடுதல் என்பது மகா அநியாயம் அக்கிரமம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்படிப் பேசியதன் மூலம் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் வழிநடத்தலையும் தேசியத் தலைவரின் மதிநுட்பத்தையும் கேவலப் படுத்திவிட்டார்.
இவரைப் போன்றவர்களின் தயவில் தமிழ் மக்களின் தேசியம் தன்னாட்சி தாயகம் போன்ற கனவுகளில் மிதந்த இன்றும் மிதக்கின்ற தமிழ் மக்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களே. பாராளுமன்றத்துக்குப் போவதே தமது சுயநல வாழ்வுக்கானதே என்ற கருத்தியலை வளர்த்துக் கொண்டு விட்ட சாய்மணைக் கதிரை அரசியல் வாதிகள் இப்படித்தான் பேசுவார்கள் எனத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டிய வேளை வந்து விட்டது.
தமிழினம் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்ட உச்சக் கட்டப் போரின் போதும் கூட இவரது காலடிகள் இந்திய கோடிக்கு அப்பால் நடை போட்ட வரலாறே கிடையாது. சிலர் புலம் பெயர் நாடுகளில் புகுந்து சொற் சிலம்பம் ஆடியாகினும் தமது அரசியலை உயிர்ப்போடு வைத்துத் திரும்பிப் போய்விட்டனர். தமிழரின் அரசியல் தலைவராக இருந்த இவர் குறைந்த பட்சம் கொழும்பில் உள்ள வெளியறவுத் தூதரகங்கள் அல்லது தொண்டர் அமைப்புகள் எதனுடனாவது முறையிடும் ஞானம் ஆவது கொண்டிருந்தாரா?
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் மக்களும் அத்தனை ஆர்வமாக ஆதரவளித்தபோதும் கூட ஏன் சுத்த ஞான சூனியங்களாகத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு நடந்து கொண்டது என்பதற்கு அதன் தலைவர் கூறும் பதில் என்ன?
திரை மறைவில் அவர் கூறிய பதில்கள் ஆனந்த சங்கரி டக்லஸ் ஆகியோர் பகிரங்கமாககக் கூறுவது போன்றதே என்று அனுமானிப்பதில் தவறு ஏதும் இருக்க முடியுமா? இன்று இவருக்கும் தமிழ் துரோக சக்திகளுக்கும் என்ன வித்தியாசம்?
கொழும்பில் வாரந்தோறும் தமிழ் மக்களால் எத்தனை பொது நிழ்ச்சிகள் இடம் பெற்றன அவற்றில் பேருக்குக் கூடக் கலந்து தமிழரின் போர் அவலங்கள் பற்றிய கவனத்தைக் கூட அங்குள்ள தமிழ் மக்களிடையே மலையகத் தமிழர் மனோகணேசன் பேசியதில் ஆயிரத்தில் ஒன்று கூடப் பேசிய வரலாறு படைத்துள்ளாரா?
குதிரையின் குணம் அறிந்து கடவுள் அதற்குக் கொம்பு கொடுக்க வில்லை என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல் உங்கள் குணம் அறிந்து புலிகளின் தலைமை உங்களைத் தள்ளி வைத்தது என்பது உண்மை என்பதை உங்களது இன்றைய நடப்புகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இப்போதும் கூட உங்களில் ஒருவரான கனகரத்தினம் இராணுவ விசாரணையில் இருக்கும் நிலை பற்றி என்ன செய்து விட்டீர்கள்? வதை முகாம்களைப் பார்வையிட நீதிமன்ற அனுமதி கேட்டு வழக்குத் தாக்கல் செய்வதில் கூட உங்கள் எவரது பேரும் இடம் பெறாதது ஏன் பயமா பாசமா பக்தியா?
சுவிசிலிருந்து தமிழர் பேரவை ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக பாராளுமன்றத்தினூடாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு கனகரத்தினம் அவர்களின் விடுதலைக்கு முயற்சித்து உங்களிடம் கொழும்பில் அவருக்காய் அனைத்துலக பாராளுமன்ற தலைமைச்செயலகத்தில் அவருக்கான காப்பு மணுவினைச் சமர்பிக்குமாறு வேண்டிய போதெல்லாம் நீங்கள் அதை கண்டுகொள்ளாததுவும் பின்பு சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சிங்கள மனிதநேய பணியாளர் ஒருவரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதை சிறப்பாக செய்ததையும் நீங்கள் இந்தநேரத்தில் புரிந்துகொள்வது நல்லது. தெரியாதவர்கள் அறிந்துகொள்வதும் நல்லது.
