Main Pages Kathiravan.com

Sonntag, 27. Dezember 2009

நாங்கள் ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் ‐ ஜனாதிபதி



நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் தான் இன்று நாங்கள் மக்களுக்கு முன்னால் வந்து நிற்கிறோம்.

இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் ஏன் அமெரிக்காவிலிருந்தும் கூட நாங்கள் உதவிகளைப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் சர்வதேசத்துடன் முரண்படவில்லை. நாங்கள் சர்வதேசத்திற்கு ஒன்றே ஒன்றைத் தான் சொன்னோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று. அதற்காக நாங்கள் எந்த நிபந்தனைகளுக்கும் கீழ்ப்படியவில்லை.

இன்று சிலர் தாங்கள் வெள்ளைக்காரர்கள் போன்று பேசுகிறார்கள். அவர்களுடைய அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் அங்கே என்ன இருக்கிறது என்பது தெரியும். நான் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை.

மிகச் சாதாரண பாசையில் சொல்வதானால் நாங்கள்; சொன்னதைச் செய்வோம். தருவதாகச் சொன்னால் தருவோம். தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். ஈழத்தைத் தரமாட்டோம் என்று சொன்னால் தரமாட்டோம் தான். அதேபோல் நாங்கள் கொடுக்கவுமில்லை. பிரபாகரனுடைய அம்மாவினதும் அப்பாவினதும் பணத்தை நாங்கள் வாங்கவுமில்லை என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த உறுதியான நிலைப்பாடு தொடர்ந்து வரும் சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாடாகத் தான் இருந்து வருகிறது.

முன்னதாக பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போதும் இதேபாணியில் ஈழத்தை நாம் ஒரு போதும் தரப் போவதில்லை என்று ஆற்றிய உரை மிகப் பிரபலமானது. ஈழத்தைத் தவிர எல்லாம் தருவோம் என்றார் அவர். ஆனால் அவர் ஈழத்தை மட்டுமல்ல எதையும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அமுல்படுத்திய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவோ எந்தப் பிசாசுடனாவது கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் போராட்டத்தை அழிக்கப் போகின்றேன் என்று சூளுரைத்திருந்தார்.

இந்தப் பேரினவாத அரசியல் தலைவர்கள் ஈழத்தை மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கு எதையுமே இதுவரை கொடுத்ததில்லை இனியும் கொடுக்கப் போவதில்லை என்பதையே இந்த நிலைமைகள் கோடி காட்டுகின்றன.

Keine Kommentare:

Kommentar veröffentlichen