சிங்களச் சமூக நலத் தொண்டர்களே தடுப்பு வதை முகாம் தமிழ் கைதிகளுக்கு அனுதாபம் காட்டும் போது நல்லெண்ணம் நல்லிணக்கம் எனப் பேசி தமிழினப் படுகொலைகளையும் போர்க் குற்ற விசாணகளையும் மக்களுக்கான நீதியும் இல்லாமல் செய்யும் உங்களை தமிழ் இனம் மன்னிக்குமா மறக்குமா ?
உலகம் அறியத் தமிழர் தலைமையாகப் பவனி வரமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் நீங்கள் பிரதிநிதிப் படுத்திய மக்களைக் காவுகொள்ளச் சிங்களத்துக்குத் துணை நின்றீர்கள். சந்திரிகாவின் சீலைத்தலைப்புக்குள் கட்டுண்டுகிடந்தீர்கள் இப்போ விசாரணைகளையும் நீதியையும் தடுக்கிறீர்கள். உங்களின் இத்தகைய போக்குத்தான் தமிழினத்தை இன்று காலம் கழுவேற்றி நிற்கிறது. உங்களுக்கு என்ன துணிவு தமிழர் பிரச்சனையை இலங்கைக்குள் மட்டும் பேசித்தீர்த்துக்கொள்வதற்கு. அந்த உரிமையை யார்? உங்களுக்கு கொடுத்தது? முப்பதுநாயிரம் மாவீரர்களின் தியாகத்தை விலைபேசும் உரிமை எப்படி யார் கொடுத்தது?
சொந்த வீட்டுக்காரன் குத்துக் கல்லாட்டம் இருக்கும் போது நீ என்ன மச்சானா மாமனா ? வக்காலத்து வாங்கப் புலிகளிடம் பணமா பெற்றாய் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இந்தியத் தலைவர்களை உள்ளே தள்ள எவ்வளவு நேரமாகும்? இப்போது புரிகிறதா இந்தியத் தலைவர்களின் வேதனை,அழுகை? பாவம் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது இருக்கும் நிலை அவர்களுக்கு! எத்தனை பேருக்கு இவை புரியும்? இப்படி எழுதும் என்னைப் பலரும் வசை பாடலாம். காகம் திட்டி மாடு சாகாது என்பதே எனது பதில்.
ஆனால் ஒன்றுமட்டும் உண்மை பிரபாகரன் என்பவன் தனிமனிதனல்ல, அவன் தேசியத்தின் ஆத்மா. அது தன் இலக்கை எட்டும் வரை ஓயாது துரோகிகளை அழிக்கவும் தயங்காது?
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்.......
விடுதலைப்புலிகள் தமிழ்மக்களின் தேசிய அரசியல் ஆத்மா.....
த.எதிர்மன்னசிங்கம்.
பின்னிணைப்பு
சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்!
திருமலையின் சிங்கமே!
தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!
ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!
புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.
ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது.
அதனால்தான் என்னவோ... 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றீர்களோ?
சரி. அப்பொழுது என்னதான் நடந்தது?
ரணிலும் மகிந்தவும் மோதிக்கொண்ட களம் அது.
அன்று நடந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என்கின்றீர்கள்.
புறக்கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். புறக்கணிக்குமாறு யார் கூறினார்கள்?
தமிழீழ விடுதலைப் புலிகளா? தமிழ் தேசியக் கூட்டமைப்பா? புலம்பெயர்ந்த நாங்களா? அல்லது செவ்வாய்க்கிரக மனிதர்களா?
நடப்பது சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல். அதில் நமக்கென்ன வேலை என்று புலிகள் ஒதுங்கிவிட்டார்கள். யாரையும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கூறவில்லையே! ஏன் நீங்களும் உங்கள் பரிவாரங்களும்கூட அப்பொழுது வாய்திறக்கவில்லையே!
பிறகு புறக்கணிப்பிற்கான அழைப்பு எங்கிருந்துதான் வந்தது.
சரி. நீங்கள் இப்பொழுது கூறியது கூறியதாகவே இருக்கட்டும். இருந்துவிட்டே போகட்டும்!
ஆனால்... அன்றைய தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது தவறு என்றால்... அதுதான் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்றால்... அந்த நிலையை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவோடு உங்களுக்கு என்ன வேலை?
இந்தத் தேர்தலில் மகிந்தவைப் புறக்கணியுங்கள் என்றுதானே நீங்கள் அழைப்பு விடுக்கின்றீர்கள்? அதுதானே உங்கள் கருத்தின் அர்த்தம்?
மகிந்தவைப் புறக்கணியுங்கள் ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள் என்றால்... பொன்சேகாவை ஆதரியுங்கள் என்பதுதானே உங்களது வாய்மொழியின் பொருள்?
அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றீர்களா?
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிந்துவிட்டது.
தேர்தலில் நீங்களும் போட்டியிடுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. சுயேட்சையாகப் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கமும் அறிவித்துவிட்டார்.
அப்படியென்றால் உங்களது வாக்கு இனி யாருக்கு?
ஆழ் கடலுக்கும் கொடும் பேய்க்கும் நடுவே பரிதவிக்கும் ஈழத்தமிழர்களை எப்பக்கம் சாயச்சொல்கின்றீர்கள்?
மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?
அதுசரி... யுத்தம் முடிந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயம் எதற்கு என்கின்றீர்கள்!
அப்படியென்றால் யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்தது சரியென்கின்றீர்களா?
உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதை அன்று எதிர்த்தவர் பொன்சேகா. நம்பியாரின் ஆலோசனைப்படி நடந்தவர் அவர்.
ஆனால் அவரை இனி ஆட்சியில் அமர்த்தினால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்று நீங்கள் குசுகுசுப்பதாக ஒரு கதை கசிகின்றது.
மெய்யோ பொய்யோ... மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வந்துவிடும்.
ஆனாலும்... ஈழத்தமிழர்களை வந்தேறுகுடிகள் என்று அழைத்த பொன்சேகாவிற்கு நீங்கள் ஆலவட்டம் பிடிக்க முனைவதன் சூத்திரம்தான் புரியவில்லை.
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வட்டுக்கோட்டையில் தொடங்கி திம்பு வரை இணங்கி முள்ளிவாய்க்கால் வரை வீரவசனம் பேசியவர் நீங்கள்!
ஆனால் என்ன அதிசயம்! இன்று... சிங்களவர் என்ற சொல்லாடலைக் கைவிட்டு பெரும்பான்மையினர் என்கின்றீர்கள்!!!
அவர்கள் பெரும்பான்மையினர் என்றால் நாங்கள் என்ன சிறுபான்மையினரா?
எங்களை சிறுபான்மையினராக்கி எமது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதுதான் உங்களது இப்போதைய தேர்தல் விஞ்ஞாபனமா?
தேசிய இனத்திற்கு உரித்தான தன்னாட்சியுரிமை சிறுபான்மையினத்திற்கு உண்டென்று உங்களிடம் யார் உரைத்தார்கள்?
சிங்களவர்களை பெரும்பான்மையினர் என்று நீங்கள் அழைப்பதும் ஒன்றுதான்! எங்களது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதும் ஒன்றுதான்!
2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஈட்டிய வெற்றி மாபெரும் வெற்றி! மகத்தானதும்கூட.
திருமலையில் தமிழருக்கு இரண்டு ஆசனங்களை ஈட்டிக்கொடுத்த பெருமை உங்களுக்குரியது.
அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகிருந்து அடுத்த தேர்தலில் திருமலை முழுவதையும் வசப்படுத்துவேன் என்று நீங்கள் சூளுரைத்ததை நாங்கள் மறக்கவில்லை!
தேர்தல் களம் குதிப்பதற்கு முன்னர் மாவீரர்களின் கல்லறைகள் மீது நீங்கள் செய்த சத்தியமும் எங்கள் நினைவை விட்டு நீங்கவில்லை!
அது மட்டுமா? திருமலையில் நீங்கள் புலிக்கொடியேற்றியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.
ஆனாலும் என்ன? இப்பொழுது சிங்கக்கொடியேந்துவதற்கு நீங்கள் தயாராகின்றீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தவறிருந்தால் மன்னித்தருளுங்கள்.
நாடாளுமன்றக் கதிரையை விட்டுத்தாவி அமைச்சுக் கதிரையை நீங்கள் குறிவைப்பது போல் எமக்குத் தெரிகின்றது.
நேற்று வந்த டக்ளசும், பிள்ளையானும், கருணாவும் அமைச்சுக் கதிரைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்ன சும்மாயிருப்பதா? என்று நீங்கள் எண்ணக்கூடும்! தப்பேயில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்! உங்கள் நாடாளுமன்றக் கதிரைக்கு வலுச்சேர்ப்பது தமிழீழ ஆணை மட்டுமே!
அதுசரி. தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காது தமிழ் மக்களின் கருத்துக்களை அறிந்து வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
அப்படியென்றால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரும் விரிசல் விழுந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?
மக்களின் எண்ணவோட்டம் அறியாதவர்களும், புரியாதவர்களும் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?
சேரமான்
© Copy Right 2007 www.mykathiravan.com | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com
Keine Kommentare:
Kommentar veröffentlichen